சினிமா
Published:Updated:

“வலியோடு உரிமை கேட்பவர்களின் கதை!”

ஜி.வி.பிரகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.வி.பிரகாஷ்

தன்னை அண்ணாந்து பார்க்கிற அடித்தட்டு மக்களை தமிழ் சினிமா குனிந்துபார்க்கிறதே இல்லை. சாப்பிட வச்சிருக்கிற காசுக்கு டிக்கெட் வாங்குவாங்க.

"80 சதவிகிதம் நுரையீரல் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் நுழைஞ்சேன். என் நண்பன் வரதன் கண்களில் மரண பீதியைப் பார்த்தேன். ‘ஏதாவது சொல்லணுமா’ன்னு கேட்டான். யோசிச்சேன்... கொஞ்சம் திறமை, நிறைய உழைப்போடு இந்தச் சென்னைக்கு வெறும் நூறு ரூபாயோடு வந்தேன். இப்படி ஆராதிக்கிற குருவையும், மரியாதையாக என்னை நடத்துகிற சமூகத்தையும் பார்த்துட்டேன். 20 வருஷம் விருதுநகரிலிருந்து வந்த என்னை, 25 வருஷமா சென்னை தான் வாழ வச்சிருக்கு. எனக்கான கொஞ்சம் வசதி, உயரம் அடைந்திருக்கேன். என் குழந்தைகளையும் இந்த நகரம் அடையாளம் கொடுத்து வாழவச்சிடும்னு நம்பிக்கை வந்திடுச்சு. திரும்ப வந்திடுவேன்கிற நம்பிக்கையுடன் திரும்பி வந்து இதோ ‘ஜெயில்’, ‘அநீதி'ன்னு இரண்டு படங்களோட தயாராக நிற்கிறேன்” ஆர்வமாகப் பேசுகிறார் வசந்தபாலன். தமிழின் குறிப்பிடத்தக்க, தவிர்க்கமுடியாத இயக்குநர்.

“வலியோடு உரிமை கேட்பவர்களின் கதை!”
“வலியோடு உரிமை கேட்பவர்களின் கதை!”

“ ‘ஜெயில்’ டிரெய்லர் எக்கச்சக்க கவனம் பெற்றிருக்கே”

“தன்னை அண்ணாந்து பார்க்கிற அடித்தட்டு மக்களை தமிழ் சினிமா குனிந்துபார்க்கிறதே இல்லை. சாப்பிட வச்சிருக்கிற காசுக்கு டிக்கெட் வாங்குவாங்க. ஹீரோவும் ஹீரோயினும் சுவிஸ் மலையில் ஆடிப்பாடுறதைக் கைதட்டி ரசிப்பாங்க. மக்கள் திரையைப் பார்ப்பதை மாற்றி, திரை மக்களைப் பார்க்கணும்னு எனக்கு ஆசை. எனக்குக் கிடைச்ச வரவேற்பைக் காப்பாத்திக்கணுங்கிற முனைப்பு. இந்த ஆசை, முனைப்பு, வேகம் மூணும்தான் இந்த ‘ஜெயில்’ உருவாகக் காரணம்.”

“அதென்ன ‘ஜெயில்' ?”

“‘ஜெயில்’ன்னா அதிலிருந்து வந்த மனிதர்களைப் பற்றிக் கிடையாது. ‘ஜெயில்’ன்னா அது ஒரு படிமம். ‘I can't breathe’ன்னு ஜார்ஜ் பிளாய்ட் சொன்னது சுதந்திரத்திற்கான பெரிய வார்த்தையாகிப் போச்சு. இதுவும் சுதந்திரம் வேண்டுகிற மனிதர்களின் பதிவுதான். வலியோடு உரிமை கேட்கும் மனிதர்களைப் பற்றிச் சொல்லியிருக்கேன்.

எஸ்.ராமகிருஷ்ணன்கிட்டே பேசும்போது ஓ.எம்.ஆர், ஐ.டி மக்களைப் பற்றி ஒரு கதை சொன்னார். அது பிடித்திருந்தது. அங்கேயிருக்கிற மக்கள் எப்படி இருக்காங்கன்னு போனால் எனக்கு அங்கே வேறொரு இடம் தெரிஞ்சது. துரைப்பாக்கம் கண்ணகி நகர் செல்லும் வழின்னு ஒரு போர்டு பார்த்துட்டு சந்தில் போய்த் திரும்பினால் பளீர்னு விஸ்தீரணமாக தீப்பெட்டி சைஸில் பெரும் நிலப்பரப்பில் குடிசை மாற்று வாரிய வீடுகள் நிற்குது. வலது பக்கம் சொர்க்கமும், இடதுபக்கம் நரகமும் அப்படியே கண் முன்னாடி தெரியுது. கண்ணகி நகர் மக்கள் இங்கே நம்மகூட இருந்தவங்கதான். மறு குடியேற்றத்தில் அவங்களைத் தூக்கி தூரத்தில் வச்சுட்டாங்க. வேரோடு பிடுங்கி வச்சதில் மக்களோட வாழ்க்கையே துண்டாடி இருக்கு. வானத்தைத் தொடுகிற கட்டடங்களை உருவாக்கிக் கொடுத்திட்டு ஊருக்கு வெளியே இருக்காங்க. ரங்கநாதன் தெருவுக்குப் போனபோது ‘அங்காடித் தெரு’ எடுக்கத் தோணுனது மாதிரி எனக்கு கண்ணகி நகர் பார்த்ததும் ‘ஜெயில்’ மனசுக்குள் வந்துவிட்டது.

“வலியோடு உரிமை கேட்பவர்களின் கதை!”
“வலியோடு உரிமை கேட்பவர்களின் கதை!”
“வலியோடு உரிமை கேட்பவர்களின் கதை!”

எஸ்.ராமகிருஷ்ணன்கிட்டே இந்த வாழ்க்கையைச் சொல்லிட்டேன். புதுசா எழுதி பாக்கியம் சங்கரை வசனம் எழுதச் சொன்னேன். குப்பையைத் தூக்கிப் போடுகிற மாதிரி இந்த மக்களை அப்புறப்படுத்தியிருக்காங்க. இது ஒரு நவீனத் தீண்டாமை. கவிஞர் லிபி ஆரண்யா சொல்றது மாதிரி ‘இங்கே நிலம்தான் வாழ்வு, நிலம்தான் அடையாளம், நிலம்தான் அதிகாரம், நிலம்தான் போராட்டம், நிலம்தான் யுத்தம், நிலம்தான் இனவிடுதலை, நீங்கள் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.”

“இதில் ஜி.வி வந்த விதம் எப்படி?”

“கண்ணகி நகர் பையனா அவ்வளவு பொருத்தமா இருந்தார். அந்தப் பகுதி மக்களோட தனித்த அழகியலை, வாழ்க்கையை ரத்தமும் சதையுமா அவரை வச்சு சொல்லிருக்கேன். நான்தான் அவரை ‘வெயி’லில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினேன். அந்த நன்றியை மனசுக்குள்ளே வச்சிருந்தார். என்னோடு படம் செய்யணும்னு பிரியமா இருந்தார். இடமும் நேரமும் அமைஞ்சதும் உள்ளே வந்துவிட்டார். அவருக்கு இணையாக வாய்த்துடுக்கோடு ஒரு பொண்ணு அபர்ணிதி நடிச்சிருக்கு. படம் பார்த்திட்டு இந்த ரோசா மலரை நீங்க மறக்கவே முடியாது. சிற்பியோட பையன் நந்தன்ராம் எனக்குக் கிடைத்த பெரிய சர்ப்ரைஸ். பிரிச்சு மேய்ஞ்சிட்டான்னு சொன்னால் சரியாக இருக்கும். ஜி.வி, நந்தன்ராம், கோலிசோடா பாண்டி ஒரு தனி கேங். ரங்கநாதன் தெருவைத் திறந்து பார்த்து ஒரு உலகம் காண்பித்த மாதிரி, கண்ணகி நகரை அகழ்ந்தெடுத்திருக்கிறேன். எனக்கு சினிமாவைப் பொழுதுபோக்குச் சாதனமா பயன்படுத்துவதைத் தாண்டி அதை ஒரு ஆயுதமாக மாற்ற முனையும் ஆசை இருந்துகிட்டே இருக்கும். அப்படியும் நடந்திருக்கு. நாம் கண்ணகி நகர் மக்களைப் பார்த்திருப்போம். ஆனால் நின்னு கவனித்ததில்லை. ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நியான் விளக்கு வெளிச்சத்தில் பின்னால் இருக்கும் இருட்டு நமக்குத் தெரிந்ததே இல்லை. அழுக்கும் வியர்வையும் கலந்த அவர்களின் உலகத்தில் காதல், நட்பு, துரோகம், வலி, ஆச்சரியம், நகைச்சுவை, காமம், சுவாரஸ்யம் எல்லாமே இருக்கு. கூத்துப்பட்டறை நடிகர்கள், அந்தப் பகுதி மக்களும் நடிச்சிருக்காங்க. ராதிகா ஜி.வியோட அம்மா. வழக்கமான உச்சிமுகர்ந்து செல்லம் கொஞ்சுகிற அம்மா இல்ல. வேற மாதிரி. அதை அவங்கதான் செய்ய முடியும். இதில் ஒரு நல்ல காதலும் இருக்கு. ஆனால் அந்தக் காதல் ஒரு கால்வாய் மாதிரிதான். அந்தக் காதல் தொட்டுச் செல்லும் கரைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். இவர்களின் காதல் வலியில் பிறந்து, வேதனையை பகிர்தலில் வளர்கிறது. படம் பார்த்த பின்னாடி தெருக்களின் இரைச்சல்கூட உங்களுக்கு வாழ்வின் அர்த்தங்களைச் சொல்லும்.”

“வலியோடு உரிமை கேட்பவர்களின் கதை!”
“வலியோடு உரிமை கேட்பவர்களின் கதை!”
“வலியோடு உரிமை கேட்பவர்களின் கதை!”

“உங்களுக்கும் ஜி.விக்கும் இசை பொருந்தி வரும்...”

“‘வெயில்’, ‘அங்காடித்தெரு’ எல்லாம் எங்களுக்கு உச்சம். ‘வெயிலோடு’, ‘உருகுதே’ எல்லாம் இன்னைக்கும் மனசைப் பிழியுதுன்னு சொல்றாங்க. ‘உன் பேரைச் சொல்லும்போதே’ எல்லாம் எங்கள் காம்பினேஷனில் அல்டிமேட். இதில் பாடகர் அறிவோட மூணு பாடல்கள் இருக்கு. ‘நகரோடி’ என்ற பாடல் ரொம்ப முக்கியமானது. ‘காத்தோடு காத்தானேன்’னு தனுஷ், அதிதி ராவ் பாடி இணையத்தில் 21 மில்லியனைக் கடந்து நிற்குது. காலம் என்மீது கருணை காட்டியதில் அடுத்து ‘அநீதி’, அரசியல் பின்புலமாக வெப்சீரிஸ்னு அடுத்தடுத்து களமிறங்குகிறேன்.”