Published:Updated:

தனுஷுக்கு `அண்ணன்'; விவசாயிகளுக்குத் தோழன்!- `வெள்ளை யானை' இயக்குநர் சுப்ரமணியம் சிவா ஷேரிங்ஸ்

சமுத்திரக்கனியுடன் இயக்குநர் சுப்ரமணியம் சிவா
சமுத்திரக்கனியுடன் இயக்குநர் சுப்ரமணியம் சிவா

திருடா திருடி, பொறி, யோகி, சீடன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சுப்ரமணியம் சிவா நீண்ட வருடங்களுக்குப் பிறகு `வெள்ளை யானை' என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இது தொடர்பாக அவரிடம் பேசினோம்.

சீடன் படத்துக்குப் பிறகு 7 வருட இடைவெளி ஏன்?

இயக்குநர் சுப்ரமணியம் சிவா
இயக்குநர் சுப்ரமணியம் சிவா

இவ்வளவு நாள் சுதந்திரமாக இருந்துவிட்டேன் எனச் சொல்லலாம் (சிரித்துக்கொண்டே). உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஏழு வருடத்தில் நேரடியாகப் படம் இயக்கவில்லை என்றாலும் நிறைய இயக்குநர்களுடன் பயணித்துக்கொண்டுதான் இருந்தேன். அமீர், விஜய் மில்டன், வெற்றிமாறன், வேல்ராஜ், தனுஷ் என இயக்குநர்களுடன் வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன். இப்படிப் பல இயக்குநர்களுடன் வேலை பார்த்தது சினிமாவின் மீது எனக்கு இருந்த பார்வை மாறியிருக்கிறது. நானும் மேம்பட்டு இருப்பதாக நினைக்கிறேன். இப்போது எல்லாம் சரியாக அமைந்துவந்ததால் புதிதாகப் படம் இயக்கி வருகிறேன். இனி தொடர்ந்து படங்கள் இயக்குவேன்.

தற்போது இயக்கும் `வெள்ளை யானை' திரைப்படம் எப்படி வந்திருக்கிறது?

சமுத்திரக்கனி - ஆத்மியா
சமுத்திரக்கனி - ஆத்மியா

மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. சமுத்திரக்கனி ஹீரோ. மனம் கொத்தி பறவையில் நடித்த ஆத்மியா தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோயினாக நடித்துள்ளார். இதுபோக யோகி பாபு, மூர்த்தி, சரண்யா ரவிச்சந்திரன், இ.ராமதாஸ், இயக்குநர் ஸ்டான்லி எனப் பல பேர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். விவசாயத்தை, விவசாயிகள் சந்திக்கின்ற பிரச்னைகளை, வலிகளை மையப்படுத்திய கதைதான் இந்த `வெள்ளை யானை'. விவசாயிகளின் வாழ்க்கையை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறேன்.

`வெள்ளை யானை' தலைப்பே வித்தியாசமாக இருக்கே?

வெள்ளை யானை படத்தில் சமுத்திரக்கனி
வெள்ளை யானை படத்தில் சமுத்திரக்கனி

தமிழ் இலக்கியத்தில் வயலும் வயல் சார்ந்த மருத நிலத்துக்கு அரசன் இந்திரன். இந்திரன் பயன்படுத்துவது `வெள்ளை யானை' வாகனம். நிலம் இந்திரனாக இருந்தால், நிலம் பயன்படுத்துகிற வாகனம் யார் என்றால் அது விவசாயிகள்தான். நிலமும், இந்திரனும் ஏன் மருத நிலத்தில் இருக்கிறார்கள் எனக் கேட்டால் மருத நிலம்தான் சொர்க்கம். பழங்காலத்தில் `சோறுகண்ட இடம் சொர்க்கம்' எனக் கூறுவார்கள். இதற்கு விளக்கம் சோறு விளையும் (மருத நிலம்) இடம்தான் சொர்க்கம். இதைக் குறியீடாக வைத்துத் தான் இந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனியை ஹீரோவாக தேர்வு செய்யக் காரணம் என்ன?

வெள்ளை யானை படத்தில் சமுத்திரக்கனி
வெள்ளை யானை படத்தில் சமுத்திரக்கனி

இது ஒரு விவசாயம் சம்பந்தப்பட்ட கதை. விவசாயத்தை, விவசாயியை, மண்ணின் வாழ்வைச் சொல்ல இயல்பான கதாநாயகன் தேவை. விவசாயிக்குத் தேவையான முதல் அடையாளமே உடல் உறுதிதான். இப்படி இந்தக் கதைக்குத் தேவையான அனைத்து அம்சங்களுடன் இருந்தால் சமுத்திரக்கனியை ஹீரோவாக தேர்வு செய்தோம். கதைப்படி வயலில் இறங்கி ஏர் உழவும், நாற்று நடவும் செய்ய வேண்டும். அதை அனைத்தையும் செய்தார்.

படத்தில் பெரும்பாலும் அரைக்கால் சட்டை, பனியனோடும், பல காட்சிகளில் வெற்று உடம்போடும் நடித்திருப்பார். இந்தப் படத்தில் பெரிதாக வசனம் இல்லை என்றாலும் அவரது செயல்பாடுகள் புதிதாகத் தெரியும். இந்தக் கதைக்கு அவரைத் தவிர ஹீரோவாக நடிக்க முடியாது என்பது படம் பார்க்கும் அனைவருக்கும் புரியும். அதேபோல் நாயகி ஆத்மியாவும் அப்படிதான். மலையாளப் பெண் என்பதால் இந்தக் கதைக்குத் தேவையான யதார்த்ததுடன் நடித்துள்ளார். அவங்க கேரக்டரும் சிறப்பாக வந்திருக்கு.

இதற்குமுன்பு நீங்கள் இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்ப பாங்கான, ஜாலியான படம். ஆனால் இப்போது விவசாயத்தைக் கையில் எடுக்க காரணம் என்ன?

சமுத்திரக்கனியுடன் சுப்ரமணியம் சிவா
சமுத்திரக்கனியுடன் சுப்ரமணியம் சிவா

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சீசன் இருக்கும். `திருடா திருடி' எடுத்த நேரத்தில் காதல், மசாலா படங்களாக வந்துகொண்டிருந்தன. `யோகி'யைப் பொறுத்தவரை அமீர் அண்ணனுக்காகப் பண்ணிய படம். அமீரின் பாடி லாங்குவேஜ்காக பண்ணிய படம்தான் அது. சீடன் ரீமேக் படம். இப்படி நான் இயக்கிய ஒவ்வொரு காலகட்டத்தையும் பொறுத்துத்தான் அமைந்தது. ஆனால் `வெள்ளை யானை' இப்போது உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படம். அடிப்படையில் நான் ஒரு விவசாயி, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஊரிலிருந்து வந்தவன். விவசாயத்தின் அவசியம் என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும்.

விவசாயத்தை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்துகொண்டிருக்கிறது..`வெள்ளை யானை'-யில் என்ன வித்தியாசம்?

வெள்ளை யானை படத்தில் சமுத்திரக்கனி
வெள்ளை யானை படத்தில் சமுத்திரக்கனி

இதற்கு முன்பு வந்த படங்களில் விவசாயத்தை ஒரு பின்புலமாகத் தான் வைத்திருப்பார்கள். அதில், காதல் பிரச்னை, சாதி பிரச்னை, உறவு முறை பிரச்னையை வைத்து கதை சொல்லியிருப்பார்கள். இது எதுவும் இல்லாமல் `வெள்ளை யானை' படத்தின் மையமே விவசாயம்தான். விவசாயத்தில் என்ன பிரச்னை, விவசாயிகளை மக்கள் என்ன கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள், விவசாயிகள் இந்த உலகத்தை எப்படிப் பார்க்கிறார்கள் போன்றவற்றை மையப்படுத்தித்தான் கதை அமைத்துள்ளோம். ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு விவசாயம் என்பது தொழில் கிடையாது. அவர்கள் உயிர் வாழ்வதற்கான ஆதாரம்தான் விவசாயம். சேவை மனப்பான்மையுடன் இருக்கிற ஒருவன்தான் விவசாயத்தைச் செய்ய முடியும்.

தற்போதுள்ள சூழலில் பழங்கால நடைமுறைபடி விவசாயம் நடைபெறவில்லை. முன்பெல்லாம் விதை, உரம் என அனைத்தும் விவசாயியே வைத்திருப்பான். ஆனால் இப்போது எல்லாம் அப்படியல்ல. அனைத்தையும் கடைகளில் வாங்க வேண்டி இருக்கிறது. உலகமே விவசாயி உற்பத்தி செய்வதை உண்டு வாழ்கிறது. அப்படிப்பட்ட விவசாயி தான் செய்யும் வேலையில் நஷ்டத்தைச் சந்திக்கிறான். ஒரு உயிர் உணவை நம்பி இருக்கிறது. உணவு விவசாயத்தை நம்பி இருக்கிறது. விவசாயி நிலத்தை நம்பி இருக்கிறார். நிலம் நீரை நம்பி இருக்கிறது. அப்படிப் பார்த்தால் மனித இனம் விவசாயத்தை நம்பிதான் இருக்கிறது. உயிர்ச் சங்கிலி இப்படி இருக்கும்போது ஒரு விவசாயியே இங்கு வாழ முடியவில்லை என்றால் இந்த மனித சமூகம் எப்படி தங்களை தற்காத்துக்கொள்ளப் போகிறது எனத் தெரியவில்லை.

இந்த நிலத்துக்குச் சம்பந்தமில்லாத பொருள்களை உற்பத்தி செய்து வருகிறோம். இதனால் நமது வாழ்வியலே சீர்கெடுகிறது. இதற்கெல்லாம் என்ன தீர்வு... விவசாயி எப்படி தன்னை தற்காத்துக் கொள்வது என்பது மாதிரியான பிரச்னைகளை, இதிலிருந்து விவசாயிகள் எப்படி மீள்கின்றனர் என்பதை நகைச்சுவை கலந்து இந்தப் படத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஒரு விவசாய மண்ணில் பிறந்து, விவசாயம் செய்த மனிதனாக இந்தக் கதையைப் படமாக்கி இருக்கிறேன்.

விவசாயி மீதான மக்களின் கண்ணோட்டத்தை மாற்றும் படமாக இது இருக்குமா?

சமுத்திரக்கனி - ஆத்மியா
சமுத்திரக்கனி - ஆத்மியா

நிச்சயம் இருக்கும். நம் சமுதாயம் விவசாயிகளின் மீது வைத்துள்ள பார்வையே தவறாக இருக்கிறது. விவசாயி ஒரு தொழில் செய்கிறான் என்ற நினைப்பில் அவர்களைப் பார்க்கிறார்கள் மக்கள். விவசாயி இந்தச் சமுதாயத்தின் தாய், தந்தை என்றுதான் நான் கூறுவேன். மழை, வெயில் பார்க்காமல் இந்தச் சமுதாயம் வாழ்வதற்காக ஊழியம் தான் விவசாயி ஒவ்வொருவரும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அவனுடைய பணி மகத்தானது. விவசாயி செய்வது தொழில் அல்ல சேவை என்றுதான் பார்க்க வேண்டும். விவசாயி என்றாலே கிராமத்தான், படிக்காதவர்கள், நாகரிகம் தெரியாது என்று குறைந்து மதிப்பிட்டுவதை நிறுத்த வேண்டும். நம் மூதாதையர்கள் அனைவரும் விவசாயி என்பதை ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். இந்தப் பார்வைக்கு மக்களைக் கொண்டுவர இந்தப் படம் உதவும்.

ஒரு இயக்குநராக இருந்துகொண்டு தனுஷ் ரசிகர் மன்ற தலைவராக எப்படி?

சுப்ரமணியம் சிவா
சுப்ரமணியம் சிவா

இது ஒரு பதவி கிடையாது. இது ஒரு பொறுப்பு அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு வேலையைக் கையில் எடுத்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். இயக்குநரோ, நடிகரோ ரசிகரின் மனநிலைக்குப் படம் எடுக்க வேண்டி இருக்கிறது. நேரடியாக ஒரு ரசிகனைச் சந்திக்கும் போது அவர்களின் மன நிலையை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது என நான் நம்புகிறேன். ரசிகர்கள் இல்லாமல் சினிமா இல்லை.

எல்லாரையும் சம நிலையாகப் பார்க்கும் சுபாவம் கொண்டவன் நான். யாரையும் இங்கு வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. என்னால் முடியவில்லை என்றால் முடியாது என்று கூறிவிடுவேன். இயக்குநராக இருந்தால் அதை மட்டுமே செய்யணும் என்பது விதிவிலக்கல்ல. அதனால் நானே விரும்பி ஏற்றுக்கொண்டதுதான் இந்தப் பொறுப்பு.

அசுரன் படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடிப்பதாகக் கேள்விப்பட்டோம்?

உண்மைதான் (சின்ன சிரிப்புடன்).

சுப்ரமணியம் சிவா
சுப்ரமணியம் சிவா

தனுஷை வைத்து மீண்டும் இயக்குவீர்களா?

நிச்சயம் இயக்குவேன். தனுஷ் சாருக்கு தற்போது சில கமிட்மென்ட் இருக்கிறது. அதை அவர் முடித்தவுடன், நானும் இந்த வெள்ளை யானை படத்தை முடித்த பிறகு அது முடிவாகும்.

அடுத்த கட்டுரைக்கு