Published:Updated:

"ஐஸ்வர்யா ராய் நடிக்க வந்தும் 'அழகி' இந்தி ரீமேக் பண்ண முடியாதுனு சொல்லிட்டேன்"- தங்கர்பச்சான்

தங்கர்பச்சான்

தமிழ் சினிமாவில் 'அழகி' திரைப்படம் வெளியாகி இருபது வருடங்கள் ஆகிறது. படம் குறித்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் தங்கர்பச்சான்.

"ஐஸ்வர்யா ராய் நடிக்க வந்தும் 'அழகி' இந்தி ரீமேக் பண்ண முடியாதுனு சொல்லிட்டேன்"- தங்கர்பச்சான்

தமிழ் சினிமாவில் 'அழகி' திரைப்படம் வெளியாகி இருபது வருடங்கள் ஆகிறது. படம் குறித்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் தங்கர்பச்சான்.

Published:Updated:
தங்கர்பச்சான்

' எங்க அப்பா இறந்தப்போ இடுகாட்டுல அடக்கம் பண்ணப் போயிருந்தேன். அப்போ, 'ஒரு முறை அப்பாவுடைய முகத்தை கடைசியா பார்த்துகோங்கனு' வெட்டியான் சொன்னான். ஏன்னா, இதுக்கு அப்புறம் அப்பாவுடைய முகத்தை நம்ம பார்க்க போறதில்ல. எங்க அப்பாவுக்கு தெருக்கூத்துகாரர் நிறைய முடியோடதான் எப்போவும் இருப்பார். அப்பா ஞாபகம் அவருடைய முடி நம்மகிட்ட இருக்கட்டும்னு கத்திரிக்கோல் வாங்கி ஒரு கட்டு முடியை வெட்டி அப்பா நினைவா வெச்சிக்கிட்டேன். நம்ம எவ்வளவு பெரிய ஆனாலும் கடைசியா இந்த சுடுகாட்டுக்குதான் வர போறோம். அப்பாவுடைய தலை, கால் இருக்குற இடத்துலதான் என்னோட தலையும் காலும் வர போதுனு தோணுச்சு. இதுதான் வாழ்க்கையோட எண்ட். அன்னைக்கு இரவு உட்கார்ந்து ஒரு குறிப்பு எழுதுனேன். அதுதான் 'ஒன்பது ரூபாய் நாவல்'. இதை கொஞ்சம் கொஞ்சமா எழுதிட்டு இருந்தப்போ 'ஏறுமுனை'னுங்குற படத்துல ஒளிப்பதிவாளரா வேலைப் பார்த்தேன். அப்போ ஒரு நாள் இரவு பள்ளிகூடம் நினைவுகளை அசைப் போட ஆரம்பிச்சேன். ஏன்னா, என் பள்ளிகூட நண்பனை ஒருத்தனைச் சந்திச்சேன். இந்த சந்திப்பை ஒரு படமா எடுக்கலாம். ரெண்டு பேர் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. விலகிவிட போனேன். பார்த்தா என் பள்ளி நண்பன். இப்படி யதார்த்தமா நடந்த சந்திப்பு இது. அன்றைய இரவு முழுக்க முழுக்க பள்ளிகூடம் ஞாபகம்தான். உடனே, என் அண்ணன் வீட்டுக்குப் போனேன். அங்கே என்னோட பள்ளிகூட குரூப் போட்டோ இருந்ததைப் பார்த்தேன். அதுல இருந்துதான் 'அழகி' ஆரம்பமானது. சண்முகம், தனம் வாழ்க்கையை எடுத்தேன். இப்படிதான் 'அழகி' உருவாகிச்சு. '' என்று இருபது வருஷம் 'அழகி' கதையை சொல்கிறார் நம்மிடம் படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான்.

அழகி' கதையை சொன்னப்போ கேட்டுட்டு படமா எடுக்க எந்த தயாரிப்பாளரும் முதல்ல முன்வரல. அப்போ, என்னோட நண்பன் உதயகுமார் படத்தை தயாரிக்க முன்வந்தார். 'தங்கர், நீங்க படம் எடுத்தா தயாரிப்பேன்னு' முன்னாடியே சொல்லியிருந்தார். வாழ்க்கையில் எல்லாத்தையும் வெறுத்து போன முகம் ஒண்ணு வேணும். இதை முகத்துல தாங்கியிருக்க கூடிய ஒருத்தரின் முகம் சண்முகம் கேரக்டருக்கு தேவைப்பட்டுச்சு. சண்முகத்தை தேடிக்கிட்டு இருந்தப்போ எந்த நடிகரும் சரியா பொருந்தல. ஏன்னா, எல்லாருடைய முகத்துலயும் சினிமா தாக்கம் இருந்துக்கிட்டே இருக்கு. அப்போ, பார்த்திபனுடைய போட்டோ ஒன்னு கண்ணுல பட்டுச்சு. அதுல இருந்துதான் சண்முகத்தைக் கண்டுபிடிச்சேன். அப்போ, பெருசா பார்த்திபன் படம் பார்த்ததில்ல. ஆனா, பார்த்திபன் மட்டுமே சண்முகம் கேரக்டருக்கு சரியா இருப்பார்னு அப்போ தோணுச்சு. சொன்னதை மட்டும் கேட்டுட்டு நடிச்சு கொடுத்தார். எவ்வளவு பெரிய வெற்றியை பார்த்தவர். கொஞ்சம்கூட பந்தா இல்லாம கதையை கேட்டுட்டு உடனே ஓகே சொன்னவர். அடுத்து தனம் கேரக்டருக்கு ஆர்டிஸ்ட் கிடைக்க கஷ்டப்பட்டேன். ஏன்னா, ஒரு நடிகையோட முகம் இருக்க கூடாதுனு தெளிவா இருந்தேன். கிராமத்துல இருந்து வந்த தனமாகவே இருக்கணும்னு நினைச்சேன். இந்தப் படத்துல நந்திததாஸ் நடிக்குறப்போ இவங்க நடிகையா இல்ல. ஏன்னா, தமிழ் சினிமாவுக்கு இவங்களை அறிமுகப்படுத்துனதே நான்தான்.

அழகி
அழகி

'' டெல்லியில 'காதல் கோட்டை' படத்துகாக போயிருந்தேன். ஒளிப்பதிவு பண்ணிட்டு இருந்தப்போ ஒரு காட்சில ப்ளாஸ்ட்டிக் எதிரா ஒரு ஊர்வலம் போச்சு. அப்போ ஒரு பெண் புடவை கட்டிட்டி முழக்கமிட்டு போயிக்கிட்டு இருந்தாங்க. இவங்கதான் நந்திததாஸ். பார்த்தவுடனே 'தனம்' கிடைச்சிட்டானு தோணுச்சு. அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி பக்கத்துல இருந்தார். 'அழகி' படத்தோட கதை இவருக்கு தெரியும். கையெழுத்து வடிவத்துல 'அழகி' ஸ்க்ரிப்ட் இருந்தப்போதே படிச்சிட்டு, 'தங்கர் இந்தப் படத்தை எடுங்க. ரொம்ப நல்லா வரும்'னு முதல்ல சொன்னவர் கிருஷ்ணமூர்த்தி. பெருசா ஊக்கம் கொடுத்தவர் கிருஷ்ணமூர்த்தி. நந்திததாஸ் பார்த்தவுடனே கிருஷ்ணமூர்த்திக்கும் சரினு பட்டுச்சு. கொஞ்சம் கொஞ்சம் நந்திதா பற்றி விசாரிக்க ஆரம்பிச்சிட்டோம். சித்தன்தாஸ் குப்தா பொண்ணுனு தெரிய வந்துச்சு. கிருஷ்ணமூர்த்தியும், சித்தன்தாஸூம் நெருங்கிய நண்பர்கள். புகைப்படத்துல பாத்த அப்புறம் நந்திதா வீட்டுக்கு போயிட்டு பேசுனோம். முதல் சந்திப்புலயே ரொம்ப தைரியமா பேசுனாங்க நந்திதாதாஸ். இவங்களுடைய போட்டோவும் பார்த்திருந்தேன். நந்திதாதாஸ் இருந்ததான் 'அழகி' படம்னு தெளிவா இருந்தேன். தயாரிப்பாளர் உதயகுமார்கிட்ட சொன்னப்போ, 'அப்பா ஒடிசா, அம்மா குஜாராத்தி இவங்க எப்படி தனம் கேரக்டருக்கு சரியா வருவாங்கனு' சந்தேகம்.''

நந்திதாகிட்ட கதை சொன்னேன். ஒரு ஷார்ட் ஸ்டோரி ரைட்டர் படம் எடுக்கார்னு நம்பிக்கையா வந்தாங்க. என்னோட யார் நடிக்க போறாங்கனு எந்தக் கேள்வியும் கேட்கல. 'கதையெல்லாம் ஓகே, பிரச்னை இல்ல. ஆனா, நீங்க சரியா எடுப்பீங்களானு தெரியம்னு. உங்ககூட பத்து நாள் இருக்கேன். அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்னு' சொல்லிட்டு வந்துட்டாங்க. ஆபிஸ்ல போட்டு வேலை பண்ணிட்டு இருந்தேன். பத்து பேர்கிட்ட சேர்ந்துதான் கதையை நந்திதாகிட்ட சொன்னோம். பத்தாவது நாள் கடைசில போன் பண்ணி ' we can proceed'னு சொன்னாங்க. அடுத்து தேவயாணிகிட்ட போனேன். அப்போ அவங்களுக்கு திருமணம் முடிந்து இருந்தது. பெருசா யாரும் தேவயாணிக்கு வாய்ப்பு கொடுக்கல. 'பாரதி' 'காதல் கோட்டை' 'மறுமலர்ச்சி'னு இவங்ககூட படம் வேலைப் பார்த்திருக்கேன். தேவயாணி நடிப்பு பற்றி எல்லாருக்கும் தெரியும். இவங்க வீட்டுக்கு கதை சொல்ல போனேன். ஒரு சின்ன வீட்டுல இருந்தாங்க. ஒரு பெரிய தொகையை தேவயாணிக்கிட்ட கொடுத்தேன். ஒண்ணும் புரியல தேவயாணிக்கு. சந்தோஷம் ஆகிட்டாங்க. எப்போவும் என்னோட வீட்டு பொண்ணாதான் இவங்களை பார்த்திருக்கேன். Sayaji Shinde தனம் கணவர் கேரக்டருக்கு நடிக்க வந்தார். சண்முகம் நண்பர்களாக வரகூடிய ஜார்ஜ், குமரவேலுக்கு இதுதான் முதல் படம். பாலா சண்முகமா என்னோட பையன் நடிச்சார். ஆறு வயசு பையன். நடிக்க வர மாட்டேன்னு சொல்லிட்டார். அப்புறம் ஓகே சொன்னார். முதல்ல பெரியவங்க போஷனை ஷூட் பண்ணி முடிச்சேன். இதுக்கு அப்புறம் தான் சிறுவர், பதின் பருவம் எடுத்தேன்.

நந்திதாதாஸ்
நந்திதாதாஸ்

இளையராஜா பெரிய கடல். யார் எது சொன்னாலும் கேட்டுப்பார். பெரிய சுதந்திரம் எனக்கு கொடுத்தார். 'அழகி' கதையை சிறுகதையை படிச்சு காட்டுனேன். பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரம் சார் எல்லார் கூடவும் டிஸ்கஷன் பண்ணுனேன். எப்போவும் ஒரு பாட்டோட சூழலை சொல்லமா எழுதி காட்டுவேன். அப்புறம் இளையராஜாகிட்ட படிச்சு காட்டுனேன். படத்துக்கு நீங்கதான் பாடல் எழுதணும்னு சொன்னேன். 'பாடலாசிரியர் பொழைப்புல எதுக்கு மண்ணு அள்ளி போட்டுட்டுனார்'. 'இந்த வாழ்க்கையை மண் சார்ந்த நீங்க எழுதணுனா நல்லாயிருக்கும்னு' சொன்னேன். மகிழ்ச்சியா ஏத்துக்கிட்டார். 'உன் குத்தமா என் குத்தமா' பாட்டுகான ட்யூன், வரிகள் கிடைக்க சிரமம் பட்டோம். காலையில இருந்து உட்கார்ந்திருக்கோம். அப்போ, ஒரு போன்கால் வந்துச்சு. பேசிட்டு வந்து, 'தங்கம் உட்காருங்க. மாட்டிக்கிட்டுச்சு'னார். நம்ம சொல்றதை கூர்மையா கவனிப்பார். தேவதையா வாழ வேண்டியவ எங்கே இருக்கா, நானும் பிரிஞ்சு எங்கேயோ போயிட்டேன். இது யாரோட குத்தம்னு கேட்குற மாதிரியான சூழல்னு புரிஞ்சிக்கிட்டு பாட்டுக்கான ட்யூன் வரிகளை கொடுத்தார். பாட்டு பாடி கொடுத்தார்.

இந்தப் பாட்டுகாகதான் நந்திததாஸ் முதல்ல நடிச்சாங்க. 'செட் சரியில்ல, எதுவும் பிடிக்கல . திரும்பி போறேன்னு' நிலைக்கு நந்திததாஸ் வந்துட்டாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு சமாதானம் படுத்தி படத்துல நடிக்க வெச்சு எடுத்தேன். பதினெட்டு நாளுல நந்திததாஸ் போஷன் எடுத்து முடிச்சிட்டோம். ஸ்க்ரிப்ட்ல எல்லாமே விவரிச்சு எடுத்திருப்பேன். படம் பார்த்துட்டு வெளியிட யாரும் முன்வரல. ரொம்ப வேதனையை அனுபவிச்சேன். ரொம்ப கஷ்டப்பட்டுதான் படம் வெளியாச்சு. ரிலீஸூக்கு பிறகு 13 நாளுலதான் படம் பிக்கப் ஆச்சு. இதுக்கு அப்புறம் நிறையப் பேர் பாராட்டுனாங்க. படத்துல நான் வெச்சிருந்த க்ளைமாக்ஸ் காட்சி யாருக்கும் பிடிக்கல. பாஸ்ட்டிவ் க்ளைமாக்ஸ் எதிர்பார்த்தாங்க. ராஜாகூட 'டேய், ரெண்டு இலட்சம் தரேன். நந்திததாஸ் வர வெச்சு களைமாக்ஸ் வேற எடு'னார். பிடிவாதமா முடியாதுனு சொல்லிட்டேன். தனம் எங்கே போனானு ஆடியன்ஸ் சாய்ஸ்க்கு விட்டுட்டேன். இதுதான் சரினு பட்டுச்சு.

அழகி
அழகி

படத்துக்கு 'அழகி'னு பேர் வெச்சிருந்தேன். ஆனா, வேற யாரோ மலையாள இயக்குநர்கிட்ட இந்தப் பேர் இருந்தது. ரொம்ப போராடி படத்தோட டைட்டிலும் வாங்குனேன். ஏன்னா, ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் ஒரு தேவதை மாதிரியான 'அழகி' இருந்துக்கிட்டுதான் இருப்பா. இந்தியில படத்தை ரீமேக் பண்ண சொல்லி கேட்டாங்க. நந்திததாஸ் கேரக்டர்ல ஐஸ்வர்யா நடிக்க வந்தாங்க. ஆனா, ஒத்துக்கல. ஏன்னா, நகல் எடுக்க முடியாத படைப்பு 'அழகி'. பெரிய தொகையை சம்பளமா தரேன்னு சொல்லியும் வேண்டாம்னு சொல்லிட்டேன். மொழி தெரியாத இடத்துல பணம் தராங்கனு எடுக்க முடியாதுல. ஐஸ்வர்யா ராய் நடிச்சிருந்தாலும் படம் நின்னு இருக்காது. '' என்று அனுபவத்தை பகிர்ந்துக்கிட்டார் இயக்குநர் தங்கர்பச்சான்.