சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“இயக்குநர்கள் நினைச்சமாதிரி படம் எடுக்க முடியலை!”

தங்கர் பச்சான்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கர் பச்சான்

இந்தக் கால சினிமா மொழியில் மகனை வைத்துப் படம் எடுக்க வேண்டியிருக்கு. அவன் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையை ஏமாற்ற விரும்பலை

‘அழகி’ வெளியாகி 20 ஆண்டுகளாகிவிட்டன. மகனை வைத்து ஒரு படம் எடுத்துவிட்டு, கொரோனா வழிவிடுமா எனக் காத்திருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான். எல்லாவற்றையும் எதைப்பற்றியும் அவரிடம் பேசலாம். மனிதர் பேச ஆரம்பித்தாலே தாரை தப்பட்டைதான்!

“எங்கே யார் பார்த்தாலும் ‘அழகி’ மாதிரி ஒரு படம் பண்ணுங்கன்னு பிரியமாகக் கேட்கிறாங்க. காதல்ங்கிறது பெரிய உணர்வு. அதைக் கடந்து வராத மனுஷனே கிடையாது. நூறு பேர் காதலித்தால் இரண்டு பேர் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. இந்த 98 ஆண்களை நீங்கள் அடையாளம் கண்டுக்கலாம். 98 பெண்கள் எங்கே? அவங்க என்ன செத்தா போயிட்டாங்க! இன்னும் கணவனோடு நிறைவாக வாழ்ந்துக்கிட்டுத்தானே இருக்காங்க. என்னதான் கணவன் மனைவியாக இருந்து இரண்டறக் கலந்தாலும் இரண்டு பேருக்கும் பரிமாறிக்கொள்ளாத பகுதி இருந்துகிட்டுத்தானே இருக்கு. இது தப்பான உணர்வில்லை. மாறாக, மனசுக்குள்ளே இருக்கிற பேரன்பு அது. இன்னமும் கிராமத்திற்குப் போனால் நம்முடைய பிரியத்துக்கு ஆளான பெண்கள் கைக் குழந்தைகளுடன் பஸ்ஸில் வந்து இறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது அப்படியான காதல் இருக்கிறதா எனக் கேட்டால்... எனக்குக் கிடைத்த காதல் அத்தகையது.”

‘ஃபேமிலி மேன் 2’ சீரிஸ் பற்றிக் கடுமையான விமர்சனங்கள் வெளிவருதே!

“உண்மை இல்லாமல் இவ்வளவு தூரம் கசியாது. கண்ணால் கண்ட சாட்சியாக நானே ஈழத்திற்குப் போயிருக்கேன். ஒரு ஆட்சி எப்படிப்பட்டதாக இருக்கணும் என்று அங்கே தான் பார்த்திருக்கேன். தமிழர்கள் வாழ்க்கையை அழிப்பவர்கள் அல்லர். ஈழப்பிரச்னையில் ஒன்றும் செய்ய முடியாதவர்களாகி நாம் தலைகுனிந்து ஒதுங்கிட்டோம். விடுதலைக்குப் போராடிய இயக்கம் கண் முன்னாடி அழிக்கப்பட்டதை உலகம் முழுவதும் வெட்கமில்லாமல் வேடிக்கை பார்த்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சக் கூடாது. ‘ஃபேமிலிமேன்2’ வெப்சீரிஸைத் தடைசெய்து தமிழ் மக்களின் நலனைப் பாதுகாக்கணும்”

“இயக்குநர்கள் நினைச்சமாதிரி படம் எடுக்க முடியலை!”

‘அழகி’ மாதிரி ஒரு படம் எடுத்துட்டு இப்ப ‘டக்குமுக்கு டிக்குத்தாளம்’னு படம் எடுத்திருக்கீங்க. என்ன ஆச்சு...?

“எனக்கே தெரியலை. இந்தக் கால சினிமா மொழியில் மகனை வைத்துப் படம் எடுக்க வேண்டியிருக்கு. அவன் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையை ஏமாற்ற விரும்பலை. ட்ரூபோ புதிய அலை சினிமாவில் நிறைய செய்து பார்த்தவர். அவரே நகைச்சுவைப் படங்கள் எடுத்தார். கோடார்டு, பெலினி இப்படிச் செய்து பார்த்திருக்காங்க. பாலுமகேந்திரா, ஸ்ரீதர்கூட இங்கே காமெடி செய்து பார்த்திருக்காங்க. இளைஞர்களை இந்தப் படம் இழுக்கும். இந்தப் படத்தின் கருவை உலக சினிமாவில்கூட யாரும் கையாளவில்லை. இதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று இப்படி ஒரு தலைப்பை வைச்சேன். வெளியீட்டுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன்.”

சினிமா கட்டமைப்பில், தொனியில் நிறைய மாறிவிட்டது. இதை எப்படிப் பார்க்கிறீங்க...?

“என்ன இருந்தாலும் தமிழ் சினிமா நடிகர்களை நம்பித்தான் ஓடிக்கிட்டிருக்கு. இங்கே பெரிய நடிகர்கள் இல்லாமல் படம் எடுக்க முடியாது. ரஜினிக்கு வயதென்ன, அவருக்கு ஏற்ற பாத்திரங்களில் அவர் நடிக்கிறாரா? விஜய், அஜித் போன்றவர்கள் வயதின் தன்மைக்கேற்று நடிக்கிறார்களா? ஒரு தேர்ந்த இயக்குநர் தன்னிடம் இருக்கின்ற கதையை வெச்சுக்கிட்டு இங்க ஒரு படம்கூடப் பண்ண முடியாது. இங்கே எந்த இயக்குநர் தாங்கள் நினைத்த சினிமாவை எடுத்துக்கிட்டிருக்காங்க? ஏழெட்டு நடிகர்கள் நினைப்பதுதான் தமிழ் சினிமாவின் முகமா இருக்கு. இப்ப நடிகர்கள்தான் எல்லாத்தையும் முடிவு பண்றாங்க. அஜித்தையெல்லாம் மக்கள் கொண்டாடுகிறார்கள். பின்வரும் தலைமுறை அந்தப் படங்களைப் பார்த்து என்ன நினைப்பாங்க? விஜய்யை மக்களுக்கு அவ்வளவு பிடிக்குது. அவர் படங்களைப் பாருங்க. ஒரே மாதிரி சிவப்பு கலர் பொண்ணுங்ககூட ஜோடி போட்டுக்கிட்டு எந்த ஊரில், எந்த நாட்டில் கதை நடக்குதுன்னே தெரியாமல் படங்களில் நடிச்சுட்டிருக்கார். இதெல்லாம் இங்கதான் நடக்குது!”

“இயக்குநர்கள் நினைச்சமாதிரி படம் எடுக்க முடியலை!”

இலக்கியங்களைத் தொடர்ந்து படமாக்கினீங்க... இப்ப வெற்றி மாறன் முயற்சி செய்கிறார். இதிலிருக்கிற சாதக, பாதகங்கள் என்ன?

“உலக நாடுகளில் இப்பவும் மூன்றாம்தர சினிமாகூட ஏதாவது ஒரு புத்தகத்தை முன்னிறுத்திதான் எடுக்கப்படுகிறது. ஏதாவது வாழ்க்கை வரலாறு, நாவல்னு படம் இருக்கும். விக்கிபீடியாவில் தேடிப் பார்த்தால் அப்படித்தான் இருக்கும். சினிமாவுக்காக உட்கார்ந்து கதை எழுதுவது உலகத்திலேயே நம்ம ஊர் தவிர எங்கேயும் கிடையாது. இங்கே நடிகர்களுக்குத் தகுந்த மாதிரி கதை எழுதுறாங்க. அதுவே பிரச்னை. நான்தான் ஒரு சினிமா இயக்குநரா கி.ரா பெயரையே இங்கே சொன்னேன். அது வரைக்கும் அது சிற்றிதழில் உலவின பெயர்தான். நாஞ்சில் நாடனின் ‘தலைகீழ் விகித’த்தைப் படமாக்கினேன். என் ‘கல்வெட்டு கதை’யை ‘அழகி’யாக்கினேன். ‘அம்மாவின் கைப்பேசி’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ அப்படி வந்ததுதான்.

அடுத்து இப்ப வெற்றிமாறன் ‘அசுரன்’ எடுத்திருக்கார். சாதியப் பின்புலத்தோடு வன்முறையை வைத்துதான் வெற்றிபெற முடியுது. அசுரன் சாதித் தொடர்பு இல்லாத படமா இருந்திருந்தால் வெற்றி அடைந்திருக்காது. தனுஷ் இல்லேன்னா அசுரனே இல்லை. அசுரனில் இருந்த சாதி மாதிரி ஒண்ணு இங்கே தேவைப்படுது. வெற்றிமாறன் அதை நல்லா கையாண்டார். ஒண்ணு சொல்றேன்... மக்கள் கேட்டதைக் கொடுக்கிறவன் வியாபாரிங்க. அவனை நம்ம பக்கம் இழுக்கிறவன்தான் கலைஞன்!”

“இயக்குநர்கள் நினைச்சமாதிரி படம் எடுக்க முடியலை!”

ரஜினி முதல்வராகணும்னு சொன்னீங்க. அவர் கட்சியே தொடங்கலையே?

“நான் மட்டுமில்லை, ரொம்ப பேரு ஏமாந்தாங்க. இங்கே யாரும் பணம் கொடுக்காமல் வெற்றிபெற முடியாது. ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்தார்கள். அவருக்கு அரசியலுக்கு வந்து சம்பாதிக்கணும்னு அவசியமே இல்லை. கடைசிக்காலத்தில் மக்களுக்கு ஏதாவது செய்துவிட்டுப் போவோம்னு நினைச்சார். அந்த எண்ணம் போதும். நல்ல அதிகாரிகள் இருந்தால் மட்டும் நல்லாட்சி செய்ய முடியாது. போன ஆட்சியிலும் இந்த அதிகாரிகள்தான் இருந்தாங்க, சிறந்த ஆட்சி வரலை. முதன்மைப் பொறுப்பில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் மட்டுமே நல்லாட்சி மலரும். அந்த நல்ல எண்ணம் ரஜினிக்கு இருந்தது.”

இப்போது புதிதாக அமைந்திருக்கும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியை எப்படிப் பார்க்கிறீங்க...?

“எல்லோருக்கும் இந்த ஆட்சி நம்பிக்கை கொடுத்திருக்கு. மக்களுக்குப் புதுத்தெம்பு வந்திருக்கு. அதுவே நீடிக்கணும்ங்கிறது எனது விருப்பம். முன்னாடி சாதாரணமாக மு.க.ஸ்டாலினை எடைபோட்டு வச்சிருந்தாங்க.. ஆனா அதை மாத்திக் காட்டியிருக்கார் ஸ்டாலின். நல்லா செய்றார்னு எதிர்க்கட்சிகளும் சொல்ற நிலைமையை ஆரம்ப நாட்கள்லயே ஸ்டாலின் உருவாக்கியிருக்கார்.

கொரோனா ஒரு அலை வந்து போச்சு. அந்த அலையில நாம என்ன படிப்பினையை எடுத்துக்கிட்டோம்? கடந்த 20 நாள்களாக என் அலைபேசி அடிச்சுக்கிட்டே இருக்கு. ஏதாவது ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுங்கன்னு கதறுறாங்க. எங்கயும் படுக்கை கிடைக்கல. பக்கத்திலிருந்து கவனிக்கிற நோயும் இல்ல இது. எம்.எல்.ஏ., அமைச்சர் முதற்கொண்டு தனியார் மருத்துவமனையில் சேர்றாங்க. அரசு மருத்துவமனையில் ஒரு வசதியும் செய்யாமல் இத்தனை வருஷமா என்ன ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க! இவங்களுக்கு இருக்கிற இதே உயிர்தானே சாதாரணமா ஏழைகளுக்கும் இருக்கு! இத்தனை முதல்வர்கள் வந்திட்டுப் போயும் திராவிடக்கட்சிகள் ஏன் எதையும் செய்யலை?

அடிப்படை உயிர்காக்கும் மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்களை மாட்டுக்கொட்டகை மாதிரி வச்சுக்கிட்டு ‘சிறந்த ஆட்சி, சிறந்த ஆட்சி’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. சிறந்த ஆட்சியை இதுவரைக்கும் யாருமே செய்யலை. முதல்வர் ஸ்டாலின் மனசு வெச்சால் செய்யலாம். ‘அரசு ஊதியம் பெறுகிறவர்கள் அத்தனை பேருக்கும் அரசு மருத்துவமனையில்தான் மருத்துவம்’னு சொல்லிடணும். அவங்க பிள்ளைகளுக்கும் அரசுப் பள்ளியில்தான் படிப்புன்னு சட்டமாகணும். அப்படி இருந்தால் தனியார் மருத்துவமனை மாதிரி தரமா எல்லா வசதியும் வந்து சேரும்ல. இதைச் செய்ய எத்தனை ஆயிரம் கோடி செலவாகிடும்? இவ்வளவு காலம் ஏன் செய்யாமல் ஏமாத்திக்கிட்டு இருந்தாங்க?

கொரோனாப் பரிசோதனை முடிவு வர நாலு நாள் ஆகுது. கிராமப்புற ஆஸ்பத்திரிக்குப் போனால் பன்னிக்குட்டியும் நாய்க்குட்டியும் படுத்துக் கிடக்கு. இந்த ஆண்டில் தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்கி மற்ற மாநிலம் மாதிரி, அந்தந்த மொழி படித்தால்தான் அரசு பதவின்னு ஆக்கிடணும். இதைச் செய்யாமல் ‘தமிழ் வாழ்க’ன்னு போர்டு மாட்டினதை ரசிச்சால் மட்டும் போதுமா! முதல்வர் ஸ்டாலின் இதற்கான நல்ல முன்னெடுப்பைச் செய்யணும். இப்போ இதையெல்லாம் செய்ய இவரை விட்டால் வேறு வழி இல்லை.”