Published:Updated:

`லாக்டெளனில் ரகசிய ஷூட்டிங்... ஆனால், யாருக்கும் சம்பளம் இல்லை!' சுசீந்திரன் படம் உண்மையா?!

இயக்குநர் சுசீந்திரன்
இயக்குநர் சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் அடுத்த படம் பற்றிய அப்டேட்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் சுசீந்திரன், `நான் மகான் அல்ல', `அழகர்சாமியின் குதிரை', `பாண்டியநாடு', `ஜீவா' உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். ஒரு படம் வெளியாகும்போது இவருடைய அடுத்த படத்தின் ஷூட்டிங் பாதி முடிந்திருக்கும்.

சமீபத்தில் சசிகுமார், பாரதிராஜா ஆகியோரை வைத்து பெண்கள் கபடியை பற்றிய `கென்னடி கிளப்', கால்பந்து விளையாட்டை வைத்து `சாம்பியன்' ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் வெளியானது. இந்நிலையில் 2020 திட்டமாக விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா என `கும்கி' கூட்டணியில் புதுப்படம் ஒன்றை ஆரம்பிக்க இருந்தார் சுசீந்திரன். 1980-களில் நடக்கும் த்ரில்லர் கதை. மார்ச் 23-ம் தேதி ஷூட்டிங் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், அந்தச் சமயத்தில் லாக் டெளன் தொடங்கிவிட்டது.

நடிகர் ஜெய்
நடிகர் ஜெய்

லாக் டெளனில் தனது சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் குடும்பத்துடன் நேரம் செலவழித்து வரும் இயக்குநர் சுசீந்திரன், தற்போது அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார். ஜெய்தான் ஹீரோ. `தடம்' படத்தில் நடித்த ஸ்மிருதி வெங்கட்டும், ட்விட்டர் வைரரலான திவ்யா துரைசாமியும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், இந்தப்படத்தில் பாரதிராஜா, ஹரீஷ் உத்தமன், பாலசரவணன், காளி வெங்கட் எனப் பலர் நடிக்கவிருக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். `பாம்பு சட்டை' படத்துக்கு இசையமைத்த அஜீஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்தான் தேனியில் தொடங்கிவிட்டதாகவும், சத்தம் இல்லாமல் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், படத்துக்குப் பெயர் `சின்னத்திரை' என்றும் செய்திகள் பரப்பப்பட்டுவருகின்றன. உண்மை என்ன என சுசீந்திரன் வட்டாரத்தில் விசாரித்தோம்.

கொரோனா காலத்தைப் பின்னணியாக வைத்து கிராமத்தில் நடக்கும் கதை இது. `சுப்ரமணியபுரம்' படத்துக்குப் பிறகு, ஜெய் நடிக்கும் பக்கா கிராமத்துப் படமாக இருக்கும் என்கிறார்கள். கே.வி.துரை என்பவர் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார். ஆனால், இதுவரை படப்பிடிப்பு நடக்கவில்லை. லாக்டெளன் தளர்த்தப்பட்டதும்தான் படப்பிடிப்பு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது. இந்தப் படத்தை முடித்த பிறகுதான், விக்ரம் பிரபு நடிக்கும் படத்தை ஆரம்பிக்க இருக்கிறார் சுசீந்திரன்.

இயக்குநர் சுசீந்திரன்
இயக்குநர் சுசீந்திரன்

``இந்த கொரோனா காலத்தில் சினிமாத்துறையே ஸ்தம்பித்து நிற்கிறது. ஃபைனான்ஸியரிடம் இருந்து வாங்கிய பணத்தின் வட்டி எகிறிக்கொண்டே போகிறது. அதனால், நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்கக்கோரி பல தயாரிப்பாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். சில நடிகர், நடிகைகளும் இயக்குநர்களும் தானாகவே தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர். இன்னும் சில தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு சம்பளம் என்றில்லாமல் படத்துடைய லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை சம்பளமாகத் தரும் திட்டத்தை முடிவு செய்திருக்கிறார்கள். அப்படிதான் சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள், டெக்னீஷியன்கள் என யாருக்கும் சம்பளம் கிடையாது. படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை சம்பளமாகத் தருவதாகப் பேசப்பட்டிருக்கிறது'' என்கிறார்கள் சுசீந்திரனுக்கு நெருக்கமானவர்கள்.

இதற்கிடையே சுசீந்திரன் இயக்கத்தில் `ஏஞ்சலினா' என்கிற படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. புதுமுகங்கள் பலரும் நடித்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது. ஜெய், விக்ரம் பிரபு படங்கள் தவிர விஜய்க்காக ஒரு கதையை எழுதி வருவதாகவும் முன்பு விகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார் சுசீந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு