Published:Updated:

''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது முழு நம்பிக்கை உள்ளது!'' - இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன்

14 சூழலியல் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய்சேதுபதி, நித்யானந்த் ஜெயராமன் உள்ளிட்ட 67 பேர் கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறார்கள்.

சூழலியல் ஆர்வளர் நித்யானந்த் ஜெயராமன் தலைமையில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி 67 பேர் புதிதாக பதிவியேற்கவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்பித்திருக்கிறார்கள்.

அதில் ''கொரோனா வைரஸ் நெருக்கடியின் வேர்கள் வளர்ச்சியின் பெயரால் நிலத்தை அழிக்கும் திட்டங்களில் உள்ளது. ஆனால், இந்தக் கொடும் நெருக்கடிகூட, உலகளாவிய சூழலியல் சரிவால் வரப்போகும் பிரச்னைகளுக்கான ஒரு தொடக்கம் மட்டுமே. நமது நிலத்தின் அழிவை நாம் நிறுத்தவில்லையெனில் இந்த இயற்கை நிகழ்வுகளால் தமிழகம் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் கூடிக்கொண்டே போகும்.

சுற்றுச்சூழல் சீரழிவு ஏழை மக்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களை அளவுக்கதிகமாகப் பாதிக்கும். சமத்துவம் மற்றும் சமூகநீதி கொள்கைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டுமெனில், தமிழ்நாடு இன்னும் வலிமையான சட்டங்களை நிறைவேற்றி, மத்திய சட்டங்களில் இல்லாத தகுந்த சூழலியல் மேற்பார்வையை இங்கு கொண்டு வர வேண்டும்'' எனக்குறிப்பிட்டு 14 சூழலியல் கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த அறிக்கை தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறனிடம் பேசினோம். ''நித்யானந்த் ஜெயராமன் இந்த ஆலோசனையை முன்வைத்து கோரிக்கைகளுடன் அடங்கிய அறிக்கையை அனுப்பினார். தமிழகத்தின் நலனில் அக்கறை கொண்டவர்கள் 67 பேர் கையெழுத்துட்டு அந்த அறிக்கையை முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்திருக்கிறோம். அவர் எப்போதுமே மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பவர். எந்த சூழலிலும் மக்கள் நலனுக்கு எதிராக அவர்எதுவும் செய்யமாட்டார் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு'' என்றார் இயக்குநர் வெற்றிமாறன்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை காலை பதவியேற்க இருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு