சினிமா
தொடர்கள்
Published:Updated:

உங்களில் ஒருவன்... குடும்பத்தின் தலைவன்! - ‘வாரிசு’ விஜய் Exclusive

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

மிகச்சிறந்த மனிதர். அவர் அமைதிக்குப் பின், பெரிய ஆழமான சிந்தனை ஒண்ணு இருக்கு. பாசிட்டிவ் வைப்ஸ் எப்போவும் அவரைச் சுத்தி இருந்துக்கிட்டே இருக்கு

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது சினிமா உலகில் எப்போதும் பெரும் பேச்சாக இருக்கும். ‘விஜய் 66’ இயக்கப்போவது இவரா, அவரா என எல்லோரும் யூகித்துக்கொண்டிருக்க, அப்போதுதான் இயக்குநர் வம்சியின் என்ட்ரி. டோலிவுட்டில் பிளாக்பஸ்டர்கள் கொடுத்து மிரட்டியவர், ‘தோழா' மூலமாக கோலிவுட்டிற்கும் நன்கு பரிச்சயமானவர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா என அனைத்து ஏரியாவிலும் ‘வாரிசு' படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் இயக்குநர் வம்சி பைடிபல்லியை அவரது அலுவலகத்தின் சந்தித்தேன்.

உங்களில் ஒருவன்... குடும்பத்தின் தலைவன்! - ‘வாரிசு’ விஜய் Exclusive

`` ‘விஜய் 66' படத்தை இயக்க அதிக வாய்ப்பிருக்கும் இயக்குநர்கள் என்ற லிஸ்ட்டில் உங்கள் பெயரைக் கேட்டதும் எல்லோருக்கும் ஆச்சர்யம். எப்படி ஆரம்பமானது இந்த புராஜெக்ட்?’’

‘‘நான் இயக்கிய ஐந்து படங்கள்ல நான்கு படங்களுக்கு தில் ராஜு சார்தான் தயாரிப்பாளர். அவருக்கும் எனக்கும் அப்படியொரு நட்பு. என் கதைகளை அவர்கிட்ட பகிர்ந்துக்கிறதுண்டு. அப்போ ஒரு நாள் எனக்கு போன் பண்ணி, ‘உங்ககிட்ட இருக்கிற கதையை விஜய் சாருக்குச் சொல்லிப் பார்க்கலாமா'னு கேட்டார். எனக்கு ஒண்ணுமே புரியலை. ‘விஜய் சாருக்கு நாம கதை சொல்லணுமா'ன்னு ஷாக்கா இருந்தது. ‘சரி, இந்தக் கதைக்கு அவர் ஓகே சொல்றாரோ இல்லையோ, அவரை ஒரு முறை நேரில் சந்திச்சிட்டு வந்திடலாம்'னு தோணுச்சு.

ஒரு இயக்குநருக்கும் ஹீரோவுக்குமான முதல் சந்திப்பு காதலர்களின் முதல் சந்திப்பு மாதிரி, அவ்ளோ முக்கியம். அதே சமயம், ரொம்பப் பதற்றமாகவும் இருக்கும். அதுவும் விஜய் சார் மாதிரி சூப்பர்ஸ்டார்கிட்ட போகும்போது அந்த டென்ஷன் இன்னும் எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க. ஹைதராபாத்ல இருந்து விஜய் சாரைச் சந்திக்க நானும் என் இணைக் கதாசிரியர் ஹரியும்தான் சென்னைக்கு வந்தோம். ஏர்போர்ட்ல இறங்கினதிலிருந்தே பதற்றம் அதிகமாகத் தொடங்கிடுச்சு. விஜய் சார் மேனேஜர் ஜெகதீஷ் என்னை கூல் பண்ணிக்கிட்டே வந்தார். விஜய் சார் வீட்டுக்கு வந்ததும், ‘இங்கே வெயிட் பண்ணுங்க. சார் வந்திடுவார்'னு சொன்னாங்க. மெதுவா கதவு திறந்தது. வீட்ல இருக்கவங்க யாரோன்னு நினைச்சேன். கதவு நல்லா திறக்கும்போதுதான் அது விஜய் சார்னு தெரிஞ்சது. அவரே எங்களுக்குத் தண்ணீர் கொடுத்து நலம் விசாரிச்சார்.

அப்புறம் நான் கதை சொல்ல ஆரம்பிச்சேன். அவர் அவ்ளோ அமைதியா என்னை கவனிச்சுக்கிட்டே இருந்தார். ஆனா, எந்த ரியாக்‌ஷனும் இல்லை. அவருக்குப் பிடிச்சிருக்கா, இல்லையான்னு மனசுக்குள்ள யோசனை ஓட ஆரம்பிச்சது. அதுல பயங்கரமா வியர்க்க ஆரம்பிச்சிடுச்சு. அதை கவனிச்சு, ஏசியின் கூலிங்கை அதிகப்படுத்தினார் விஜய் சார். க்ளைமாக்ஸ் சொல்லி முடிச்சேன். 30 நொடிகள் எந்த பதிலும் இல்லை. அவ்வளவு அமைதி. ‘சரி, பிடிக்கலைபோல. அவ்வளவுதான் கிளம்பலாம்'னு நினைச்சேன். ‘நைஸ் சார். நாம பண்ணலாம்'னு சொன்னார். எனக்கு அப்போ இருந்த சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியாது. ஆனா, இது அவருடைய அடுத்த படமாகவே இருக்கும்னு நான் நினைக்கலை. ‘3 மணிக்கு சென்னைக்கு வந்தேன். 9 மணிக்கு ஹைதராபாத் கிளம்புறேன். இந்தச் சின்ன இடைவெளியில யாரும் இவ்வளவு சாதிச்சிருக்கமாட்டாங்க'ன்னு நினைச்சுக்கிட்டேன்.’’

உங்களில் ஒருவன்... குடும்பத்தின் தலைவன்! - ‘வாரிசு’ விஜய் Exclusive

``இயக்குநராகி 15 வருடங்களில் இப்போதான் 6-வது படத்தை இயக்குறீங்க. அதிக காலம் எடுத்துக்கிறோமோன்னு நினைச்சிருக்கீங்களா?’’

‘‘ஆமா. வருஷத்துக்கு ஒரு படம் பண்ணுங்கன்னு நிறைய பேர் சொல்வாங்க. நான் அடுத்தடுத்து படங்கள் பண்ணணும்னு நினைக்கலை. அது என்னால முடியாது. காரணம், எனக்கு ரைட்டிங்கிற்கு அதிக நேரம் தேவைப்படுது. நான் கதாசிரியர் கிடையாது. உதவி இயக்குநரா சினிமாவுக்குள் வந்து அப்புறம் எழுத்துல உட்கார்ந்துஅப்படியே என்னை வளர்த்துக்கிட்டேன். ‘வாரிசு' படத்துக்கான ஐடியா, கதை என்னுடையதுதான். ஆனா, அதை மெருகேத்த எனக்கு ஒரு டீம் தேவைப்படுது. ஹரி, சாலமன், நான்... நாங்க மூணு பேரும் ‘தோழா' படத்திலிருந்து ஒண்ணா வேலை செஞ்சுக்கிட்டிருக்கோம். நிறைய பேசிப்பேசி அந்த ஐடியாவை டெவலப் பண்ணினோம். அந்தக் கதையில இருக்கிற ஒவ்வொரு விஷயமும் எனக்கு விஷுவலா தெரியணும். எமோஷனை ரொம்ப சரியா கையாளணும். ஒரு விஷயத்தை மிகைப்படுத்திச் சொல்றது ஈஸி. ஆனா, அதை எளிமைப்படுத்தி மக்களுடைய இதயத்துக்கு எடுத்துட்டுப் போறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அப்படியான விஷயங்கள் முழுமையா அமைய அதிகம் டைமாகிடுது. இந்த ப்ராசஸை என்ஜாய் பண்றேன்.’’

`` ‘வாரிசு' தலைப்பு... இது எப்படியான படமா இருக்கும்?’’

‘‘ஒரு டைட்டில் அந்தப் படத்துடைய கருவைச் சொல்லணும். கதையை நியாயப்படுத்தணும். படம் பார்க்கும்போது இதுதான் சரியான டைட்டில்னு உணர்வீங்க. கதையை முடிச்சவுடனே எனக்கு இந்த டைட்டில் தோணிடுச்சு. இது பக்கா ஃபேமிலி என்டர்டெயினர். ஆனா, அதைத் தாண்டிய விஷயமும் படத்துல இருக்கும். ஒரு ஸ்டாருக்கு எழுதுறது அவ்வளவு சுலபமில்லை. அதை ஒரு ஜானர் படமா நம்ம அமைக்கமுடியாது. அந்த ஸ்டாரைத் திரையில் பார்க்க வயது வித்தியாசம் இல்லாமல் அத்தனை பேர் இருக்காங்க. எல்லா தரப்பட்ட ஆடியன்ஸும் வர்றாங்க. அப்போ எல்லா ஜானரும் உள்ள இருக்கணுமே தவிர, ஒரு குறிப்பிட்ட ஜானரா இருக்கக்கூடாதுன்னு நினைச்சேன். இது ஒரு குடும்பக் கதை அப்படிங்கிறது அடிப்படைதான். ஆனா, விஜய் சார் இமேஜுக்கு என்னென்ன வேணுமோ, அவர் ரசிகர்களுக்கு என்னென்ன வேணுமோ, எல்லாமே இருக்கும். அதை நாங்க பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கோம். சின்னக் குழந்தைகள் முதல் தாத்தா, பாட்டி வரை எல்லோருக்குமான படம்தான் ‘வாரிசு.' இந்தப் படம் பார்க்கும்போது நம்ம குடும்பத்தைத் திரையில பார்க்கிற மாதிரி இருக்கும். எல்லோராலும் தங்களையும் தங்களைச் சார்ந்தவங்களையும் தொடர்புபடுத்திக்க முடியும். தினசரி வாழ்க்கையில சில எமோஷன்களை வெளிக்காட்டியிருக்கவே மாட்டோம். அதற்கு சில காரணங்களும் இருக்கலாம். மத்தவங்க என்ன சொல்வாங்கன்னு யோசிச்சிருப்போம். இப்படி மனித உணர்வுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. அப்படியான பல உணர்வுகளைக் காட்சிப்படுத்தியிருக்கேன். படம் முடிஞ்சு வெளியே வரும்போது, நமக்கு எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் ‘விடு பார்த்துக்கலாம்'னு தோண வைக்கும்.’’

உங்களில் ஒருவன்... குடும்பத்தின் தலைவன்! - ‘வாரிசு’ விஜய் Exclusive

``சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு, யோகிபாபுன்னு படத்தில் அத்தனை பேர் இருக்காங்க. இவங்களையெல்லாம் எப்படி படத்துக்குள்ள கூட்டிட்டு வந்தீங்க?’’

‘‘ஆமா. இந்தக் கதையில நிறைய கேரக்டர்கள் இருக்கு. அந்த கேரக்டர்களுக்குத் தனி எனர்ஜியும் தேவைப்பட்டது. அதனால, ஒவ்வொருத்தரா பார்த்துப் பார்த்துக் கூட்டிட்டு வந்தோம். சரத் சார், பிரகாஷ்ராஜ் சார், பிரபு சார், ஷாம் சார், யோகிபாபு, ஜெயசுதா மேம், குஷ்பு மேம், சங்கீதான்னு பெரிய லிஸ்டே இருக்கு. ஆனா, ஒவ்வொருத்தருக்கும் அவ்வளவு முக்கியத்துவம் இருக்கு. கேரக்டர்கள்தான் நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும். அப்போதான் எந்நாளுக்கும் அந்தக் கேரக்டர்கள் நினைவில் இருக்கும். தியேட்டர்ல இருந்து வெளியே வந்த பிறகும், சில கேரக்டர்கள் பத்தி யோசிப்பீங்க. ஒவ்வொருத்தரும் ரொம்பப் பிரமாதமா பண்ணியிருக்காங்க. படத்துல நிறைய பேர் இருக்கிறது மீம் கன்டன்டாகூட மாறிடுச்சு. அதை விஜய் சாருக்குக் காட்டி சிரிச்சிட்டு இருந்தோம்.’’

``ராஷ்மிகா மந்தனா?’’

‘‘இதுவரை விஜய் சார் கூட நடிக்காத ஹீரோயினா இருந்தா ஃப்ரஷ்ஷா இருக்குமேன்னு நினைச்சேன். ராஷ்மிகா ஞாபகம் வந்தார். அவர் விஜய் சாரின் தீவிர ரசிகை. மூன்று வருடங்களுக்கு முன், ராஷ்மிகாவை முதன்முறையா சந்திச்சேன். அப்போ அவங்ககிட்ட ‘உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யார்'னு கேட்டேன். ஒரு நொடிகூட தாமதிக்காமல் ‘தளபதி விஜய். அவர்தான் என் க்ரஷ்'னு சொன்னாங்க. விஜய் சாருக்கும் ராஷ்மிகாவுக்கும் சூப்பர் டான்ஸ் ஒண்ணு இருக்கு. அந்தப் பாடல் ஷூட் முடிச்சவுடன் என்கிட்ட வந்து, ‘தளபதிகூட டான்ஸ் ஆடிட்டேன். என் கனவு நிறைவேறிடுச்சு'ன்னு சொல்லி அவ்வளவு சந்தோஷப்பட்டாங்க. சூப்பரா பர்ஃபாம் பண்ணியிருக்காங்க.’’

``ரொம்ப வருடங்கள் கழித்து, விஜய்யும் பிரகாஷ் ராஜும் சேர்ந்து நடிக்கிறாங்க. அவங்க ரெண்டு பேருடைய போர்ஷன் ஷூட் பண்ணும்போது எப்படி இருந்தது?’’

‘‘ப்பா... செம காம்பினேஷன் அவங்க ரெண்டு பேரும். பத்து நாளுக்கு முன்னாடிதான் அவங்க சீனை ஷூட் பண்ணினேன். ரெண்டு பேரும் எதிரெதிர்ல நின்னு மிரட்டிட்டாங்க. அன்னிக்கு நைட் எனக்கு பிரகாஷ்ராஜ் சார் போன் பண்ணி, ‘என்னங்க அவரு... அப்படி நடிக்கிறாரு'ன்னு விஜய் சாரைப் பாராட்டினார். விஜய் சார் ரிகர்சல்ல அமைதியா கவனிச்சுக்கிட்டே இருப்பார். ‘ஆக்‌ஷன்'னு சொன்னா எங்கிருந்துதான் அந்த எனர்ஜி, மேனரிசம் எல்லாம் வருமோ! பட்டாசு மாதிரி படபடன்னு வெடிக்கிறார். அதையெல்லாம் யோசிச்சுக்கூட பார்க்க முடியாது. மறுநாள் விஜய் சார் போன் பண்ணி பிரகாஷ்ராஜ் சார் பத்திப் புகழ்ந்து பேசினார். அவங்க ரெண்டு பேருடைய ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி வேற லெவல்ல இருக்கும். ரொம்ப நாள் கழித்து, இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் படத்துல நடிக்கிறது ரொம்ப சந்தோஷம். அவங்க காம்பினேஷன் சீனைப் பார்க்கும்போது நீங்க என்ஜாய் பண்ணுவீங்க.’’

``விஜய் கேரக்டர் பத்தி ஷேர் பண்ணலாமா?’’

‘‘The Boss Returns - இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும். ஒவ்வொருத்தரும் தங்களை அவருடைய கேரக்டரோடு தொடர்புபடுத்திப் பார்த்துக்குவாங்க, அதுமட்டும் உறுதி.’’

உங்களில் ஒருவன்... குடும்பத்தின் தலைவன்! - ‘வாரிசு’ விஜய் Exclusive

``ராம் பிரசாத், சோட்டா கே.நாயுடு, பி.எஸ்.வினோத், கே.யு.மோகனன்னு சீனியர் ஒளிப்பதிவாளர்கள்கூட வொர்க் பண்ணியிருக்கீங்க. இந்தப் படத்துல ஒரு யங்க்ஸ்டர் கார்த்திக் பழனிதான் ஒளிப்பதிவாளர். எப்படி நடந்தது இந்த மாற்றம்?

‘‘ ஒளிப்பதிவாளர்கள்தான் ஒரு இயக்குநருடைய மிகப்பெரிய சப்போர்ட். காரணம், எனக்குள்ள இருக்கும் விஷுவலைப் புரிஞ்சுக்கிட்டு அதை உள்வாங்கி நிஜத்தில் கொண்டு வர்றது அவங்கதான். அதுக்கு நல்ல கெமிஸ்ட்ரி வேணும். நீங்க சொன்ன மாதிரி, நான் வேலை செஞ்ச எல்லா ஒளிப்பதிவாளர்களும் லெஜண்ட்ஸ். அவங்ககூட இருந்த அந்தப் புரிதல் கார்த்திக் கூடவும் இருந்தது. அடுத்தடுத்த வருடங்கள்ல கார்த்திக் இந்திய சினிமாவுல முக்கியமான ஒளிப்பதிவாளரா இருப்பார். இந்தப் படத்துக்காக அவ்வளவு உழைச்சிருக்கார். பிரபாஸுடைய ‘ஆதிபுருஷ்' படத்துக்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர்.’’

``விஜய் படத்துக்கு இசையமைக்கிறது தமனுடைய நீண்ட நாள் ஆசை. இப்போ நிறைவேறியிருக்கு. என்ன மாதிரி மியூசிக்கல் ட்ரீட் இருக்கும்?’’

‘‘தமன் ரசிச்சு ரசிச்சுப் பண்ணியிருக்கார். விஜய் சார் ரசிகர்கள் கொண்டாடுவாங்க. விஜய் சாருக்கு ஒரு முழுமையான ஆல்பமா இருக்கும். இப்போ மியூசிக்தான் முதல்ல வந்து அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துது. இசையை வெச்சுதான் மக்கள் படம் எப்படி இருக்கும்னு கணிக்கிறாங்க. ‘அலா வைகுந்தபுரமுலோ', ‘அகண்டா', ‘காட்ஃபாதர்'னு தமன் கைபட்டாலே அது சூப்பர் ஹிட்தான். படத்துடைய கதையை நல்லா உள்வாங்கி அதுக்குத் தன்னை அர்ப்பணிக்கிறார். நான் தமன்கூட ‘பிருந்தாவனம்'னு ஒரு படம் வொர்க் பண்ணியிருக்கேன். 2010-ல வெளியானது. அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் தமன்கிட்ட அவ்வளவு பக்குவம் தெரியுது. தமன் - விவேக் காம்பினேஷன்ல பாடல்கள் பிரமாதமா வந்திருக்கு. அவருடைய பாடல் வரிகள் பிரமாதமா இருக்கு. ஏற்கெனவே அவர் விஜய் சாருக்கு ‘மெர்சல்', ‘பிகில்' படங்களில் எழுதிய பாடல்களைக் கேட்டிருக்கேன். திரைக்கதையிலும் வசனத்திலும் விவேக்குடைய இன்புட்ஸ் நிறைய இருக்கு. சூப்பரான டீம் அமைஞ்சது இந்தப் படத்துக்குப் பெரிய ப்ளஸ்.’’

உங்களில் ஒருவன்... குடும்பத்தின் தலைவன்! - ‘வாரிசு’ விஜய் Exclusive

`` ‘தோழா', ‘மஹரிஷி', ‘வாரிசு'ன்னு தொடர்ந்து மூன்று படங்கள் எடிட்டர் பிரவீன் கே.எல்கூட வொர்க் பண்றீங்க. உங்களுக்கும் அவருக்குமான நட்பு?’’

‘‘ ‘மெட்ராஸ்' படத்துல பிரவீனுடைய வொர்க் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படிதான் நான் அவர்கிட்ட முதல்முறையா பேசினேன். மீட் பண்ணினோம். ‘தோழா' இவர் எடிட் பண்ணினா நல்லாருக்கும்னு தோணுச்சு. அதுல எங்களுக்குள்ள நல்லா செட்டாகிடுச்சு. அப்புறம், ‘மஹரிஷி', இப்போ ‘வாரிசு.' நான் என்னதான் எழுதியிருந்தாலும் ஷூட் பண்ணியிருந்தாலும் எடிட்ல என்ன முடிவாகுதோ அதுதான் படம். பிரவீன் மாதிரியான அருமையான டெக்னீஷியன்கூட வொர்க் பண்ணும்போது அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும். அவருடைய கட்ஸே கதை சொல்லும். என்னுடைய இன்னொரு முக்கியமான தூண் பிரவீன்.’’

``விஜய்யை இயக்கிய அனுபவம் எப்படியிருந்தது? நீங்க அவர்கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட விஷயம் என்ன?

‘‘மிகச்சிறந்த மனிதர். அவர் அமைதிக்குப் பின், பெரிய ஆழமான சிந்தனை ஒண்ணு இருக்கு. பாசிட்டிவ் வைப்ஸ் எப்போவும் அவரைச் சுத்தி இருந்துக்கிட்டே இருக்கு. சீன் பேப்பரை ஒரு நாளுக்கு முன்னாடியே வாங்கி அதுக்குத் தயாராகிட்டுதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார். அவ்வளவு ரசிச்சு வேலை செய்றார். சீன் பேப்பரை பாக்கெட்ல வெச்சுக்கிட்டு நல்ல ரிகர்சல் பண்ணிட்டுதான் ஷாட்டுக்கு வர்றார். அவர் இந்த உயரத்துல இருக்கார்னா, அதுக்குப் பின்னாடி அவ்வளவு விஷயங்கள் இருக்கு. பேஷன், நேர்மை, ஒழுக்கம் இந்த மூணும் ஒருத்தர்கிட்ட இருந்தா அவங்களை யாராலும் அடிச்சுக்க முடியாது. விஜய் சார் அப்படியானவர். அவர்கூட பயணிச்சது என் வாழ்நாளில் கோல்டன் மொமன்ட்ஸ்.’’