Published:Updated:

``விசு சாரோட இறுதி ஊர்வலம் திருவிழா மாதிரி இருந்திருக்கணும்; ஆனா..." - டி.பி.கஜேந்திரன்

Visu with TP Gajendran
Visu with TP Gajendran

இயக்குநர் டி.பி.கஜேந்திரன், விசு அவர்கள் குறித்த பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

எழுத்தாளர், நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்ட விசு-வின் மறைவு, தமிழ் சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விசுவிடம் பல படங்களில் உதவி இயக்குநராகவும், தனது முதல் படத்தில் அவரை ஹீரோவாக நடிக்க வைத்தவருமான இயக்குநர் டி.பி.கஜேந்திரன், விசு குறித்த பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``உங்களுக்கும் விசு-வுக்கும் பழக்கம் ஏற்பட்டது எப்போது?"

இயக்குநர் விசு
இயக்குநர் விசு
#VikatanOriginals

`` `தில்லு முல்லு’ படத்துக்காக பாலசந்தர் சார்கிட்ட நான் உதவி இயக்குநரா வேலைக்குச் சேர்ந்தேன். அந்தப் படத்தில் விசு சாரும் வேலை பார்த்திட்டிருந்தார். நான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாள்ல இருந்தே விசு சாரோட நல்லா பழக ஆரம்பிச்சேன். `தில்லு முல்லு’ படம் முடிஞ்சதுக்கு அப்பறமும் நான் பாலசந்தர் சார்கிட்ட வொர்க் பண்ணிட்டிருந்தேன். விசு சார், அவரோட முதல் படத்தை இயக்கும்போது, என்னை உதவி இயக்குநரா வொர்க் பண்ணச் சொல்லி கேட்டார். நானும் அவரோட முதல் படத்திலிருந்து 10 படங்களுக்கு மேல் உதவி இயக்குநரா வேலைபார்த்தேன். எங்களை எல்லாம் குடும்பத்க்தாரைப் போல நடத்துவார். அவரோட இந்த குணம் பல பேருக்கு இருக்காது. அடுத்து, நான் இயக்குநரானதும் என் உதவி இயக்குநர்களையும் அப்படித்தான் பார்த்துக்கிட்டேன்.’’

``நீங்கள் இயக்கிய முதல் படத்தில் அவரை எப்படி நடிக்க வைத்தீர்கள்?"

``நான் விசு சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தப்ப தனியா ஒரு படம் பண்ணணும்னு எனக்குத் தோணவே இல்லை. ஏன்னா, விசு சாரோட படங்கள்ல வேலைபார்க்கும்போது அவர் கொடுக்கிற சுதந்திரம், மரியாதைனு எல்லாத்தையும் பார்க்கும்போது, இங்கேயே இருந்திடலாம்னு தோணும். எனக்கும் அப்படி தோணுனதனால அவரோடையே ரொம்ப வருஷம் இருந்துட்டேன். ஒரு நாள் விசு சார் நடத்தின பிரஸ் மீட்டில் ஒரு பத்திரிகையாளர், `பாலசந்தர், பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள் இப்ப இயக்குநர்களாகிட்டாங்க. ஆனா, உங்க உதவி இயக்குநர்கள் யாருமே இதுவரைக்கும் இயக்குநராகலையே... அது ஏன்’னு கேட்டார். அப்ப விசு சார், `என்கிட்ட இருக்கிற உதவி இயக்குநர்கள் அடுத்தடுத்து படம் பண்ணும் முயற்சியில இருக்கிறாங்க. அதில் முதல் ஆளா கஜேந்திரன் இருக்கிறார். சீக்கிரமே அவர் இயக்குநராவார்’னு சொல்லிட்டார். எனக்கு செம ஷாக். ஏன்னா, எனக்கு இயக்குநராகணும்னு ஐடியாவே இல்லை. அடுத்த நாளே விசு சார் என்னை அழைச்சு, `நீ இனிமேல் வேலைக்கு வர வேணாம். நல்ல கதை ஒண்ணு எழுதிட்டு என்னை வந்துபார்’னு சொல்லிட்டார். அதே சமயத்தில், தயாரிப்பாளர் ராம.நாராயணன் சாரும், `விசுவோட கால்ஷீட் வாங்கிட்டு வந்தா, நானே உன் படத்தை தயாரிக்கிறேன்’னு சொன்னார்."

visu with TP Gajendran
visu with TP Gajendran

``அதுக்கப்புறம் விசு சாருக்கான கதையை எழுதுற வேலைகள்ல இறங்க ஆரம்பிச்சேன். அப்போ, ஒரு நாள் ஒரு நாடகம் பார்க்கப் போனேன். அந்த நாடகத்தின் கதை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அப்பறம் அவங்ககிட்ட பேசி, அந்தக் கதையை மட்டும் வாங்கிட்டு, அதுக்கான திரைக்கதையை நானே எழுத ஆரம்பிச்சேன். எழுதிட்டு, விசு சார்கிட்ட கதையைச் சொன்னேன். அவருக்கு கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. `இந்தக் கதையில நீங்கதான் நடிக்கணும் இது உங்களுக்குத்தான் செட்டாகும்’னு சொன்னேன். `இது பெரிய கேரக்டரா இருக்குடா. அதிக நாள் நடிக்கணுமே’ன்னு முதல்ல யோசிச்சார். அப்புறம் `சரி, நானே நடிக்கிறேன்’னு ஓகே சொல்லிட்டார். இப்படித்தான் `வீடு மனைவி மக்கள்’ படத்தில் அவரை நடிக்க வெச்சேன்.’’

``ஒரு சிஷ்யனாக குருவை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?"

``எனக்கு அது வித்தியாசமான அனுபவமாவே தெரியலை. ஏன்னா, விசு சார் இயக்கிய படங்களிலும் அவர் நடிச்சதனால, பெரும்பாலும் அவர் கேமராவுக்கு முன்னாடிதான் இருப்பார். நான் கேமராவுக்குப் பின்னாடி இருந்து வேலைபார்த்தேன். அதேதான் நான் இயக்கிய முதல் படத்திலும் நடந்துச்சு. எப்பவும் போல விசு சார் படத்துல வேலைபார்க்கிற மாதிரியே என் முதல் படத்தை முடிச்சிட்டேன்.’’

``உங்களுடைய அடுத்தடுத்த படங்களைப் பார்த்துட்டு என்ன சொன்னார்?"

``என் முதல் படத்துக்கு அப்பறமும் என் இயக்கியத்தில் சில படங்களில் விசு சார் நடிச்சார். என் படங்களின் வெற்றியின் போதெல்லாம் முதல் ஆளாய் என்னைப் பாராட்டுவார். நானும் அவரும் தொழில் விஷயங்களை பேசிக்கிட்டதைவிட, குடும்ப விஷயங்களைத்தான் அதிகம் பேசிப்போம். நான் அவர்கிட்ட உதவி இயக்குநரா இருந்தப்ப, எனக்கு சம்பளம் கொடுக்கும் போதெல்லாம், `எல்லா காசையும் செலவு பண்ணிடாதே, கொஞ்ச காசை சேமிப்புல போடு’னு சொல்லிட்டே இருப்பார். எனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம், `சினிமாவுல எவ்வளவு பிஸியா இருந்தாலும் குடும்பத்தையும் கவனி. மனைவி, மகள் மேல பாசமா இரு’னு சொல்லிட்டே இருப்பார். என்னை இயக்குநராக மட்டுமில்லாம நல்ல குடும்பஸ்தனாகவும் ஆக்கினார். இப்படி ஒரு குரு சில பேருக்குதான் கிடைப்பாங்க. அந்த வகையில நான் ரொம்ப பாக்கியவான்.’’

`என் நாயகிகள் எல்லோருக்கும் ஏன் நான் `உமா'ன்னே பேர் வெச்சேன் தெரியுமா?' - விசு நினைவலைகள்! #VikatanOriginals

``விசு அவர்கள் இறப்பதற்கு முன் அவரைப் பார்த்து பேசுனீங்களா?"

``விசு சார் இறக்குறதுக்கு 15 நாள் முன்னாடிதான் அவரைச் சந்திச்சிட்டு வந்தேன். எனக்கு ரொம்ப நாளா கை வலி இருந்துச்சு. ஒரு நாள் அவர்கிட்ட அதைப் பற்றி சொல்லியிருந்தேன். அவரும் ஒரு டாக்டரை பரிந்துரை செஞ்சார். அதை ஞாபகம் வெச்சிருந்து என்னைக் கடைசியா சந்திச்சப்ப, `கை வலி இப்போ எப்படி இருக்கு. அந்த டாக்டர் ஒழுங்கா மருத்துவம் பண்ணினாரா’னு கேட்டார். `வலி இப்போ பரவாயில்லை’னு சொல்லிட்டு, அவரோட உடல் நலத்தையும் விசாரிச்சிட்டு வந்தேன். அவரை சந்திச்சிட்டு வந்த சில நாள்களயே அவர் இறந்துட்டார்ங்கிற செய்தியைக் கேட்டு ரொம்பவே உடைஞ்சுபோயிட்டேன். அந்தச் செய்தியைக் கேட்டதும் அவர் வீட்டுக்குப் போயிட்டேன். அவர் இறந்த அன்னைக்கு சுய ஊரடங்கு அறிவிச்சிருந்ததனால, பல பேர் வந்து பார்க்க முடியலை. அடுத்த நாளும் சினிமாவில் இருந்து சில பேர் மட்டும்தான் வந்தாங்க. அதுக்கு அவங்களை ஒண்ணும் சொல்ல முடியாது. தமிழ்நாடு இப்போ இருக்கிற சூழ்நிலை அப்படி. ஆனா, அவரோட இறுதி ஊர்வலம் திருவிழா மாதிரி இருந்திருக்கணும். அவரால உதவி பெற்ற பலரும் வந்து, அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கிட்டு அவரை வழியனுப்பி வெச்சிருக்கணும். அது நடக்காம போயிடுச்சேன்னு நினைக்கும் போதுதான் வருத்தமா இருக்கு.’’

அடுத்த கட்டுரைக்கு