``அரவிந்த் சாமி மாதிரி தேடினேன்... அஜித் கிடைச்சார்!'' - `ஆசை' அனுபவம் சொல்லும் வசந்த் #HBDAjith

அஜித் படத்துக்குள்ள வந்ததும் டீம்ல இருந்த எல்லோரும் ‘அழகான ஹீரோ கிடைச்சுட்டார்’ன்னு சொல்லிட்டே இருந்தாங்க. நான் இதை படம் பார்க்கற ரசிகர்கள்கிட்டயும் சரியா கொண்டு போய் சேர்க்கணும்னு நினைச்சேன்.
90-களில் சினிமா ரசிகர்களுக்கு `ஆசை' நாயகன் அஜித்தான். `அமராவதி' மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவருக்கு அடையாளம் கொடுத்த படம் 'ஆசை'. மணிரத்னம் தயாரிப்பு, வசந்த் இயக்கம் எனப் பெரும் எதிர்பார்ப்போடு வந்த படம் 250 நாள்களுக்கு மேல் ஓடி செம ஹிட் அடித்தது. இயக்குநர் வசந்த்திடம் `ஆசை' அனுபவம் கேட்டேன்.

`` `ஆசை’ படத்துடைய கதையை எழுதி முடிச்சுட்டு அதுக்கான சரியான ஹீரோவை தேடிட்டு இருந்தேன். இன்னும் சரியா சொல்லணும்னா இன்னொரு அரவிந்த்சாமியைத் தேடிட்டிருந்தேன். ஏன்னா, அரவிந்த்சாமிகிட்ட டேட்ஸ் இல்லாததால `ஆசை'ல அவரால நடிக்கமுடியல. இந்தக் கதைக்கு ஓர் அழகன்தான் வேணும். பொண்ணுங்களுக்கு அவனைப் பார்த்தா உடனே பிடிக்கணும். ஒரு க்ரேஸ் இருக்கணும்னு முயற்சியைக் கைவிடாம தேடிட்டு இருந்தேன்.

அரவிந்த்சாமி இல்லாததால் புதுமுகம்தான் தேடினேன். சேட்டிலைட் சேனல்கள் இல்லாத காலம் அது. தூர்தர்ஷன் மட்டும்தான். அதுலயும் `ஒலியும் ஒளியும்’க்கு முன்னாடி மட்டும்தான் விளம்பரங்கள் போடுவாங்க. அதுல சில விளம்பரங்கள்லாம் ரொம்ப ஃபேமஸ். அதுல ஒரு வேட்டி விளம்பரத்துல அஜித் நடிச்சிருந்தார். என்னுடைய டீம்ல இருந்த புரொடக்ஷன் மேனேஜர் ஒருத்தர், என்கிட்ட அந்த விளம்பரத்தைக் காட்டி, `நீங்க எதிர்பார்க்குற மாதிரியான ஹீரோ’ன்னு சொன்னார்.
வேட்டி கட்டிட்டு ஒல்லியா ஒரு பையன் மாடிப்படியிலேருந்து இறங்கி வர மாதிரியான காட்சி அந்த விளம்பரத்துல இருந்தது. எனக்குப் பார்த்ததும் அந்த அழகான பையனை ரொம்பப் பிடிச்சு போச்சு. அவரை எனக்கு அறிமுகப்படுத்தின புரொடக்ஷன் மேனேஜர் மூலமாகவே அவரை பிடிக்கலாம்னு முயற்சி பண்ணினபோதுதான், அவர் ஏற்கெனவே படங்கள் நடிச்சிருக்கார்ங்கிற தகவல் எங்களுக்குத் தெரியவந்தது. உடனே அவர் நடிச்ச `அமராவதி’ படம் பார்த்தேன். ரொம்ப ஒல்லியா இருந்தாரேங்கிறதைத் தவிர மத்தபடி எனக்கு அஜித்தை ரொம்ப பிடிச்சிருந்தது. அதுக்குப் பிறகு அஜித்கிட்ட பேசி அவரைச் சந்திக்க ஆழ்வார்பேட்டைல இருக்கற அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருந்தேன். பைக்லதான் வந்தார். அப்போலாம் அவர் அதிகம் பைக்லதான் வருவார், போவார். நேர்ல பார்க்க இன்னும் ஸ்மார்ட்டா இருந்தார். என் கதைக்கு ஹீரோ கிடைச்சாச்சுன்னு எனக்கு பயங்கர சந்தோஷம். அவருக்கும் கதை பிடிச்சிருந்தது. உடனே கமிட் ஆகிட்டார்.

அஜித் படத்துக்குள்ள வந்ததும் டீம்ல இருந்த எல்லோரும் `அழகான ஹீரோ கிடைச்சுட்டார்’ன்னு சொல்லிட்டே இருந்தாங்க. நான் இதை படம் பார்க்கற ரசிகர்கள்கிட்டயும் சரியா கொண்டு போய் சேர்க்கணும்னு நினைச்சேன். அதுக்காகவே, படத்துல ஹீரோவுக்காக எழுதியிருந்த முதல் காட்சியை மாத்தி, கூடுதலா இன்னொரு இன்ட்ரோ சீன் எழுதினேன். அந்தக் காட்சி என்னன்னா, அஜித்தும் மூணு குட்டிக் குழந்தைகளும் ஒரு குளத்துல குளிச்சுட்டு தண்ணிக்குள்ள இருந்து மேல எழுந்திரிப்பாங்க. அப்போ, அந்த மூணு பெண் குழந்தைகளும் ஒரே சமயத்துல அஜித்தைப் பார்த்து, `எங்க மூணு பேரையும் கல்யாணம் பண்ணிக்கிறியா?’னு கேப்பாங்க. அதுக்கு அஜித் `ஏன்?’னு கேட்க, `ஏன்னா, நீ கொஞ்சூண்டு அழகா இருக்க’னு ஒரு குட்டிப்பாப்பா சொல்லும். இந்தக் காட்சிக்கு மக்கள்கிட்டயும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது.
''அஜித்னு சொன்னதும் உங்களுக்கு நியாபகம் வர முதல் விஷயம்?''

`` `ஆசை’ படம் எடுத்து கிட்டத்தட்ட 25 வருஷங்கள் ஆகுது. இத்தனை வருஷங்கள் கழிச்சும் அஜித்னு சொன்னா எனக்கு உடனே நியாபகம் வர விஷயம் அவரோட ஆட்டிட்யூட்தான். யாரையும் கோபமா பேசுறதோ, சத்தம் போடுறதோ அவர்கிட்ட பார்க்க முடியாது. அந்த சமயத்துலயே அஜித்துக்கு அவ்வளவு பொறுமையும் மெச்சூரிட்டியும் இருக்கும். அதனால, `ஆசை’ படக்காட்சிகளை எல்லாம் ஷூட் பண்ணி முடிச்சதும் ஆர்வத்துல அசோசியேட் டைரக்டர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கற மாதிரி, `சரியா வந்துருக்கா, நல்லா எடுத்துருக்கேனா?’னு அவர்கிட்ட அடிக்கடி கேட்டுட்டே இருப்பேன். `ஆசை’ படத்துக்கான ப்ரிவியூ ஷோ போயிருந்தபோது, அவர்கிட்ட `ப்பா, கண்டிப்பா இந்தப் படம் ஓடிரும்ல?’னு நான் கேட்க அவர் பயங்கரமா சிரிச்சுட்டே, `கண்டிப்பா ஓடும். கவலைப்படாதீங்க’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே படம் 285 நாள்கள் ஓடுச்சு.
ஆரம்பகாலங்கள்ல என்னுடைய படங்கள்ல நடிச்ச ஒருத்தர் சினிமாத்துறையில இவ்வளவு பெரிய உயரத்தை அடைஞ்சிருக்கறது `ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்’ தருணமா, என்னுடைய பெருமையா, மகிழ்ச்சியா, சந்தோஷமாப் பார்க்குறேன்.”
`ஆசை’ படம் பார்த்துட்டு உங்க குருநாதர் பாலசந்தர் என்ன சொன்னார்?

``படம் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அஜித், பிரகாஷ்ராஜுடைய நடிப்பை பார்த்துட்டு, `ஆரம்பகாலத்துல ரஜினி, கமலை நான் கொண்டு வந்த மாதிரி இவங்களை எடுத்துட்டு வரப்போறியா’ன்னு சந்தோஷமா கேட்டார். அவர் சொன்ன வார்த்தைகளுக்கு ஏத்த மாதிரி அஜித் பெரிய இடத்துக்கு வந்துட்டார். அந்த இடம் அவர் உழைப்புக்குச் சொந்தமானது.”