Published:Updated:

``அரவிந்த்சாமி கலர், வேட்டி விளம்பரம், ராமாயணம்; அஜித் `ஆசை’ நாயகனான கதை!’’ – வஸந்த் #25YearsOfAasai

'ஆசை' திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்தப் படம் பற்றிய சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் வஸந்த்.

சின்ன வயசுலேயே என் மனசுல பதிஞ்ச இதிகாசம், ராமாயணம். காலேஜ் படிக்கிறவரை எங்க வீட்டுல அம்மா, அப்பா, பாட்டி, சகோதரர்கள் எல்லோரும் சேர்ந்து ராமாயணம் படிப்போம். அப்போ, என்னோட 'தல' ராமர்தான். ராமரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'ஆசை' படத்தோட கதையே ராமாயணம்தான். படம் ஆரம்பிக்கும்போதே ராமாயணத்தை தெருக்கூத்தாக்கிக் காட்டியிருப்பேன். டெல்லி ராம்லீலாவுடன் படத்தை முடிச்சிருப்பேன். ராமர், சீதை, ராவணன் கதையில் ராவணனின் பெண்ணாசைதான், 'ஆசை' திரைப்படம்'' என்கிறார் இயக்குநர் வஸந்த்.

Director Vasanth
Director Vasanth

"முதலில் இந்தப் படத்துக்கு 'ரொமான்ஸ்', 'கண்ணே' இப்படித்தான் டைட்டில் வெச்சிருந்தேன். ஷூட்டிங் கிளம்புனப்போதான், 'ஆசை'னு வெச்சேன். படத்தின் 100 நாள் போஸ்டர்களில் எங்கேயுமே பிரகாஷ்ராஜ் படத்தை நாங்க பயன்படுத்தல. ஏன்னா, இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு காதல் படமாதான் தெரியணும்னு முடிவு பண்ணி வெச்சிருந்தேன். அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், தேவா எல்லோருக்கும் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்தப் படம்தான்.

என் மென்டார் மணிரத்னம் சார். நான் காலேஜ் படிச்சுக்கிட்டிருந்த காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். அதாவது, அவரோட 'இதயத்தைத் திருடாதே' படத்துக்கு முன்னாடியே தெரியும். இப்போ 'மக்கள் நீதி மய்யம்' இயங்கிக்கிட்டிருக்கிற இடத்துல அந்தக் காலத்தில் நான், சாருஹாசன், மனோபாலா, கமல் எல்லோரும் சாயங்காலம் கூடி சினிமா பற்றிப் பேசுவோம். அந்த சந்திப்புக்கு சாருஹாசன்தான் தலைமை. அந்த சமயத்துல மணி சாரும் வருவார். அங்கேதான் அவரை முதல்முறையா பார்த்தேன். அவருடைய படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்ங்கிறதால அவர்கிட்ட நானா போய் பேசுவேன். அவர் அதிகமா பேசமாட்டார்னு சொல்வாங்க. ஆனா, என்கிட்ட நிறைய விஷயங்களை ஷேர் பண்ணியிருக்கார். வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவரோட ஒரு படத்தோட போஸ்டரைப் பார்த்து, 'டிசைன் நல்லாயிருக்கு சார்'னு சொன்னேன்.

என்னோட 'கேளடி கண்மணி' படத்தோட சில்வர் ஜூப்ளி விழாவில் மேடையில் அதைக் குறிப்பிட்டுச் சொல்லி, 'இன்னைக்கு இவன் படத்தோட போஸ்டரைப் பார்த்துட்டு மிரண்டுட்டேன். படமும் ரொம்ப நல்லா எடுத்திருக்கான்'னு பாராட்டினார். 'நீ பாதி நான் பாதி' படத்தைப் பார்த்து நிறைய பாராட்டிப் பேசினார். அதுக்குப் பிறகு, என்னோட மூணாவது படத்தைத் தயாரிக்க அவர் முன்வந்தார். அப்போ அவர் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனத்தை ஆரம்பிக்கல.

`ஆர்டிகிள் 15' படத்தின் ரீமேக்கில் அஜித்? #AK61

ராதிகா, ஜெயராம் இருவரையும் வைத்து படத்தை முடிக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். கால்ஷீட் பிரச்னை காரணமா படம் தள்ளிப்போச்சு. அப்போதான் 'ஹீரோயின் சப்ஜெக்ட் இல்லாம ஹீரோ சப்ஜெக்ட் கதையா இருந்தாக்கூட சொல்லு, பண்ணலாம்'னு சொன்னார். அப்போ அவருக்கு 'ஆசை' படத்தின் அவுட்லைனைச் சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஓகே சொன்னார். 'ஆலயம்'ங்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, நண்பரோடு சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரிச்சார் மணி சார். ஷுட்டிங் முடிச்சுட்டு ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு முன்னாடி படத்தைப் பார்த்துட்டு, 'இதைவிட நல்லவிதமா ஒரு கமர்ஷியல் படத்தை எடுக்க முடியாது'னு சொன்னார். ரிலீஸ் ஆகிறவரைக்கும் எனக்கான முழு சுதந்திரத்தையும் அவர் கொடுத்தார்" என்றவர், படத்தின் நடிகர், நடிகைகள் இணைந்த விதம் குறித்து விவரித்தார்.

Aasai
Aasai

"அஜித் இந்தப் படத்துல கமிட் ஆனதே சுவாரஸ்யம். எனக்கு அரவிந்த்சாமியை ரொம்பப் பிடிக்கும். அந்தக் காலத்தில் அவர்தான் பெண்களுக்குப் பிடிச்ச ஹீரோவா இருந்தார். அவர் நிறத்தில் ஒரு நடிகரை நடிக்க வைக்கணும்னு நினைச்சேன். தவிர, அது அதிகம் பரிட்சயம் இல்லாத முகமா இருக்கணும்னும் நினைச்சுக்கிட்டிருந்தேன். அப்போ ஒரு வேட்டி விளம்பரத்தில் அஜித்தைப் பார்த்துட்டு, அவரைக் கமிட் பண்ணிட்டேன். இந்தப் படத்துக்கு முன்னாடி அவர் நடிச்சிருந்த 'அமராவதி', 'பவித்ரா' படங்கள் சரியா போகல. அதனால பலரும் அஜித் வேண்டாம்னு சொன்னாங்க. 'இந்த அழகான பையன்தான் நடிக்கணும்'னு நான் உறுதியா இருந்தேன். '16 வயதினிலே' படத்துல ரஜினி, கமல், ஶ்ரீதேவி எப்படியோ, அதேமாதிரிதான் 'ஆசை'யில் அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ்னு சொன்னேன்.

படத்தோட ஹீரோயின் மத்தவங்க என்ன சொன்னாலும் நம்புறமாதிரி ஒரு லுக்குல இருக்கணும். இதுக்காகப் பல பெண்களைப் பார்த்தேன். அப்போ யூகி சேதுதான் சுவலட்சுமி நடிச்ச ஒரு பெங்காலிப் படத்தைப் பார்த்துட்டு, 'இந்தப் பொண்ணு உன் படத்துக்கு சரியா இருப்பா'னு சொன்னார். உடனே அவங்களை சென்னைக்கு வரச்சொல்லி சந்திச்சோம். நான் எதிர்பார்த்த விஷயம் சுவலட்சுமிகிட்ட இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு, படத்தோட மெயின் கேரக்டர் பிரகாஷ்ராஜ். அவரோட முகம் வில்லன் மாதிரி தெரியக்கூடாது. துணை நடிகர் லுக்ல இருக்கணும்னு நினைச்சேன். முதலில் இந்தக் கேரக்டர்ல மலையாள நடிகர் மனோஜை நடிக்க வைக்கலாம்னுதான் நினைச்சேன். பிறகு, ஒருநாள் பாலசந்தர் சார் ஷூட்டிங்குக்குப் போயிருந்தப்போ, பிரகாஷ்ராஜ் சார் நடிச்சுக்கிட்டிருந்தார். எனக்கு அவரோட நடிப்பு பிடிச்சிருந்தது. அவரை அப்படியே கூட்டிக்கிட்டு வந்து 'ஆசை'யில் நடிக்க வெச்சேன்.

படத்தோட மிகப்பெரிய பலம் இசை. தேவா சார் தூர்தர்ஷனில் வேலை பார்த்துக்கிட்டிருந்தார். அங்கே இருந்துகிட்டே பல பாரதியார் பாடல்களுக்குக் கம்போஸ் பண்ணியிருப்பார். எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். 'ஆசை'க்கு சூப்பரான 5 பாடல்களைக் கொடுத்தார். இந்தப் படம் நினைச்சுப் பார்க்காத வெற்றியை எங்க குழுவுக்குக் கொடுத்துச்சு. மறக்க முடியாத நினைவுகளும் நிறைய இருக்கு!" எனச் சொல்லி முடித்தார் இயக்குநர் வஸந்த்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு