சினிமா
Published:Updated:

விவேக் அப்போதே விளையும் பயிர்!

விவேக்
பிரீமியம் ஸ்டோரி
News
விவேக்

விவேக் 1961 - 2021:

நடிகர் விவேக்கின் மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. எப்போதும் இன்முகத்துடன் சிரித்துக்கொண்டும் சிரிக்க வைத்துக்கொண்டும் இருந்தவர் இனி நம்மோடு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. பிரதமர் மோடியில் தொடங்கி இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் கிராமத்து மக்கள் வரை விவேக் எனும் மாபெரும் கலைஞனைப் பற்றிப் பேசாத நபர்கள் இல்லை. பாலசந்தர் பட்டறையில் வளர்ந்த விவேக்கைப் பற்றி இயக்குநர் வஸந்த் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

விவேக் அப்போதே விளையும் பயிர்!

“மதுரையில வெற்றிவேல் அண்ணாச்சின்னு ஒருத்தர் இருந்தார். அவர்தான் கவிதாலயாவுடைய படங்கள் எல்லாம் மதுரையில விநியோகம் பண்ணுவார். நான் அப்போ பாலசந்தர் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல வெற்றிவேல் அண்ணாச்சி ஒரு பையனைக் கூட்டிட்டு வந்து, ‘நமக்குத் தெரிஞ்ச பையன். ரொம்ப சூட்டிகை. நிறைய நாடகத்துல நடிச்சிருக்கான். சினிமாவுல நடிக்கணும்னு ஆர்வம்’னு கே.பி சாருக்கு அறிமுகப்படுத்தினார். அந்தப் பையன்தான் விவேக். அப்பவே டைரக்டர்கிட்ட மிமிக்ரி எல்லாம் பண்ணிக்காட்டினார். அதுலேயே டைரக்டர் ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டார். அப்புறம், ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்துல சுஹாசினிக்குத் தம்பி கேரக்டர்ல நடிக்க அவரை கமிட் பண்ணினார், கே.பி சார். முதல் நாள் ஷூட்டிங் தி.நகர், ரெங்கநாதன் தெரு பக்கத்துல இருக்கிற ஒரு ஷூட்டிங் ஹவுஸ்லதான் நடந்தது. நான்தான் விவேக்கிற்கு டயலாக் சொல்லிக்கொடுத்தேன். டைரக்டர்கிட்ட விவேக் பத்தி வெற்றிவேல் அண்ணாச்சி பேசினது, விவேக் மிமிக்ரி பண்ணுனது எல்லாம் வெச்சு நல்லாப் பண்ணிடுவார்னு நம்பிக்கை இருந்தது. ஆனா, அவ்ளோ தைரியமா கொஞ்சம்கூட முகத்துல பயம் இல்லாமல் நடிப்பார்னு நினைக்கலை. முதல் டேக்கே ஓகே ஆகிடுச்சு. பார்க்க ரொம்ப ஒல்லியா சின்னப் பையனா இருக்கான். ஆனா, டேக்ல திடீர்னு ஒரு ஹியூமர் சேர்த்தது செட்ல எல்லோருக்கும் ஆச்சர்யம். அந்த மாதிரி நடிக்கும்போது தைரியமா நம்பிக்கையா இருந்தாங்கன்னா, கே.பி சாருக்கு ரொம்பப் பிடிக்கும்.

விவேக் அப்போதே விளையும் பயிர்!

அதே மாதிரி, இவருக்கு ஏதாவது தோணுச்சுனா, நேரா சார்கிட்டேயே போய், இதை இப்படிப் பேசிக்கலாமா, இந்த இடத்துல இந்த வசனத்தைச் சேர்த்துக்கவான்னு கொடுக்கிறதை மட்டும் பேசாமல் இவரும் அந்தக் கேரக்டரை, சீனை இம்ப்ரூவ் பண்ண முயல்வார். இதெல்லாம் டைரக்டருக்கு ரொம்பப் பிடிச்சு, அடுத்தடுத்து பாலச்சந்தர் சார் இயக்கின படங்கள் எல்லாத்துலயும் விவேக்கிற்கு ஏதாவது ஒரு கேரக்டர் கொடுத்திடுவார். இன்னிக்கு இவ்வளவு பெரிய ஆளா விவேக் வர்றதுக்கான எல்லாமும் அவருக்கு அப்பவே இருந்தது.

ஏகப்பட்ட கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார், விவேக். யாரையும் போட்டியாளரா நினைக்கமாட்டார். எதிராளி ரொம்ப நல்லா பண்ணினாக்கூட அதைவிட நம்மளால நல்லா பண்ணிட முடியுங்கிற தன்னம்பிக்கை விவேக்கிற்கு அதிகம். அதெல்லாம்தான் விவேக்கை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு. செம கிரியேட்டிவான நபர். நான் முதல் படம் ‘கேளடி கண்மணி’ பண்ணும்போது, அவருக்கு ஒரு கேரக்டர் கொடுத்தேன். நான் ஜெயிக்கணும்ங்கிறதுல ரொம்ப அக்கறையா இருந்தார். அவருக்கு ஷூட்டிங் இல்லாத நாள்களும் ஸ்பாட்டுக்கு வந்து எனக்கு உறுதுணையா இருப்பார். ஸ்கிரிப்ட்ல சின்னச்சின்ன நுணுக்கங்கள் எல்லாம் சேர்த்தார். அதெல்லாம் மறக்கவே முடியாது. மறுபடியும் ‘நேருக்கு நேர்’ படத்துல விவேக்கை நடிக்கக் கூப்பிட்டேன். இவருக்கும் மணிவண்ணன் சாருக்கும் தனி டிராக் இருக்கும். இந்தப் படத்துடைய இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கினது விவேக்தான். இன்னொரு விஷயம் என்னன்னா, ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்கள்தான் இந்த விழாவுடைய பார்வையாளர்கள்.

`மனதில் உறுதி வேண்டும்’ படத்தில்...
`மனதில் உறுதி வேண்டும்’ படத்தில்...

‘கே.பி சார்கிட்ட நீ டைரக்‌ஷன் மட்டும் கத்துக்கலை... கோபத்தையும் கத்துக்கிட்ட’ன்னு அடிக்கடி சொல்வார். இளையராஜா சாருடைய பெரிய ரசிகன். ‘கேளடி கண்மணி’ 25 வருஷமானதைத் தொடர்ந்து, ‘மண்ணில் இந்தக் காதல்’ பாடலை கீ போர்டுல வாசிச்சு எனக்கு அனுப்பினார்.

சமூகத்துக்குத் தேவையான விஷயங்களைத் தன்னுடைய காமெடிக் காட்சிகளில் சொன்னவர். மேம்போக்கா ரெண்டு மரக்கன்றுகள் நட்டுட்டுப் போகாமல், லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடணும்ங்கிற அவ்வளவு பெரிய பணியைக் கையிலெடுத்துக் கொண்டுபோனது சாதாரண விஷயமல்ல. ‘வெள்ளைப்பூக்கள்’ படத்துல பிரமாதமா நடிச்சிருந்தார். அதைப் பார்த்துட்டு ரொம்ப நேரம் அவர்கிட்ட பேசினேன். ரொம்ப நல்ல நண்பனை இழந்துட்டேன். சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்தச் சமூகத்துக்கே விவேக் இல்லாதது பெரிய இழப்பு” என்றார் வருத்தத்துடன்.