Published:Updated:

எஸ்.பி.ஜனநாதனுக்கு மரியாதை... ஆனால் சினிமாவாக விஜய் சேதுபதியின் 'லாபம்' எப்படி? +/- ரிப்போர்ட்!

லாபம்
லாபம்

கார்ப்பரேட்டின் பெரும் சூழ்ச்சியை முறியடித்து விவசாயத்தை செழிக்கவைக்க விஜய் சேதுபதி மற்றும் நண்பர்கள் குழு நிகழ்த்தும் போராட்டமே 'லாபம்'.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசி படம் 'லாபம்'. விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, சாய் தன்சிகா, கலையரசன், ரமேஷ் திலக், நித்திஷ் வீரா என ஒரு பெரிய பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் இதோ...
லாபம்
லாபம்

சில வருடங்களுக்குப் பிறகுத் தன் சொந்த ஊரான பெருவயலுக்குத் திரும்புகிறார் பக்கிரி என்கிற பக்கிரி சாமி (விஜய் சேதுபதி). தன் கிராமத்தில் வாழும் மக்களுக்கு 'கூட்டுப் பண்ணையம்' என்கிற விவசாய முறையை அறிமுகப்படுத்துகிறார். அதன் மூலம் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டலாம் என்றும் வழிகாட்டுகிறார். இதற்கு எதிராக கார்ப்பரேட் வில்லன் ஜகபதி பாபு அங்கே பயோ டீசல் தொழிற்சாலை ஒன்றை நிறுவ முயற்சி செய்கிறார். அவரின் சூழ்ச்சியை விஜய் சேதுபதியின் இளைஞர் படை முறியடித்ததா என்பதே கதை!

'பாவம்', 'சாபம்' என்ற வார்த்தைகள் உருமாறி 'லாபம்' எனப் பெயர் வரும் டைட்டில் கார்டிலிருந்தே இது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படம் என்பது தெளிவாகப் புரிந்துவிடுகிறது. தொடர்ந்து தன் படங்கள் மூலம் கம்யூனிச சித்தாந்தங்களைப் பரப்பி, முதலாளித்துவ மற்றும் அதிகார வர்க்கத்தைக் கேள்வி கேட்கும் அவரின் துணிச்சல் இதிலும் வெளிப்படுகிறது.
லாபம்
லாபம்

படத்தின் பல பவர்ஃபுல் வசனங்களை மக்களிடம் கொண்டு செல்லும் கருவியாக விஜய் சேதுபதியும் அவரின் நண்பர்களும் இருக்கிறார்கள். சடை, மீசை, தாடி என வித்தியாசமான விஜய் சேதுபதியுடன் தொடங்குகிறது படம். மற்றபடி, ஊரை வழிநடத்தும் அதே தலைவன் பாத்திரம்தான். படத்தில் அரசியல் வசனங்கள் தூக்கலாகவும், கதை கணிக்கக்கூடிய விதத்திலும் இருப்பது சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. கதையில் இந்தப் பிரச்னை ஏற்படும் போதெல்லாம் அதைச் சரி செய்வது விஜய் சேதுபதியின் ஸ்க்ரீன் பிரசன்ஸ்தான். 'கூட்டுப் பண்ணைய முறை'யில் இருக்கும் பிரச்னை குறித்த கேள்விக்கு அவர் சொல்லும் பதில், பள்ளிச் சிறுமிக்கு லாபக் கணக்கு குறித்து அவர் எடுக்கும் பாடம் போன்றவை அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் வகையில் படமாக்கப்பட்டு இருக்கின்றன.

ஆனால், படத்தின் பல காட்சிகள் கோர்வையாகக் கோக்கப்படாமல், முடிந்தும் முடியாமலும் அடுத்தடுத்த இடங்களுக்குத் தாவிவிடுகின்றன. படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் பக்கம் பக்கமாகப் பேசிக்கொண்டே இருக்கின்றார்கள். குறிப்பாக விஜய் சேதுபதி பாடம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்... மக்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம் எனும்போது, வசனங்களால் மட்டுமே படத்தை நகர்த்துவது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

லாபம்
லாபம்

கிளாராவாக ஸ்ருதி ஹாசன் இன்ட்ரோ பாடலுடன் அறிமுகமாகிறார். கதையில் முக்கியப் பங்கும் ஆற்றியிருக்கிறார். ஆனால், சாய் தன்ஷிகாவின் பாத்திரம் எதற்காக என்பதுதான் புரியவில்லை. வெறும் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே வந்து போயிருக்கிறார். ஜகபதி பாபு, அவரின் மகன், மற்ற கார்ப்பரேட் வில்லன்கள் என யார் படத்தில் தோன்றினாலும் அவர்கள் ஒன்று பெண்களுடன் இருக்கிறார்கள், இல்லையென்றால் மதுக்கோப்பையுடன் மாநாடு நடத்துகிறார்கள். அதனாலேயே படத்தின் வில்லன் முதலாளித்துவம் என்ற சித்தாந்தமா அல்லது முதலாளிகளா என்ற கேள்வி எழுகிறது. அதிலும் ஜகபதி பாபு பணத்தில் புரள்கிறார் என்பதைக் காட்ட, ஊரில் இல்லாத ஹைடெக் கேட்ஜெட்களை எல்லாம் அவர் வீட்டில் இருப்பதாகக் காட்டியிருப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

மற்றொருபுறம் இளைஞர் படை, டெக்னாலஜி, லாக்கர், பழங்கால தந்திக் கம்பிகளைப் பயன்படுத்துவது என ஸ்கோர் செய்கிறார்கள். இருந்தும் அதுவுமே செய்றகைத்தனமாகவே இருக்கிறது. அதேபோல், அவர்களைப் பிடிக்கவரும் இன்ஸ்பெக்டரும் அவரின் படையும் இத்தனை முட்டாள்களாக இருப்பார்களா என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் தலைமையில்… களை கட்டிய சூரி வீட்டுக் கல்யாணம்!

தொடக்கம் முதல் முடிவு வரை, தெளிவான அரசியல் கருத்துகள் ஆங்காங்கே வெளிப்பட்டாலும் ஒரு முழு நீள சினிமாவாக முழுமை பெறத் தவறுகிறது 'லாபம்'. 'ஈ', 'பேராண்மை' அல்லது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனே வசனம் எழுதிய 'பூலோகம்' படத்திலேயே அரசியல் தூக்கலாக இருந்தாலும் அதை மீறி ஒருவித ஜனரஞ்சகத் தன்மை படம் முழுக்கவே இருக்கும். அதுதான் மக்களுக்கும் அது பேசும் அரசியலைத் தெளிவாகக் கொண்டு சேர்க்கும். அப்படியான படமாக 'லாபம்' வெளிப்படவில்லை என்பதுதான் மிகப்பெரிய சறுக்கல்.

லாபம்
லாபம்
படம் பேசும் கார்ப்பரேட் vs சாமானியன் அரசியலை ஒரு சுவாரஸ்யமான ஆடுபுலி ஆட்டமாக மாற்றி, திரைக்கதையை இன்னமும் பலப்படுத்தியிருந்தால், 'லாபம்' பேசும் அரசியல் எல்லோரையும் ஈர்த்திருக்கும்.
அடுத்த கட்டுரைக்கு