Published:Updated:

"`தெய்வத்திருமகள்' க்ளைமேக்ஸை பானிபூரி சாப்பிடும்போதுதான் பிடிச்சேன்!" - இயக்குநர் விஜய்

விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த தெய்வத் திருமகள்' 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அனுஷ்கா, அமலாபால், சந்தானம், சாரா என அதில் நடித்த அத்தனை பேருமே இன்றும் கதாபாத்திரங்களாக மலர்கிறார்கள். படத்தின் இயக்குநர் விஜய்யிடம் பேசினேன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'' 'தெய்வத்திருமகள் பத்து வருஷம் போனதே தெரியல. பசுமையான நினைவுகள் நிறையவே மனசிலாடுது. முதல் நாள் ஷூட் ஆரம்பிச்சதுல இருந்து படம் முடியற வரையுமே அவ்ளோ எக்ஸைட்மென்ட்டா இருந்தேன். என்னோட மத்த படங்கள்ல வேணா, 'அதுல உழைச்சிருக்கோம்... அது என் படம்'னு சொல்லிக்கலாம். ஆனா, 'தெய்வத்திருமகள்' முழுக்க முழுக்க விக்ரம் சார் படம். 'மதராசப்பட்டினம்' முடிச்சிட்டு யூடிவியோட மீட்டிங் இருந்துச்சு. அங்கே போனா விக்ரம் சாரும் இருந்தார். அப்ப இந்தப் படத்தோட ஐடியாவை சொன்னேன். அப்புறம் டீட்டெயிலா கதையைக் கேட்டார். அவருக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. உடனே ஷூட் கிளம்பிட்டோம்.

இந்த படத்துல விக்ரம் சாரை போலவே சாராவோட கேரக்டரும் முக்கியமானது. நான் டைரக்‌ஷனுக்கு வர்றதுக்கு முன்னாடி விளம்பர படங்கள் இயக்கிட்டு இருந்தேன். அந்த டைம்ல ஒரு காபி விளம்பரம் ஷூட் பண்ணும் போது ஒரு ஒன்றரை வயசு குழந்தையை பாத்தேன். சில வருஷங்களுக்குப் பிறகு யதேச்சையா அந்த குழந்தையை பார்த்தா, நாலரை வயசுல தேவதையா இருந்துச்சு. உடனே விக்ரம் சார்கிட்ட 'தேவதையை கண்டுபிடிச்சாச்சு'னு மெசேஜ் அனுப்பினேன். ஸ்பாட்ல அந்த குழந்தைக்கிட்ட அவர் காட்டின அன்பு இன்னமும் நல்லா ஞாபகத்துல இருக்கு. சாராவுக்காக சாக்லெட், பொம்மைகள்னு ஒவ்வொரு நாளும் சர்ப்ரைஸ் கிஃப்ட்ஸ் கொடுத்திட்டுப்பார். அந்த அன்பினால்தான் ஸ்கிரீன்லயே அந்த பிணைப்பு இயல்பா இருந்துச்சு.

sara and vikram
sara and vikram

இந்தப் படம் வொர்க் பண்றதுக்கு முன்னாடி விக்ரம் சாரும், நானும் நோட் புக்கெல்லாம் எடுத்துட்டு போய் மனநலம் குன்றியவர்கள் பலரையும் சந்திச்சோம். மனநல மருத்துவர்கள் பலரைப் பார்த்தோம். 'பபபாப்பா...' பாடல் ஷூட் தான் முதல்ல ஆரம்பிச்சோம். நாசர் சாருக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் பொருந்தும். ப்யூர் ஆக்டர்.

க்ளைமாக்ஸ்ல அந்த குழந்தையை கோர்ட்ல நிக்க வச்சிடுவாங்க. 'நீ யார்கிட்ட இருக்கணும்'னு அதுக்கிட்ட கேட்கும் போது 'நான் அப்பாகிட்ட இருக்கணும்'னு அந்த குழந்தை சொல்லும்னு சிம்பிளா வெச்சிருந்தோம். ஆனா, அப்புறம் அந்த குழந்தை பக்கம் பக்கமா டயலாக் பேசுற மாதிரி சீன் வெச்சோம். எனக்கு திருப்தி இல்ல. ஆனா, என் அசிஸ்டென்ட்ஸ் 'சூப்பரா இருக்கு'னு சொன்னாங்க. ஆனாலும் எனக்கு திருப்தி இல்ல. சரி, வெளியே பானிப்பூரி சாப்பிட்டு வந்து யோசிப்போம்னு கிளம்பினோம். அங்கே போற வழியில தோணின க்ளைமேக்ஸ்தான் இப்ப படத்துல வரும் க்ளைமேக்ஸ்.

ரெண்டு பேருமே குழந்தைங்க. இந்த கோர்ட்டோ, அங்கே இருக்கற போலீஸ் ஆபீசர்ஸோ அவங்க யாருக்கும் இவங்களோட உணர்வுகள் புரியாது. விக்ரம் அந்த குழந்தையை பாத்தா என்ன ரியாக்ட் பண்னுவார், அப்பாவை ரொம்ப நாள் கழிச்சு பார்க்குற குழந்தை என்ன ரியாக்ட் பண்ணும்னு இந்த உலகத்தை மத்தவங்க பார்க்கவைக்கணும்னு நினைச்சேன். தீம் மியூசிக்கை இன்னும் ஸ்ட்ராங்கா கேட்டு வாங்கி அதையும் சேர்த்தேன். டயலாக் எதுவுமே இல்லாமல், அவங்களோட உலகத்தை கொண்டு வந்தோம். இருந்தாலும் இது கொஞ்சம் ரிஸ்க்கான க்ளைமாக்ஸாவும் இருக்கும்னு ஃபீல் பண்ணோம். அந்த சீனை ஷூட் பண்ணும்போது விக்ரம் சார் கூண்டுல நிக்கிறதுக்கு பதிலா, சாராவோட நிஜ அப்பாவே கூண்டுல விக்ரம் சார் கெட்அப் போட்டு நிற்கவெச்சோம். சாராவும் அவங்க அப்பாவும் பண்ணின விஷயங்கள்தான் க்ளைமாக்ஸா வந்துச்சு. அதன்பிறகு விக்ரம் சார் பிச்சு உதறிட்டார்.

படம் காப்பி ரெடியானதும், விக்ரம் சார் படம் பார்த்தார். 'இந்த க்ளைமேக்ஸ் வேணாம். ஏன்னா ஆடியன்ஸ் எப்படி எடுத்துக்குவாங்கனு தெரியல. கோர்ட் சீனோட முடிச்சிக்கலாமா'னு கேட்டார். படம் ரிலீஸாகுறதுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி அவர் அப்படி சொன்னார். ஆனா, எனக்கு இந்த க்ளைமேக்ஸ்ல நிறைய கான்ஃபிடன்ஸ் இருந்துச்சு. அப்புறம் விக்ரம் சாருக்கு ரெண்டு க்ளைமேக்ஸ் சீனையும் என் ஹோம் தியேட்டர்ல போட்டு காட்டினேன். அப்புறம், விக்ரம் சார் நான் சொன்ன க்ளைமேஸ் கரெக்ட்தான்னு கிரீன் சிக்னல் காட்டிட்டார்.

director vijay
director vijay

விக்ரம் சாரோட கூட இருக்கற நாலு பேர்ல உயரமா இருக்கறவர் நிஜமாவே மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் இப்ப உயிரோட இல்ல. அவரை நாங்க நடிக்க வைக்கல. அவர் பண்றதை அப்படியே கேப்சர் பண்ணோம். பாடலாசிரியர் நா. முத்துக்குமார், என்னோட ஒன்பது படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கார். அவரது இழப்பு எனக்கு பேரிழப்பு. ரெண்டு பேரும் 60 பாடல்கள் ஒர்க் பண்ணியிருக்கோம். நான் ஃபீல்டுக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்து அவரோட ஃப்ரெண்ட். அப்புறம் எனக்கும் ஜி.வி.க்கும் நல்ல புரிதல் இருக்கறதால, எல்லா பாடல்களும் ஒருநாள் ரெண்டு நாள்ல முடிஞ்சிடுச்சு. அதுவும் போன்லயே...

10 ஆண்டுகள் நிறைவடைஞ்ச பிறகும் இன்னும் எனக்கு 'தெய்வத் திருமகள்' பார்க்கும்போதெல்லாம் போன் பண்ணி பாராட்டுறவங்க, மெசேஜ் பண்றவங்க அதிகம். மக்கள் எல்லோருமே ரசிக்கிற ஒரு படம் கொடுத்ததுல எனக்கு ரொம்பவே சந்தோஷம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு