Published:Updated:

``வீடே உலகம்ன்னு கவிதைகள்ல கலங்கடிச்சிட்டாங்க!" - வசந்தபாலனும் லாக் டவுன் போட்டிகளும்

இயக்குநர் வசந்தபாலன்
இயக்குநர் வசந்தபாலன்

ஓவியப்போட்டியைத் தொடர்ந்து கவிதைப்போட்டி நடத்திய இயக்குநர் வசந்தபாலன்!

மார்ச் 22... மக்கள் சுய ஊரடங்கு நடைபெற்ற அந்நாளில் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி ஒன்றை அறிவித்தார் இயக்குநர் வசந்தபாலன். அந்த ஒரு நாளில் 4,500 ஓவியங்கள் வந்து சேர்ந்த நிலையில் அவற்றை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, சிறந்த நான்கு ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து அந்தப் போட்டி முடிவுகளை அறிவித்தார். அதற்கான முடிவுகளை விகடன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். குழந்தைகளுக்கான ஓவியப்போட்டிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்த நிலையில், இளைஞர்களுக்கான கவிதைப் போட்டியையும் அறிவித்திருந்தார். ஓவியப்போட்டியைப் போல இந்தக் கவிதைப்போட்டிக்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது என இயக்குநர் வசந்தபாலனிடம் கேட்டேன்.

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" -  கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்

``குழந்தைகளுக்கான ஓவியப்போட்டியை அறிவிச்சதைப் பார்த்துட்டு நிறைய இளைஞர்கள் எங்களுக்கு ஏதாவது ஒரு போட்டி அறிவிங்கனு கேட்டாங்க. 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் எல்லோருக்கும் ரொம்ப புதுசா இருந்தது. அந்த 21 நாள்களை எப்படி எதிர்கொள்ளப்போறோம்னு பெரிய கேள்விக்குறியா இருந்தது. ஓவியப்போட்டிக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சதுனால இந்த முறை இளைஞர்களுக்கு கவிதைப்போட்டி வைக்கலாம்னு தோணுச்சு. அந்த 21 நாள்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கப்போறோம். அதை ஜெயிலா பார்க்காமல் வீட்டையே உலகமா பார்க்கணும். இந்தக் கவிதைப் போட்டிக்கான தலைப்பு `வீடே உலகம்'னு இருந்தா நல்லாயிருக்கும் தோணுச்சு. இத்தனை நாள் வீட்டை என்னவா பார்த்திருக்கோம், தூங்குறதுக்கான இடமா மட்டும் பார்த்தவங்க, வீட்டை நல்லா கவனிங்க, அதுல ஆயிரம் ரகசியங்கள் ஒளிஞ்சிருக்கும்... இப்படியான தன்மையில நவீன கவிதைகளா அனுப்புங்கனு அறிவிச்சிருந்தேன்.

இயக்குநர் வசந்தபாலன்
இயக்குநர் வசந்தபாலன்

`வீடே உலகம்' அப்படிங்கிறது கான்செப்டா இருந்தாலும் `வீட்டின் உள்ளே சுழலும் பூமி', `வீடென்பது யாதெனில்', `உனக்குள்ளே பிரபஞ்சம்', `தனித்திருக்கும் பிரபஞ்ச சப்தங்கள்'னு நாலு தலைப்புகள் கொடுத்திருந்தேன். மொத்தம் 70 கவிதைகள் வந்திருந்தன. அதுல சிலர் எல்லா தலைப்புக்கும் கவிதைகள் எழுதி அனுப்பியிருந்தாங்க. ஒவ்வொண்ணுமே அசாதாரணமானவைதான். அதுல சிறந்த மூன்று கவிதைகளைத் தேர்ந்தெடுக்கிற பணியை எழுத்தாளர்களும் கவிஞர்களுமான அகரமுதல்வன், லக்‌ஷ்மி சரவணக்குமாரிடம் ஒப்படைச்சேன். அவங்க ரெண்டு பேரும் அதை எல்லாம் படிச்சுப் பார்த்துட்டு அதிலிருந்து சிறந்த மூன்று கவிதைகளைத் தேர்ந்தெடுத்தாங்க. அதுக்கு அவங்க ரெண்டு பேருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். முதல் பரிசு 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு 2,000 ரூபாய் எனப் பரிசுத்தொகை வழங்கப்படும்" என்றவரிடம், ``அடுத்ததாக என்ன போட்டி ப்ளான் பண்ணியிருக்கீங்க?" என்றேன். ``இல்லைங்க. போட்டிகள் போதும். இதுவே பெரிய ப்ராசஸா இருக்கு. இனி என் படத்துக்கான வேலைகள்ல அதிகம் கவனம் செலுத்தணும்" எனச் சிரிக்கிறார்.

முதல் பரிசு : நேர்க்கோட்டில் வசிக்கும் வீடு

அவனுக்குத் திட்டமிருந்தது வீடொன்றை வரைவதாக

எங்கிருந்து தொடங்குவதெனத் தேடி

ஒரு புள்ளியைக் கண்டடைந்தான்

முட்டையை ஒத்திருந்த கறுப்பு புள்ளியிலிருந்து

விளக்கு பூச்சி வெளியானது

லாவகமாக அதனைக் கவ்வ மரநிற பல்லி ஊர்ந்தபோது

சுவரின்றி பற்ற எதுவுமிலாது தவிக்கும் அதற்கு

அறிமுகமானது வண்ணபூச்சு பெயர்ந்த

சுவரொன்றின் விரிசல்

உயிரின் இயக்கத்தை அளக்கும்

உயரத் தாழ்வுகளை ஒத்த கோடுகள்

இருட்டும் நடுங்கியவாறு வந்து சேர்ந்தது

பதற்றத்தோடே அதைப் பற்றிக்கொண்டு

அறைக்குள் முடிவுறும் வீடு

ஒரு வளர்ப்பு பிராணிபோல

கடைவாயில் ஒளி சிந்த காத்திருந்தது.

உடல் நடுங்குகிறது

கைகள்தான் நடுங்குகின்றன

முன்பாதங்கள் உந்த

ஆழத்தை நோக்கிப் பயணிக்கும்

நினைவிலி நிலையில்

கண்கள் மேல்நோக்கி செருக

பற்றியெரியும் ஒற்றை பனைமரத்தின்

சடசடவென முறியும் தோகைகள்

கங்கின் துகள்கள்

காதெல்லாம் அலற

தூரத்துக் கம்மாய் நீரின்

பிரதிபலிப்பில்

மூழ்கும் தேரையின் ஈரத்தில்

மனம் பிசுபிசுக்க

நீர் வளையத்தின் அதிர்வுகளை

உந்தித் தள்ள எத்தனித்து

காத்துக் கிடக்கிறது கூடம்

வீடு நிச்சயம் வெளியேதான் இருக்கும்

- பிரபாகரன் சண்முகநாதன்

இரண்டாம் பரிசு : என் உலகம் சதுரமானது

மஞ்சள் பூசிய தேங்காயும் சிவப்பு வண்ண பூதமுமாய்

வரவேற்கும் என் வீடு!

சாயங்கால பூ மணமாக, நடுவேளை சோற்று வாசமாக

நடமாடித் திரியும் உள்ளூர் காற்று

முல்லைக் கொடி தரை விட்டு

இன்றுதான் எட்டிப் பார்த்தது

மொட்டை மாடியை,

அம்மு குட்டியின் சிங்கப்பல்

அந்தத் தொட்டியில்தான்

புதைக்கப்பட்டுள்ளது ரகசியமாக.

சொல்லிச் செல்லாத தெருநாய்கள்

எப்படியும் வந்துவிடும், இரவு உணவிற்கு

வீட்டருகே வேப்பமரத்தின்

குடுமியை அசைத்துப் பார்க்கிறது

சிட்டுக் குருவி திமிராக

எட்டா பேரண்டம்

நட்சத்திரம் மினுங்க

ததும்பி நிறைகிறது

என் தண்ணீர் சொம்பில்

- உமா ஹரிஹரன்

மூன்றாம் பரிசு : வீட்டின் உள்ளே சுழலும் பூமி

வீடென்பது நிம்மதி

வீடென்பது காதல்

வீடென்பது உலகின்

ஆகச்சிறந்த சமையற்கூடம்

வீடென்பது நூலகம்

இப்படித்தான் போயின

இதுவரை காலங்கள்

கொள்ளை நோயின் சைத்தான்

நகரத்தின் மீது

சர்வாதிகாரம் செலுத்தத் தொடங்கியபோதுதான்

தெரிந்து கொண்டேன்

வீடென்பது நகரத்தின் ஒரு பகுதியுமென்று

- உஷா நேயா

அடுத்த கட்டுரைக்கு