கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

அந்தகாரம்

அந்தகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தகாரம்

‘சிம்பிளா சொல்லணும்னா இது ஒரு சூப்பர்நேச்சுரல் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.”

லாக்டெளன் சமயம் இது. எந்தத் திரைப்படத்தின் அப்டேட்டும் வரவில்லை. ஆனால், “நாங்க வர்றோம்” என டிரெய்லருடன் வந்து கவனம் ஈர்த்திருக்கிறது ‘அந்தகாரம் டீம்.’ இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் விக்னராஜன். ‘இந்தப் படத்துல ஏதோ ஒண்ணு இருக்குப்பா’ என சோஷியல் மீடியாக்களில் சீரியஸ் விவாதங்கள் நடந்துகொண்டிருக்க இயக்குநரிடம் பேசினேன்.

அர்ஜுன் தாஸ்
அர்ஜுன் தாஸ்

‘`விக்னராஜன் யார்? அட்லீ எப்படி இந்தப் படத்தின் தயாரிப்பாளரானார்?’’

“ராதாமோகன் சாருடைய உதவி இயக்குநர் நான். ‘அந்தகாரம்’ படத்துக்கு முன்னாடி ‘ஒரே ஞாபகம்’னு ஒரு படம் எடுத்தேன். ஆனா, படம் டிராப். அப்புறம், ஒரு கதை எழுதி அதை நிறைய தயாரிப்பாளர்கள்கிட்ட சொன்னேன். எதுவும் டேக் ஆஃப் ஆகலை. நானும் என் நண்பர் பிரதாப்பும் சேர்ந்து எழுதினதுதான் ‘அந்தகாரம்.’ சில தயாரிப்பாளர்கள்கிட்ட கதை சொன்னோம். வொர்க் அவுட் ஆகல. அதனால இதை பைலட் படமா ஆரம்பிக்கலாம்னு நினைச்சு எடுத்தோம். அதுக்குப் பணம் தந்த என் அம்மாதான் இந்தப் படம் ஆரம்பமாக முக்கிய காரணம். அப்புறம், பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்க முன்வந்தாங்க. படம் முழுக்க எடுத்து முடிச்சபிறகு, அட்லீ சார்கிட்ட அப்ரோச் பண்ணினோம். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போய் இந்தப் படத்துக்குள்ள வந்ததும் நிறைய கவனம் கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு.”

வினோத் கிஷன், பூஜா
வினோத் கிஷன், பூஜா

‘` ‘அந்தகாரம்’னு தலைப்பே கொஞ்சம் வித்தியாசமா இருக்கே... என்ன கதை?’’

“இருள், காரிருள்னு சொல்ற மாதிரி, இருட்டினுடைய உச்சக்கட்ட வார்த்தைதான் ‘அந்தகாரம்.’ அது மாதிரிதான் இந்தப் படமும். ஒரு கண்பார்வையற்ற மந்திரவாதி, தன்னுடைய கரியர் பத்தின விரக்தில இருக்கிற கிரிக்கெட் வீரர், ஒரு மனநல மருத்துவர்... இந்த மூணு பேருடைய கதைதான் படம். மூணு கதைகள் ஒரு இடத்துல ஒண்ணா சேரும். ஒவ்வொருத்தரும் அவங்க ளுக்கான சவாலை முடிக்க ஓடிக்கிட்டிருப்பாங்க. ஒருத்தருடைய தாக்கம் இன்னொருத்தருடைய வாழ்க்கைல அவங்களுக்குத் தெரியாமலே இருக்கும். இதுல அமானுஷ்யமும் பேசப்பட்டி ருக்கு. அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், குமார் நடராஜன்னு இந்த மூணு பேரும்தான் பிரதான கதாபாத்திரங்களா நடிச்சிருக்காங்க. ‘சிம்பிளா சொல்லணும்னா இது ஒரு சூப்பர்நேச்சுரல் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.”

வினோத் கிஷன்
வினோத் கிஷன்

‘`நடிகர்களை எப்படித் தேர்ந்தெடுத்தீங்க?’’

“எல்லோரையும் ஆடிஷன் வெச்சுதான் தேர்ந்தெடுத்தேன். ‘கைதி’ படத்துக்கு முன்னாடியே, அர்ஜுனை எனக்கு நல்லா தெரியும். ரொம்பத் திறமையான நடிகர். இந்தப் படம் முதல்ல வந்திருந்தா, அர்ஜுன் யார்னு எல்லோரும் தேடியிருப்பாங்க. இப்போ ‘கைதி’ அவருக்குப் பெரிய விசிட்டிங் கார்டா கிடுச்சு. அதுவும் நல்லதுதான். மக்கள் ஈஸியா கனெக்ட் பண்ணிப்பாங்க. ‘நான் மகான் அல்ல’ படத்துல வில்லனா நடிச்சிருப்பார், வினோத். இதுல கண்பார்வையற்றவரா நடிச்சிருக்கார். அந்த கேரக்டர் மேல இரக்கம் வர்ற மாதிரியெல்லாம் படத்துல காட்டலை. கண் பார்வையற்ற நிறைய பேரைச் சந்திச்சு அவங்க எப்படி நடப்பாங்கன்னு கவனிச்சு அதே மாதிரி ப்ராக்டீஸ் பண்ணி நடிச்சி ருக்கார். ரொம்ப யதார்த்தமா இருக்கும். எஸ்எஸ் மியூசிக் மூலமா பிரபலமான பூஜா ரொம்ப முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்காங்க.”

அந்தகாரம்
அந்தகாரம்

‘`பாடகர் பிரதீப் குமார் ‘சில்லுக்கருப்பட்டி’ படம் மூலமா இசையமைப்பாளரா கவனிக்க வெச்சார். அவர்தான் இந்தப் படத்துக்கும் இசையமைப்பாளரா?’’

‘`இந்தப் படத்துக்கு நல்ல டெக்னிக்கல் டீம் கிடைச்சி ருக்கு. பிரதீப் பிரமாதமா இசையமைச்சுக் கொடுத்தி ருக்கார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தோட எடிட்டிங் எவ்ளோ சூப்பரா இருந்தது? அதே எடிட்டர் சத்யராஜ் நடராஜன்தான். ஒளிப்பதிவு என் நண்பர் எட்வின். டிராப் ஆன என் படத்துக்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர். படத்துல மூணு கதைகளுமே வெவ்வேற விஷயங்களை நோக்கி இருந்தாலும் அதுல இருக்கிற இருள் ஒண்ணுதான். அந்த இருள்தான் படத்தின் கருங்கிறதனால அதை விஷுவலா காட்ட ரொம்பவே உழைச்சிருக்கார். ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு கலர் பேலட், லென்ஸ்னு வித்தியாசம் காட்டியிருப்பார்.’’

அர்ஜுன் தாஸ்
அர்ஜுன் தாஸ்

‘`நிறைய த்ரில்லர் படங்கள் வருது. அதுல ‘அந்தகாரம்’ எப்படி தனிச்சுத் தெரியும்னு நினைக்கிறீங்க?’’

“மக்கள் நிறைய த்ரில்லர் படங்களைப் பார்த்திருக்காங்க. இப்போ மத்த மொழிப் படங்களையும் தேடித்தேடிப் பார்க்குறாங்க. ஆனா, இது ஒரு வழக்கமான த்ரில்லர் படமா இருக்காது. இந்தப் படத்துல ஒரு சீனை மிஸ் பண்ணிட்டாக்கூட படம் புரியாமல் போக வாய்ப்பிருக்கு. காரணம், அந்த சீனுடைய கனெக்ட் அடுத்து அஞ்சு சீன் கழிச்சு இருக்கும். திரைக்கதையைத்தான் இந்தப்படத்தோட பலமா பார்க்குறேன். படத்துக்குள்ள இருக்கிற அந்த அடர்த்தியான இருள் உங்களை நிச்சயம் சூழ்ந்திடும். முதல் முறை பார்க்கும்போது கவனிக்காத, புரியாத விஷயங்கள் எல்லாம் அடுத்த முறை பார்க்கும்போது புதுசா இருக்கும், அது ஏன்னு புரியும். த்ரில்லர் ஜானர் பிரியர்களுக்கு நிச்சயமா ‘அந்தகாரம்’ செம ட்ரீட்டா இருக்கும்.”

இருட்டுக்குள் தன் நம்பிக்கை ஒளியைத் தேடும் இயக்குநருக்கு வாழ்த்துகள்.