Published:Updated:

``படம் பார்த்ததும் விஜய் சார் கொடுத்த நம்பர், அஜித் சார் சொன்ன அந்த வார்த்தை!'' - இயக்குநர் விஜய்

'மதராசபட்டினம்'

"அந்தச் சமயத்துல ரொம்ப பெரிய பட்ஜெட் இது. அகோரம் சாருடைய நம்பிக்கைதான் 'மதராசபட்டினம்' படமா உருவானதுக்கு முக்கிய காரணம்." - 'மதராசபட்டினம்' படம் குறித்து அதன் இயக்குநர் விஜய் பேட்டி. #10YearsOfMadrasapattinam

``படம் பார்த்ததும் விஜய் சார் கொடுத்த நம்பர், அஜித் சார் சொன்ன அந்த வார்த்தை!'' - இயக்குநர் விஜய்

"அந்தச் சமயத்துல ரொம்ப பெரிய பட்ஜெட் இது. அகோரம் சாருடைய நம்பிக்கைதான் 'மதராசபட்டினம்' படமா உருவானதுக்கு முக்கிய காரணம்." - 'மதராசபட்டினம்' படம் குறித்து அதன் இயக்குநர் விஜய் பேட்டி. #10YearsOfMadrasapattinam

Published:Updated:
'மதராசபட்டினம்'

2010... இயக்குநர் ஏ.எல்.விஜய், ஆர்யா, ஜி.வி.பிரகாஷ் என மூவருக்குமே தங்கள் கரியரில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் 'மதராசபட்டினம்'. இப்போது படம் ரிலீஸாகி 10 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறது. இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் பேசினேன்.

'' 'மதராசபட்டினம்' படத்துக்கான ஒன் லைன் எப்படித் தோணுச்சு?''

"நான் லயோல காலேஜ்ல படிச்சிக்கிட்டு இருந்தப்போ என் இங்கிலீஷ் புரொஃபசர் மனோகர் சார் இந்திய அரசியல் தலைவர்களைப் பத்தி நிறைய விஷயங்கள் சொல்லுவார். அவர் ஒவ்வொருவர் பற்றியும் கதை கதையாய் சொல்றது அவ்ளோ சுவாரஸ்யமா இருக்கும். ஒருநாள் இந்திய அரசியல் தலைவர் ஒருவருக்கும் பிரிட்டன் பெண்ணுக்கும் இடையே இருந்த காதல் கதையைப் பற்றிச் சொன்னார். அது என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. என் முதல் படம் பண்றதுக்கு முன்னாடியே இந்தக் கதையை வொர்க் பண்ணி படமா பண்ணணும்னு ஆசை இருந்தது. 'கிரீடம்', 'பொய் சொல்லப்போறோம்'னு ரெண்டு படங்கள் முடிச்சவுடன் நீரவ் ஷா சார் என்கிட்ட 'அடுத்து என்ன?'னு கேட்டார். அப்போ நான் இந்தக் கதையுடைய ஒன்லைனை சொன்னேன்.

எனக்கு நீரவ் சார் எப்படிப் பழக்கம்னா 'கிரீடம்' படத்துல 'அக்கம் பக்கம்' பாடலை அவர்தான் ஷூட் பண்ணிக் கொடுத்தார். இந்த ஒன்லைனைக் கேட்டுட்டு, 'நல்லாயிருக்கு... நாம ஆர்யாவை ட்ரை பண்ணிப் பார்க்கலாமே'னு சொன்னார். அவரும் ஆர்யாவும் நல்ல நண்பர்கள். அடுத்த நாள், ஆர்யாகிட்ட டைம் வாங்கிக்கொடுத்தார். '1947-ல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சுனு இந்தியா முழுக்க சந்தோஷமா இருக்காங்க. ரெண்டு பேரைத் தவிர. இந்தச் சுதந்திரம் அவங்க காதலை பிரிக்குது'னு ஆர்யாகிட்ட சொன்னேன். அவருக்கும் லைன் ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர் ஏ.ஜி.எஸ் கம்பெனிக்கு படம் பண்றதா கமிட்மென்ட் இருந்தது. அப்படித்தான் கல்பாத்தி அகோரம் சாரை சந்திச்சு இந்தக் கதையைச் சொன்னேன். அந்தச் சமயத்துல ரொம்ப பெரிய பட்ஜெட் இது. அகோரம் சாருடைய நம்பிக்கைதான் 'மதராசபட்டினம்' படமா உருவானதுக்கு முக்கிய காரணம்."

''வரலாற்றுப் படம்... நிறைய தகவல்களைத் திரட்ட வேண்டியது இருந்திருக்குமே?''

'மதராசபட்டினம்'
'மதராசபட்டினம்'

"ஆர்ட் டைரக்டர் நாகு சார் என்கிட்ட முத்தையா சாருடைய 'Madras Past and Present' புத்தகத்தைக் கொடுத்தார். அதுல மெட்ராஸ் அப்போ எப்படி இருந்தது, இப்போ எப்படி இருக்குனு இருக்கும். அதைப் பார்த்தவுடன்தான் மெட்ராஸை பேக் டிராப்பா வெச்சு போகலாம்னு முடிவு பண்ணேன். அப்புறம் மெட்ராஸ் பத்தி நிறைய படிக்க ஆரம்பிச்சேன். இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட்ல வொர்க் பண்ண சுதந்திரத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்கள் நிறைய தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா சொல்லுங்கனு நா.முத்துக்குமார்கிட்ட சொல்லியிருந்தேன். அப்படி அவர் சொன்னவர்தான் பிரபஞ்சன் சாரும் அஜயன் பாலா சாரும். நான் சொன்ன கதையில இன்னும் ஆழமா வொர்க் பண்ணணும்னு அந்தமான் கிளம்பிப் போனோம். அங்கப்போன மூணாவது நாள் எனக்கு க்ளைமாக்ஸுக்கான ஐடியா கிடைச்சுடுச்சு. நான் லீனியரா போகலாம்னு முடிவு பண்ணிதான் வொர்க் பண்ண ஆரம்பிச்சோம். அப்படிப் போகும்போது எனக்கு இப்போ இருக்கிற மெட்ராஸையும் அப்போ இருந்த மெட்ராஸையும் அடுத்தடுத்து காட்ட ரொம்ப வசதியாவும் இருந்தது."

''ஹீரோ பரிதிக்கான கேரக்டர் உருவானது எப்படி, ஹீரோவை சலவைத் தொழிலாளரா காட்ட என்ன காரணம்?

"ஆர்யாவுக்கு மிகப் பெரிய நன்றி சொல்லணும். எனக்கு அவ்ளோ உறுதுணையா இருந்தார். ஒன்றரை வருஷம் இந்தப் படத்துக்காக உழைச்சார். பிரிட்டிஷ் பொண்ணை காதலிக்கிற இந்தியப் பையன்னு மட்டும்தான் ஆரம்பத்துல வெச்சிருந்தேன். அவருக்கான கேரக்டரை எழுதும்போது, நான் படிச்ச நிறைய விஷயங்கள் உதவியா இருந்தது. பிரிட்டிஷ்காரங்க அவங்க கோட்டை ஏரியா இருக்கிற இடத்துக்கு மத்தவங்க யாரையும் விடமாட்டாங்க. சலவைத் தொழிலாளர்களை மட்டும் அவங்க துணிகளைத் துவைக்கவும் வீட்டு வேலை செய்யவும் பயன்படுத்திக்கிட்டாங்க. அதனால சலவைத் தொழிலாளர்கள் மட்டும் கோட்டைக்குள்ள போக வர இருப்பாங்க. இப்படியான இடத்துல ஒரு ஹீரோ இருந்தால் ரெண்டு பேரும் ஈஸியா சந்திச்சுக்கிறதுக்கு வாய்ப்பா இருக்குமேனு தோணுச்சு. அப்போ குஸ்தி ரொம்ப பாப்புலர். பிரிட்டிஷை எதிர்க்குறான்னா அவன் வீரமாகவும் தைரியமாகவும் இருக்கணும். அதுக்காகத்தான் குஸ்தியைக் கொண்டுவந்தேன்."

''ஏமி வில்கின்சன் கேரக்டர்ல நடிக்க எத்தனை பேரை ஆடிஷன் பண்ணீங்க?

ஏமி ஜாக்சன்
ஏமி ஜாக்சன்

"ஹீரோயின்தான் படத்துல முக்கியமே. அதனால ஃபாரினர்ஸ், 180 பேரை ஆடிஷன் பண்ணேன். என்னுடைய முதல் சாய்ஸ் அமெரிக்க நடிகை வனஸா ஹட்ஜன்ஸ். அவங்க 7 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாங்க. படத்துடைய பாதி பட்ஜெட் அது. அப்போ அசிஸ்டென்ட், 'மிஸ் டீன் வேர்ல்ட்' டைட்டிலை ஜெயிச்ச பொண்ணுனு ஏமி போட்டோவை காட்டினாங்க. அப்போ அவங்க பெயர்கூட தெரியாது. பார்த்தவுடன் ரொம்ப பிடிச்சுப்போய் லண்டன்ல இருக்கிற ஏஜென்ட்கிட்ட 'இந்தப் பொண்ணை தேடுங்க. நான் லண்டன் வரும்போது ஆடிஷன் வைக்கணும்'னு சொல்லிட்டேன். அவரும் சில நாள்கள் கழிச்சு, 'சொல்லிட்டேன் சார். அந்தப் பொண்ணு வந்துடும்'னு அவ்ளோ நம்பிக்கையா சொன்னார். நான் அதை நம்பி அகோரம் சார்கிட்ட, ஆர்யாகிட்ட இந்தப் பொண்ணுதான் ஹீரோயின்னு சொல்லிட்டேன். ஹீரோயின் கிடைச்சுட்டாங்கன்னு சந்தோஷமா லண்டன் போன எனக்கு செம ஷாக். அந்தப் பொண்ணு வரவேயில்லை. '180 பேர் வந்திருக்காங்க. ஆனா, அந்தப் பொண்ணைப் பிடிக்க முடியலை'னு சொன்னதும் அவங்களை செமயா சத்தம்போட்டுட்டேன்.

வேற வழியில்லாமல் ரொம்ப கோபத்துல வந்தவங்களை ஆடிஷன் பண்ணிட்டு இருந்தேன். யாரையும் பிடிக்கலை. மூணாவது நாள் ஆடிஷன் முடியப் போற சமயத்துல ஏமி வரிசையில நின்னுட்டு இருந்தாங்க. அவங்களா இந்த மாதிரி ஆடிஷன் நடக்குதுனு கேள்விப்பட்டு வந்திருக்காங்க. அவங்களைப் பார்த்ததும் நேரா அவங்கக்கிட்ட போய், 'நீங்கதான் ஹீரோயின்'னு சொல்லிட்டு போட்டோஷூட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டேன். அப்புறம் விசாரிச்சா அந்தப் பொண்ணு லண்டனே இல்லையாம். லிவர்பூல்ல இருந்து ஆடிஷனுக்காக லண்டன் வந்திருக்கேன்னு சொன்னாங்க. மறுநாள் அவங்க அப்பாவை வரவெச்சு படத்துல கமிட் பண்ணப் பேசினோம். இந்தியன் சினிமானு சொன்னாலே பாலிவுட்தான் அவங்களுக்குத் தெரியும். இதுவும் பாலிவுட் படம்தான்னு சொல்லி ஒத்துக்க வெச்சோம். அப்போ ஏமிக்கு 16 வயசுதான். மைனர்ங்கிறதுனால நிறைய டாக்குமென்ட்ல கையெழுத்து போடவேண்டியிருந்தது. எனக்கு ஏமி கிடைச்சா போதும்னு கேட்கிற இடத்துல எல்லாம் கண்ணை மூடிட்டு கையெழுத்து போட்டேன். எப்படியாவது அவங்களை நடிக்க வெச்சிடலாம்னு நம்பிக்கை இருந்தது. ஏமிதான் படத்துக்கு பெரிய ப்ளஸ். ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருந்தாங்க. அதே சமயம், ரொம்ப டெடிகேஷன். அவங்களை தமிழ் பேசவெச்சது எல்லாம் மறக்க முடியாத அனுபவம்."

''பாடல்கள் எல்லாமே செம ஹிட்... ஜி.வி.பிரகாஷ் பற்றி சொல்லுங்க?''

"முதல்ல 'பூக்கள் பூக்கும் தருணம்' பாடலே இல்லை. ஜி.வி.பிரகாஷ்தான் 'இப்படி ஒரு ட்யூன் கம்போஸ் பண்ணியிருக்கேன். இதைப் பயன்படுத்துங்க'ன்னு சொன்னார். ட்யூன் எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, எங்க இந்தப் பாடலை வெக்கிறதுனு தெரியலை. அப்புறம்தான், ஏமி முதல்முறையா தமிழ் பேசுற இடத்துல வைக்கலாம்னு தோணுச்சு. இந்தப் படத்துல ஜி.வியுடைய பங்கு ரொம்ப பெருசு. முதன்முதலா எழுதி ரெக்கார்ட் பண்ண பாடலும் இதுதான். ஜி.வி.யுடைய ட்யூன், பேக்ரவுண்ட் ஸ்கோர், ரூப்குமார் ரத்தோட் சாருடைய குரல், முத்துக்குமாருடைய மேஜிக்னு எல்லாமே இந்தப் பாடலை பெரிய இடத்துக்கு எடுத்துக்கிட்டு போயிடுச்சு. தினமும் சாயந்திரம் 5 மணி ஆனா, இந்தப் பாட்டுக்கான மான்டேஜ் எடுக்க ஆரம்பிச்சுடுவோம்."

'' 'கோலியை குச்சி வெச்சு அடிச்சா அதுதான் கோல்ஃப்', '400 வருஷம் கழிச்சு நம்ம திருப்பி அடிக்கிறோம்', 'பிரிட்டன்ல எக்கனாமிக்கல் டவுன்ஃபால், இவங்க என்னமோ நமக்கு சுதந்திரம் கொடுக்கிற மாதிரி பேசுறாங்க...' இந்த மாதிரி வசனங்கள் படத்துக்கு பெரிய பலமா இருந்ததே!''

Vijay, Amy Jackson
Vijay, Amy Jackson

"படத்துக்கு முழுமையா வசனம் எழுத எனக்கு நேரமில்லை. இதுல வசனம் எழுத எனக்கு பெரிய உதவியா இருந்தது நான் 'காஞ்சிவரம்' படத்துக்கு வசனம் எழுதின அனுபவம்தான். பிரியதர்ஷன் சார் என்னை அந்தப் படத்துக்கு வசனம் எழுதவெச்சார். நான் இயக்குநரான பிறகு, அந்தப் படத்துல வொர்க் பண்ணேன். தவிர, பிரபஞ்சன் சார், அஜயன் பாலா சார்கிட்ட பேசும்போது எடுத்துக்கிட்ட விஷயம் எல்லாம் எனக்கு ரொம்ப உதவியா இருந்தது. 'மதராசபட்டினம்' படத்துக்கு மட்டும் ஸ்பாட்லதான் வசனம் எழுதினேன். இந்த சீன்ல என்ன சொல்லப்போறோம்னு என் மனசுல ரொம்ப தெளிவா இருந்ததுனால அது வொர்க் அவுட்டாச்சு. ஆனா, இது தப்பான ப்ராக்டீஸ். வசனத்தைப் பொறுத்தவரை இந்தப் படம் பெரிய பாடத்தை கத்துக்கொடுத்தது. நீங்க சொன்ன 'பிரிட்டன்ல எக்கனாமிக்கல் டவுன்ஃபால்' வசனத்தை கமல் சார் ரொம்ப பாராட்டினார்."

''இந்தப் படத்துக்கு கிடைச்ச மறக்க முடியாத பாராட்டு என்ன?''

"படம் எடுக்கிற ப்ராசஸை ரசிக்கிறேனே தவிர ரிசல்ட்டை பத்தி யோசிக்கிறதில்லை. செய்ற வேலையை மனசுக்கு உண்மையா செய்யணும் அவ்ளோதான். இந்தளவுக்கு பாராட்டு கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. விஜய் சாருடைய மனைவி சங்கீதா மேடம் படம் பார்த்துட்டு என்கிட்டயும் ஜி.வி.கிட்டயும் அரை மணி நேரம் படத்தைப் பத்தி பேசினாங்க. அப்புறம் அவங்க சொல்லி விஜய் சார் படம் பார்த்தார். வெளியே வந்தவுடன், 'நம்பர் எடுத்துக்கோங்கணா. என்கூட படம் பண்ணணும்னு நினைச்சா கால் பண்ணுங்க'னு சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. விக்ரம் சார் படம் பார்த்துட்டு பேசினார். அவருக்கு இந்தப் படத்துக்கு முன்னாடி சொன்ன 'தெய்வத்திருமகள்' படம் உடனே ஆரம்பமாச்சு. ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார் போன் பண்ணி, 'படம் எப்போவேணாலும் பண்ணு விஜய். ஆனா, இப்போ ஆபீஸ் வந்து அட்வான்ஸ் வாங்கிக்கோ'னு சொன்னார். இதெல்லாம் எனக்கு புதுசா இருந்தது. நிறைய இயக்குநர்கள், நடிகர்கள் எல்லோரும் பாராட்டினாங்க. ரெண்டு முக்கியமான விஷயம் என் வாழ்நாள்ல மறக்கவே முடியாது. பாலா சாருக்கு ஆர்யா படத்தை போட்டுக்காட்டினார். படம் பார்த்துட்டு வெளியே வந்தவுடன், அவர் கழுத்துல இருந்த ஸ்படிக மாலையை என் கழுத்துல போட்டுவிட்டார். அதை இன்னமும் பத்திரமா வெச்சிருக்கேன். எல்லா டெக்னீஷியன்கள் பத்தியும் பாராட்டினார்.

பிரியதர்ஷன் மாதிரி என்னுடைய இன்னொரு குரு எடிட்டர் மோகன் சார்தான். எனக்கு திரைக்கதை சொல்லிக்கொடுத்ததும் அவர்தான். நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தபோது நிறைய விளம்பரங்கள் இயக்கிட்டு இருந்தேன். அப்போ 'எம்.குமரன்', 'தாஸ்', 'உனக்கும் எனக்கும்'னு அவங்களுடைய எல்லா படங்களுக்கும் நான் டிஸ்கஷன்ல இருந்திருக்கேன். அவர் கதை பேசுறதைப் பார்த்தால் அவ்ளோ ஆசையா இருக்கும். திரைக்கதைனு சொன்னாலே பாக்யராஜ் சார்தான் ஞாபகத்துக்கு வருவார். மோகன் சார் இன்னொரு வெர்ஷன். அவர் போன் பண்ணி பாராட்டினார். அஜித் சார் படம் பார்த்துட்டு 'படம் பார்த்தேன். சூப்பரா இருந்தது. ரொம்ப சந்தோஷப்படுறேன் விஜய்'னு பாராட்டினார். நான் மதுரையில இருந்தப்போ கே.பி சார் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணாங்க. நான் மதுரையில இருக்கேன்னு சொன்னதும் நான் இருந்த ஹோட்டலுக்கு ஃபேக்ஸ் அனுப்பினார் கே.பி சார். அது 5 பக்க லெட்டர். அதுல ஒவ்வொருத்தர் பத்தியும் அவ்ளோ டீடெய்லா எழுதியிருந்தார். அதைப் படிச்சுட்டு என்ன ரியாக்ட் பண்றதுனே தெரியலை. என் கண்ணுல இருந்து சந்தோஷக் கண்ணீர்தான் வந்தது. அந்த லெட்டர்தான் எனக்கு இதுவரைக்கும் கிடைச்ச மிகப்பெரிய விருதா நினைக்கிறேன்."