Published:Updated:

`` `அன்பே சிவம்’ மாதிரி இன்னொரு படம் ஏன் எடுக்கலை தெரியுமா?!’’ - இயக்குநர் சுந்தர்.சி

சுந்தர்.சி
சுந்தர்.சி

ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படங்களின் இயக்குநர் சுந்தர்.சி, தற்போது விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி என பல நட்சத்திரக் கூட்டங்களுடன் `ஆக்‌ஷன்' படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரை சந்தித்துப் பேசினோம்.

உங்க படங்களில் காமெடிக்கு கவுண்டமணி, செந்தில், வடிவேல்னு ஒரு காலகட்டத்தில் இருந்தாங்க. அதுக்குப் பிறகு சந்தானம், சூரி, யோகிபாபுனு மாறிக்கிட்டே இருக்காங்களே?

hiphop adhi and sundar c
hiphop adhi and sundar c

``ஒவ்வொரு காலகட்டத்துக்கும் பெஸ்ட்டான நகைச்சுவை நடிகர்கள் வந்துக்கிட்டுதான் இருக்காங்க. அந்த வகையில் தமிழ் சினிமா ரொம்ப கொடுத்து வெச்சது. இப்போ நிறைய காமெடி நடிகர்கள் வந்துட்டாங்க. தமிழ் ஆடியன்ஸ் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு காமெடி நடிகரை மட்டுமே பார்த்து சிரிச்சாங்க. இப்போ நிறைய காமெடி நடிகர்கள் வந்துட்டாங்க. எல்லாரையும் மக்கள் ரசிக்குறாங்க. வெற்றிடம் ஒண்ணு வந்திருச்சுனு சொல்ல மாட்டேன்.’’

தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதிகூட வேலை பார்த்து வர்றீங்க அதுக்கு காரணம் என்ன?

``ஆதிகூட தொடர்ந்து வேலை பார்த்திருக்கோம். அதனால, இந்தப் படத்துக்கு வேறொரு இசையமைப்பாளரை கமிட் பண்ணலாம்னு இருந்தேன். ஆதியோ, `இன்னொருத்தரை எப்படி நீங்க கமிட் பண்ணலாம்'னு உரிமையா சண்டை போட ஆரம்பிச்சிட்டார். ஆதி பிஸியா டைரக்‌ஷன் பண்ணி, நடிச்சிட்டும் இருக்கார். அவரை தொந்தரவு பண்ண வேண்டாம்னுதான் வேற ஒருத்தரை தேடிப் போனேன். அதுவும் குறிப்பா `ஆக்‌ஷன்' படம் ஆரம்பிச்ச நேரத்துல `நட்பே துணை' படம் கடைசி ஷெடியூல் போயிட்டிருந்தது. நம்ம, `பாட்டு போடு’னு சொன்னா நம்ம தயாரிக்குற படத்தோட வேலை கெடும்னு சுயநலமாவும் நினைச்சேன். ஆனா, ஆதி கேட்கல. ஆதி மாதிரியான மியூசிக் டைரக்டர் நம்ம படத்துல வேலை பாக்குறது ரொம்ப நல்ல விஷயமும்கூட. அவனே பாட்டு எழுதி, மியூசிக் பண்ணி, பாடவும் செஞ்சிருவான். ஆதிக்கு மார்க்கெட்ல நல்ல பேர் இருக்கு. ஒரு கூட்டம் வெச்சிருக்கான். மத்த மியூசிக் டைரக்டர்கிட்ட ட்யூன் வாங்குறதுவிட ஆதிக்கிட்ட மிரட்டி பாட்டு வாங்கிருவேன். எனக்கு ஒரு தம்பி மாதிரி அவன்.’’

ஆதிக்கு மட்டும்தான் படம் தயாரிப்பீங்கனு பேச்சு இருக்கே?

vishal and sundar c
vishal and sundar c

``நல்ல கதையை யார் கொண்டுவந்தாலும் படம் தயாரிக்க ரெடியா இருக்கேன். ஆதியோட ரெண்டு படத்தோட கதையும் எனக்குப் பிடிச்சிருந்தது; அதனாலதான் பண்ணுனேன். அவனும், `பிடிச்சிருந்தா படம் பண்ணலாம் அண்ணா'னுதான் சொன்னான். ஆனா, ஆதியை தவிர யாரும் என்கிட்ட கதை சொல்ல வரமாட்டுறாங்க.’’

ஆதியை, `ஜூனியர் சுந்தர் சி'னு சொல்லலாமா?

``ஆதி என்னைவிட பத்து மடங்கு திறமைசாலி. எனக்கு மியூசிக்கெல்லாம் போடத் தெரியாது. ஆதிக்கிட்ட இருக்கிற மிகப்பெரிய திறமை என்னனா.. எத்தனை ஆயிரம் பேர் இருக்கிற கூட்டமா இருந்தாலும் அஞ்சே நிமிஷத்துல அவனோட கன்ட்ரோலில் கொண்டுவந்துருவான். நிறைய முறை ஆதியை இந்த விஷயத்துல பார்த்து பொறாமைபட்டிருக்கேன். நிறைய விழாக்களுக்கு நான் போகாம இருக்குறதுக்கு காரணமே என்னால மைக் பிடிச்சு பேசமுடியாது. கை உதற ஆரம்பிச்சிரும். ஆனா, நிறைய பேர் `சுந்தர் சி பந்தாவான ஆளு; எந்த விழாவுக்கும் வரமாட்டார்'னு சொல்லுவாங்க. இந்த விஷயத்துல ஆதி பெரிய ஆளு. அவன் என்னை முழுங்கி சாப்பிடுருவான். என்னை வேணுனா ஜூனியர் ஹிப்ஹாப் ஆதினு சொல்லலாம். ஏன்னா, இந்த வயசுல ஆதி நெருங்கிய வெற்றியை என்னால அந்த வயசுல நெருங்க முடியல. அவனைச் சுத்தி பெரிய இளைஞர்கள் பட்டாளத்தையே வளர்த்துக்கிட்டு வர்றான்.’’

`அன்பே சிவம் ' மாதிரியான படத்தை திரும்பவும் உங்ககிட்ட எப்போ எதிர்பார்க்கலாம்?

anbe sivam
anbe sivam

``ஆனா, அந்தப் படம் ரிலீஸானப்போ ஓடலையே. அப்புறம் ஏன் அந்த மாதிரியான படம் எடுக்கணும். இப்போகூட நல்ல படங்கள் எவ்வளவோ ரிலீஸ் ஆகுது. அதை யாரும் தியேட்டரில் பார்க்கிறது இல்லை. படம் தியேட்டர் விட்டு போனதுக்கு அப்புறம், 'ஆஹா, ஓஹோ'னு புகழ்ந்துட்டு இருக்காங்க. எல்லா காலத்திலும் இது நடந்துக்கிட்டுதான் இருக்கு. சினிமாங்கிறது வெகுஜன மக்களுக்கான ஊடகம். இங்கே நம்மோட ரசனை முக்கியமா, இல்லை வெகுஜன மக்களின் ரசனை முக்கியமானு கேள்வி தோணுச்சு. பதில் வெகுஜன மக்களின் ரசனைதான் முக்கியம்னு வந்தது. நிறைய நல்லப் படங்கள் பார்க்கும்போது, `என்னடா இந்தப் படம் ஓடல'னு வருத்தப்படிருக்கேன். ஆனா, நல்லப் படத்தைப் பார்த்து ரசிக்க நான் தயார். ஆனா, எடுக்க, தயாரிக்க யாரும் ரெடியா இல்லை. ஏன்னா, சினிமாங்கிறது வியாபாரம். என்னைப் பொறுத்தவரைக்கும் மக்கள் தியேட்டருக்கு வரணும்னு ஆசைப்படுறேன். போட்டா காசை திரும்ப எடுக்கணும்னுதான் நினைக்குறேன். அந்தக் காலத்துல எம்.ஜி.ஆர் மட்டும்தான், `சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளுடா'னு மெசேஜ் சொன்னார். இப்போ சோஷியல் மீடியா காலம். எல்லாருமே மெசேஜ் சொல்றாங்க; கேட்க ஆள் இல்லை. எனக்கு மெசேஜ் சொல்றதுல உடன்பாடில்லை.’’

`மதகஜராஜா' படம் எப்போ ரிலீஸ் ஆகும்..?

``படத்தோட தயாரிப்பாளர்தான் இதுக்குப் பதில் சொல்லணும். இதுல கொடுமையான விஷயம் என்னன்னா, கஷ்டப்பட்டு ஒரு படம் பண்றோம்; அப்படி அந்தப் படம் ரிலீஸாகி வியாபார ரீதியா நஷ்டம் ஆகும், அதனால ரிலீஸ் பண்ணலைனு சொன்னா பரவாயில்ல. வியாபார ரிதீயா இந்தப் படத்தை பெரிய லாபத்துடன் வித்திருக்கலாம். ஆனா, அவரோட பழைய படங்களின் கடன் தொகையெல்லாம் `மதகஜராஜா' மேலே வெச்சிட்டார். இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணாத வரைக்கும் அவருக்கு சந்தோஷம். ஆனா, இதுக்குப் பின்னாடி எத்தனையோ பேரின் உழைப்பு இருக்கு. இதை நினைக்கும்போது வயித்தெறிச்சலா இருக்கும். விஷாலும் இந்தப் படத்துக்காக சாப்பாடு இல்லாம உடம்பை வருத்தி நிறைய கஷ்டப்பட்டார். இப்போவும் இந்தப் படத்தை வாங்க ரெடியா இருக்காங்க. ஆனாலும், தயாரிப்பாளர் விட்டுக்கொடுக்க மாட்டேங்கிறார். எப்போ சார்னு கேட்டா, `அடுத்த மாசம் ரிலீஸ் பண்ணிடலாம்'னு சொல்லுவார். மக்கள் பார்த்து படம் நல்லாயிருக்கு, நல்லாயில்லைனு சொல்லணும். யாரோ ஒரு மனிதர் வேறொரு விஷயத்துக்காக படத்தை முடக்கி வெச்சிருக்கிறது கஷ்டமா இருக்கு.’’

விஷால் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எப்படி பார்க்குறீங்க?

``வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு ஒவ்வொரு விதமான பாயிண்ட் இருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் அவர் நல்ல கேரக்டர். அவருக்கு சரினு படுறதை துணிச்சலா பண்ணக் கூடியவர். ஒரு முடிவு எடுத்துட்டா அதில் கடைசி வரைக்கும் நிற்பார். எனக்கு விஷால் கேரக்டர் ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி மத்தவங்க பாக்குற பார்வையை நான் ஜட்ஜ் பண்ண முடியாது.’’

இயக்குநர் சுந்தர்.சி.யின் முழுமையான பேட்டியை, வரும் வியாழக்கிழமையன்று வெளியாகும் ஆனந்தவிகடன் புத்தகத்தில் படிக்கலாம். அதில் அவர், விஷால், தமன்னா நடிக்கும் `ஆக்‌ஷன்’ படத்தின் அப்டேட்ஸ் மற்றும் சங்கமித்ரா படம் குறித்தும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு