Published:Updated:

"விஷாலின் வசனம், பார்த்திபனின் 'உள்ளே வெளியே' பப்ளிசிட்டி, க்ளைமாக்ஸ் சீன்..." - 'அயோக்யா' இயக்குநர்

சனா

'விஷால்' நடிப்பில் வெளியாகியிருக்கும் `அயோக்யா' படத்தின் இயக்குநர் வெங்கட் மோகன், அந்தப் படம் குறித்த பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

"விஷாலின் வசனம், பார்த்திபனின் 'உள்ளே வெளியே' பப்ளிசிட்டி, க்ளைமாக்ஸ் சீன்..." - 'அயோக்யா' இயக்குநர்
"விஷாலின் வசனம், பார்த்திபனின் 'உள்ளே வெளியே' பப்ளிசிட்டி, க்ளைமாக்ஸ் சீன்..." - 'அயோக்யா' இயக்குநர்

விஷால், ராஷி கண்ணா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம், `அயோக்யா'. அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கியிருக்கும் இப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படம் குறித்து வெங்கட் மோகனிடம் பேசினேன்.

``முதல் படத்தை ரீமேக் படமா எடுக்க என்ன காரணம்?"

``முதல் படமா வேற ஒண்ணுதான் பிளான் பண்ணேன். சில காரணங்களால அது நடக்கல. அதுக்கு முன்னாடி இந்தப் படத்தை டைரக்ட் பண்ண முடியுமான்னு கேட்டாங்க. ஏ.ஆர்.முருகதாஸ் சார் மூலமா வந்த வாய்ப்பு இது. விஷால் சார்தான் இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய அதிக அக்கறை காட்டினார். எனக்கு முன்னாடியே இந்தப் படத்துக்குள் விஷால் சார், தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டது. விஷால் சார் இல்லைன்னா, இந்தப் படம் இல்லை. படத்தோட தயாரிப்பாளரும் என்னை நம்பினார். ரீமேக்கா இருந்தாலும், படத்துல சில மாற்றங்கள் பண்ணியிருக்கோம்."

`` `அயோக்யா' ரிலீஸ் குளறுபடிகள் உங்களுக்கு எந்தளவுக்கு பாதிப்பைக் கொடுத்தது?"

``கண்டிப்பா, வருத்தம் இருந்தது. ரிலீஸ் ஆகுறப்போ, மக்கள் எப்படி ஏத்துக்கப்போறாங்கன்னு ஓர் ஆர்வம் எல்லா இயக்குநருக்கும் இருக்கும். படத்தோட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ரொம்ப இறுக்கமா போய்க்கிட்டிருந்ததுனால, படத்தோட டாக் வெளியே எப்படிப் போகுதுன்னு நான் சரியா கவனிக்கல. முடிஞ்சு ரிலீஸுக்கு ரெடியா இருந்த சமயத்துல, ரிலீஸாகாம பிரச்னையில மாட்டிக்கிட்டப்போ, ரொம்பக் கஷ்டமா இருந்தது. மார்னிங் ஷோ கேன்சல், மதியம் வந்திடும்னு நினைச்சேன். ஒருநாள் தள்ளிப்போகும்னு எதிர்பார்க்கல!"

`அயோக்யா' படத்தின் இயக்குநர் வெங்கட் மோகன்
`அயோக்யா' படத்தின் இயக்குநர் வெங்கட் மோகன்

``ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் நீங்க... அவருடனான நட்பு பற்றிச் சொல்லுங்க?"

`` `துப்பாக்கி' படத்திலிருந்து அவர்கூட இருக்கேன். எப்போவுமே அவர் உதவி இயக்குநர்கள்கூட நெருக்கமான நட்போடு இருப்பார். அவர்கிட்ட இருந்து வந்து படம் பண்ணாலும், அவருடைய படங்கள் பற்றி நம்மகிட்ட விவாதிப்பார். ஏதாச்சும் ஒபீனியன் சொன்னா, கேட்டுப்பார். மற்ற இயக்குநர்கள் இப்படிச் செய்வாங்களான்னு தெரியல. `சர்கார்' படத்துல நான் வொர்க் பண்ணலை. ஆனாலும், எனக்குக் கதை சொன்னார். `அயோக்யா'வுல கமிட் ஆனப்போ, `என் உதவி இயக்குநர்தான்; நீங்க தைரியமா படம் பண்ணலாம்'னு விஷால்கிட்ட சொன்னார், முருகதாஸ் சார்."

`` `சர்கார்' படத்துக்கு முருகதாஸ் மீது கதைத் திருட்டுப் புகார் வந்தது. அவர்கூட வொர்க் பண்ணியிருக்கீங்க. அவர் ஒரு கதையை எப்படி உருவாக்குவார்?"

``ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அந்த வகையில் `சர்கார்' படம் பேப்பரில் வந்த ஒரு செய்தியிலிருந்து உருவான கதை. கதையோட ஒன்லைன் எப்படிக் கிடைச்சாலும், அவர் அதைப் படமா வடிவமைக்கிற விதம் ரொம்ப வித்தியாசமா இருக்கும். ரொம்ப மெனக்கெட்டு உழைப்பார். இத்தனை படங்களை இயக்கிட்டார். ஆனா, முழுசா பேப்பர் வொர்க்ஸ் இல்லாம ஷூட்டிங் போகமாட்டார். ஒவ்வொரு படமும் அவருக்குத் தவம் மாதிரி! `சர்கார்' பிரச்னையின்போது சார்கிட்ட பேசினேன். அவரைப் பத்திகூட இருக்கிற எங்களுக்கு நல்லாவே தெரியும்."

`அயோக்யா' படத்தில் விஷால்!
`அயோக்யா' படத்தில் விஷால்!

`` `அயோக்யா' படத்துல கே.எஸ்.ரவிக்குமார் கேரக்டரை வடிவமைச்ச விதத்தைப் பற்றி?"

``விஷாலுக்கு சமமான கேரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சாருக்கு!. கண்ணாடி மாதிரி ஹீரோ பண்ற எல்லா தவறுகளையும் அவர் பார்த்திருப்பார். ஹீரோவுக்கும், வில்லனுக்குமான கதை இருக்கு அப்படீங்கிறதைவிட, கர்ணனுக்கும் (விஷால்), காதருக்குமான (கே.எஸ்.ரவிக்குமார்) கதைன்னுகூட இதைச் சொல்லலாம். காதர் கேரக்டர் மக்களுக்கு பரீட்சயம் ஆன மாதிரியும் இருக்கணும், நடிகனா பழக்கமில்லாத ஆளாவும் இருக்கணும்னு நினைச்சேன். அதுக்கு ரவிக்குமார் சார் சரியா இருந்தார். வில்லனா தெலுங்குல பிரகாஷ் ராஜ் சார் நடிச்சிருப்பார். ஆனா, தமிழில் பார்த்திபன் சார் பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. ஏன்னா, விஷால் - பார்த்திபன் காம்போ புதுசா இருக்கும்னு பார்த்திபன் சாரை வில்லன் ரோலில் நடிக்க வெச்சேன்."

Vikatan

``பார்த்திபன் `அயோக்யா' படம் குறித்துப் போட்டிருந்த ட்வீட்டைப் பார்த்தீங்களா?"

``பார்த்திபன் சாரே அதை எனக்கு அனுப்பியிருந்தார். ஆனா, அவர் ஏன் இந்த ட்வீட் போட்டிருந்தார்னு முதல்ல புரியல. ஏன்னா, இது `டெம்பர்' படத்தோட அதிகாரபூர்வ ரீமேக்தான். அவர் கேட்டிருக்கணும்னா, தெலுங்குப் படத்துக்குத்தான் கேட்டிருக்கணும். இதைப் பப்ளிசிட்டிக்காகத்தான் பண்ணியிருப்பார்னு நினைச்சேன், அவரும் அதுக்காகத்தான் பண்ணியிருந்தார். `உள்ளே வெளியே' படத்துல ஒரு கெட்ட போலீஸ் நல்ல போலீஸ் ஆவான். ஆனா, `அயோக்யா' க்ளைமாக்ஸ் வேற!"

`அயோக்யா' படத்தில் ராஷி கண்னா
`அயோக்யா' படத்தில் ராஷி கண்னா

``படத்துல இருந்த அரசியல் வசனங்கள் விஷாலுக்காக வைக்கப்பட்டதா?"

``விஷால், `படத்துல இதைப் பண்ணுங்க; அதைப் பண்ணாதீங்க'ன்னு எதையும் சொன்னதில்லை. விஷால் சார் இந்தப் படத்துல நடிச்சதுனால, அவருக்குனு தனியா அரசியல் வசனங்கள் வெச்ச மாதிரி தெரிஞ்சிருக்கலாம். ஆனா, இதுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது, `கர்ணன்' கேரக்டருக்காக எழுதப்பட்ட வசனங்கள், அவ்ளோதான்!"

``படத்தோட க்ளைமாக்ஸ் காட்சி நிஜத்தில் சாத்தியமே இல்லைங்கிற கருத்துகள் சமூகவலைதளங்களில் வருகிறதே?"

``நிஜ வாழ்க்கையில் கண்டிப்பா இப்படியொரு தீர்ப்பு வெளிவர வாய்ப்பு இல்லைதான். இது சினிமா, நிஜக்கதை கிடையாது. கர்ணன் கேரக்டருடைய ஆதங்கத்தைதான் படத்துல சொல்லியிருக்கோம். நிஜ வாழ்க்கையில் எல்லோருக்கும் அந்த ஆதங்கம் இருக்கும். கண்டிப்பா படத்துல வர்ற நீதிமன்றத் தீர்ப்பு நிஜத்தில் நடக்க வாய்ப்பு இல்லை, நடந்தா நல்லாயிருக்கும்... அவ்வளவுதான். நிஜத்தில் இப்படியொரு வழக்கு கோர்ட்டுக்கு வந்தா 25 வருடமா வழக்கு நடக்கும். அதுமட்டுமல்லாம, படத்தோட க்ளைமாக்ஸ் அதிர்ச்சியான ஒண்ணுதான்!"

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..