Published:Updated:

``தனுஷோட கேரவன்ல இவரோட காமெடிதான் ஓடிட்டே இருக்கும்!" - சுப்ரமணியம் சிவா

இயக்குநர் சுப்ரமணியம் சிவா
இயக்குநர் சுப்ரமணியம் சிவா

`சிறந்த படங்களைப் பண்ணிக்கிட்டே இருக்கணும்; காலம் அதுக்கான பதிலைக் கொடுக்கும்னு நினைப்பார் தனுஷ். நம்ம பெயருக்கு முன்னாடி இப்படி போட்டுக்கணும்னு விரும்ப மாட்டார். அதை ரொம்ப கூச்சமா நினைப்பார்.’

`திருடா திருடி', `யோகி', `சீடன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சுப்ரமணியம் சிவா, தற்போது `வெள்ளை யானை' என்ற படத்தை இயக்கியுள்ளார். தவிர, அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தின் தலைவராகவும் பிஸியாக இருக்கிறார். அந்தப் படத்தைப் பற்றியும் தனுஷைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

`வெள்ளை யானை' எப்படி வந்திருக்கு ?

``ரொம்ப நல்லா வந்திருக்கு. விவசாயிகளை இந்தச் சமூகம் என்னவா மாத்தியிருக்கு, அவங்களை எப்படி இந்தச் சமூகம் டீல் பண்ணுதுங்கிறதைப் பத்திதான் இதுல பேசியிருக்கேன். வெள்ளை யானை சொர்க்கத்துல இருக்கிற ஒண்ணு. விவசாயம் பண்ற மருத நிலத்தைத்தான் சொர்க்கமா சொல்றேன். அப்போ, விவசாயிகள்தானே வெள்ளை யானைகள். அவங்களை எவ்ளோ மோசமான நிலைமைக்குத் தள்ளியிருக்கோம், அவங்க இல்லைனா நாம எல்லோரும் என்ன ஆகப்போறோம்னுதான் இந்தப் படத்துல சொல்லியிருக்கேன். ஒரு விவசாயி, ஒரு திருடன்... இவங்க ரெண்டு பேருல வாழ்க்கையை யார் ஜெயிக்கப் போறாங்கங்கிறதுதான் `வெள்ளை யானை' படத்தோட கான்செப்ட். விவசாயி `வெள்ளக்குஞ்சு'ங்கிற கேரக்டர்ல சமுத்திரக்கனி, திருடன் `கொழுக்கட்டை'யா யோகிபாபு, `அமுதா'வா ஆத்மியா நடிச்சிருக்காங்க. இந்தப் படம் விவசாயத்தை முக்கியமா பேசுனாலும் அதுல காதல், குடும்பம், எமோஷன், ஹியூமர்னு எல்லாமே நிறைஞ்சிருக்கும். சமுத்திரக்கனிக்கும் யோகிபாபுவுக்குமான காம்பினேஷன் நிச்சயம் பேசப்படும்.''

`வெளியே அவ்ளோ பிரச்னை இருக்குனு தியேட்டருக்குள்ள வந்தா, அங்கேயும் மெசேஜ் சொல்றாங்களே...'னு ஒரு எண்ணம் நிறைய பேருக்கு இருக்கு. இப்படி இருக்கிற சூழல்ல, இந்தப் படத்தைப் பார்த்துட்டு வெளியே வந்தவுடன் மக்கள் மனநிலை எப்படி இருக்கும்?

இயக்குநர் சுப்ரமணியம் சிவா
இயக்குநர் சுப்ரமணியம் சிவா

``நல்ல விஷயங்களைச் சொன்னா யாராலும் ரொம்ப நேரம் கேட்கமுடியாது. இதுல சொல்லியிருக்கிற விஷயம்தான் சீரியஸா இருக்கும். ஆனா, படத்தை ஹியூமர் கலந்துதான் சொல்லியிருக்கேன். சமுத்திரக்கனி அண்ணனுக்கு இந்தப் படத்துல மொத்தமே மூணு பக்க வசனம்தான். அதனால, வசனங்கள் பேசிக்கிட்டே இருக்க மாட்டாங்க. நான் சொல்ல நினைக்கிற கருத்தை இதுல காட்சியா காட்டியிருக்கேன். அதுலயே மக்கள் புரிஞ்சுக்குவாங்க. விவசாயிகள் மீது பாவப்படுங்கன்னு இதுல சொல்லலை. எப்படி இருந்தாலும் விவசாயிகள் பொழச்சுக்குவாங்க. ஆனா, விவசாயிகளை நம்பி இருக்கிற இந்தச் சமூகம் என்னாகும்னுதான் சொல்லியிருக்கேன். அதே மாதிரி சீரிஸான பகுதிகள் நெத்திப்பொட்டுல அடிக்கிற மாதிரியும் இருக்கும்."

சந்தோஷ் நாராயணன் இசையில ரெண்டு பாடல் வெளியாகியிருக்கு. அவருடைய பங்கு எந்த அளவுக்கு இருக்கும்?

``தனுஷ் சார் சொல்லித்தான் சந்தோஷ் நாராயணன் சார்கிட்ட போனேன். அவர் பேஸிக்கா இயற்கைமீது அன்புகொண்டவர். குழந்தைத்தனமான ஒரு நகைச்சுவை உணர்வுமிக்க மனிதர். அவர் இருக்கிற கொலப்பாக்கம் ஏரியாவுல, அவ்ளோ மரக்கன்றுகள் நட்டிருக்கார். இந்த மாதிரி ஒரு மனிதர்கிட்ட இந்தப் படத்தை எடுத்துட்டுப்போனது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவரும், `இந்தப் படத்துல வொர்க் பண்றது எனக்கு பர்சனலா கனெக்ட்டாகுது'னு சொல்லியிருக்கார். படத்தை எடுத்துட்டு வந்த பிறகுதான் அவர் இசையமைச்சிருக்கார். விஷுவலைப் பார்த்துட்டு, அதுக்கு ஒரு பாட்டை எழுதச் சொல்லி அப்புறம் டியூன் போட்டார். மொத்தம் ஐந்து பாடல்கள் இருக்கு. தவிர, என்கிட்ட நிறைய தீம் போட்டுக் காட்டினார். அதனால இது ஒரு மியூசிக்கல் படமாவும் இருக்கும்."

`பாபு'ங்கிற தன் பெயருக்கு முன்னால் நீங்க இயக்குன `யோகி' படத்தைச் சேர்த்து இன்னைக்கு எல்லோருக்கும் பிடிச்ச நடிகரா பிஸியா இருக்கார், யோகிபாபு. அவருடைய வளர்ச்சியை எப்படி பார்க்குறீங்க?

இயக்குநர் சுப்ரமணியம் சிவா
இயக்குநர் சுப்ரமணியம் சிவா

``யாரையும் யாரும் டெவலப் பண்ணிவிட முடியாது. அவங்களுடைய தனித்திறமைதான் அவங்களை வளர்க்கும். வலிமையுடையதுதான் வாழும். அந்த வலிமை இல்லைனா நாம என்ன பண்ணாலும் வாழமுடியாது. நான் இயக்குன `யோகி' படத்தோட ஷூட்டிங் மணி மஹால்னு ஒரு இடத்துல நடந்தபோது அவர் முதன்முதல்ல நடிச்சார். பாபு இந்தளவுக்கு வளர்வார்னு எந்த எண்ணமும் திட்டமும் என்கிட்ட கிடையாது. அவருடைய திறமைதான் இந்த வளர்ச்சிக்குக் காரணம். அந்தப் படத்துல அறிமுகமானோம்னு அந்தப் படத்தோட பெயரைத் தன் பெயருக்கு முன்னாடி வெச்சுக்கிட்டார். இந்தளவுக்கு அவர் வளர்ந்திருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம். `வெள்ளை யானை' படத்துல அவர் ஒரு காமெடியனா இல்லாம கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா வர்றார்."

'சீடன்' படத்துக்குப் பிறகு, இத்தனை வருடங்களா நீங்க படம் இயக்காததற்குக் காரணம் என்ன?

`` 'சீடன்' படத்துக்குப் பிறகு, `உலோகம்'னு ஒரு படம் எடுத்தேன். இன்னும் ஒருநாள் ஷூட்டிங் இருக்கு. அப்புறம் தனுஷ், வெற்றிமாறன், அமீர் அண்ணன், வேல்ராஜ்னு எல்லோரும் அவங்களோட படங்கள்ல வொர்க் பண்ண கூப்பிடுவாங்க. என்னால மறுக்கமுடியாது. இந்த மாதிரி காலங்கள் ஓடிடுச்சு. இதெல்லாம் போக, நான் படம் இயக்காததுக்கு முக்கியமான காரணம், என்னோட சோம்பேறித்தனம்."

`திருடா திருடி' படத்துல தனுஷை வெச்சு எடுத்த நீங்க, இப்போ அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர்... இப்படி நடக்கும்னு நினைச்சுப் பார்த்தீங்களா?

இயக்குநர் சுப்ரமணியம் சிவா
இயக்குநர் சுப்ரமணியம் சிவா

``நிச்சயமா நினைக்கலை. `திருடா திருடி' படம் எடுக்கும்போது அவருக்கு 19 வயசு. கதையையே அவர் அப்பாவோட சேர்ந்துதான் கேட்டார். அவருடைய முதல் படத்துலேயே ரொம்ப ப்ராமிஸிங்கா தெரிவார். என்னுடைய படத்துல நடிக்கும்போதே நிறைய சிங்கிள் டேக்ல ஓகே பண்ணிடுவார். சில சீன் சரியா வரலைனா, அவரே கட் சொல்லி, என்ன தப்புனு தெரிஞ்சு மறுபடியும் நடிப்பார். அவர் நடிகர் மட்டுமல்ல. பாடகர், பாடலாசிரியர், இயக்குநர்னு பல பரிணாமங்கள்ல இயங்கிட்டிருக்கார். அவருக்கு 8000 ரசிகர் மன்றங்கள் இருக்கு. மன்றங்கள், அமைப்புகள்னு எல்லாம் சேர்த்து 15 லட்சம் பேர் இருக்காங்க. அவங்களை சரியான கட்டமைப்புக்குள்ள கொண்டு வரணும்னு நினைச்சார். அதுக்கு முன்னாடி அந்தப் பொறுப்புல இருந்தவர், வேற வேலை காரணமா விலகிட்டதால என்னை லீடு பண்ண சொல்லிக் கேட்டார். நாளைக்கு ஷூட்டிங்னு இன்னைக்கு சொன்னாக்கூட, என்னால எல்லாத்தையும் ரெடி பண்ணிட முடியும். அதை அவரே பார்த்திருக்கார். அந்த நம்பிக்கையில இந்தப் பொறுப்பை என்கிட்ட கொடுத்திருக்கார்.

அது மட்டுமில்லாம, இந்தப் பொறுப்புல இருக்கிறது மூலமா ரசிகனாகிய பொது மக்களுடன் தொடர்புல இருக்க முடியுது. ரசிகனை நான் மினி வெர்ஷன் கலைஞனாதான் பார்க்கிறேன். அதிக ஆர்வம் உள்ளவங்க சென்னைக்கு வந்து கலைஞனாகிடுறாங்க. சில கமிட்மென்ட் காரணமா பலர், ரசிகனாகவே இருந்திடுறாங்க. எவ்ளோ கிரியேட்டிவா இருக்காங்கன்னு அவங்க வைக்குற பேனரைப் பார்த்தாலே தெரியும். ரசிகன்னா எல்லாம் சாதரணமா சொல்லிடுறாங்க. ஆனா, எந்த நடிகருடைய ரசிகனுக்கும் அது மட்டும் வேலையில்லை. எல்லோரும் ஏதோ ஒரு நல்ல வேலையில இருப்பாங்க. மரக்கன்று நடுறது, நோட் புக் வாங்கிக்கொடுக்கிறது, ரத்த தானம் செய்றதுனு நல்ல விஷயங்கள் செஞ்சிட்டு இருக்காங்க. இப்படிப்பட்ட ரசிகர்களோட தொடர்புல இருக்கிறது எனக்கு சந்தோஷம்தான்."

`திருடா திருடி' படம் முடிச்ச பிறகு, அதை தெலுங்கு ரீமேக் பண்ணீங்க. அதுக்குப் பிறகு, தெலுங்குல கவனம் செலுத்தாததற்குக் காரணம் என்ன?

``மோகன்பாபு சாரோட ரெண்டாவது மகன் மனோஜையும் சதாவையும் வெச்சு `தொங்கா தொங்கதி'னு ஒரு படம் பண்ணேன். 'திருடா திருடி' படத்துல நான் வசனத்துல நல்லா ஸ்கோர் பண்ணியிருப்பேன். அடுத்தடுத்து கைதட்டிக்கிட்டே இருந்தாங்க. ஆனா, தெலுங்கு படத்துல அந்த ரெஸ்பான்ஸ் கிடைக்கலை. எனக்கு தெலுங்கு மொழி தெரியாததுனால சிறப்பா பண்ணமுடியலை. அடுத்தது ஒரு தெலுங்கு படம் பண்ணச்சொல்லி கேட்டாங்க. நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்."

தனுஷ், கவுண்டமணியோட தீவிர ரசிகர்னு கேள்விப்பட்டோமே!

இயக்குநர் சுப்ரமணியம் சிவா
இயக்குநர் சுப்ரமணியம் சிவா

``ஆமா. ரொம்பத் தீவிரமான ரசிகர். கவுண்டமணி அண்ணனைப் பத்தி என்ன கேட்டாலும் இந்தப் படம், இந்த சீன்னு சரியா சொல்லிடுவார், தனுஷ். எப்பவும் அவர் கேரவன்ல கவுண்டமணி அண்ணனுடைய காமெடிதான் ஓடிக்கிட்டிருக்கும். `ப.பாண்டி 2'னு பிளான் பண்ணி, அதுல ராஜ்கிரண் அண்ணனையும், கவுண்டமணி அண்ணனையும் நடிக்க வைக்கணும்னு பிளான் பண்ணோம். அவரை வெச்சு ஒரு படம் இயக்கணும்னு தனுஷுக்கு ஆசை."

மாஸ் ஹீரோ, ஆர்ட்டிஸ்ட் ஹீரோனு எல்லாத்துக்கும் தனுஷ் பொருந்திப்போறாரே!

``அதெல்லாம் தானா அமையும்னு நினைக்கிறேன். நீங்க சொல்ற மாஸ், பர்ஃபாமன்ஸ் ரெண்டையும் `அசுரன்'ல பார்க்கலாம். அதே மாதிரி ஸ்லாங் ரொம்ப சீக்கிரமா பிடிச்சுப் பேசிடுவார். அதெல்லாம் ஆச்சர்யமா இருக்கும். எப்பவும் வேலையைப் பத்தி மட்டுமே யோசிக்கிற நபர். அவருக்குள்ள அவ்ளோ பாசிட்டிவிட்டி இருக்கு. அவரைச் சுத்தியும் பாசிட்டிவிட்டி இருக்கணும்னு நினைப்பார். தெய்வ பக்தியோட உச்சம். திருநெல்வேலியில ஷூட்டிங்ல இருக்கார். அவர் ரூமுக்கு போன சாமி படம், ருத்ராட்சம், மாலைனு பக்திமயமா இருக்கு. நமக்குக் கொடுக்கிறது எல்லாமே கடவுள் பார்வைதான்னு முழுக்க முழுக்க நம்புவார். அதுக்குத் தகுந்த மாதிரி உழைக்கிறார்."

எல்லா விழாக்களுக்கும் தனுஷ் வேட்டி சட்டையில வர்றார். குறிப்பா சாம்பல் நிற கரை வெச்ச வேட்டியே கட்டுறாரே! என்ன காரணம்?

இயக்குநர் சுப்ரமணியம் சிவா
இயக்குநர் சுப்ரமணியம் சிவா

``அந்த கலர், நடுநிலைமையைக் குறிக்குதுனு நினைக்கிறேன். ரொம்பவும் அடிக்காது, தெரியாமலும் இருக்காது. அதேபோல பொது நிகழ்ச்சிகள்ல வார்த்தைகளைச் சரியா பயன்படுத்தணும்னு கவனமா இருப்பார்."

மொபைல்ல நிறைய கேம் விளையாடுவாராமே?

"ஆமா. கேம் விளையாடுறதுல அவருக்கு அவளோ ஆர்வம். கவுண்டமணி காமெடி, இளையராஜா இசை, பப்ஜி விளையாட்டு இதுதான் அவருக்கு ரொம்பப் பிடிக்கும்."

தனுஷ் பத்தி எங்களுக்குத் தெரியாத விஷயம்?

``உருளைக்கிழங்கு - பூண்டுக் குழம்பு அவருடைய ஆல்டைம் ஃபேவரைட். அதை ரொம்ப விரும்பிச் சாப்பிடுவார். அசைவம் சாப்பிட மாட்டார். கொரோனா வைரஸ்னு ஒண்ணு பரவுதாமே... அதனால கொஞ்சம் நாளைக்கு அசைவம் சாப்பிடாதீங்கன்னு சொல்லி அனுப்பினார்."

ரசிகர்கள் எல்லோரும் `இளைய சூப்பர் ஸ்டார்'னு தனுஷை சொல்றாங்க. ஆனா, அவர் பெயருக்கு முன்னாடி பட்டம் போடாததுக்குக் காரணம் என்ன?

இயக்குநர் சுப்ரமணியம் சிவா
இயக்குநர் சுப்ரமணியம் சிவா

``சிறந்த படங்களைப் பண்ணிக்கிட்டே இருக்கணும். காலம் அதுக்கான பதிலைக் கொடுக்கும்னு நினைப்பார். நம்ம பெயருக்கு முன்னாடி இப்படி போட்டுக்கணும்னு விரும்ப மாட்டார். அதை ரொம்ப கூச்சமா நினைப்பார். நம்ம உழைப்புக்கு நிச்சயமா அந்த இடத்துல இருப்போம்ங்கிறதுல 100 சதவிகிதம் உறுதியா இருக்கார். "

யாத்ரா, லிங்கா ரெண்டு பேரும் ஸ்பாட்டுக்கு வருவாங்களா?

``அப்பப்போ வருவாங்க. தங்கமான பசங்க ரெண்டு பேரும். ரஜினி சார் பேரன், தனுஷ் சார் பையன்னு அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க. எல்லோர்கிட்டேயும் அவ்ளோ ஜாலியா பேசுவாங்க. ஸ்பாட்டுக்கு வந்தா கிரிக்கெட் விளையாட கூப்பிடுவாங்க. அவங்களோட கிரிக்கெட் விளையாடுனா உடனே ஃப்ரெண்டாகிடலாம். "

மறுபடியும் எப்போ தனுஷை இயக்குவீங்க?

"நிச்சயமா அது நடக்கும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க"

அடுத்த கட்டுரைக்கு