Published:Updated:

``அந்த கேன்டீன் சீனை எழுதும்போதே அழுதுட்டேன்; ஏன்னா?!" - ஶ்ரீகணேஷ் #3YearsOf8Thottakkal

Director sri ganesh with actor vetri

`8 தோட்டாக்கள்’ படம் ரிலீஸாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவானதையொட்டி, அதன் இயக்குநர் ஸ்ரீகணேஷிடம் பேசினோம்.

``அந்த கேன்டீன் சீனை எழுதும்போதே அழுதுட்டேன்; ஏன்னா?!" - ஶ்ரீகணேஷ் #3YearsOf8Thottakkal

`8 தோட்டாக்கள்’ படம் ரிலீஸாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவானதையொட்டி, அதன் இயக்குநர் ஸ்ரீகணேஷிடம் பேசினோம்.

Published:Updated:
Director sri ganesh with actor vetri

2017-ம் ஆண்டு, தமிழ் சினிமாவிற்கு பொக்கிஷமான ஆண்டு என்றே சொல்லலாம். `அதே கண்கள்’, `மாநகரம்’, `பாம்பு சட்டை’, `8 தோட்டாக்கள்’, `ப.பாண்டி’, `லென்ஸ்’, `ஒரு கிடாயின் கருணை மனு’, `ரங்கூன்’, `மரகத நாணயம்’, `குரங்கு பொம்மை’, `அறம்’, `அருவி’ எனப் பல அறிமுக இயக்குநர்களின் படங்கள் நமக்குக் கிடைத்தன. அதில், `8 தோட்டாக்கள்’ படம் ரிலீஸாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவானதையொட்டி, அதன் இயக்குநர் ஸ்ரீகணேஷிடம் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நீங்கள் எழுதிய முதல் கதையே `8 தோட்டக்கள்'தானா?"

8 thottakkal
8 thottakkal

``நான் `8 தோட்டாக்கள்’ கதையை எழுதுறதுக்கு முன்னாடியே மூணு கதைகள் எழுதி, அந்த மூணு கதைகளையும் தயாரிப்பாளர்களுக்குச் சொல்லி கமிட் பண்ணதுக்கு அப்பறம் ட்ராப் ஆகிடுச்சு. அதுக்கப்பறம் `8 தோட்டாக்கள்’ தயாரிப்பாளர்கிட்ட ஒரு க்ரைம் த்ரில்லர் கதையைச் சொல்லி ஓகே வாங்கி, அதுக்கான வேலைகள்ல இருந்தேன். மொத்த டீமும் புதுசா ஒரு படம் பண்ணும்போது, ஆடியன்ஸை திரும்பிப்பார்க்கவைக்கிற மாதிரி ஒண்ணு பண்ணணும்னு தோணிட்டே இருந்துச்சு. அந்த சமயத்துலதான் ஆனந்தவிகடன்ல வெற்றிமாறன் சார் எழுதின `மைல்ஸ் டு கோ’ தொடரும் வந்திட்டு இருந்துச்சு. அந்தத் தொடரில் வெற்றிமாறன் சாரும், அவரோட முதல் படத்திற்காக சில கதைகள் எழுதியதையும், அது எதுவும் செட்டாகாம அதுக்கப்பறம் அவரும், அவரோட நண்பர் மணி மாறனும் ரோட்டில் நின்னு பேசிக்கிட்டே அரைமணி நேரத்தில் `பொல்லாதவன்’ கதையை உருவாக்கியதையும் சொல்லியிருந்தார். அதைப் படிச்சதுக்கு அப்பறம் அந்த விஷயம் 4 நாளா என் மனசுக்குள்ள ஓடிட்டு இருந்துச்சு. நாமளும் வேற ஒரு கதை எழுதலாம். அதை எழுதுறதுக்கு நிறைய நேரம் ஆகாதுனு வெற்றிமாறன் சார் சொன்னதில் புரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்பறம் நான் எழுதுன கதைதான் `8 தோட்டாக்கள்’. இந்தப் படத்தோட ஹீரோ வெற்றிதான் படத்தோட தயாரிப்பாளர். அவர்கிட்ட, `வேற கதையை வெச்சு படம் பண்ணிக்கலாம்’னு சொன்னப்ப, அவரும் எதுவுமே சொல்லலை. அவர் நினைச்சிருந்தா, `முதலில் சொன்னக் கதையைத்தான் பண்ணணும்’னு சொல்லியிருக்கலாம். ஆனா, `உங்களுக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணுங்க’ன்னு சொன்னார். அதுக்கப்பறம் கடகடனு ஒரு மாசத்துல திரைக்கதையையும் முடிச்சிட்டேன்.’’

`` `8 தோட்டாக்கள்’ படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் கேரக்டர் ரொம்பவே முக்கியமானதா இருக்கும். இந்தக் கேரக்டரை அவரை மனத்தில் வைத்துதான் எழுதுனீங்களா?"

M.S. Bhaskar
M.S. Bhaskar
8 Thottakkal

`` '8 தோட்டக்கள்’ படத்துக்கு முன்னாடி நான் எழுதுன கதையிலும் எம்.எஸ்.பாஸ்கர் சாருக்கு ரோல் இருந்தது. இந்தக் கதையை எழுதும்போதும், மூர்த்தி கேரக்டருக்கு எம்.எஸ்.பாஸ்கர் சார்தான்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா, 50 வயசு... கொஞ்சம் அப்பாவியான ஆள்னு சொன்னாலே டக்குனு அவர் முகம்தான் என் நினைவுக்கு வரும். அதுனால, இந்தக் கேரக்டருக்கு அவர்தான்னு எழுதும்போதே முடிவு பண்ணிட்டேன். அவர்கிட்ட போய் கதை சொல்லும்போதுதான் எனக்கு பதட்டமா இருந்துச்சு. ஏன்னா, எனக்கு கதை சரியா சொல்ல வராது. நான் அந்தக் கதையை சரியா சொல்லாமல் போய், அதுனால அவர் படத்துல நடிக்க ஓகே சொல்லலைனா என்ன பண்றது; நாமளும் வேற ஆப்ஷனே யோசிக்கலையேனு பயந்தேன். ஆனா, 20 நிமிஷம் கதையைக் கேட்டுட்டே ஓகே சொல்லிட்டார். சில விஷயங்களை மட்டும் கேட்டுக்கிட்டார். முழு ஸ்க்ரிப்ட்டையும் வாங்கிக்கலை. ஒவ்வொரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அவரோட சீன் பேப்பரை கொடுப்பேன். அதைப் பார்க்கும்போதெல்லாம், `எனக்கு இப்படி ஒரு சீனா’னு ஆச்சர்யப்பட்டுட்டே இருப்பார்.’’

``படத்தில் வர்ற அந்த கேன்டீன் சீனை ஷூட் பண்ணின அனுபவத்தைச் சொல்லுங்க?"

``அந்த கேன்டீன் சீன் எழுதும்போதே நான் அழுட்டேன். அந்த சீன் எழுதுனதுக்கு அப்பறம்தான், எனக்குள்ள மிகப்பெரிய நம்பிக்கையே வந்துச்சு. அதைப் படமாக்கும்போதும், எம்.எஸ்.பாஸ்கர் சார் அவ்வளவு எமோஷனலா நடிச்சு முடிச்சதும், நான், கேமரா மேன் யாரும் கட் சொல்லவேயில்லை. அந்த சீனுக்குள்ள அப்படி மூழ்கியிருந்தோம். ஒரு 15 நொடிக்கு அப்பறம்தான் நிதானமே வந்து கட் சொன்னோம். கட் சொன்னதும், மொத்த யூனிட்டுமே கைதட்டுனாங்க. படம் பார்த்தவங்களும் இந்த சீன் ரொம்பவே கனெக்ட்டாச்சுனு சொன்னாங்க.’’

``படத்தில் மிகப்பெரிய பலமா வசனங்கள் இருந்துச்சு. அதை எழுதுவதற்கு எந்தளவு மெனக்கெட்டீங்க?"

Nassar
Nassar
8 Thottakkal

``இந்தப் படத்தோட ஒட்டுமொத்த திரைக்கதை, வசனத்தையும் ஒரு மாசத்துல எழுதினாலும், நான் 20 வருஷமா பார்த்த, கேட்ட பல விஷயங்களையும் தொகுத்துதான் எழுதினேன். இந்தப் படத்தில் எழுதின வசனங்கள் எல்லாமே வாழ்க்கை கொடுத்த அனுபவத்தில் இருந்து எழுதுனதுதான். அதுவும் எம்.எஸ்.பாஸ்கர் சார் சொல்ற, `ஆறுதல் தேடியே வாழ்க்கையில பாதி போயிடுது’ங்கிற வசனம் ஒருத்தர் என்கிட்ட போறபோக்குல சொன்னது. இந்த மாதிரி நான் கேட்ட பல வசனங்களைப் படத்துக்குள் கொண்டுவந்தேன்.’’

`` `8 தோட்டாக்கள்’ படத்தை மறுபடியும் இயக்குவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், எந்தெந்த விஷயங்களை மாற்றி எடுப்பீங்க?"

8 thottakkal team
8 thottakkal team

``வாழ்க்கை மீதான பார்வை, சினிமா மீதான புரிதல் – இது இரண்டிலுமே இந்த 3 வருடங்களில் இன்னும் கொஞ்சம் பக்குவப்பட்டிருக்கேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி எனக்கிருந்த புரிதலில், இந்தப் படத்தை எடுத்தேன். மக்களுக்கு பிடிக்கும்கிற நம்பிக்கையில் எடுத்தேன். அது மக்களுக்கும் பிடிச்சிருந்தது. இப்போ இந்தப் படத்தை மீண்டும் எடுக்கிற வாய்ப்பு கிடைத்தால், இன்னும் அதிக புரிதலோடு எடுப்பேன். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் படம் அகிரா குரோசாவா எடுத்த `Stray Dog’ படத்தோட இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம். அந்தப் படத்திலும் ஹீரோவோட துப்பாக்கி காணாமல் போயிடும். இந்த ரெண்டு படங்களிலும் இருக்கிற ஒரே ஒற்றுமை இதுதான். `8 தோட்டாக்கள்’ படம் பாத்துட்டு, அகிரா குரோசாவா எழுதுன `சம்திங் லைக் ஆன் ஆட்டோபயோகிராஃபி’ புத்தகத்தை ஒருத்தர் எனக்கு பரிசா கொடுத்திருந்தார். அதில் அகிரா குரோசாவா அவரோட படங்களை எப்படி அணுகினார்; எதை மனத்தில் வைத்து ஒவ்வொரு படத்தையும் எடுத்தார்னு பல விஷயங்களை எழுதியிருப்பார். அந்தப் புத்தகத்தை நான் ` தோட்டாக்கள்’ படம் எடுக்குறதுக்கு முன்னாடி படிச்சிருந்தா, இன்னும் நல்ல படமா வந்திருக்கும்னு நினைப்பேன். ஆனா, இது நம்மளையும் மீறி ஒரு எமோஷனலா எல்லாரையும் கனெக்ட் பண்ணியிருக்கு. இதுதான் கலையோட சக்தினு உணர்றேன்.’’

``படம் ரிலீஸான அந்தத் தருணம் ஞாபகம் இருக்கா?"

8 Thottakkal
8 Thottakkal

``என் படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடி,`கவண்’, `டோரா’ படங்கள் ரிலீஸான அதே வாரத்தில், மணிரத்னம் சாரோட `காற்று வெளியிடை’ படமும், அடுத்த வாரம் தனுஷ் சார் இயக்கின `பவர் பாண்டி’ படமும் ரிலீஸாச்சு. இப்படி, பெரிய பெரிய படங்களுக்கு நடுவுல சின்னப் படமா இது ரிலீஸாச்சு. எனக்கு இதை இப்ப நினைச்சா, `நாம எவ்வளவு பதற்றமா இருந்திருக்கணும்’னு தோணுது. ஆனா, அப்ப ஒரு நல்ல படம் எடுத்திருக்கோம் அது மக்களுக்குப் பிடிக்கும்னு அப்பாவியா நினைச்சிட்டு இருந்தேன். படம் ரிலீஸாகுறதுக்கு மூணு நாள் முன்னாடியே பத்திரிகையாளர்களுக்குப் படம் போட்டுக்காட்டினோம். அப்போதுல இருந்தே பாஸிட்டிவ்வான விமர்சனங்கள் வந்ததனால, ஒரு நம்பிக்கையும் வந்துச்சு.’’

``படம் ரிலீஸானதுக்கு அப்பறம் கிடைத்த பாராட்டுகளில் எது மறக்க முடியாதது?"

vetri and aparna balamurali
vetri and aparna balamurali

``படம் ரெடியானதும், நான் தமிழ் சினிமாவில் மதிக்கிற வெற்றிமாறன் சார், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமினு சிலருக்கு படத்தைக் காட்டினேன். அவங்களும் படம் பார்த்திட்டு பாராட்டினாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நான் நினைச்சுக்கூட பார்க்காத ஒரு பாராட்டுனா அது, ரஜினி சாரோட பாராட்டுதான். அவரெல்லாம் என் படத்தைப் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணி பேசுவார்னு நினைச்சுக்கூட பார்க்கலை. `இன்னைக்கு நைட், சார் உங்கப் படத்தைப் பார்க்கப்போறார்’னு ரஜினி சார் ஆபீஸ்ல இருந்து மெயில் வந்துச்சு. அன்னைக்கு நைட் முழுக்க நான் தூங்கல. `ரஜினி சார் இப்ப நம்ம படத்தைப் பார்த்துட்டு இருப்பார்ல’னு அதையே நினைச்சிட்டு இருந்தேன். அப்பகூட அவர் பேசுவார்னு நான் நினைக்கல. அடுத்த நாள் அவர் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி, `இன்னும் அரை மணி நேரத்தில் சார் உங்களுக்கு போன் பண்ணுவார்’னு சொன்னாங்க. அதே மாதிரி அவரும் போன் பண்ணி ரொம்பவே சூப்பரா பேசினார். `ஹலோ... டைரக்டர் சாரா, உங்க படம் பார்த்தேன் சார். ரொம்ப நல்லா இருந்தது. சொல்றதுக்கு வார்த்தைகளே இல்லை. பாஸ்கர் சாருக்கு ரொம்ப நல்ல ரோல் கொடுத்திருக்கீங்க. எத்தனை வருஷம் ஆச்சு இந்தக் கதையை எழுத’னு கேட்டார். அவர் பேசுன அந்த 5 நிமிஷத்தை இன்னமும் என்னால மறக்க முடியாது. எனக்கு மட்டுமில்லாமல், எம்.எஸ்.பாஸ்கர் சார், ஹீரோ வெற்றிக்கும் போன் பண்ணி பேசினார்.’’

̀`ஒரு இயக்குநருக்கு அவரோட ரெண்டாவது படம்தான் ரொம்ப முக்கியமானதுனு சொல்லுவாங்க. உங்களோட ரெண்டாவது படம் எப்ப வரும்?"

kuruthi aattam first look
kuruthi aattam first look

``கண்டிப்பா இந்த வருஷம் படம் ரிலீஸாகிடும். நிச்சயமா `8 தோட்டக்கள்’ படத்தைவிட மிகச்சிறந்த படமா `குருதி ஆட்டம்’ இருக்கும். படத்தோட ஷூட்டிங் முடிஞ்சது. டப்பிங் ஆரம்பிச்சோம்; அப்பறம் கொரோனானால அதுவும் நிக்கிது. இந்தப் பிரச்னைகள் எல்லாம் சரியாகிட்டா, ஒரு மாசத்துல படம் ரிலீஸாகிடும்.’’