Published:Updated:

``ரங்கநாதன் தெரு குப்பையை லாரில அள்ளிட்டு வரச்சொன்னேன்; ஏன்னா?!" - வசந்தபாலன் #10YearsOfAngadiTheru

'அங்காடித் தெரு'
'அங்காடித் தெரு'

`அங்காடித் தெரு' வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவானதையொட்டி, இயக்குநர் வசந்தபாலனிடம் பேசினோம்.

தியாகராய நகர்... ரங்கநாதன் தெருவை கடக்கும் போதெல்லாம் `அங்காடித் தெரு' படத்தின் காட்சிகள் நம் மனதிற்குள் நிச்சயம் வந்து போகும். அங்குள்ள ஜவுளி கடைகளுக்குச் சென்றால், ஜோதிலிங்கம், சேர்மகனி, கருங்காலி மாதிரியான கதாபாத்திரங்களைச் சந்திக்க நேரும். 2010-ல் வெளியான மசாலா நிறைந்த பல கமர்ஷியல் படங்களுக்கு இடையில் இயக்குநர் வசந்தபாலன் நம்மை அழைத்துச் சென்ற இடம், இந்த 'அங்காடித் தெரு'.

கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த பத்து காதல் படங்களின் பட்டியல் எடுத்தால் அதில் `அங்காடித் தெரு'விற்கு நிச்சயம் இடமுண்டு. காதலை மட்டும் சொல்லாமல் வாழ்வாதாரத்திற்காக மனிதாபிமானமற்ற முதலாளிகளிடம் சிக்கித்தவிக்கும் எளிய மக்களின் வாழ்க்கையையும் பதிவு செய்து அவர்களைப் பற்றி யோசிக்க வைத்தார், இயக்குநர் வசந்தபாலன். இந்தப் படைப்பு வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவான நிலையில், இயக்குநர் வசந்தபாலனிடம் பேசினோம்.

``யோகி பாபு ரொம்பவே அப்செட்ல இருக்கார்!" - தகவல் சொல்லும் நண்பர்கள்

`வெயில்' முடிச்சதுக்குப் பிறகு, `அங்காடித் தெரு' கதையை எழுதுனீங்களா? இல்லை முன்னாடியே எழுதி வெச்சிருந்ததா?

`` 'வெயில்' படத்துக்கான எடிட்டிங் போய்க்கிட்டிருந்த சமயத்துல கிடைச்ச ஐடியாதான் இது. `வெயில்' முடிச்ச பிறகு, மூணு பெரிய ஹீரோக்களுக்குப் படம் பண்ண வாய்ப்பு வந்துச்சு. ஆனா, எனக்கு இந்தக் கதையை பண்ணதான் எண்ணம். காரணம், `வெயில்' படத்துக்குக் கிடைச்ச விருதுகளும் அங்கீகாரமும்தான். கிட்டத்தட்ட அந்தப் படத்துக்கு 26 விருதுகள் கிடைச்சது. அதெல்லாம் எனக்கு வழக்கமா இல்லாம ஏதாவது பண்ணணும்னு பெரிய பொறுப்பைக் கொடுத்துச்சு. அப்ப எனக்கு பொருளாதார ரீதியா நிறைய சிக்கல்கள் வேற இருந்துச்சு. நண்பர்களுமே `பெரிய ஹீரோ பட வாய்ப்புகள் வருதே... அதைப் பண்ணலாம்ல'னு சொன்னாங்க. ஆனா, எனக்கு இந்தக் கதை மேல ஆர்வமும் நம்பிக்கையும் அதிகமா இருந்துச்சு. அந்த நேரத்துலதான் ஐங்கரன் நிறுவனத்துல `சர்வம்', `பீமா', `ஏகன்', `வில்லு'னு பெரிய படங்களும் போயிட்டிருந்தது. அதோட இந்தச் சின்னப் படமும் ரெடியாகிட்டு இருந்தது. அந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சரியா போகாததுனால அந்தக் கம்பெனியே மூடுற அளவுக்கு வந்திடுச்சு. அதனால இந்தப் படத்துக்கான வேலைகளும் முக்கால்வாசி முடிஞ்ச நிலையில நின்னுடுச்சு. அப்புறம், பெரிய போராட்டத்துக்குப் பிறகு, 2010-ல் படம் ரிலீஸாச்சு. இந்தப் படத்தை போட்டு காட்டியபோதும் எல்லோரும் `படம் நல்லாயிருக்கு. ஆனா, பிஸினஸா எப்படி வொர்க்-அவுட் ஆகும்னு தெரியலை'னு சொல்லி யாரும் படத்தை வாங்க முன்வரலை. பத்து தயாரிப்பாளருக்கு இந்தக் கதையைச் சொன்னேன். எல்லோரும் `டாக்குமென்ட்ரி மாதிரி இருக்கு'னு சொல்லி நிராகரிச்சுட்டாங்க. பதினோராவது தயாரிப்பாளர்தான் ஐங்கரன் நிறுவனம். படம் எவ்வளவு கலெக்ட் பண்ணும்னு குழப்பத்தோட ஒரு வாரம் ஓடினா போதும்னு நினைச்சு ரிலீஸாச்சு. ஆனா, படம் 100 நாள் ஓடினது ரொம்ப சந்தோஷம்"

இந்த மாதிரி துணிக்கடையில வேலை செய்றவங்களுடைய வாழ்க்கையைப் பேசணும்னு எப்படி தோணுச்சு?

'அங்காடித் தெரு'
'அங்காடித் தெரு'

``நிறைய வித்தியாசமான ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுறது எனக்குப் பிடிக்கும். அப்படி ஒருநாள் `வெயில்' எடிட்டிங்ல இருந்தப்ப, நைட் என் நண்பன் `ரங்கநாதன் தெரு பக்கத்துல ராமேஸ்வரா தெருவுல ஒரு கடை இருக்காம். வா சாப்பிட்டுட்டு வரலாம்'னு சொன்னான். அப்போ அந்தக் கடையில ரொட்டி, சப்ஜி சாப்பிட்டுட்டு வெளியே வரும்போது 12 மணி. எல்லோரும் சிகரெட்டை எடுத்து பத்தவெச்சுட்டு `வெயில்' பத்தி பேசிட்டு இருந்தோம். ஒரு மணி ஆகிடுச்சு. திடீர்னு நிறைய பசங்களும் பொண்ணுங்களும் நடந்து வந்ததைப் பார்த்தேன். என்ன இந்த நேரத்துல இவ்வளவு பேர் நடந்து வர்றாங்கன்னு விசாரிச்ச பிறகுதான், அவங்க எல்லோரும் அங்க இருக்கிற ஜவுளிக் கடையில வேலைபார்க்கிறவங்கன்னு தெரிஞ்சது.

மத்தவங்களைப் போகச் சொல்லிட்டு, இன்னொரு டீ குடிச்சுட்டு இன்னொரு சிகரெட் எடுத்து பத்த வெச்சு, அவங்களைக் கவனிச்சுக்கிட்டே இருந்தேன். நான் நின்னுட்டு இருந்ததுக்கு எதிர்லதான் அவங்க தங்குற இடம். 2.30 மணிக்கு துணி எல்லாம் துவைச்சு காயப்போட்டுட்டு இருந்தாங்க. சரினு ரங்கநாதன் தெருவுக்குள்ள நடந்துபோனேன். அந்த நேரத்துலயும் வேற மாதிரி பிஸியா இருந்துச்சு, அந்தத் தெரு. குப்பைகளை வாங்குறதுக்கு ஏகப்பட்ட வியாபாரிகள் வந்து, அந்தக் குப்பைகளை எடைபோட்டுக்கிட்டு இருந்தாங்க. `நம்ம கண்ணுக்குத் தெரியாத ஒரு உலகம் இயங்கிட்டு இருக்கே'ன்னு நடக்குறதை எல்லாம் கவனிச்சுக்கிட்டே இருந்தேன். காலையில 6.30 ஆகிடுச்சு. அந்தப் பசங்க எல்லாம் குளிச்சிட்டு யூனிபார்ம் போட்டுக்கிட்டு மறுபடியும் வேலைக்கு வந்துட்டு இருந்தாங்க. 7 மணிக்கு அந்தக் கடை திறந்துடுச்சு. இந்த விஷயத்தை விவரிச்சு, இவங்களுக்குள்ள ஒரு கதை இருக்கு. அதைப் படமா பண்ணணும்னு என் கோ-டைரக்டர் சரவணன்கிட்ட சொன்னேன். ஒரு வாரத்துல ஐடியாவா எனக்குள்ள வந்துடுச்சு."

அந்தக் காதல், அவங்களுக்குள்ள இருக்கிற எமோஷன் இதெல்லாம் எப்போ கதைக்குள்ள வந்தது?

"முதல்ல வெவ்வேற ஜவுளிக் கடையில வேலைபார்க்கிற ஹீரோ - ஹீரோயின், அந்தத் தெருவுல பிக் பாக்கெட் அடிக்கிற ஒருத்தர், அதே தெருவுல பட்ஸ் விக்குற ஒரு சின்னப் பையன் கேரக்டர்னு வெச்சு ரங்கநாதன் தெருவையும் பாண்டி பஜாரையும் கனெக்ட் பண்ணி திரைக்கதை உருவாக்க முயற்சி பண்ணேன். ஆறு மாசமா வொர்க் பண்ணி எனக்கு செட்டாகலை. எங்கேயோ மிஸ் ஆகிக்கிட்டே இருந்தது. `வெயில்'னு ஒரு சக்சஸ் கொடுத்திருக்கோம். அடுத்து பரிசோதனை முயற்சி பண்ணிப் பார்த்து சரியா வராதோன்னு பயம் வந்திடுச்சு. அப்புறம், அந்த ஹீரோ, ஹீரோயின் கேரக்டருக்குள்ள இருக்கிற காதலை மட்டும் எடுத்து அதை முழுமையா சொல்லலாம்னு அதை மட்டும் எடுத்து வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். அப்பவும் சரியா அமையலை. கடைசியா ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் ஒரே கடையில வேலைபார்க்குறாங்கன்னு வெச்சு எழுதி முடிச்சேன். அதுக்குள்ள ஒரு வருஷமாகிடுச்சு. துணை கதாபாத்திரங்கள் இல்லாம படம் பண்றது சரியில்லைனு தோணுச்சு. அந்தக் கேரக்டர்கள்தான் ஜவுளிக்கடையையும் ரங்கநாதன் தெருவையும் இணைக்கிற பாலமா நினைச்சேன். அப்புறம், ஜெயமோகனோடு சேர்ந்து 10 கதாபாத்திரங்கள் உருவாக்கி, அந்தக் கேரக்டர்களுக்கான வளர்ச்சி, வீழ்ச்சினு எல்லாமே எழுதினோம். இப்படிதான் `அங்காடித் தெரு' கதையா முழுமை அடைஞ்சது."

ரங்கநாதன் தெருவை செட் போட்டு எடுத்த அனுபவம்?

'அங்காடித் தெரு'
'அங்காடித் தெரு'

"ஆர்ட் டைரக்டர் முத்துராஜ்தான் சாலிகிராமத்துல செட் போட்டுக் கொடுத்தார். முதல் நாள் ஸ்பாட்டுக்கு போனவுடன், அது செட்டுனு நல்லா தெரிஞ்சுக்கிட்டே இருந்தது. இந்தக் கதைக்குள்ள வந்த பிறகு, ரங்கநாதன் தெருக்குள்ள அடிக்கடி நடந்துக்கிட்டே இருப்பேன். அந்தக் குப்பைகள், துணி அட்டைகள் எல்லாம் நடக்கும்போது கால்ல உரசிக்கிட்டே இருக்கும். அதுதான் ரங்கநாதன் தெரு. உடனே என் எக்ஸிக்யூட்டியைக் கூப்பிட்டு ரங்கநாதன் தெருவுல இருக்கிற குப்பை எல்லாம் லாரி வெச்சு அள்ளிட்டு வர சொல்லிட்டேன். மறுநாள் அதை செட்டுல கொட்டின பிறகுதான், ரங்கநாதன் தெரு ஃபீல் வந்துச்சு. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி அந்தத் தெருவுல ரூம் போட்டு மாசக் கணக்கா தங்கி, அங்க என்ன நடக்குது, மக்கள் நடவடிக்கைகள் எப்படி இருக்கு, பொருள் விக்கிறவங்க எப்படி இருக்காங்கன்னு கவனிக்க ஆரம்பிச்சேன். மழை வந்தா குடை விற்கிற அதே வியாபாரிதான், வெயில் அடிச்சா தொப்பி விற்பார். மதியம் ஜூஸ் விற்பார், சாயந்திரம் கடலை விற்பார். எப்படி ஒரே வியாபாரி நிமிஷத்துக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திக்கிட்டே இருக்கார்ன்னு எல்லாமே கவனிச்சு, மொத்தம் 400 மணி நேரம் ஃபுட்டேஜ் எடுத்தோம். மறக்க முடியாத அனுபவம்."

நடிகர்களைத் தேர்ந்தெடுத்தது எப்படி?

"தயாரிப்பாளர்கள், ஹீரோ யாருனு கேட்டாங்க. இனிமேல்தான் தேடணும்னு சொன்னேன். ஏழை வீட்டு பையனா இருந்தா நல்லாயிருக்கும். நடிக்கவைக்கத் தேவையில்லைனு தோணுச்சு. கோவில்பட்டியில இருந்து கன்னியாகுமரி வரைக்கும் தேடலாம்னு முடிவு பண்ணி, ஹலோ எஃப்.எம்மோட துணையில கிட்டத்தட்ட 50,000 பேரை பார்த்தோம். அதுல மகேஷை தேர்ந்தெடுத்து அவனுக்கு மூணு மாசம் டிரெய்னிங் கொடுத்து, ரங்கநாதன் தெருவுல இருக்கிற மேன்ஷன்ல தங்கவெச்சு பழக்கப்படுத்தினோம். தவிர, அந்தப் படத்துக்காக நான் செலெக்ட் பண்ணி வெச்சிருந்த எல்லோரையும் பயன்படுத்தினோம். மாடியில இருந்து கீழ விழுந்து இறக்கிற பொண்ணுதான் இந்தக் கதையில முதல்ல ஹீரோயின் நடிக்க வேண்டியிருந்தது. எல்லாமே சரியா இருந்தது. படம் ரொம்ப ராவா இருக்கும். அதனால சின்ன ரொமான்ஸ் போர்ஷன் வைக்கலாம்னு ப்ளான் பண்ணோம். சினிமா தெரிஞ்ச பொண்ணா இருந்தா ரொமான்ஸ் வொர்க் அவுட்டாகும்னு நினைச்சோம். நாங்க செலெக்ட் பண்ணி வெச்சிருந்த பொண்ணு வசனம் பேசுறது, எமோஷன் எல்லாம் சரியா பண்ணிடுவான்னு நம்பிக்கை இருந்தது. ஆனா, ரொமான்ஸ் போர்ஷன்ல நடிக்க கூச்சப்பட்டாங்கன்னா சரியா இருக்காதுனு யோசனை வந்தது. அப்போ, `கற்றது தமிழ்' பார்த்துட்டு அஞ்சலியை ஹீரோயினா நடிக்க வெச்சோம்."

இயக்குநர் வெங்கடேஷை அந்த கருங்காலி கேரக்டர்ல நடிக்க வைக்கக் காரணம்?

'அங்காடித் தெரு'
'அங்காடித் தெரு'

'' 'ஜென்டில்மேன்' படத்துல ஷங்கர் சார்கிட்ட அவர் அசோஸியேட் டைரக்டரா வேலைபார்த்தார். நான் அந்தப் படத்துல கடைசி அசிஸ்டென்ட். அப்பதான் நான் காலேஜ் முடிச்சுட்டு வந்திருந்தேன், சின்னப் பையன். அப்ப இதை ஏன் இப்படி பண்ண, அதை அப்படி பண்ணாதனு என்னை அப்படி டார்ச்சர் பண்ணுவார். உண்மையா, அந்த மாதிரி டார்ச்சர் இருந்தால்தான் சினிமா நல்லபடியா நடக்கும். எல்லா பொறுப்பும் அவர் மேல இருக்கிறதால, அவர் என்னை இப்படி சொல்லிக்கிட்டே இருப்பார். அப்ப எல்லாம் அவரைப் பார்த்தா அவ்ளோ கோவமா வரும். 'ஜென்டில்மேன்' படத்துக்குப் பிறகு, அவருக்கும் எனக்கும் தொடர்பே இல்லாமல் போயிடுச்சு. இருந்தாலும் அவருடைய அந்த இமேஜ் என் மனசுல இருந்துக்கிட்டே இருந்தது. இந்த கேரக்டர் எழுதும்போதும் அவர்தான் ஞாபகத்துக்கு வந்தார். அப்ப அவர் கமர்ஷியலா நிறைய படங்கள் இயக்கி சக்சஸா இருந்தார். இந்த மாதிரி நடிக்கணும்னு சொன்னவுடனே, ஒரு வாரம் டைம் கொடுங்கன்னு கேட்டார். அப்ப அவர் அர்ஜுன் சாரை வெச்சு ஒரு படத்தை இயக்கிட்டு இருந்தார். காலையில அந்தப் படத்தை இயக்கப்போவார். நைட் இதுல நடிக்க வருவார். அப்படி கிட்டத்தட்ட 30 நாள்கள் வந்து நடிச்சுக் கொடுத்தார். அந்த விஷயத்துல அவர் மேல எப்பவும் நன்றியோட இருப்பேன்."

நா.முத்துக்குமார் எழுதிய பாடல் வரிகள் படத்துக்கு மிகப்பெரிய பலம். அவர்கூட வொர்க் பண்ண அனுபவம்?

"எனக்கு இதுல வர்ற எல்லாப் பாடல்களுமே ரொம்பப் பிடிக்கும். குறிப்பா, 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான பாடல். அந்தப் பாடலுக்கு நிறைய பல்லவி எழுதிக்கொடுத்தார் முத்துக்குமார். அதுல ஏதோ ஒரு பல்லவியில இருக்கிற கடைசி வரியா இது இருந்தது. இதை வெச்சுதான் மொத்த பாடலும் இருக்கணும்னு சொன்னேன். அப்படி முத்துக்குமார் எழுதினதுதான் அந்தப் பாடல். அவருடைய பாடல்களின் உச்சமா நான் ரெண்டு பாடல்களை நினைக்கிறேன். ஒண்ணு 'வெயிலோடு விளையாடி' இன்னொண்ணு 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை'. முத்துக்குமார் எழுதிய ஆகச்சிறந்த 10 பாடல்களை எடுத்தால், அதுல இந்த பாடல்களுக்கும் நிச்சயம் இடம் இருக்கும்."

``விசுவோட மூணு பொண்ணுங்க இறுதி சடங்குக்கு வந்தாங்களானுகூட தெரியல!" - கமலா கண்ணீர்

ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் ஆண்டனினு ரெண்டு இசையமைப்பாளர்கள் படத்துக்குள்ள வந்தது எப்படி?

"ஜி.வி.பிரகாஷ்தான் படத்துல கமிட்டானார். அந்தச் சமயத்துல அவருக்கு 'குசேலன்', 'ஆயிரத்தில் ஒருவன்'னு அடுத்தடுத்து ரொம்ப பிஸியா இருந்தார். எங்களுக்கு தாமதமாச்சு. அதனால அவர் ஒப்புதலோட இந்தப் படத்தை விஜய் ஆண்டனியை வெச்சு முடிச்சோம். ரெண்டு பாடலும், பின்னணி இசையும் விஜய் ஆண்டனி பண்ணிக்கொடுத்தார்."

விருதுகள் எல்லாம் தாண்டி இந்தப் படத்துக்கு கிடைச்ச அங்கீகாரம்னு நீங்க நினைக்கிறது என்ன?

'அங்காடித் தெரு'
'அங்காடித் தெரு'

"படம் வெளியானபோது, சட்டசபையில படத்தைப் பத்தி பேசி, அந்த மாதிரி ஜவுளிக் கடையில வேலைபார்க்கிறவங்க தங்குற இடமெல்லாம் எப்படி இருக்குனு பார்க்க ரெய்டு நடத்தினாங்க. நிறைய இடங்கள் சரிசெய்யப்பட்டுச்சு. 'அங்காடித் தெரு'னு படத்துக்குப் பெயர் வெச்சிருந்ததை கவனிச்ச கலைஞர், 'சினிமாவுல 'அங்காடித் தெரு'னு பெயர் வெச்சிருக்காங்க. நம்ம பஜார்னு வெச்சிருக்கோம்'னு சொல்லி பாண்டி பஜாரை 'செளந்தரபாண்டியன் அங்காடி'னு பெயரை மாத்தினார். இதெல்லாம் என் படைப்புக்கு கிடைச்ச மிகப்பெரிய அங்கீகாரமா பார்க்கிறேன்."

என்ன, ஜவுளிக்கடையில வேலைபார்க்கிறவங்களை இப்படி காட்டியிருக்கீங்கன்னு யாராவது உங்கக்கிட்ட பேசினாங்களா?

"ரங்கநாதன் தெருவுல தங்கியிருந்து ஷூட் பண்ணதுனால அந்தக் கடைகளைப் பத்தி தப்பா எடுத்திடுவோம்னு சிலர் பயந்தாங்க. வழக்கமா இந்த மாதிரி கதைகள்ல முதலாளி இடத்துல இருக்கிறவங்க அங்க வேலை செய்யுற பெண்களுடைய வாழ்க்கையை சீரழிச்சிடுவாங்கன்னு காட்டுவாங்க. அந்தத் தொணி கொஞ்சம்கூட வந்திடக்கூடாதுனு ரொம்பத் தெளிவா இருந்தேன். முதலாளித்துவத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குமிடையே இருக்கிற முரண்தான் படத்துல இருக்கணும்னு நினைச்சேன். சின்னச்சின்ன எதிர்ப்புகளும் மிரட்டல்களும் இருந்தது. ஒரு வாரம் இந்தப் பிரச்னை இருந்தது. அதுக்குள்ள எல்லா அமைப்புகள்ல இருந்தும் எனக்கு ஆதரவா இருந்தாங்க. சட்டசபையில இது பேசப்பட்டதுனால அரசாங்கத்தோட நேரடி ஆதரவு எனக்கு இருந்தது. மத்தபடி ஒண்ணும் பிரச்னையில்லை."

இவ்வளவு உருக்கமா படத்தை முடிச்சதுக்கான காரணம் என்ன?

'அங்காடித் தெரு'
'அங்காடித் தெரு'

"அவங்க காதலிக்கிறது அந்தக் கம்பெனிக்கு பிடிக்கலை. அவங்க காதலுக்குத் தடையா இருக்கிறதுனால கடையில இருந்து வெளியே வந்திடுறாங்க, அவ்ளோதான். எல்லாமே கைவிட்ட பிறகு, கடவுள் கைகொடுப்பார்னு சொல்றது மாதிரி இந்தக் கதையில எல்லாமே கைவிட்ட பிறகு, காதல் கைகொடுக்கும்னு சொல்றது இந்தப் படத்தோட அடி நாதம். அதைச் சொல்றதுக்கு அந்தப் பொண்ணுக்கு கால் போற மாதிரி எழுத வேண்டியிருந்தது. அதனாலதான் படம் ஆரம்பிக்கிறதுல இருந்து நிறைய இடங்கள்ல கால் ஷாட் வந்துக்கிட்டே இருக்கும். கால்ல ஆரம்பிச்ச படம் கால்லயே முடியும். நம்மளை தாங்கிப் பிடிக்கிறது கால்கள்தான். பெத்தவங்கதான் நம்மளை தாங்கிப் பிடிக்கிறாங்க. அவங்களே கைவிட்ட பிறகு, காதல் கால்களா இருந்து அவங்களை தாங்கிப் பிடிக்குது. நிறைய பேர் என்கிட்ட அப்படி அங்கேயே முடிச்சிருக்கலாமேனு சொல்லியிருக்காங்க. ஆனா, அந்தக் கதையை அந்த கதாசிரியன்தானே எப்படி எங்க முடிக்கணும்னு முடிவெடுக்கணும்?"

பத்து வருஷம் நிறைவாகியிருக்குனு பேசும்போது உங்களுக்கு எப்படி இருக்கு?

"என் திரை வாழ்க்கையின் உச்சமா 'அங்காடித் தெரு'னு ஆகிடுச்சு. என் முயற்சி எல்லாம் 'அங்காடித் தெரு'வையும் தாண்டி ஒரு நல்ல படைப்பை எப்போ கொடுக்கப்போறேங்கிற எதிர்பார்ப்பும் ஏக்கமும் எனக்குள்ள இருக்கு. எனக்கு முன்னாடி இருக்கிற பெரிய சுவரா 'அங்காடித் தெரு' இருக்கு. நான் தினம்தினம் ஒரு கதை சொல்லி, அந்த சுவரைத் தாண்ட முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அந்த சுவரைத் தாண்டுகிற படமா 'ஜெயில்' இருக்கும்னு நம்புறேன்."

ரஜினிக்கு சில சிராய்ப்பு; பியர் கிரில்ஸ் கொடுத்த உற்சாகம்! - Man vs Wild ஹைலைட்ஸ்
அடுத்த கட்டுரைக்கு