Published:Updated:

``இந்த ஒரு படத்துக்காக நான் அந்த ரெண்டு விஷயம் பண்ணணும்னு சொன்ன ரஹ்மான், அதைப் பண்ணார்!'' - சுரேஷ் கிருஷ்ணா

'சங்கமம்' திரைப்படம் வெளிவந்து 20 வருடங்கள் ஆனதையொட்டி, படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அந்தப் படம் உருவான கதையைப் பகிர்ந்துகொள்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கலைகளின் சங்கமம்தான் இந்த 'சங்கமம்'. அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழிந்துவரும் பாரம்பர்யமிக்க கிராமியக் கலையின் அழகையும், சிறப்பையும், அந்தக் கலையை மேற்கொள்ளும் கலைஞர்களின் வாழ்க்கையையும் எளிமையான ஒரு கிராமியக் கதையாகச் சொன்ன திரைப்படம்தான், 'சங்கமம்'. இந்தப் படம் வெளிவந்து 20 வருடங்கள் ஆனதையொட்டி, படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.

'சங்கமம்' பட பாடல்கள் ஒலிக்காத கலை நிகழ்ச்சிகள் கிடையாதுன்னே சொல்லலாம். இருபது வருடங்கள் கழிந்த பிறகும்கூட, பாடல்களின் தன்மை கெடாமல் இன்னும் கொண்டாடப்பட்டு வருவது பற்றி?

"அப்போவே, ஸ்கூல்ல பரதநாட்டியத்துக்கு 'மார்கழி திங்கள்' பாடலுக்கு ஆடுவாங்க. ஒரு சினிமா பண்ணும்போது, அந்தக் கதைக்குப் பாடல்கள் சரியா வந்திடணும்னு நினைச்சுதான் பண்ணுவோம். அப்படிப் பண்ண பாடல்களை சரியாக மக்கள் அங்கீகரிக்கும்போதுதான், அது உண்மையான வெற்றி. அந்த வெற்றியோட அடையாளம்தான், இன்னைக்கும் ஸ்கூல், காலேஜ்ல அந்தப் படத்தின் பாடல்களைப் பயன்படுத்துறது."

'சங்கமம்' படம் உருவான கதை, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம்?

'சங்கமம்' திரைப்படம்
'சங்கமம்' திரைப்படம்

"நான் கவிதாலயாவுக்காக 'அண்ணாமலை' படத்தைப் பண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், ரஹ்மான் 'ரோஜா'வில் இசையமைத்துக்கொண்டிருந்தார். ஒரே ஆபீஸில் ஒரு பக்கத்தில் நான் 'அண்ணாமலை' பட வேலையில் இருக்கும்போது, மற்றொரு பக்கத்தில் 'ரோஜா' படத்துக்கான இசையமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போ, நாங்க அடிக்கடி பேசிக்குவோம். பிறகு, 'ரோஜா' இசை வெளியீட்டு விழாவிற்குக் கொஞ்சம் முன்னாடியே நான் போயிட்டேன். அங்கே ரஹ்மான் ஸ்பீக்கர் வெச்சு பாடல் சரியா பாடுதான்னு சரி பார்த்துக்கிட்டு இருந்தார். என்கிட்ட, 'பாட்டெல்லாம் எப்படி இருக்கு, வொர்க்அவுட் ஆகிடுமா'னு கேட்டார். 'சவுண்டே புதுசா இருக்கு. நல்லா வந்துடும்'னு சொன்னேன். விழா முடிஞ்சது, எல்லோருக்கும் பாட்டு பிடிச்சது. பிறகு நடந்ததெல்லாம் ரஹ்மானோட தனி வரலாறு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு ரொம்பநாள் கழிச்சு ஒரு விருது விழாவில் ரஹ்மானை சந்திச்சேன். 'நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்'னு சொல்ல, 'கண்டிப்பா'னு அவரும் சொன்னார். என்னோட ரைட்டர் பூபதிராஜா 'சங்கமம்' கதையைச் சொன்னார். இந்தக் கதை ரொம்பப் புதுசா இருந்தது, எனக்கும் பிடிச்சுப் போச்சு. ஏ.ஆர்.ரஹ்மான்கிட்ட கதையைச் சொன்னோம். கதையைக் கேட்டுட்டு, 'கர்னாடிக் மியூசிக்ல கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி இவங்களைத் தாண்டி பண்ணவே முடியாது. நாட்டுப்புற இசையில ராஜா சார் கிட்டக்கூட போகமுடியாது. இப்படி இருக்கும்போது, ஒரு படத்துக்காக நான் ரெண்டையும் தொடணும். அப்படித் தொட்டா, அவங்க பண்ற அந்த லெவலுக்குப் பண்ணணும்.

'சங்கமம்' திரைப்படம்
'சங்கமம்' திரைப்படம்

இப்போ இருக்கிற கமிட்மென்ட்ல முடியாது. வேற ஏதாவது கதை சொல்லுங்க'னு சொல்ல, நான், 'எனக்கு இந்தக் கதை பிடிச்சிருக்கு'னு சொன்னேன். பிறகு, 'நான் ராஜஸ்தான் போறேன். கொஞ்சம் டைம் கொடுங்க'னு சொன்னார். அப்புறம், ராஜஸ்தான்ல இருந்தே போன் பண்ணி, 'பண்றோம் சுரேஷ்'னு சொல்லிட்டார். 'சங்கமம்' பாட்டெல்லாம் தயாராகிட்டு இருக்கும்போது, 'முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்' பாட்டோட ஹம்மிங் அனுப்பினார். அதைக் கேட்டுட்டு ரொம்ப ஃபீல் பண்ணி, 'நம்ம ஆன்மாவைத் தொடுற எமோஷன் இந்தப் பாட்டுல இருக்கு'னு சொன்னேன். 'அது வந்துடுச்சுன்னா வெற்றிதான் சுரேஷ்'னு ரஹ்மான் சொன்னார். அவர் போட்ட ஒவ்வொரு பாட்டும், ஒவ்வொரு பாட்டுக்குப் போட்டியா இருந்தது. மூணு மாசம் அவர்கூட பண்ண டிராவல் மறக்கவே முடியாது. அவர் கரியர்ல நாட்டுப்புற இசையும், கர்னாடிக் இசையும் சேர்ந்த இப்படி ஒரு சினிமா இன்னைக்குவரை ஏ.ஆர்.ரஹ்மான் பண்ணதில்லைன்னுகூட சொல்லலாம்."

'சங்கமம்' படம் வந்த குறைந்த தினங்களிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதைப்பற்றி?

'சங்கமம்' திரைப்படம்
'சங்கமம்' திரைப்படம்

" 'சங்கமம்' படம் தியேட்டர்ல நல்லா ஓடிக்கிட்டு இருந்தது. நான் திருச்சி, மதுரை தியேட்டர்களுக்கு விசிட் அடிச்சுக்கிட்டு இருந்தப்போதான், டிவி-யில ஒளிபரப்புறாங்கனு சொன்னாங்க. எனக்கு சர்ப்ரைஸா இருந்துச்சு. ஓடிக்கிட்டு இருக்கிற ஒரு படம், உடனே டிவியில வர்றது நல்லதா, கெட்டதானுகூட தெரியல. 'சன் டிவி மூலமா படம் எல்லோரும் பார்த்துட்டாங்க. எல்லா மக்கள்கிட்டேயும் படம் போய்ச் சேர்ந்துடுச்சுங்கிறதே எனக்குத் திருப்தியா இருந்தது."

படத்தின் இறுதியில் மக்களின் ஆரவாரத்துடன் 'மழைத்துளி மழைத்துளி' பாடல், சவாலில் ஜெயித்துவிட்டதாக ரகுமான் சொல்லும் அந்த கிளைமாக்ஸ் காட்சி மிகவும் உணர்ச்சிகரமானது. அதை எப்படிப் படமாக்கினீர்கள்?

"கதையிலேயே அந்தக் காட்சிதான் ரொம்ப ஹைலைட். ஊர் ஊராகப் போய் மணிவண்ணனும், ரகுமானும் தங்களோட கிராமியக் கலையைப் பார்க்க வாங்கனு கேட்கிறாங்க. அதேமாதிரி, நிஜமாகவே நாங்களும் ஒவ்வொரு ஊருக்கும் மக்களை ஷூட்டிங் பார்க்க வரச் சொல்லி தகவல் கொடுத்துட்டோம். ஷூட்டிங் அன்னைக்கு வண்டியில் மக்களை அழைச்சுக்கிட்டும் வந்தோம். அந்தக் காட்சியில பாதி பேர் ஜூனியர் ஆர்டிஸ்ட்னா, மீதம் இருந்தவங்க பொதுமக்கள்தான். எப்போதுமே இப்படிக் கூட்டம் வந்தா முழு நாளும் இருக்கமாட்டாங்க. 10 மணிக்கு வர்றவங்க 1 மணிக்கெல்லாம் கிளம்பிடுவாங்கனு எங்களுக்கு நல்லாத் தெரியும். இந்த நேரத்துக்குள்ள மொத்தக் கூட்டத்தையும் வெச்சு வைடு ஷாட்ஸ் எடுக்கணும். இன்னொரு பக்கம், மேடையில முழுப் பாடலையும் எடுக்கணும்.

'சங்கமம்' திரைப்படம்
'சங்கமம்' திரைப்படம்

இன்னொரு பக்கம், மணிவண்ணன் இறந்துட்டார்னு தெரிஞ்ச பிறகு, அப்பாவுக்காக ஆடணும்னு ரகுமான் முடிவெடுக்குற காட்சிகளையும் எடுக்கணும். அதுக்குப் பிறகு அப்பா மணிவண்ணனோட பிணத்தை மக்கள் மத்தியில் எடுத்துக்கிட்டு போற காட்சிகளை எடுக்கணும். இவ்வளவு வேலையை வெச்சுக்கிட்டு, ஷூட்டிங்கிற்கு முதல்நாளே பக்கா பிளான் பண்ணிக்கிட்டுதான் போனோம். நினைச்ச மாதிரி காலையில வந்த மக்கள் மதியம் 2 மணிக்குப் பிறகு இல்லை. ஆனா, நாங்க நினைச்சதையெல்லாம் அந்தக் குறைந்த நேரத்திலேயே எடுத்து முடிச்சுட்டோம்."

நல்ல கதை, நல்ல நடிகர்கள், நல்ல இசை... என எல்லாம் இருந்தும் 'சங்கமம்' வணிகரீதியாக தோல்வியைத் தழுவிய காரணம் என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க?

"ரிலீஸான முதல் வாரம் 'சங்கமம்' நல்லா ஓடிக்கிட்டு இருந்தது. ரெண்டாவது வாரமே டிவி-யில ஒளிபரப்புனா, அந்தத் தோல்வியை என்ன கணக்குல சேர்க்கிறது? ஒரே ஒரு சந்தோஷம், இந்தப் படத்தை யாரும் தப்பா சொல்லல. அந்த வகையில பார்த்தா, இது ஒரு வெற்றிப் படம்தான்."

மணிவண்ணனுடன் பணியாற்றிய அனுபவம்?

'சங்கமம்' திரைப்படம்
'சங்கமம்' திரைப்படம்

"நான் முதன்முறையா மணிவண்ணனுடன் இணைந்து பணியாற்றிய படம், 'சங்கமம்'தான். அவர் ஒரு இயக்குநரா நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கார். ஒரு நடிகரா மணிவண்ணன் சாருக்கு இந்தக் கதை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. மணிவண்ணன் சார் சார்லி, வடிவேலுவைத் திட்டும் காட்சியைப் படமாக்கும்போது, 'சார் இந்தக் காட்சியில திட்டுற மாதிரி பேசணும். ஆனா, பார்க்கிற ஆடியன்ஸுக்கு அழுகை வரணும்'னு சொன்னேன். அந்தக் காட்சியை சூரியன் மறையும் சமயத்தில் எடுக்கணும்னு ஆசை. 30 நிமிடங்கள்தான் அதுக்கு நேரம் கிடைக்கும். அதுக்காக நான் ஒருபக்கம் பரபரப்பா இருக்க, மணிவண்ணன் சாரும் எல்லோரையும் வெச்சுக்கிட்டு ரிகர்சல் பண்ணிக்கிட்டு இருந்தார்.

சிங்கிள் டேக்ல ஓகே ஆச்சு அந்தக் காட்சி. மணிவண்ணன் சாரை நான் தனியா கூப்பிட்டு, 'நடிகனா எனக்கு இந்தப் படத்துல ரொம்ப உறுதுணையா இருக்கீங்க. இந்தக் கதைக்கு நீங்க காட்டுற மெனக்கெடலை நான் எதிர்பார்க்கவே இல்லை'னு சொன்னேன். ஒவ்வொரு காட்சிக்கும் இயற்கையான நடிப்பைத் தந்தார், மணிவண்ணன். அவரை மாதிரி ஒரு நடிகர் இனி நமக்குக் கிடைக்கவே மாட்டாங்க."

பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், 'சங்கமம்' படத்தையும் ரீ- ரிலீஸ் செய்யலாமே?

'சங்கமம்' திரைப்படம்
'சங்கமம்' திரைப்படம்

"நிச்சயமாக... எனக்கும் இது ஒரு நல்ல விஷயமா தோணுது. நான் தயாரிப்பாளர்கிட்ட பேசிப் பார்க்கிறேன். ரீ-ரிலீஸ் பண்ணா மக்கள் வரவேற்பாங்கன்னுதான் எனக்கும் தோணுது."

எம்.எஸ்.வி, ஜானகி, ஹரிஹரன், ஏ.ஆர்.ரஹ்மான், உன்னி கிருஷ்ணன், நித்யஸ்ரீ, சுஜாதா, சங்கர் மகாதேவன் எனப் பெரிய பாடகர் பட்டாளமே 'சங்கமம்' படத்தில் பாடல்களைப் பாடியிருந்தார்கள்... அந்த அனுபவம்?

'சங்கமம்' திரைப்படம்
'சங்கமம்' திரைப்படம்

"ஒவ்வொரு பாட்டுக்கும் வித்தியாசமா பாடகர்கள் வரணும்னு முடிவு பண்ணோம். அந்தச் சமயத்தில், ஜானகி அம்மா பாடாம இருந்தாங்க. அவங்களை 'மார்கழி திங்கள் அல்லவா' பாட வெச்சோம். ரொம்பநாள் கழிச்சு அவங்க குரலைக் கேட்கும்போது, வேற மாதிரி இருந்துச்சு. ஹரிஹரனை வித்தியாசமா ஃபோக் பாட வெச்சோம். சங்கர் மகாதேவன் இந்தப் படத்துலதான் அறிமுகமானார். அப்புறம், க்ளைமாக்ஸ்ல மணிவண்ணன் வாய்ஸ்ல யாரைப் பாட வைக்கலாம்னு யோசிச்சப்போ, எம்.எஸ்.வி சார் ஞாபகம் வந்தது. அவர் பாட வந்ததே, எங்களுக்குப் பெரிய சந்தோஷம். சின்னப் பையன் மாதிரி ரஹ்மான்கிட்ட வந்து பாடுறேன்னு சொல்லி, பாடிய காட்சிகளையெல்லாம் மறக்கவே முடியாது. பாட்டுக்கு நடுவுல ஒரு சிரிப்பெல்லாம் சிரிச்சுப் பிரமாதமா பாடினார், எம்.எஸ்.வி."

'சங்கமம்' படம் வெளிவந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. இந்த இருபது வருடத்தைத் திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?

'சங்கமம்' திரைப்படம்
'சங்கமம்' திரைப்படம்

" 'சங்கமம்' நான் ரொம்ப ரசிச்சு எடுத்த படம். கிட்டத்தட்ட ஐம்பது படம் பண்ணிட்டேன். அதுல, எல்லாப் படமும் சிட்டி படம்தான். இது மட்டும்தான் பக்கா கிராமத்துப் படம். வடிவேலு, டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யானு எல்லோருமே சிறப்பா நடிச்சிருந்தாங்க. விஜயகுமாருக்கு அந்த ரோல் கொஞ்சம் புதுசா இருந்தது. அவரும் அவரோட கதாபாத்திரத்தை இயல்பா பண்ணிருந்தார். இந்தப் படத்துக்காக கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி சாருக்கு தேசிய விருது கிடைச்சது. இந்தப் படத்துல எனக்கு ஒரு நல்ல டீம் அமைஞ்சாங்க. பொள்ளாச்சில இந்தப் படத்தோட ஷூட்டிங் நடந்த வீடு, ரொம்பப் பிரபலமாகிடுச்சு. அந்த வீட்டை 'சங்கமம் வீடு'ன்னுதான் சொல்றாங்க. என் இதயத்துல எப்போதுமே மிக நெருக்கமான இடம் 'சங்கமம்' படத்துக்கு உண்டு."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு