சினிமா
தொடர்கள்
Published:Updated:

“எனக்கு எண்டே கிடையாதுடா!” - வடிவேலு காமெடி மேஜிக் RETURNS

வடிவேலு
பிரீமியம் ஸ்டோரி
News
வடிவேலு

வடிவேலு சும்மா ஊரைச் சுத்திக்கிட்டுத் திரிகிற ஆளு. அப்ப ஒரு நாய் வந்து அவர்கிட்டே சேருது. அது கூட அப்படியே ஒன்றிப்போய்த் திரிவார்.

 வடிவேலுவுடன் சுராஜ்
வடிவேலுவுடன் சுராஜ்

`நாய் சேகர் ரிட்டன்ஸ்’-ஸில் திரும்பி வருகிறார் வடிவேலு. தமிழ் சினிமா காத்திருக்கிறது. சினிமாவின் வெற்றி ஃபார்முலா லிஸ்ட்டில் தன் காமெடியை கட்டாயமாக்கியதுதான் வடிவேலுவின் வெற்றி. படத்தை கமர்ஷியல் + காமெடியில் அதிரடியாகச் செய்துவிட்டு ரிலீஸுக்குக் காத்திருக்கிறார் இயக்குநர் சுராஜ். வடிவேலுவோடு இணைந்து ஏற்கெனவே அதிரிபுதிரி காமெடியில் வெற்றி கண்டவர்.

‘‘நம்ம பங்காளி வடிவேலு அனுபவிச்சு காமெடி பண்ணியிருக்கார். நானும் அவரும் சேர்ந்து ராவடி பண்ணியிருக்கோம். ‘தலைநகரம்’ பண்ணினது இப்ப ஞாபகத்துக்கு வருது. அதில் வடிவேலு காமெடிதான் பெரிய ஹிட். தியேட்டரில் கைத்தட்டல் கேட்டுக்கிட்டே இருக்கு. ஜனங்க ‘அப்பாடா'ன்னு கண்ணில் தண்ணி வர சிரிக்கிறாங்க. அப்ப ஆரம்பிச்சது என் பயணம். கொரோனாவில் ஊரே பயந்து திரியும்போது நானும் வடிவேலு பங்காளியும் நாய் சேகரைப் பத்தியே பேசிட்டு இருப்போம். ஸ்கிரிப்ட் சரிவர வந்த பின்னாடி லைகா சுபாஸ்கரன் சாருக்கு போனைப் போட்டோம். தமிழ்க்குமரன் சார்கிட்டே சொன்னோம். ‘அப்படியே வெயிட் பண்ணுங்க. பெங்களூர்  ரவிசங்கர்ஜி ஆசிரமம் வரேன். விளக்கமா பேசுவோம்'னு சொல்லிட்டு சுபாஸ்கரன் சார் வந்தார். அங்கேதான் சந்திப்பு நடந்தது. ‘என்ன வேணும்னாலும் செலவு பண்ணிக்குங்க. வடிவேலு அண்ணனை திரும்ப வெள்ளித்திரையில கூட்டி வந்து அழகு பார்க்கணும். அதுக்கு செம காமெடியாக ஒரு படம் வேணும். எனக்கு வேண்டியது அவ்வளவுதான்’னு சொன்னார். அப்படி அவரோட பிரியத்தில் ஆரம்பிச்சதுதான் ‘நாய் சேகர்’.” இன்னும் உரையாடலைத் தொடர்கிறார் சுராஜ்.

“எனக்கு எண்டே கிடையாதுடா!” - வடிவேலு காமெடி மேஜிக் RETURNS

``படம் எப்படி இருக்கும்னு எங்களுக்கு ஆர்வமாக இருக்கே. உங்களுக்கு அதுவே பிரஷராக இருக்கணுமே!’’

‘‘பிரஷர்னா சாதாரணம் கிடையாது. எந்தப் படத்திற்கும் டிஸ்கஷன் பக்கமே வராத வடிவேலு பங்காளி இதுக்கு வந்தார். ராத்திரி ஒன்பது மணி போல டிஸ்கஷன் முடிச்சிட்டு வீட்டுக்குப் போகலாம்னு எழுந்திரிப்பேன். ‘எங்கே போறீங்க பங்காளி, பயமா இருக்கு. இன்னும் நறுக்குத் தெரிச்ச மாதிரி பேசுவோம்'னு பங்காளி சொல்லுவார். திரும்பப் பேசி வீட்டிற்குப் படுக்கப் போக 12 ஆகிடும். இந்தப் படத்துக்கு உழைத்த உழைப்பு அவ்வளவு பெருசு. அது படத்தில் தெரிகிறபோது சந்தோஷமா இருக்கு. வடிவேலு பழைய செட் ஆட்களை கொஞ்சம் தனியா வச்சுட்டு, ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, பாலா, லொள்ளு சபா மாறன், முனீஸ்காந்த்னு நடிகர்களை மாத்தினோம். படத்துல வடிவேலு பங்காளிக்கு ஜோடி இல்ல. ஆனா, கதை நாயகியாக ஷிவானி இருக்காங்க. எல்லா நடிகர்களும் பிரமாதமா பண்ணியிருப்பாங்க. ஆனால் அண்ணன் அதைவிட அடுத்த கட்டத்தைத் தொட்டுக் காட்டியிருப்பார். அந்த அளவுக்கு முழுக்க முழுக்க காமெடி. குடும்பம் குடும்பமா பார்க்கணும். டபுள்மீனிங் டயலாக்ஸ் தலைகாட்டவே கூடாதுன்னு ரொம்ப எச்சரிக்கையாகவும் இருந்தார்.”

“எனக்கு எண்டே கிடையாதுடா!” - வடிவேலு காமெடி மேஜிக் RETURNS

`` ‘நாய் சேகர்’ என்கிற உங்க கேரக்டர் மனதிற்குள் உருவானது எப்படி?’’

‘‘நாங்க ‘கிரி’ படம் பண்ணும்போதே, ‘இது ஹிட் ஆனால் அடுத்த படம் உனக்குத்தான்’ என்று சுந்தர்.சி சார் சொன்னார். அப்புறம் சுந்தர்.சியை ஹீரோவாக வச்சு ‘தலைநகரம்’ பண்ணினேன். அப்போ ஹீரோவாக அவர் புதுசு. வடிவேலு ‘சந்திரமுகி’ முடித்துவிட்டு வந்த நேரம். அவர்கிட்டே ‘நாய் சேகர்’ கேரக்டர் பத்திச் சொன்னேன். ‘மிரட்டிடலாம் பங்காளி, போ. பயப்படாதே’ன்னு அனுப்பிட்டார். ஒருநாள் ராத்திரி 12 மணி இருக்கும். ‘எங்கே இருக்க பங்காளி’ன்னு கேட்டார். ‘தூங்க ஆரம்பிச்சிட்டேன்’னு சொன்னேன். ‘ஆபீஸுக்கு வர்றியா’ன்னு கேட்டார். என்னடான்னு கிளம்பிப் போனால் அங்கே கோட்டு சூட்டு போட்டு காதில் கடுக்கன், மூக்குத்தின்னு வித்தியாசமா உட்கார்ந்திருக்கார். ‘எப்படி இருக்கு? நாய் சேகர் இவன்தான்’னு அறிமுகப்படுத்தினார். சினிமாவுல ரவுடியை மாத்தி அமைச்சவர் அவர்தான். அதிலே ரவுடிகள் வண்டி ஏறும்போது தானும் போய் ஏறுவார். ‘டேய், நீ யாருடா கோமாளி’ன்னு இறக்கி விடுவாங்க. அப்போ ‘ரவுடிகளோட ஈக்வலா பேசுவதைப் பார்க்கலையா, அம்மா சத்தியமா நான் ரவுடிதான், நம்புய்யா'ன்னு சொல்லுவார். ‘ரவுடியா ஃபார்ம் ஆகிட்டேன்’னு சொல்லிட்டுப் போகும்போதே ‘நானும் ரவுடிதான்... நானும் ரவுடி தான்’னு சொல்வார். ஆனால் அந்த டயலாக் அப்ப இல்லை. ‘பங்காளி, கட் பண்ணிடாதே, டப்பிங்ல பார்த்துக்கலாம்'னு சொன்னார். டப்பிங்ல அவ்வளவு மெனக்கெடுவார். டப்பிங்கில் அவர் மாதிரி எனர்ஜியை யார்கிட்டயும் பார்த்ததில்லை. தமிழ்நாட்டின் அத்தனை பேசப்படுகிற வடிவேலு டயலாக்குகளும் டப்பிங் தியேட்டரில் அவரால் உருவாக்கப்பட்டவைதான். அப்பேர்பட்ட ஒரு மகா கலைஞன் திரும்ப வரும்போது நாமும் அதில் ஒரு சிறு துரும்பா இருக்கோம்னு சந்தோஷமா இருக்கு பிரதர்.”

“எனக்கு எண்டே கிடையாதுடா!” - வடிவேலு காமெடி மேஜிக் RETURNS

``எப்படி வந்திருக்கு நாய் சேகர் ரிட்டன்ஸ்?’’

‘‘வடிவேலு சும்மா ஊரைச் சுத்திக்கிட்டுத் திரிகிற ஆளு. அப்ப ஒரு நாய் வந்து அவர்கிட்டே சேருது. அது கூட அப்படியே ஒன்றிப்போய்த் திரிவார். பிறகு அந்த நாயால் அவருக்குப் பல பிரச்னைகள் வருது. அதையெல்லாம் அவர் எப்படி சமாளிக்கிறார்னு கதை போகும். கதையை இப்படின்னு சொல்லவும் முடியாது. படத்தில் நிறைய நடந்திருக்கு. ‘கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கோம். பத்துப் பேரை கவலையை மறக்க வைக்கிறது பெரிய புண்ணியம். அதை மேற்கொண்டும் நல்லபடியா செய்யணும். அது மட்டும்தான் எப்பவும் மனசுல ஓடுது’ன்னு பங்காளி சொல்லிக்கிட்டே இருப்பார். அது நடந்திருக்கு இதிலே. ஒரு வெற்றிக்கு எல்லாமே அமையும்னு தோணுது. வடிவேலு அவ்வளவு அற்புதமா செய்திருக்கார். நான் நினைச்ச கதையைத்தான் எடுத்தேன்னு சொல்ற டைரக்டர் இந்த உலகத்திலேயே இல்லை. இங்கு எல்லாமே மாறும். வடிவேலுவின் ஒரு சின்ன அசைவில் ஒரு வார்த்தையை மாற்றிக் காட்டுவதில் எவ்வளவோ மேஜிக் நடந்தது. எல்லாத்தையும் காமெடியாகவே நினைச்சோம். வடிவேலு இதுவரைக்கும் 400 படத்துக்கு மேலே பண்ணிட்டார். அவருக்கே இந்தப் படம் ஏன் பிடிச்சதுன்னா, இது மாதிரி முன்னாடி அவர் செய்ததில்லை. இதில் உள்ளே வரும்போது ’எனக்கு எண்டே கிடையாதுடா’ன்னு சொல்லிட்டுத்தான் வருவார். சீன்லதான் காமெடி. இந்தப் படம் பண்ணும்போது அவருக்கு நிறைய பொறுப்பும் பயமும் இருந்தது. எனக்கே அவர்கூட இவ்வளவு பழகிட்டு ‘எங்கேயிருந்து அந்த மேஜிக் வருது’ன்னு கண்டுபிடிக்க முடியலை. நிஜத்தில் அவர் காமெடி கேரக்டர் கிடையாது. சீரியஸாகக் கதை கேட்பார். அதிகப்படியான காமெடி சொல்லும்போதுகூட சின்னதா உதடு மட்டும்தான் பிரியும். விளையாடுறது எல்லாம் கேமரா முன்னாடி வந்த பின்னாடி தான். எங்கடா இதையெல்லாம் மறைச்சு வச்சிருக்கார்னு ஆச்சரியம் தாங்க முடியாது. இப்படி நடிப்பார், இப்படி சிரிக்க வைப்பார்னு ஒரு கணக்கு வச்சிருப்போம்ல, அதை உடைச்சு எறிகிறதுதான் அவர் வேலை. 75% டயலாக்குகளோடு போவேன். அவர் சில ஹைலைட்டுகளைக் கோத்து விட்டால் இன்னும் அழகாயிடும். அதெல்லாம் கூட இருந்து பார்க்கணும். சொல்லிப் புரியவைக்கிற விஷயம் இல்லை பிரதர்.”

“எனக்கு எண்டே கிடையாதுடா!” - வடிவேலு காமெடி மேஜிக் RETURNS
“எனக்கு எண்டே கிடையாதுடா!” - வடிவேலு காமெடி மேஜிக் RETURNS

``பிரபுதேவா பாடலுக்கு டான்ஸ் கம்போஸிங்னு அலப்பறை கொடுத்திருக்கீங்க!’’

‘‘சந்தோஷ் நாராயணன் பாட்டு. அவர் வடிவேலுவின் தீவிர ரசிகர், பக்தன்னுகூட சொல்லலாம். ஒரு பாட்டைப் பாட அவர் ஸ்டூடியோவுக்குப் போனார். அவர் மனைவி, பிள்ளை எல்லோரும் சமைச்சு வச்சுக்கிட்டு வந்து உட்கார்ந்திட்டாங்க. கதையைச் சொன்னதும் ‘தலைவனுக்கு நான்தான் பாட்டு போடுவேன்’னு உரிமையா சொல்லிட்டார். கதை அந்தப் பாடலைக் கேட்டது. அந்தப் பாடலுக்கு மட்டுமே ஒன்னேகால் கோடி செலவு. மும்பையில் இருந்து 50 டான்ஸர்ஸ். வடிவேலு எவ்வளவு பெரிய டான்ஸர்னு உங்களுக்குத் தெரியும். பிரபுதேவாவும் வடிவேலும் சேர்ந்தால் அங்கே தீபாவளி மூடுதான். இதில் வடிவேலு பாட்டும் பாடியிருக்கார்.

படத்தை செல்வாதான் எடிட் பண்றார். ‘சார், சிரிப்பு தாங்க முடியலை. பாருங்க, ஒரு பக்கம் அவரோட அடாவடிச் சிரிப்பு. மறுபக்கம் மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ எடிட் பண்ணிக்கிட்டிருக்கேன். அதில் குணச்சித்திரத்தில் வேறே ஒரு இடத்திற்குப் போறார். எப்படி சார் இந்த மனுஷனால முடியுது’ன்னு கேட்கிறார். அதுதானே மாயம்னு நானும் உங்ககிட்ட இவ்வளவு நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.

“எனக்கு எண்டே கிடையாதுடா!” - வடிவேலு காமெடி மேஜிக் RETURNS

சுபாஸ்கரன் சார் கம்போஸிங்கிற்கு லண்டன் கூப்பிட்டார். குரூப்பா போய் பத்து நாள் அங்கே இருந்து கம்போஸிங் முடிச்சுட்டு வந்தோம். ஒரு காமெடிப் படத்துக்கு கம்போஸிங்குக்கு லண்டன் போனது நாங்களாத்தான் இருக்கும். முழுப் படத்தையும் சுபாஸ்கரன் சார் லண்டனில் இருந்தே பார்த்தார். அவரது சொந்த பந்தம் என 30 பேருக்கும் மேல் வந்து உட்கார்ந்திட்டு பார்த்தார்களாம். ‘ரொம்ப அருமையா இருக்கு, நல்ல தரமான காமெடிப் படமாக வந்திருக்கு’ன்னு அவர் பாராட்டினார். ‘உழைத்த உழைப்புக்கும், எதிர்பார்த்ததுக்கும் மேலே வந்திருக்கய்யா’ன்னு வடிவேலு பங்காளியும் பாராட்டினார். ரொம்ப சந்தோஷம். அதே மாதிரி மக்களும் சிரிச்சுப் பார்த்தால் எங்கள் வாழ்க்கை சிறக்கும்.

வடிவேலு பங்காளி எவ்வளவோ கவலைப்பட்ட மனசுகளை ஆத்திவிட்டிருக்கார். அதுக்காகவே பார்க்க வேண்டிய படம். தீபாவளிக்கு வெடியைப் போட்டுட்டு வாங்க, சேர்ந்து பார்க்கலாம். தியேட்டரில் சிரிப்பு வெடி வெடிப்போம்” அழகாகச் சிரிக்கிறார் சுராஜ்.