Published:Updated:

``ஷங்கர் சார் பாராட்டுன ஐடியாதான்... ஆனா, ஏன்?!'' - ஹோசிமின்

 `பிப்ரவரி 14’ - எஸ்.பி.ஹோசிமின்

எஸ்.பி.ஹோசிமின் இயக்கிய முதல் படமான `பிப்ரவரி 14’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்தப் படம் குறித்தும் அவரது சினிமா கரியர் குறித்தும் அவரிடம் பேசினேன்.

``ஷங்கர் சார் பாராட்டுன ஐடியாதான்... ஆனா, ஏன்?!'' - ஹோசிமின்

எஸ்.பி.ஹோசிமின் இயக்கிய முதல் படமான `பிப்ரவரி 14’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்தப் படம் குறித்தும் அவரது சினிமா கரியர் குறித்தும் அவரிடம் பேசினேன்.

Published:Updated:
 `பிப்ரவரி 14’ - எஸ்.பி.ஹோசிமின்

```பிப்ரவரி 14’ படம் உருவான கதையைச் சொல்லுங்க?"

``நான் ஆனந்த விகடன்ல பத்திரிகையாளரா வேலை பார்த்தப்போ, ஷங்கர் சாரை பேட்டி எடுத்திருக்கேன். அப்போதுல இருந்தே அவங்களோடு நான் நட்போடும் பழகி வந்ததால், `இந்தியன்’ படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. `இந்தியன்’, `ஜீன்ஸ்’, `முதல்வன்’ மற்றும் `முதல்வன்’ படத்தின் இந்தி ரீமேக்கான `நாயக்’ போன்ற படங்களில் ஷங்கர் சாரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன்.

jeans movie shooting spot
jeans movie shooting spot

அந்த சமயத்தில் நான் எழுதிய கதைதான், `பிப்ரவரி 14’. இந்தப் படத்தைத் தயாரிக்க ஏ.எம்.ரத்னம் சார் முன்வந்தார். முதலில் இந்தக் கதைக்கு `ஆப்பிள்’னு பெயர் வெச்சிருந்தேன். அதைத் தமிழ், தெலுங்குனு பைலிங்குவலா பண்ணலாம்னு இப்போ தெலுங்குல விஜய் தேவரகொண்டா இருக்கிற மாதிரி அப்போ ஃபேமஸா இருந்த உதய் கிரணை வெச்சுத்தான் படத்தை ஸ்டார்ட் பண்ணினோம். படம் ஷூட் ஆரம்பிச்ச சில நாள்களில், டோலிவுட்டில் உதய் கிரணுக்கு சில பிரச்னைகள் வந்ததால், அந்தச் சமயத்தில் அவர் பண்ணிட்டு இருந்த 3 படங்களையும் நிறுத்திட்டாங்க. அதில் இதுவும் ஒண்ணு. அதுக்கப்புறம், இந்தக் கதையை தமிழில் மட்டும் பண்ணலாம்னு பிளான் பண்ணி, சேலம் சந்திரசேகரன் தயாரிப்புல `பிப்ரவரி 14’ங்கிற பெயரில் இந்தப் படத்தை ஆரம்பிச்சேன்.’’

`` `பிப்ரவரி 14’ படத்துக்கு பரத்தான் உங்க முதல் சாய்ஸாக இருந்தாரா?"

barath and renuka menon
barath and renuka menon

``ஷங்கர் சார் `பாய்ஸ்’ படம் எடுத்திட்டு இருந்தப்போ, நான் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போவேன். அப்போதுல இருந்தே பரத் எனக்கு பழக்கம். இயக்குநர் பாலாஜி சக்திவேல் அண்ணனும், `காதல்’ படத்துல பரத் நல்லா நடிச்சிருக்கார்’னு சொன்னார். அதெல்லாம் வச்சுத்தான் பரத்தை இந்தப் படத்தில் கமிட் பண்ணினோம். முதலில் புதுமுகத்தை நடிக்க வைக்கலாம்னுதான் இருந்தோம். பரத்துக்கும் அந்தச் சமயம் எந்தப் படங்களும் ரிலீஸாகாமல் இருந்தனால, `பரத்தை வெச்சே போகலாம்’னு தயாரிப்பாளர் சொல்லிட்டார். எல்லாம் முடிவானதுக்கு அப்பறம் படத்தோட டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி, பிப்ரவரி 14-ம் தேதியே படத்துக்கு பூஜையைப் போட்டுட்டு, ஷூட்டிங்கை ஆரம்பிச்சோம்.’’

`` `பிப்ரவரி 14’ படத்தில் கார்ட்டூன் கதாபாத்திரம் ஒன்று படம் முழுக்க வரும். அந்த ஐடியா எப்படி வந்தது?"

barath and renuka menon
barath and renuka menon

``இந்தியாவிலேயே முதல் லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் படமாக உருவானது, `பிப்ரவரி 14’தான். ஏன்னா, அதுவரைக்கும் இந்த மாதிரியான அனிமேஷன் கேரக்டர்கள் பாடல்களில் வரும். ஆனால், வசனம் பேசுற மாதிரி அதுவரைக்கும் எந்தப் படத்திலும் வந்ததில்லை. எனக்கு இந்த ஐடியா வரதுக்கு காரணமா இருந்தது என் நண்பர் சரவணன்தான். சரவணன் அனிமேஷன் படங்களை அதிகம் பார்ப்பார். அவரிடமிருந்துதான் எனக்கும் அந்தப் பழக்கம் வந்துச்சு. அப்படித்தான், இந்தப் படத்தோட ஹீரோவின் மனசாட்சியா ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்தை அனிமேஷன் மூலம் கொண்டு வரலாம்னு பிளான் பண்ணினோம். அந்த கார்ட்டூன் கதாபாத்திரத்தின் முகத்தை பரத் சாயலிலும் உருவத்தை `செவன் அப்’ பாட்டிலில் இருக்கும் பொம்மை மாதிரியும் டிசைன் பண்ணினோம். அந்தக் கேரக்டருக்காக வாய்ஸ் கொடுக்கிறதுக்கு பல பேரை ஆடிஷன் பண்ணினோம். `காதல்’ படத்தில் பரத்தோடு நடிச்சிருந்த பையனையும் ஆடிஷன் பண்ணினோம். பல பேர் அந்தப் பையன்தான், அந்தக் கேரக்டருக்கு டப்பிங் கொடுத்திருக்கான்னு நினைக்கிறாங்க. ஆனால், அந்தக் கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்தது, `அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்துல நடிச்ச சங்கர். அந்தப் பையன்தான், ரொம்ப நல்லா டப்பிங் பேசிக் கொடுத்தார்.’’

``உங்களது முதல் படம் ரிலீஸாகி 5 வருடங்கள் கழித்துதான் இரண்டாவது படம் ரிலீஸாச்சு; ஏன் அந்த தாமதம்?"

February 14 movie team
February 14 movie team

`` `பிப்ரவரி 14’ படம் ரிலீஸான சமயத்தில் நல்ல விமர்சனங்கள்தான் வந்துச்சு. வடிவேலுவோட காமெடி, சந்தானம், சத்யன், சுமன் ஷெட்டியோட காமெடி, ரத்னவேலுவோட ஒளிப்பதிவுனு படத்துல பல ப்ளஸ் பாயின்ட்ஸ் இருந்தாலும், இது ஏ சென்டர் ஆடியன்ஸுக்கான படம்ங்கிற பேச்சு வர ஆரம்பிச்சது. இந்தப் படம் ரிலீஸான சமயத்தில் ஸ்கூல் படிச்சிட்டு இருந்த பசங்க எல்லாரும் இப்போ இளைஞர்களா இருக்காங்க. அவர்களில் சிலர் இப்போ என்னைப் பார்க்கும்போது, `இந்தப் படம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்’னு சொல்றாங்க. இந்தக் கதையை நான் சில வருஷங்கள் கழிச்சி படமா பண்ணியிருந்தால், நிச்சயமா பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன். அதே மாதிரிதான் என்னோட ரெண்டாவது படமும் சரியான நேரத்தில் நடக்கலைனு நினைக்கிறேன். சத்யராஜ், சாந்தனுவை வெச்சு அப்பா - மகன் பாசத்தை மையமா கொண்ட `ஆயிரம் விளக்கு’ படத்தை இயக்கினேன். அந்தப் படம் 2011-ல ரிலீஸ் ஆச்சு. அப்போ இருந்த ஆடியன்ஸ் எல்லாரும் அப்டேட் ஆகிட்டாங்க. `இது பழைய கதையா இருக்கு’னு ஃபீல் பண்ணாங்க. நான் `ஆயிரம் விளக்கு’ கதையை என்னோட முதல் படமாகவும், `பிப்ரவரி 14’ படத்தை என்னோட ரெண்டாவது படமாகவும் எடுத்திருந்தால், என் கரியரே வேற மாதிரி மாறியிருக்குமோனு இப்போ நினைக்கிறேன்.’’

``இப்போ நீங்க இயக்கியிருக்கிற `சுமோ’ படம் எப்படி வந்திருக்கு?"

director hosimin
director hosimin

`` `சுமோ’ ரொம்ப நல்லா வந்திருக்கு. ஜப்பான்ல இருந்து சென்னைக்கு வர சுமோ வீரர் ஒருத்தர், சென்னையில மாட்டிக்கிறார். அவரை ஹீரோ சிவா எப்படி திரும்பவும் அவர் ஊருக்கே கூட்டிட்டுப் போய் விடுறார் என்பதுதான் கதை. சிவா ரொம்ப நல்லா பண்ணியிருக்கார். அவரோட டோனுக்கு ஏற்ற மாதிரி வசனங்கள் இருக்கணும்னு, அவரையே எழுத சொல்லிட்டேன். நடிப்பு மட்டுமல்லாமல், இந்தப் படத்தில் எழுத்திலும் சூப்பரான அவுட்புட்டை கொடுத்திருக்கார். படத்தோட பாதி போர்ஷன் ஜப்பானில் நடக்குற மாதிரிதான் கதை. அதுக்காக, அதிக செலவு பண்ணி, ஜப்பானுக்கே அனுப்பி வெச்சார், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார். ரொம்பவே செலக்டிவான படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு பண்றவர் ராஜீவ் மேனன் சார். இந்தப் படத்திற்குள் அவர் வந்ததே ரொம்ப பெரிய விஷயம். ரொம்ப சூப்பரா வொர்க் பண்ணிக் கொடுத்திருக்கார். ஜப்பானில் படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்பறம் சூப்பர் ஸ்டாருக்கு அங்கு ரசிகர் மன்றம் இருக்கிற மாதிரி, அகில உலக சூப்பர் ஸ்டாருக்கும் அங்கு ரசிகர் மன்றம் திறப்பாங்கனு நினைக்கிறேன்.’’

``நீங்க ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து படம் இயக்க வந்தவர்; இந்த 15 வருடத்தில் மூன்று படங்கள் என்கிற எண்ணிக்கை உங்களுக்குப் போதுமானதா இருக்கா?"

``அது எல்லாமே வாய்ப்பும், அது அமையுற நேரத்தையும் பொருத்துதான் இருக்குனு நினைக்கிறேன். ஷங்கர் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தப்போ, நான் சொல்ற ஐடியாக்களைக் கேட்டுட்டு ரொம்பவே பாராட்டுவார். ஆனால், அந்த ஐடியாக்கள் படமான நேரங்களும், அது ரிலீஸான நேரங்களும் சரியில்லாமல் போயிடுச்சோனு வருத்தமா இருக்கு. அதே மாதிரி, எண்ணிக்கையில் இல்லை ஒரு இயக்குநரோட திறமை. 2011-ல என் ரெண்டாவது படம் ரிலீஸாகியிருக்கு. அடுத்த படத்தை சில வருஷங்கள் கழிச்சு நான் எடுத்தாலும், அதில் சிவா, பிரியா ஆனந்த், சுமோ வீரர், ராஜீவ் மேனன், ஜப்பானில் ஷூட்டிங்னு பெரிய ஆட்களை வெச்சு பெருசாவும் படம் எடுத்திருக்கேன்.

sumo movie team
sumo movie team

அதுமட்டுமல்லாமல், என் ரெண்டாவது படத்தை முடிச்சிட்டு நான் அடுத்து பண்ணணும்னு நினைச்ச படங்கள் தள்ளிப்போயிட்டே இருந்ததனால, மொபைல் ஆப்ஸ் கிரியேட் பண்ற கம்பெனியை ஆரம்பிச்சேன். அதில் சில வருஷங்கள் பிஸியா இருந்தேன். இப்போ அந்த கம்பெனி நல்லபடியா நடந்திட்டிருக்கு. அந்த சமயத்துலதான், நான் முன்னாடியே சிவாகிட்ட சொன்ன `சுமோ’ கதையை, படமாக எடுக்கலாம்னு சிவா என்கிட்ட கேட்டார். அப்படித்தான் `சுமோ’ படம் ஆரம்பமாச்சு. நிறைய படங்கள் என் கரியரில் மிஸ்ஸாகியும் இருக்கு. முக்கியமா, `பிப்ரவரி 14’ படத்துக்குப் பிறகு பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தையும் போச்சு. `சுமோ’ படம் ரிலீஸானதுக்கு அப்புறம் என் கரியரில் எந்தத் தடையும் ஏற்படாதுனு நம்புறேன். ஏன்னா, இப்போ இருக்கிற ஆன்லைன் மீடியத்தில் படமும் வெப் சீரிஸும் பண்றதுக்கு நல்ல ஓப்பனிங் இருக்கு. அதிலும் கவனம் செலுத்தலாம்னு நினைக்கிறேன்.’’