Published:Updated:

"`பாபா' ரீ-ரிலீஸ், ரஜினி சொன்ன ஐடியா!"- ரகசியம் சொல்லும் சுரேஷ் கிருஷ்ணா | Exclusive

ரஜினியுடன் சுரேஷ்கிருஷ்ணா

"திடீர்னு ரஜினி சார் கூப்பிட்டார். ''பாபா' படத்தை மறுபடியும் வெளியிடலாமா?'ன்னு கேட்டார்." - சுரேஷ் கிருஷ்ணா

"`பாபா' ரீ-ரிலீஸ், ரஜினி சொன்ன ஐடியா!"- ரகசியம் சொல்லும் சுரேஷ் கிருஷ்ணா | Exclusive

"திடீர்னு ரஜினி சார் கூப்பிட்டார். ''பாபா' படத்தை மறுபடியும் வெளியிடலாமா?'ன்னு கேட்டார்." - சுரேஷ் கிருஷ்ணா

Published:Updated:
ரஜினியுடன் சுரேஷ்கிருஷ்ணா
ரஜினி கதை, திரைக்கதை எழுதித் தயாரித்திருந்த `பாபா' திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வரவிருக்கிறது `பாபா'. ஏற்கெனவே ரஜினியை வைத்து `அண்ணாமலை’, `வீரா’, `பாட்ஷா’ ஆகிய பிரம்மாண்ட வெற்றி படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாதான் `பாபா' படத்தையும் இயக்கியிருந்தார். தற்போது அதன் மீட்டுருவாக்கத்துக்கான பணிகளிலும் அவரே இறங்கியிருக்கிறார்.

கடந்த 2002ல் 'பாபா' வெளியானது. ரஜினியுடன் ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். தவிர எம்.என்.நம்பியார், கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா என நிறைய நட்சத்திரங்கள் ஜொலித்தனர். அன்றைய காலகட்டத்தில் 'பாபா' சரியாகப் போகாவிட்டாலும் கூட, ஆன்மிக பரிமாணத்தில் விறுவிறுப்பான கமெர்ஷியல் படமாக அது இருந்தது.

இந்நிலையில் டிஜிட்டல் வடிவில் நவீனத் தொழில்நுட்பத்துடன் புத்தம் புது பொலிவுடன் மீண்டும் வரவிருக்கிறது 'பாபா'. இது பற்றி இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் பேசினேன்.

'பாபா'வில் ரஜினி
'பாபா'வில் ரஜினி

"திடீர்னு ரஜினி சார் கூப்பிட்டார். ''பாபா' படத்தை மறுபடியும் வெளியிடலாமா?'ன்னு கேட்டார். நல்ல ஐடியான்னு சொன்னதும், அடுத்தகட்ட வேலையாக அதை எப்படி கொண்டு வரலாம், இருபது வருஷத்துக்குப் பிறகு வர்றதால என்னென்ன மாற்றங்கள் செய்யணும்ன்னு விவாதித்தோம். அதுல முக்கியமா படத்தின் நீளம் பத்தியும் பேசினோம். அப்போ மூணு மணிநேரம் போச்சு. இப்ப அந்த நீளத்தைக் குறைக்கணும். படத்துல பாடல்கள் எல்லாமே எவர்கிரீன் ஹிட்ஸ்னால, அந்தப் பாடல்களை டால்பி சவுண்டுக்கு மாத்த வேண்டியிருக்கும்.

இப்ப டிஜிட்டல் புரொஜக்டர் இருக்கறதால, படத்தின் பிக்சர் குவாலிட்டியை மெருகேத்தணும். அதுக்கேத்த மாதிரி தரத்தையும் அதிகரிக்கணும். ஸோ, கிராபிக்ஸ், டி.ஐ. வேலைகள் நிறைய இருக்கும்ன்னு எல்லாம் விவாதிச்சோம். அப்புறம்தான் எல்லாமே பண்ணிடலாம், படத்தைக் கொண்டு வந்திடலாம்ன்னு முடிவாச்சு. இன்னைக்கு அதை அதிகாரபூர்வமாகவும் அறிவிச்சிட்டோம். எடிட், மிக்ஸ், வேலைகளையும் உடனே ஆரம்பிச்சிட்டோம்.

'பாபா' பாடல் காட்சி
'பாபா' பாடல் காட்சி

இன்னொரு விஷயம், இப்போ ஃபேன்டஸி படங்களுக்கு வரவேற்பு அதிகமாகியிருக்கு. சமீபத்திய 'பிரம்மாஸ்திரா', 'காந்தாரா', 'கார்த்திகேயா'ன்னு எல்லாமே ஃபேன்டஸியா இருக்கு. மக்களுக்கும் பிடிச்சிருக்கு. நாங்க இருபது வருஷத்துக்கு முன்னாடியே ஃபேன்டஸி கொடுத்திருக்கோம். அப்போ ஃபேன்டஸிக்கு அவ்ளோ வரவேற்பு அமையல. ஆனா, இப்போ அதோட கன்டென்ட்டை மக்கள் அவ்ளோ ரசிக்கறாங்க. இன்னொரு ஆச்சரியம், 20 வருஷமா இந்தப் படம் யூடியூப்ல, அதுல, இதுலன்னு வரவே இல்ல. டி.வி.யில்கூட எப்பவாவது வந்திருக்கும்.

அதனால இப்ப இருக்கற தலைமுறையினருக்கு இது ஃப்ரெஷ்ஷான கன்டென்ட்டாக இருக்கும். இப்ப உள்ள ரசிகர்களும் ரஜினி சாரின் வேறொரு பரிமாணத்தைப் பார்த்து ஆச்சர்யமாவாங்க. படத்தை டிசம்பர்ல வெளியிடத் திட்டமிடுறோம். சென்சார் முடிச்சதும் தேதியை அறிவிச்சிடுவோம்" என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.