Published:Updated:

“மீண்டும் சூர்யா படத்தை இயக்கப் போகிறேன்!”

சுதா கொங்கரா
பிரீமியம் ஸ்டோரி
சுதா கொங்கரா

நான் ரஜினி சாருடைய பெரிய ஃபேன். அவருடைய படங்களுக்கு முதல் நாள் ஷோ டிக்கெட்டை அப்பாகிட்ட வாங்கிட்டு வரச் சொல்லி தியேட்டருக்குப் போவேன்.

“மீண்டும் சூர்யா படத்தை இயக்கப் போகிறேன்!”

நான் ரஜினி சாருடைய பெரிய ஃபேன். அவருடைய படங்களுக்கு முதல் நாள் ஷோ டிக்கெட்டை அப்பாகிட்ட வாங்கிட்டு வரச் சொல்லி தியேட்டருக்குப் போவேன்.

Published:Updated:
சுதா கொங்கரா
பிரீமியம் ஸ்டோரி
சுதா கொங்கரா

‘இறுதிச்சுற்று' படத்தின் ‘மாயவிசை...' பாடலில் ‘தயங்கிடத் தயங்கு... முன்வந்து இறங்கு... புயலென இயங்கு...' என்றொரு வரி இருக்கும். அந்த வரி சுதா கொங்கராவுக்கு அப்படியே பொருந்தும். தனக்கு ஏற்பட்ட புறக்கணிப்புகள், போராட்டங்கள் எல்லாம் கடந்து சினிமாவில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சுதாவின் கைவசம் அடுத்தடுத்து பல புராஜெக்ட்டுகள் இருக்கின்றன. கோலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கும் இயக்குநர் சுதாவை, அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.

``இயக்குநர் மணிரத்னத்திடம் எப்படிப்பட்ட உதவி இயக்குநராக இருந்தீங்க?’’

“மணிரத்னம் சார்கிட்ட வேலை செய்யும்போது நான் அவருடைய மோசமான உதவி இயக்குநராத்தான் இருந்தேன். செட்ல நான்பாட்டுக்கு எதையோ யோசிச்சுக்கிட்டு நின்னுட்டிருப்பேன். ‘சுதா என்ன யோசிக்கிற? ஷூட்டிங்ல கவனம் செலுத்து'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார், திட்டுவார். ‘ஆய்த எழுத்து' படத்துடைய ஜன கண மன பாடல் ஷூட்டிங். பிருந்தா மாஸ்டரைக் காட்டி, ‘அந்த மாதிரி நீயும் வேலையில ஃபோகஸா இருக்கணும்'னு சொல்வார். லைட்டிங் செட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது கிடைக்கிற கேப்லதான் மணி சார் எங்ககிட்ட பேசுவார். அப்படி ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு, ‘உன்னால ஒரு படம் இப்போ டைரக்ட் பண்ண முடியுமா?'ன்னு கேட்டார். ‘ஆர்ட்டிஸ்ட்கிட்ட நடிப்பை வாங்கிடுவேன். பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதனால, அதெல்லாம் எடுத்திடுவேன். ஃபைட் சீக்வென்ஸ் எல்லாம்கூட பண்ணிடுவேன். ஆனா, ஸ்டேஜிங் பண்றதுலதான் சார் பிரச்னை. அதுதான் எனக்கு வீக் பாய்ன்ட் சார்'னு சொன்னேன். இப்போ நினைச்சா அப்போ எவ்ளோ தெனாவெட்டா சொல்லியிருக்கேன்னு தெரியுது. இப்போவும் ஒரு சீனை ஸ்டேஜிங் பண்றது எனக்குப் பெரிய போராட்டம்தான். உதவி இயக்குநரா இருக்கும்போது எனக்கு காஸ்ட்யூம் கன்டினியூட்டி பார்க்கிற வேலைதான் பெரும்பாலும் கொடுப்பாங்க. அதுல நான் எக்ஸ்பர்ட். இப்போ நான் இயக்குநரான பிறகும், கன்டினியூட்டி பார்க்கிற அசிஸ்டென்ட் டைரக்டரைவிட நான் நல்லா பார்ப்பேன். மணி சாரிடம் கத்துக்கிட்ட விஷயங்கள்னு சொன்னா, அதுக்கு ஒரு புத்தகமே போடலாம். பாலா சார்கிட்ட ‘பரதேசி' படத்துல க்ரியேட்டிவ் புரொடியூசரா வேலை செய்யும்போது, நான் ‘துரோகி' படத்தை எடுத்து இயக்குநராகிட்டேன். அதனால, பாலா சார் எதுக்காக மெனக்கெடுறார், என்ன எதிர்பார்க்கிறார்னு என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. அந்தப் புரிதல் நான் படம் பண்ணின பிறகுதான் கிடைச்சது. முன்னாடியே புரிஞ்சிருந்தா, மணி சார்கிட்ட அப்பப்போ திட்டு வாங்காமல் இருந்திருப்பேன்.

“மீண்டும் சூர்யா படத்தை இயக்கப் போகிறேன்!”

‘ஆய்த எழுத்து', ‘யுவா' - இந்த ரெண்டு படங்கள்ல உதவி இயக்குநரா வேலை செஞ்சிட்டேன். நான் இந்தப் படத்தோட கிளம்பி தனியா படம் பண்ணுவேன்னு நினைச்சார், மணி சார். அந்தச் சமயத்துல, என்னையறியாமல் செம டிப்ரஷனுக்குப் போயிட்டேன். அவ்வளவு வெறுமையா இருந்தது. சினிமாவை விட்டே போகணும்னு இருந்தது. என்ன காரணம்னே தெரியலை. ‘உனக்கு மோட்டிவேஷன் இல்லாத சமயத்துல, உன்னை ஊக்குவிக்கிற நபரோட இருக்கறதுதான் நல்லது'ன்னு என் அப்பா சொன்னார். அதனால, மணிரத்னம் சார் கூடவே இன்னொரு படம் வேலை செஞ்சேன். அதுதான் ‘குரு.' மூணு படம், ஆறு வருடங்களாகிடுச்சு. இதற்கிடையில ஒன்பது ஸ்கிரிப்ட்கள் எழுதினோம். அதுக்குப் பிறகு, நாம தனியா படம் பண்ணலாம்னு தோணுச்சு.''

``நீங்க ரஜினியுடைய தீவிர ரசிகைன்னு கேள்விப்பட்டோமே!’’

‘‘ஆமா. நான் ரஜினி சாருடைய பெரிய ஃபேன். அவருடைய படங்களுக்கு முதல் நாள் ஷோ டிக்கெட்டை அப்பாகிட்ட வாங்கிட்டு வரச் சொல்லி தியேட்டருக்குப் போவேன். ‘இறுதிச்சுற்று', ‘சூரரைப் போற்று' பார்த்துட்டு பிடிச்சிருக்குன்னு ரஜினி சார் சொன்னதா கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. ‘பாபா' பட டிக்கெட்ஸ் மணி சார் ஆபீஸுக்கு வந்தது. அதுக்காக நானும் மிலிந்தும் (‘நெற்றிக்கண்' இயக்குநர்) சண்டை போட்டுக்கிட்டோம். அதைப் பார்த்து, மணி சார் தலையில அடிச்சுக்கிட்டார். ‘பாபா' ஷோவுக்குப் போகும்போது, அங்க ரஜினி சார் எல்லோரையும் நல்லா இருக்கீங்களான்னு விசாரிச்சுக்கிட்டு இருந்தார். அப்போதான் அவரை தூரமா நின்னு பார்த்தேன். அதுக்குப் பிறகு, நான் ரஜினி சாரை நேர்ல சந்திச்சதில்லை.''

“மீண்டும் சூர்யா படத்தை இயக்கப் போகிறேன்!”

``இப்போ நிறைய இயக்குநர்கள், பெண் உதவி இயக்குநர்கள் தேவைன்னு கேட்கிறாங்க. இதுக்கு என்ன காரணம்?’’

‘‘நான் உதவி இயக்குநரா இருந்த சமயத்துல மணிரத்னம், ராஜீவ் மேனன் மாதிரி சில நபர்கள்தான் பெண் உதவி இயக்குநர்களை எடுப்பாங்க. இப்போ பெண் உதவி இயக்குநர்கள் கேட்குறதுக்கு காரணம், நாங்க நல்லா வேலை செய்வோம்னு இப்போதான் அவங்களுக்குப் புரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்.

ஒரு ஆண் பத்து மணி நேரம் வேலை செய்றான். ஆனா, அதே வேலையை ஒரு பெண் 20 மணி நேரம் செஞ்சால்தான் நம்புறாங்க. உதவி இயக்குநரா இருக்கும்போது லீவே எடுக்கமாட்டேன். பொண்ணுங்கிறதால அடிக்கடி லீவ் எடுக்கிறாங்கன்னு நினைச்சிடுவாங்களோன்னு பயத்துலயே வேலை செய்வேன். என் படம் ஹிட்டாகலைன்னா, அடுத்த படம் கிடைக்காதோன்னு பயம் இருக்கு. பெண்களுக்கு பயம் எப்போவும் 200% அதிகமாவே இருக்கும். அதை இந்தச் சமுதாயம் உருவாக்கி வெச்சிருக்கு. அதை மீறி நாம உழைக்கணும், ஜெயிக்கணும்.’’

``கதாசிரியர்களுக்கான முக்கியத்துவம் மத்த மொழி சினிமாவைக் காட்டிலும் நம்ம ஊர்ல குறைவா இருக்க காரணம் என்ன? இயக்குநர்களே கதை எழுதக் காரணம் என்ன?’’

‘‘கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்னு வந்து பெயர் வரணும்னு நினைக்க ஆரம்பிச்சுட்டோம். தவிர, உதவி இயக்குநரா இருக்கும்போது, இன்னொருத்தர்கிட்ட இருந்து கதை வாங்கப் பணம் இருக்காது. சிலருக்கு அவங்க நண்பர்களே நல்ல கதாசிரியர்களா இருப்பாங்க. அவங்க படம் இயக்காமல் கதையை மத்தவங்களுக்குக் கொடுக்கலாம். ஆனா, இது பெரும்பாலும் நடக்காது. அப்படியான சூழல்ல, இயக்குநர்களே எழுத வேண்டியதா இருக்கு. ஆனா கேரளா, பாலிவுட் சினிமாக்களில் எழுத்தாளர்களுக்கான முக்கியத்துவமிருக்கு.

சமீபமா, நான் எழுத்தாளர் நரன் படைப்புகளைப் படிக்க ஆரம்பிச்சேன். எனக்கு அவருடைய எழுத்துகள் ரொம்பப் பிடிச்சிருக்கு. என்னுடைய அடுத்த ரெண்டு புராஜெக்ட்டும் அவருடைய கதைகள்தான். ராம் மூலமாதான் நரன் எனக்குப் பழக்கமானார். அவர் எழுதிக்கிட்டிருக்கிற காதல் கதையை என்கிட்ட சொன்னார். ரொம்பப் பிரமாதமா இருந்தது. அதைத்தான் என் அடுத்த படமா பண்ணப்போறேன். அதை முடிச்சுட்டு, தென்னிந்தியாவின் முதல் மூன்று பெண் மருத்துவர்கள் பத்தி அவர் ஒரு புத்தகத்துல எழுதியிருந்தார். 1920-கள்ல நடந்த உண்மைக் கதை. மருத்துவத்துறைக்குள்ள பெண்கள் வர்றதுக்குத் தகுதியில்லைன்னு சொல்லிப் புறக்கணிச்சிருக்காங்க. அவங்க அந்தப் புறக்கணிப்புகளைக் கடந்து எப்படி மருத்துவரானாங்கன்னு கதை. ரொம்ப இன்ஸ்பைரிங்கா இருந்தது. அதை நான் வெப் சீரிஸா பண்ணப்போறேன். பெண்களை முதன்மையா வெச்சுக் கதைகள் சொல்லணும். அந்த மாதிரி கதைகளுக்காகத் தேடி ஓடிக்கிட்டிருக்கேன்.''

``ஸ்போர்ட்ஸ் படங்கள் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு தெரியும். பாலிவுட்ல நிறைய விளையாட்டு வீரர்களைப் பத்தின பயோபிக் வருது. அப்படியான படங்களை இயக்க வாய்ப்பு வந்ததா?’’

‘‘நான் ‘இறுதிச்சுற்று' கதையை எழுதி வெற்றிமாறன்கிட்ட கருத்து கேட்டேன். அவர் மேரி கோம் பயோபிக் பண்ணுங்களேன்னு சொன்னார். அப்புறம், நான் அவங்ககிட்ட பேசினேன். அவங்க கதை என் கதை மாதிரியே இருந்தது. கல்யாணமாகி அதுக்குப் பிறகு, அந்தத் துறைக்குள்ள கஷ்டப்பட்டு நுழைஞ்சு ஜெயிக்கிறது. என்னை அது பெருசா இம்ப்ரஸ் பண்ணலை. காரணம், என் படங்கள் மூலமா நான் இன்னொரு வாழ்க்கையை வாழணும்னு நினைக்கிறேன். அதனால, அதை நான் பண்ணலை. ‘இறுதிச்சுற்று' முடிச்ச சமயத்துல, எனக்கு பாலிவுட்ல இருந்து நிறைய ஸ்போர்ட்ஸ் பயோபிக் பண்றதுக்கான வாய்ப்பு வந்தது. குறிப்பா சொல்லணும்னா, இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜுடைய பயோபிக் டைரக்ட் பண்ணக் கூப்பிட்டாங்க. ஆனா, நான் அதுக்குள்ள ‘சூரரைப் போற்று' ஆரம்பிச்சிட்டேன்.''

``இப்போ எந்தப் பக்கம் திரும்பினாலும் ‘பேன் இந்தியா'ங்கிற வார்த்தைதான் கேட்குது. இந்த வார்த்தையை எப்படிப் பார்க்கிறீங்க?’’

‘‘ஒரு படம் எல்லா ஊர்லயும் வெளியாகுறதுதான் பேன் இந்தியா படம்னு சொல்றாங்க. இந்த வார்த்தைதான் புதுசு. ஆனா, ரொம்ப காலமாகவே இது வழக்கத்துல இருக்கிறதுதான். கடந்த பத்து வருஷமா தமிழ், தெலுங்குப் படங்களின் இந்தி சேட்டிலைட் உரிமை 10 கோடி, 15 கோடின்னு விற்குது. அந்த இந்தி டப்பிங் அவ்ளோ மோசமா இருக்கும். இருந்தாலும் அவங்க அந்த டப் வெர்ஷனைப் பார்க்கிறாங்க. காரணம், நம்ம கன்டென்ட். இப்போ ஓ.டி.டி தளங்கள் வந்த பிறகு, எந்த மொழியா இருந்தாலும் நல்ல கன்டென்ட்டுக்கு டிமாண்ட் இருக்கு. அமேசான் ப்ரைம்ல ஒரு புள்ளிவிவரம் சொன்னாங்க. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ராஜஸ்தான், சத்தீஸ்கர், சண்டிகர் மாதிரியான இடங்கள்லயும் ‘சூரரைப் போற்று' படத்தை நிறைய பேர் பார்த்திருக்காங்க. அந்தச் சமயத்துல அந்த ஊர் மக்கள் அதிகம் பார்த்த படம், ‘சூரரைப் போற்று.' அப்போ இந்தி வெர்ஷன்கூட வரலை. எல்லோருக்கும் எமோஷன் கனெக்ட்டாச்சுனா, அது பேன் இந்தியா இல்லை, பேன் வேர்ல்டுனே பெயர் வெச்சுக்கலாம்.''

“மீண்டும் சூர்யா படத்தை இயக்கப் போகிறேன்!”

``வட இந்தியாவுல நிறைய பேர் ‘சூரரைப் போற்று' பார்த்திருக்காங்கன்னு சொல்றீங்க. இப்போ நீங்க அதை இந்தியில ரீமேக் பண்ணப்போறீங்க. எப்படி வொர்க்கவுட்டாகும்னு நினைக்கிறீங்க?’’

‘‘மெட்ரோபாலிட்டன் சிட்டிகள்ல தவிர, பி, சி சென்டர்கள்னு சொல்லப்படுற இடங்கள்ல இருக்க நேட்டிவ் ஆடியன்ஸுக்கு இது புதுப்படம்தான். 2020-ல ‘சூரரைப் போற்று' வந்தது. இப்போ பண்ற இந்தி ரீமேக் 2023-ல வரப்போகுது. அதனால, ஒன்னும் பிரச்னை இல்லை. தவிர, கதை நடக்கிற இடம், கலாசாரம்னு எல்லாமே மாத்தி வொர்க் பண்ணிக்கிட்டிருக்கோம். மலையாளத்துல ‘அய்யப்பனும் கோஷியும்' பயங்கர ஹிட். எல்லோரும் அந்தப் படத்தைப் பார்த்துட்டாங்க. இருந்தாலும், அதனுடைய தெலுங்கு ரீமேக்கான ‘பீம்லா நாயக்' படமும் ப்ளாக்பஸ்டராகி இருக்கு. ‘பிங்க்', ‘நேர்கொண்ட பார்வை' பார்த்திருந்தாலும் ‘வக்கீல் சாப்' நல்ல ஹிட்டாகியிருக்கு. ஏற்கெனவே ஒரிஜினல் படங்கள் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தை நம்ம மொழியில நம்ம கலாசாரத்துக்குத் தகுந்த மாதிரி நம்ம ஊர் ஹீரோக்களை அதுல வெச்சுப் பார்க்கணும்னு நினைச்சு தியேட்டருக்குப் போறாங்க. அதனால, நோ ப்ராப்ளம்.''

``மறுபடியும் நீங்க சூர்யாவை இயக்கப்போறீங்கன்னு ஒரு தகவல் இருக்கே, உண்மையா?’’

‘‘ஆமா. ‘சூரரைப் போற்று' படத்தைவிட எனக்கு ரொம்ப சவாலான படமா அது இருக்கும். பெரிய பட்ஜெட் படம். பயோபிக் கிடையாது. உண்மைச் சம்பவத்தின் தழுவலா அந்தப் படம் இருக்கும். அந்தப் பட வேலைகள் எப்போ ஆரம்பிக்கும்னு காத்துக்கிட்டிருக்கேன்.''