Published:Updated:

''நித்திஷைக் காப்பாற்ற எல்லோரும் போராடினாங்க... ஆனா, அந்த தாமதம்!'' - இயக்குநர் சுப்ரமணியம் சிவா

நித்தீஷ் வீரா
நித்தீஷ் வீரா

‘புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘காலா’, ‘அசுரன்' எனப் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் நித்திஷ் வீரா சில நாட்களுக்கு முன் கொரோனாவால் மரணம் அடைந்தார்.

நித்திஷ் வீராவோடு நெருங்கிப் பழகியவரும், 'திருடா திருடா', 'பொறி', 'சீடன்' படங்களின் இயக்குநருமான சுப்ரமணியம் சிவா நித்திஷ் வீராவின் கடைசி நாட்களை விகடனிடம் பகிர்ந்துகொண்டார்.

''அதீத திறமைகளோடும், பெரிய கனவுகளோடும், தீராத நம்பிக்கையோடும், அன்பு நிறைந்த மனதோடும், தமிழ்திரையில் ஆலமரம் போல் தழைக்க வேண்டும் என்ற எதிர்கால லட்சியங்களோடும், முகம் முழுக்க எப்போதும் புன்னகையை பூசியவண்ணம் வளம் வந்தவன் நித்திஷ்.


20 வருட கனவுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் நிஜமாகும் நேரத்தில் அவசரமாக யாருக்கு உதவ கிளம்பினானோ?!

ஒன்று அவன் முகம் தெரியாத மனிதனாக இருந்த போது போயிருக்கலாம். அல்லது சாதித்து 10,15, வருடம் கழித்தாவது சென்றிருக்கலாம். நம் மனம் கொஞ்சமாவது ஆறுதல் அடைந்திருக்கும்.

காலம் மிகவும் கொடியது!

மூன்று மாதம் இருக்கும்...

'அண்ணா, உங்களை சந்திக்க வேண்டும்' என போனில் அழைத்தான் நித்திஷ்.

'வா' என்றதும் 30 நிமிடங்களுக்குள் நண்பனோடு வந்தான்.

என் கையில் ஒரு கார் சாவியை கொடுத்து, 'அண்ணா. புதுகார் வாங்கியிருக்கேன். இப்பதான் வெற்றிமாறன் சாரிடம் காட்டி ஆசீர்வாதம் வாங்கிட்டு வரேன். நீங்க ஒரு ரவுண்டு ஓட்டிப் பாருங்க' என மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு சொன்னான்.

நித்திஷ் வீரா
நித்திஷ் வீரா

அவன் மனதைப் போலவே வெள்ளை நிற கார் ஓட்ட சுகமாக இருந்தது. பின்பு, காபி சாப்பிட்டோம். அப்போது, 'அண்ணா என் 20 வருஷ கனவுனா இது. என்னோட நடிக்க வந்தவங்க சிலர் நல்ல நிலைக்கு வந்துட்டாங்க, இப்போதான் வெற்றிமாறன் சார், தனுஷ் சார், தாணு சார் மூலம் 'அசுரன்'ல எனக்கு நல்ல அங்கிகாரம் கிடைச்சிருக்கு. இந்த இடத்தைப் பிடிச்சிக்கிட்டு நல்லா வந்திடுவேன்ணா... அப்புறம், என்கூட நடிக்க வந்த சில பேர் இன்னும் அதே இடத்துல இருக்காங்கணே... அவங்களையும் தூக்கிவிட ஏதாவது பண்ணனும்ணே' என்றான். வளரும் போதே நண்பர்கள் வளர்ச்சியில் அக்கறை காட்டிய அவனை பாராட்டி அனுப்பினேன்.

அதன்பிறகு, 15 நாட்கள் கழித்து வந்து ஓரு டூயட் பாடலை போனில் போட்டு காண்பித்தான். நன்றாக இருந்தது. 'இப்ப நான் நடிச்சிட்டிருக்க 'பெல்' படத்தோட பாட்டுணா... அப்பா, மகன்னு டபுள் ஆக்‌ஷன்ல ஹீரோவா நடிக்கிறேன். இந்தப் படம் ரிலீஸான எனக்கு வேறு ஒரு பரிமாணம் கிடைக்கும்ணா...'' என்று சொல்லி உற்சாகமாக விடைபெற்றவன், மீண்டும் ஒரு மாதம் முன்பு வந்தான்.

மிக மகிழ்ச்சியாக இருந்தவன், ''நேற்றுதான் 'சாணிக் காயிதம்' படத்துல நடிச்சி முடிச்சேன். சூப்பர் கேரக்டர்ணா... செல்வராகவன் சாரை 'புதுப்பேட்டை'க்கு அப்புறம் இப்பதான் பார்த்தேன்.

'ஏன் வந்து பார்க்கலை'ன்னு கேட்டார், 'பலமுறை உங்களைப் பார்க்க வந்தேன் சார்... உங்களைப் பார்க்க விடலை'ன்னு சொன்னேன். 'அப்படியா, சரி உன் நம்பர் கொடு'ன்னு வாங்கிக்கிட்டார்ணா. அடுத்த படத்துல நல்ல கேரக்டர் கொடுக்குறதா சொல்லியிருக்கார்ணா... நல்லது ஒன்னொன்னா நடக்க ஆரம்பிச்சிடுச்சுணா' என நம்பிக்கையுடன் சொன்னவனிடம்... 'தம்பி நீ இன்னும் ஒரு வருஷத்துல நல்ல இடத்துக்கு வந்துடுவ... உன் நண்பர்களுக்கும் உதவி ஆரம்பிச்சிடுவ' என்றேன். சந்தோஷமாகப் புறப்பட்டு சென்றவன் 15 நாட்கள் முன்பு இப்படி அழைப்பான் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

கடந்த மே 3-ம் தேதி மதியம் எனக்கு நித்திஷிடம் இருந்து போன் வந்தது.10 மைல் பயந்து ஓடி வந்தவன் போல் மூச்சு திக்கித் திணற ''அண்ணா... எனக்கு மூச்சி விட முடியல... டாக்டர் வீரபாபு உங்களுக்கு தெரியும்தானேணா.. உடனே வாங்க'' என பயத்தின் உச்சத்தில் பதறி சொன்னான். நானும் பதறிப்போய் 'நீ உடனே வீரபாபு ஆஸ்பிட்டல் வா... நான் அங்க 30 நிமிஷத்துல இருப்பேன்'னு சொல்லி உடனே டாக்டர் வீரபாபு சாருக்கு போன் செய்தேன். விஷயத்தை சொன்னவுடன், 'நான் வெளில இருக்கேன். உடனே வர சொல்லுங்க. என் உதவியாளர் பார்ப்பாங்க. நானும் வந்துடுறேன்' என்றார்.

இயக்குநர் சுப்ரமணியம் சிவா
இயக்குநர் சுப்ரமணியம் சிவா

ஆஸ்பிட்டல் கிளம்பி கொண்டிருந்த எனக்கு 15 நிமிடத்தில் மீண்டும் டாக்டர் வீரபாபுவிடம் இருத்து போன் வந்தது. 'நித்திஷுக்கு ஆக்ஸிஜன் லெவல் ரொம்ப கம்மியா இருக்காம். என் உதவியாளர் சொன்ன விவரப்படி பார்த்தா அவருக்கு 25 கிலோ ஆக்ஸிஜன் வைக்கணும். நம்மகிட்ட 15 கிலோ கெப்பாசிட்டிதான் இருக்கு. உடனடியா அவரை ஒரு பெரிய ஆஸ்பிட்டல சேர்க்கணும்' என கண்டிப்பான குரலில் சொல்ல, நித்திஷுக்கு இந்த விஷயத்தை சொன்னேன். 'சரி' என்று சொன்ன நித்திஷிடம் இருந்து அடுத்து 3 மணிநேரத்துக்கு எந்த பதிலும் இல்லை...

பிறகு நண்பர் மூலம் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டதாக தெரிந்த உடன் நிம்மதி அடைந்தாலும், நித்திஷ் பேசியபோது அவனின் குரலில் இருந்த பயமும், பதற்றமும் என் மனதை அரித்துக்கொண்டே இருந்தது. உடனே நித்திஷ் போனுக்கு, 'தம்பி நம்பிக்கையோட இரு... நாம் சாதிக்க நிறைய இருக்கு. நீ சீக்கிரம் மீண்டு வந்துடுவ... பயப்படாத. நான் எப்போ உன்ன ஆஸ்பிட்டல்ல வந்து பார்க்கலாம்'னு குரல் பதிவு அனுப்பினேன். மே 4-ம் தேதி, நித்திஷ் போனிலிருந்து 'அண்ணா... நான் நண்பன் விஜய்சேதுபதி முயற்சியால ஆஸ்பிட்டல்ல சேர்ந்துட்டேன். குணமாகி வந்துடுவேன்'' என கொஞ்சம் கஷ்டமான குரலில் பேசி குரல் பதிவு அனுப்பி இருந்தான். எப்படியும் நல்லபடியாக வந்து விடுவான்... நோயின் காரணமாக இப்படி பேசி இருக்கிறான் என்றே அப்போது நினைத்தேன்.

அதன் பிறகு இரண்டு நாள் போன் செய்தேன். தம்பி சுந்தரமூர்த்தி (வெற்றிமாறனின் உதவி இயக்குநர்) மூலம் அப்பப்போது பதில் வந்தது. இரண்டு முறை நித்திஷ் வீராவின் தம்பி போனை எடுத்து, நித்திஷ் உடல்நிலை பரவாயில்லை என தெரிவித்தார்.

இந்த நிலையில் நித்திஷ் போல எனக்கு நெருக்கமான 3 பேர்களுக்கு கொரானா பாசிட்டிவ் ஆக, அது சம்பந்தமாக ஆஸ்பிடலுக்கு அலைந்து கொண்டிருந்தேன், இந்த நிலையில்தான் நான்கு நாட்களுக்கு முன்பு நித்திஷுக்கு ஆக்ஸிஜன் லெவல் மிகவும் குறைந்துவிட்டதாகவும், அண்ணன்கள் நடிகர் மூனார் ரமேஷ், ஸ்டில்ஸ் ராபர்ட் செல்வம் மூலமாக நண்பர் வெற்றிமாறனுக்கு தகவல் தெரிவித்தாகவும் சொன்னார்கள்.

கடைசி நேரத்தில் வெற்றி தன்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் துரிதமாக செய்தும், முடிவு கை நழுவிப் போய் விட்டது கொடுமை.

நித்தீஷ் சினிமாவிற்காக பட்ட கஷ்டத்திற்கு, தொலைத்த இளைமைக்கு, சினிமா திரும்ப அள்ளி கொடுக்கும் காலத்தில் கொரானாவால் பலியானது தாங்க முடியாத வேதனை.

வெற்றி மாறன், நித்திஷ் வீரா
வெற்றி மாறன், நித்திஷ் வீரா

நித்திஷ் மறைவு செய்தி அறிந்த டாக்டர் வீரபாபு போனில் என்னை அழைத்தவர் வேதனையோடு சொன்னார். 'ஏன்ணா... இப்படி காலம் கடந்து வருகிறார்கள். கொரானா அறிகுறியோ அல்லது உடல்நிலையில் சிறு மாற்றம் உணர்ந்தாலோ மருத்துவரை உடனே சந்திக்க வேண்டாமா... தனக்கு கொரானா என்றால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயமா அல்லது நமக்கு வராது என்ற முரட்டு துணிச்சலா? நோயை மறைப்பதால் எவ்வளவு பெரிய இழப்பு நடந்து விடுகிறது' என்றார்.

அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது. யாரும் அலட்சியமாக இருக்காதீர்கள். தாமதம் செய்யாதீர்கள்... திரைத்துறையில் யாரெல்லாம் இருக்கப் போகிறார்கள் என்ற பயத்தை ஒவ்வொரு விடியலும் சொல்லிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு விடியலும் வேதனை செய்தியாகவே ஆரம்பிக்கிறது.

நித்திஷ் வீரா
நித்திஷ் வீரா

இது இரண்டாம் அலை... மூன்றாம் அலையும் வருகிறது என்கிறார்கள். சிறு உடல்நிலை குறைபாட்டை உணர்ந்தால்கூட உடனடியாக மருத்துவரை அணுகுவதே நல்லது. நாம் நம்மை பாதுகாத்து கொள்வது மட்டுமல்ல நம்முடன் இருப்பவர்களையும் பாதுகாக்கிறோம் என்பதே இன்றைய நிலை!

அடுத்த கட்டுரைக்கு