'இயற்கை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு எனும் பொதுவுடைமை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் 'லாபம்' படத்தை எடுத்து முடித்திருக்கிறார். படத்துக்கான இறுதிகட்ட எடிட்டிங் வேலைகளில் ஈடுபட்டிருந்த ஜனநாதனுக்கு திடீரென நேற்று மாலை உடல்நிலை குறைவு ஏற்பட்ட காரணத்தினால் மயங்கிய நிலையில் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் இவரது உடல்நிலை குறித்து பல தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து மருத்துவமனையில் இருக்கும் ஜனநாதனின் உதவி இயக்குநர் பாலாஜியிடம் பேசினோம்.

''நேற்றை விட இன்று ஜனநாதன் சார் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. நரம்பியல் மருத்துவர்கள் பலரும் கண்காணித்து வருகின்றனர். நாளை காலை பத்து மணி மற்றும் மதியம் மூன்று மணிக்கு சில டெஸ்ட்கள் எடுக்க வேண்டியுள்ளது. இதன் ரிசல்ட் அடிப்படையில் எந்த மாதிரியான அறுவைசிகிச்சை செய்வது என முடிவு செய்யப்படும் என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மருத்துவர்கள் யாரும் 'கோமா' மற்றும் 'மூளை சாவு' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதபோது சமூக வலைதளங்களில் சில செய்திகள் அப்படி வருவது வருத்தம் அளிக்கிறது. இயக்குநர்கள் அமீர், பொன்வண்ணன், கரு. பழனியப்பன், ஆறுமுககுமார் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி எனப் பலரும் ஜனநாதன் சார் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் பேசி வருகிறார்கள். விரைவில் ஜனநாதன் சார் மீண்டு வருவார். மருத்துவர்கள் நம்பிக்கை அளித்திருக்கிறார்கள்'' என்றார் உதவி இயக்குநர் பாலாஜி.
ஜனநாதனின் உதவி இயக்குநர்கள் பலரும் மருத்துவமனையில் இருந்து தேவையான உதவிகளை செய்துவருகிறார்கள்.
