Published:Updated:

``சிம்ரன், த்ருவ் பிடிக்கும்... கமர்ஷியல்ல எதெல்லாம் முக்கியம்?'' - ஷங்கர்

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் விகடனுக்கான பிரத்யேகப் பேட்டியின் கடைசிப் பகுதி. இன்று, 'அந்நியன்' க்ளைமாக்ஸ் முதல் சிம்ரன், த்ருவ், ரெமோ ஃபெர்ணான்டஸ் எனத் தனக்குப் பிடித்தவர்கள் பற்றி பேசியிருக்கிறார் ஷங்கர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''சாரி கேரக்டர்தான் அம்பியுடைய காதலுக்கு உதவும். அதே சமயம் டிசிபி பிரபாகர் அந்நியனை கண்டுபிடிக்கவும் அதே கேரக்டர் ஒரு பாலமா இருக்கும். இரண்டு கேரக்டருக்குமே ஒரு நடிகர்தான்னு எப்படி யோசிச்சீங்க?''

"ஆரம்பத்துல ரெண்டும் தனித்தனி கேரக்டராதான் இருந்தது. சாரி கேரக்டர் அம்பி கூட இருக்கும். பிரபாகர் கூட போலிஸா இருக்கிற கேரக்டர் வேற ஒரு நடிகர் நடிக்கிறதா இருந்தது. ஆனா, விவேக் சாரோட சாரி கேரக்டர் ரொம்ப சின்னதா இருந்தது. அதனால ரெண்டு கேரக்டரையும் சேர்க்க முடியுமானு பார்ப்போம்னு பண்ணதுதான் இது. சூப்பரா செட் ஆகிடுச்சு."

''நந்தினி கேரக்டர் மெடிக்கல் காலேஜ் மாணவி. ஆனா, படத்துல பெருசா ஃபோகஸ் பண்ணாததுக்கு என்ன காரணம், எடிட்ல கட் ஆகிடுச்சா?''

"எடிட்ல எதுவும் கட் ஆகலை. ரெமோ கேரக்டர் நந்தினி படிக்கிற காலேஜ்ல போய் அவளை சந்திக்க முயற்சி பண்ணுற மாதிரி எழுதினேன். மல்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸார்டர் (Multiple Personality Disorder) அப்படிங்கிற விஷயம் அவளுக்கு ஈஸியா புரிஞ்சிக்கிறத்துக்கும் அவங்க காலேஜ் டீனாகிய நாசர்கிட்ட அம்பியை கூட்டிப்போறதுக்கும் மெடிக்கல் ஸ்டூடன்ட்டா இருந்தா சரியா இருக்கும்னு தோணுச்சு. தவிர, காலேஜ்ல சில சீன்ஸ் எடுக்கலாம்னு பிளான் பண்ணோம். ஆனா, அது தேவைப்படலை."

ஷங்கர்
ஷங்கர்

'' 'ரெமோ' பெயர் காரணம் என்ன?''

"அம்பியுடைய பெயர் ராமானுஜம். அந்த ராமாங்கிறதுல இருந்து கொஞ்சம் ஸ்டைலா எடுத்துக்கிட்டதுதான் 'ரெமோ'. அது இல்லாமல் ரெமோ ஃபெர்ணாண்டஸ்னு ஒரு இசைக் கலைஞர் இருக்கார். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரெண்டும் சரியா அமைஞ்சிடுச்சு."

''அம்பி, ரெமோ, அந்நியன்... எந்த கேரக்டர்ல நடிக்கும்போது அதிக டேக் போச்சு?''

"நந்தினி கச்சேரி நடக்குற சபாவுக்கு ரெமோ வந்திருப்பான். அப்போ அவனை கிரீன் ரூமுக்கு கூப்பிட்டு 'நீ உன் கனவுக்கு மேக்கப் போட்டு வந்திருக்க. நீ நிஜம் இல்லை. அம்பிதான் நிஜம்'னு சொல்லி வேஷ்டி சட்டை எல்லாம் கொடுத்து தலையை சீவி, நாமம் போட்டு, கண்ல இருக்கிற லென்ஸை எடுத்துட்டு, ரெமோவை அம்பியா மாத்துவா நந்தினி. அப்போ அம்பியா தன்னை கண்ணாடியில பார்த்துக்கிட்டு ரெமோவா பர்ஃபார்ம் பண்றதுக்கு விக்ரம் ரொம்பவே சிரமப்பட்டார். அதுக்கு கொஞ்சம் டேக் போச்சு."

Vikram
Vikram

''ரோடு, மலை, லாரி, ரயில்னு எல்லாத்துக்கும் பெயின்ட் அடிக்கிற ஐடியாலாம் எப்படி யோசிக்கிறீங்க?''

"அந்தக் கதாபாத்திரம் எதை பார்த்தா எக்ஸைட் ஆகும், அவங்க கனவுல என்ன வரும் இதெல்லாம்தான் அந்த ஐடியா. இதுல 'அண்டங்காக்கா' பாட்டை பொறுத்தவரை ஃபோக் சாங்னா ஃபோக் பெயின்டிங் ஞாபகத்துக்கு வரும். அக்ரஹாரம் மாதிரி இருக்கிற அந்தத் தெரு முழுக்க பெயின்ட் அடிக்கிற வேலைகள் ஒரு மாசமா நடந்தது. ரோட்டுக்கு பெயின்ட் அடிக்கிறது சாபுவோட ஐடியா. வளைஞ்சு இருக்கிற ரோட்டுக்கும் சேலைக்கும் ஒரு பொருத்தம் வருது. அதனால சேலை மாதிரி இருக்கணும்னு ரோட்டுக்கும் பெயின்ட் அடிச்சோம். 'டென்ட்கொட்டா இன்டர்வெல் முறுக்கே'னு பாடல் வரி வரும்போது பின்னாடி இருக்கிற மலையில ரஜினி சார், கமல் சார் முகங்களை வரையலாம்னு தோணும். சாபு சிரில் சார் மாதிரி நல்ல டெக்னிஷீயனும் கூட சேரும்போது வேற மாதிரி அவுட்புட்டா அது வருது."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''எந்த வொயர்மேனுடைய அலட்சியத்துனால அம்பியுடைய தங்கை இறந்தாளோ அவரை கொல்றதோட படம் முடியும். இந்த கனெக்ட் எப்படி முடிவாச்சு?''

"படம் மங்களகரமா முடியுது அப்படிங்கிறது இந்தப் படத்துக்கு செட்டாகலை. படம் முழுக்க ஒரு மிஸ்ட்ரி, ஷாக் இருந்துக்கிட்டே இருக்கும். அதனால படம் முடியும்போதும் ஒரு ஸ்பெஷல் விஷயம் தேவைப்பட்டது. அது ரொம்ப இயல்பா இருக்கணும்னு நினைச்சேன். நிறைய க்ளைமாக்ஸ் யோசிச்சேன். அம்பி வேற மாநிலத்துக்கு போகுற மாதிரியும் அங்கப்போய் அவனுக்குள்ள இருக்கிற அந்நியன் அந்த ஊர் பிரச்னையை டீல் பண்றது மாதிரியும் யோசிச்சேன். கடைசியா, அவனுக்குள்ள இருக்கிற அந்நியன் இன்னும் அவனைவிட்டு போகலை. ரெண்டு வருஷமா சரியான மாதிரி நடிச்சிருக்கான்னு மாத்தினேன். 'அநியாயத்தைத் தட்டி கேக்குறவன் இருக்கணும். நம்மளைவிட்டு போகக்கூடாது'னு நமக்கே ஒரு ஆசை இருக்கும்ல. அதனால அந்நியன் இருந்தா நல்லாயிருக்கணும்னு தோணுச்சு. ட்ரெயின்ல நிறைய பேர் குடிக்கிறாங்க இல்லையா, அவனும் குடிச்சுட்டுதானே அவன் வேலையை பார்க்காம விட்டான்? அதனால அந்த கேரக்டரை கடைசியா வெச்சு முடிக்கலாம்னு தோணுச்சு. அந்த ஷாக்கிங்கும் இதுல இருந்தது."

சதா
சதா

''நந்தினி கேரக்டருக்கு உங்களுடைய முதல் சாய்ஸ் சதாதானா?''

"என் முதல் சாய்ஸ் சிம்ரன். அவங்க பர்ஃபார்மன்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்களைத்தான் நந்தினி கேரக்டருக்கு முடிவு பண்ணியிருந்தேன். ஆனா, அவங்க அப்போ இருந்த சூழல்ல பண்ணமுடியாமல் போயிடுச்சு. அடுத்த சாய்ஸ் அசின். ஆனா, அதுவும் வொர்க் அவுட் ஆகலை. அப்புறம்தான் சதாவை நடிக்க வெச்சோம்."

'' 'மூணு கேரக்டர்ல விக்ரம் நடிக்கிறார். நீங்க அசால்டா இருந்தால் கூட நடிப்புல உங்களை தூக்கி சாப்பிட்டிடுவார்'னு சதாகிட்ட நீங்க சொன்னதா விகடன் பேட்டியில சொல்லியிருந்தீங்களே?''

"அது அவங்களை மோட்டிவேட் பண்றதுக்காக சொல்றதுதான். அவர் அப்படி பர்ஃபார்ம் பண்ணும்போது கூட இருக்குறவங்களும் அதுக்கு நிகரா பர்ஃபார்ம் பண்ணணும்ல. 'சிவாஜி' படத்துல கூட ஸ்ரேயாகிட்ட 'ரஜினி சார் பத்தி தெரியும்ல. வந்து நின்னார்னா எல்லோருடைய கண்ணும் அவர்மேலதான் இருக்கும். அவர் நடிப்பு அப்படியிருக்கும். நீங்க ஜாக்கிரதையா இல்லைனா ஸ்கிரீன்ல காணாமல் போயிடுவீங்க' சொன்னேன்."

த்ருவ் விக்ரம்
த்ருவ் விக்ரம்

''மனநல மருத்துவமனையில இருந்து விக்ரம் ஹேர்கட் பண்ணிட்டு வர்ற சீனை இப்போ பார்க்கும்போது அவர் மகன் த்ருவை பார்க்குற மாதிரியே இருக்கு. 'ஆதித்யா வர்மா' பார்த்தீங்களா, த்ருவ் பர்ஃபார்மன்ஸ் எப்படி இருந்தது?''

"நான் அந்தப் படம் பார்க்கலை. ட்ரெய்லர்தான் பார்த்தேன். அதுலயே அந்தப் பையன் ரொம்ப இம்ப்ரஸிவா இருந்தார். ஆனா, ஹேர்கட் பண்ணப் பிறகு வந்த அம்பியையும் துருவ்வையும் நீங்க சொன்ன பிறகு யோசிச்சா ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு."

''காமெடி நடிகராகணும்னு சினிமாவுக்குள் வந்தவர் நீங்க. உங்க படங்கள்ல இருக்கிற காமெடி நடிகர்களுக்கான கேரக்டர், மேனரிஸம் இதை எல்லாம் எழுதும்போது எப்படியிருக்கும்?''

"காமெடியோடு சேர்த்து நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட்டா வரணும்னுதான் எனக்கு முதல்ல ஆர்வம் இருந்தது. கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் எல்லோருக்கும் எழுதும்போது அவங்க மாதிரியே பேசி, நடிச்சு எழுதுவேன். அதனால அந்த கேரக்டர்கள் நிக்கும். அப்புறம் அவங்க அந்த கேரக்டர்ல சில விஷயங்கள் சேர்த்து அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போவாங்க. 'அந்நியன்'ல சாரி கேரக்டர் அகூந்பதம்னு எழுதியிருந்ததைப் பார்த்து பிரகாஷ்ராஜ் பலவிதமா எழுத்துகளை மாத்திப்போட்டு சொல்லுவார். 'கபீம்குபாம்', 'மிருகினஜம்போ' இது எல்லாத்துக்கும் உட்கார்ந்து எழுத்துகளை மாத்திப்போட்டு எழுதினோம். அதுல சவுண்ட் எது காமெடியா இருக்கோ அதை ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டோம். முந்திரிபக்கோடாவை 'கோபக்திரிமுந்டா'னு எழுதும்போதே செம காமெடியா இருந்தது. அதைப் பார்த்து விவேக் ரொம்ப உற்சாகமாகிட்டார். இயல்பாவே காமெடியில ஆர்வம் இருக்கிறதுனால அதெல்லாம் நல்லா வொர்க் அவுட் ஆகுதுனு நினைக்கிறேன்."

ஷங்கர்
ஷங்கர்

''ஷங்கரை பொறுத்தவரை நல்ல கமர்ஷியல் படம் என்றால் என்ன?''

"நல்ல தீம் இருக்கணும். அந்தத் தீம் புதுசா இருக்கணும். புதுசா இல்லைனாலும் புதுசா சொல்லணும். ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் விறுவிறுப்பா இருக்கணும். நல்ல பொழுதுபோக்கா இருக்கணும். போகும்போது அதுல இருந்து எடுத்துட்டு போறதுக்கு சில நல்ல விஷயங்கள் இருந்தால் அது நல்ல கமர்ஷியல் படம்."

''புகழேந்தி, சேனாபதி, ராமானுஜம், சிவாஜி... இதுல ஷங்கருடைய ஆழ்மன கேரக்டர் எது?''

"நாலு பேருடைய ஒற்றுமையே எங்கேயும் தப்பு நடக்கக்கூடாது, மாற்றம் வரணும்னு நினைக்கிறதுதான். இதுல எல்லாத்துலயும் நான் இருக்கேன், நீங்க இருப்பீங்க, ஒவ்வொரு சாமான்யனும் இருப்பான்."

``ஹீரோக்களைவிட மக்களுக்கு எப்பவும் வில்லனைத்தான் பிடிக்கும்... ஏன்னா?!''- ஷங்கர் - Part 4

''பீரியட் படங்கள் பத்தின உங்க பார்வை என்ன? அப்படியான படங்கள் பண்ணணும்னு ஆசையிருக்கா?''

"ஆசை இருக்கு. 'எந்திரன்' கதையில வொர்க் பண்ணிட்டு இருந்தபோது சுஜாதா சார்கிட்ட 'ரோபோவுக்கு அப்புறம் என்ன சார் பண்றது? அப்படியே கான்ட்ராஸ்டா 'பொன்னியின் செல்வன்' மாதிரி ஒரு படம் பண்ணா எப்படியிருக்கும்'னு கேட்டேன். 'ரொம்ப நல்லாயிருக்கும் ஷங்கர். பண்ணலாமே'னு சொன்னார். சும்மா அப்படியொரு எண்ணம் வந்துபோச்சு அவ்ளோதான். மத்தபடி 'கிளாடியேட்டர்' மாதிரி படங்கள் பார்க்கும்போது நாமளும் இந்த மாதிரி ஒரு படம் பண்ணணும்னு தோணும். ஆனா, அதுக்கு உண்டான கதை வரும்போதுதான் அதைப் பத்தி தீர்மானிக்க முடியும்!"

முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு