Published:Updated:

``ஆஸ்கருக்கு கொரியன் மேல ஏன் இவ்ளோ கரிசனம்னு தெரியல!" - ஆஸ்கர் பற்றி வசந்தபாலன்   

வசந்தபாலன்
வசந்தபாலன் ( Photo: Vikatan )

92 வது ஆஸ்கர் விருது விழா நடந்து முடிந்திருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் வசந்தபாலனிடம் பேசினேன்.

``இந்த வருஷம் நடந்த ஆஸ்கர் விருதுலே ரொம்ப ஸ்பெஷல் மொமன்ட்டா பார்க்கிறது கொரியன் படம் `பாரசைட்'க்கு அவார்டு கிடைச்சதுதான். மத்தபடி வழக்கமான ஹாலிவுட் படங்களுக்குத்தான் கொடுத்திருக்காங்க.`பாரசைட்' சிறந்த படமா தேர்ந்தெடுக்கப்பட்டதும், பாங்க் ஜூன் ஹோவை சிறந்த இயக்குநரா தேர்ந்தெடுத்ததையும்தான் சிறப்பா பார்க்கிறேன். வழக்கமா அமெரிக்க படங்களுக்கும் அதோட அரசியலைப் பேசுற படங்களுக்கும் மட்டும்தான் ஆஸ்கர் விருது கொடுப்பாங்க. இப்படித்தான் `அவதார்' படம் வந்தப்போ ,`ஹார்ட்லாக்கர்' படம் ஈராக்கில் நடந்த போரினால் பாதிக்கப்பட்டவரைப் பற்றி பேசியது. இந்தப் படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை வாங்குச்சு. அமெரிக்க அரசியல் எதைப் பத்தி பேச விரும்புதோ அந்த மாதிரிப் படங்களை ஊக்குவிக்குறதுதான் ஆஸ்கர் விருதுகளின் நோக்கமா இருந்தது. இந்த முறை அது கொஞ்சம் தளர்ந்திருக்கு. அதுக்கான உதாரணம்தான் கொரியன் படத்துக்கு விருது கிடைச்சிருக்கிறது."

பாராசைட்
பாராசைட்

``இதை ரெண்டு விதமா பார்க்கிறேன். கான் திரைப்பட விழாவுல பாங்க் ஜூன் ஹோ விருது வாங்கியதால ஆஸ்கர் விருதில் அவரைப் பரிசீலனை பண்ணியிருக்காங்க. ரெண்டாவது, ஒரு குறிப்பிட்ட வகையான நாட்டுடைய படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருதில் பங்கேற்கும் என்ற நிலையை மாற்றி, ஒரு நல்ல படமா இருந்து கான் விழாவுல நுழைஞ்சிருந்தா இந்தப் படங்களுக்கும் ஆஸ்கர் மற்றும் நிறைய விருதுகளுக்கு சாத்தியம் என்ற முக்கியம் கதவு திறக்கப்பட்டிருக்கு. நான் எப்போதும் கான் திரைப்பட விழாவைத்தான் முக்கியமா கருதுவேன். அதுல விருது கிடைக்குற படங்கள் உலக சினிமா தரத்துல எப்போதும் இருக்கும். கடந்த சில வருடங்களாவே ஆஸ்கர் விருதுகளில் சில மாற்றங்களை நம்மாள பார்க்க முடியுது. உலகமயமாக்கலில் வரவேற்கத்தக்க மாற்றமா இதைப் பாக்குறேன். ஆனா, இந்த மாற்றங்களுக்குப் பிறகு, ஏதாவது அரசியல் இருக்கானு எனக்குத் தெரியலை. ஆஸ்கர் விருதுக்கு சவுத் கொரியா மேலே திடீரென்று கரிசனம் என்ன வந்ததுனு தெரியல. இருந்தாலும், இந்த மாற்றத்தை வரவேற்கிறேன்."

``ஆஸ்கர் விருதுக்குப் பின்னாடி அரசியல் இருக்குனு நம்புறீங்களா?"

``இதுக்குப் பின்னாடி ஏதோ ஒரு அரசியல் இருக்கலாம்னு சொல்றேன். அரசியல் பார்வையாளர்கள் இதைச் சரியா சொல்வாங்க. எதையும் உறுதியா சொல்ல முடியலை. ஏன்னா, `ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைச்சப்ப இந்திய சினிமாவுடைய சந்தை மதிப்பை கைப்பற்றுவதற்கான முயற்சியோங்கிற பார்வை இருந்தது. மிஸ் இந்தியா விருது ஐஸ்வர்யா ராய் மற்றும் ஸ்மிதா சென்னுக்கு கிடைச்சப்ப இந்திய சந்தையில் அழகு பொருள்களின் சாதனங்களை விற்பனையை அதிகரிக்க நடந்திருக்குனு தோணுச்சு. நம்ம எல்லாத்தையும் தட்டையான பார்வையில் பார்க்க முடியாத சூழலுக்கு உலகம் இப்போ மாறிடுச்சு. ஒரு காரண காரியத்தோட பார்க்க வேண்டியதா இருக்கு. அப்படித்தான் `பாரசைட்' படத்துக்கு விருது கிடைச்சதையும் பார்க்கிறேன். சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சவுண்டு மிக்ஸிங்கான விருது `1917'-க்குக் கிடைச்சது வரவேற்கத் தகுந்ததா நினைக்கிறேன். ஒரு ஷாட்டில் இருப்பது போன்ற மொத்தப் படத்தையும் எடுத்திருப்பது சிறப்பு."

``ஆஸ்கர் கரிசனம் தமிழ்ப் படங்கள் மீது விழும்னு நினைக்குறீங்களா?"

வசந்தபாலன்
வசந்தபாலன்
Photo: Vikatan

``நம்ம படங்கள் மீது கரிசனமெல்லாம் விழ வேண்டாம். நம்ம நாட்டுப் படங்கள் ஆஸ்கர் விருதுக்கு போகிறளவுக்கு தகுதியுடைய படங்களா நம்ம தயாரிக்கணும்னு நினைக்கிறேன். தகுதியுடன் ஆஸ்கர்குள்ளே நுழைந்து விருது வாங்குவோம். எந்தவொரு ரிசர்வேஷனும் நம்ம மேல புகுத்த வேண்டாம். நாம் தகுதியுடைய இடத்துலதான் இருக்கோம்."

``இதுவரை ஆஸ்கர் தேர்வுப் பட்டியலுக்குச் சென்ற இந்திய படங்கள் தகுதியுடைய படங்கள்தானா?"

கல்லிபாய்
கல்லிபாய்

``இந்த முறை `கல்லி பாய்' படம் ஆஸ்கர் தேர்வுக்குப் போனது. ஆனா, இந்தப் படம் சிறந்த படம் எல்லாம் இல்லை. இந்தியா சார்பில் படங்களைத் தேர்ந்தெடுக்கிற குழுவுக்கு எந்தவித ஐடியாலஜியும் இல்லை. இந்த முறை `லகான்', `விசாரணை' `கல்லிபாய்' அனுப்பினா சரியா இருக்குமோனு ஒரு குத்துமதிப்பாதான் செயல்படுறாங்க. ரொம்பத் துல்லியமா செயல்படுறது இல்லை. ஏன்னா, தேசிய விருதை ஒரு படத்துக்கு கொடுக்குறாங்க, ஆஸ்கர் தேர்வுக்கு வேறொரு படத்தை அனுப்புறாங்க. இந்திய பனோரமா ஒரு படத்தைத் தேர்வு செய்யுது, தேசிய விருதுக்கு வேறொரு படத்தைத் தேர்ந்தெடுக்கிறாங்க. இந்தியா சார்பில் வெளிநாட்டுத் திரைப்பட விழாவுக்கு வேறொரு படத்தை அனுப்புறாங்க. மூணுமே வெவ்வேறு படங்களா இருக்கு. இந்தக் குளறுபடியை சரி செய்யாம எதுவும் பண்ண முடியாது. என்னதான் நல்ல படங்கள் எடுத்தாலும் அதை விருது வாங்க வைக்கிறது கஷ்டமாதான் இருக்கும். இதைத் தாண்டி நாம போகணும். காலம் வரும்ங்கிறதுல எனக்கு உடன்பாடில்லை. இந்தியாவிலிருந்து ஆஸ்கர் தேர்வுக்குப் படங்களை அனுப்புறதுலேயே பெரிய அரசியல் இருக்கு. கமர்ஷியல் படத்தையும் ஆஸ்கருக்கு அனுப்புறாங்க."

``விருதுகள் குறித்து வசந்தபாலன் பார்வை என்ன?"

``விருது கிடைச்சா நமக்கு அதிர்ஷ்டம்னு நினைக்க முடியுது. நல்ல படங்களுக்கு விருது கிடைக்குதா இல்லையாங்கிற கேள்வி எப்பவுமே இருக்கும். உதாரணத்துக்கு, `காவியத் தலைவன்' படத்துக்கு மாநில அரசின் 10 விருதுகள் கிடைச்சது. ஆனா, தேசிய விருதுக்கு அனுப்ப முடியாத சூழல் இருந்தது. அதனால நல்ல படங்களுக்கு விருது கிடைக்கிறது, கிடைக்காமப் போறதுனு எல்லாமே ஜூரி கையிலதான் இருக்கு. போன வருஷம் தேசிய விருதுக்கே இப்படி குளறுபடிகள் நடந்தது. யார் யாருக்கோ விருதுகள் போய் சேர்ந்தது. நல்ல படங்கள் ஓரமா இருந்தது. இப்படிப்பட்ட நிலைமைதான் நீடிச்சுகிட்டு இருக்கு. ஜூரியோட பார்வைகள், தேர்வுகள்னு எல்லாத்துலேயும் அரசியல் இருக்கு. எந்த சினிமாவை ஊக்குவிக்கணும்ங்கிற ஐடியாலஜி ஜூரிகளுக்கு இல்லை. இயக்குநருடைய எக்ஸ்லன்டை மட்டும் சொல்ற சினிமா, நல்ல சினிமாவா இல்லை படத்தோட கருத்தைச் சொல்றது நல்ல சினிமாவா... நீங்க பார்க்கிற படம் அப்படிங்கிறதே தெரியாமல் படத்துக்குள்ள இழுக்கிறது நல்ல சினிமாவா இல்லை சூப்பரா டைரக்‌ஷன் இருக்கு, கேமரா நல்லா நகர்ந்திருக்குனு சொல்றது நல்ல சினிமாவா... எது புது சினிமா எது பெஸ்ட் சினிமா... இந்த வித்தியாசம் தெரியணும். இன்னொரு உலகத்துகுள்ள வாழ்றதுக்காகத்தான் சினிமாவுக்குள்ள போறோம். இதை முதலில் இங்கே இருக்கிற விமர்சகர்களும் ஜூரிகளும் தெரிஞ்சிக்கணும்."

பின் செல்ல