Published:Updated:

``சூர்யாக்கு ஆத்ரேயாவை ரொம்பப் பிடிக்கும்... `24' சீக்வெல் ரெடியாகிட்டு இருக்கு!'' - விக்ரம்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இயக்குநர் விக்ரம் குமார் - சூர்யா
இயக்குநர் விக்ரம் குமார் - சூர்யா

``சூர்யா சாரும் நானும் `24' சீக்வெல் பத்தி நிறைய பேசியிருக்கோம்.''

சினிமாவில் எத்தனையோ ஜானர்கள் இருந்தாலும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்றால் அது எப்போதும் ஸ்பெஷல்தான். காரணம், அதில்தான் அதீத கற்பனை நிறைந்திருக்கும். அந்த ஜானர் படங்கள் மீதான எதிர்பார்ப்பு எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அதே அளவுக்குச் சில குழப்பங்களும் நிகழ வாய்ப்பிருக்கிறது. அதீதக் கற்பனையால் லாஜிக் மீறிப் போகவும் வாய்ப்புகள் அதிகம். ஆக, மிகவும் கவனமாக எடுக்கப்பட வேண்டிய ஜானர் அது. அதே சமயம், இந்த ஜானர்தான் கலை இயக்குநர்கள் இறங்கி ஆட வேண்டிய களம். அதில் ஏதும் சின்ன தவறு நடந்தாலும் அது விமர்சனத்திற்கு உள்ளாகிவிடும். அப்படி அதீதக் கற்பனையுடனும் கவனத்துடனும் 2016-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் `24'. அந்தப் படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் விக்ரம் குமாரிடம் பேசினேன்.

`` `24' படத்திற்கான ஆரம்பப்புள்ளி எது?"

``தெலுங்கில் நான் இயக்கிய `மனம்' படத்தைப் பார்த்துட்டு சூர்யா குடும்பத்துல இருந்து பேசினாங்க. அவங்களுக்கு `மனம்' ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்தக் கதையைத் தமிழ்ல பண்ணதான் முதல்ல சூர்யா கூப்பிட்டார். அப்போ நான்தான் அவர்கிட்ட, `என்கிட்ட இன்னொரு கதையிருக்கு. அதுல நீங்க நடிச்சா நல்லாயிருக்கும். அதைக் கேட்டுப் பாருங்க. உங்களுக்குப் பிடிக்கலைனா, நாம `மனம்' படத்தையே ரீமேக் பண்ணலாம்'னு சொன்னேன். அதுதான் `24'. கதை சொல்லி முடிச்சவுடனே `எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நிச்சயமா நான் இந்தக் கதையில் நடிக்கிறேன்னு சூர்யா சொன்னார். `இது ஒரு பரிசோதனை முயற்சிக்கான சினிமா. பெரிய பட்ஜெட் தேவைப்படும். மத்தவங்களுக்கு அந்த ரிஸ்க்கைத் தர வேண்டாம். நாமளே அந்த ரிஸ்கை எடுப்போம். நானே தயாரிக்கிறேன்'னும் சொன்னார். இந்தக் கதைக்கு எவ்ளோ வேலைகள் இருக்குனு அவர் புரிஞ்சுக்கிட்டு, ப்ரீ புரொடக்ஷனுக்கான நேரத்தையும் கொடுத்தார். அப்படி சுமார் ஆறு மாசங்களுக்கு மேல வொர்க் பண்ணி ஆரம்பிச்சதுதான் `24' படம்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ப்ரீ புரொடக்‌ஷன்ல என்னலாம் வேலைகள் இருந்தது?"

இயக்குநர் விக்ரம் குமார் - நடிகர் சூர்யா - ஒளிப்பதிவாளர் திரு
இயக்குநர் விக்ரம் குமார் - நடிகர் சூர்யா - ஒளிப்பதிவாளர் திரு

``சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானருக்கு மட்டுமல்ல, எல்லாப் படங்களுக்கும் ப்ரீ புரொடக்‌ஷன் ரொம்ப அவசியம். ப்ரீ புரொடக்‌ஷனும் போஸ்ட் புரொடக்‌ஷனும்தான் முழுமையான சினிமா. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி எந்தளவுக்கு நேரம் எடுத்து கதை, திரைக்கதைல வேலை செய்றோம்ங்கிறது அப்படியே நாம எடுக்குற விஷுவல்ல தெரிஞ்சிடும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை எல்லாமே செட்தான். அதனாலதான், பாடல் காட்சிகளுக்கு வெளிநாடு போய் எடுத்தோம். அதுலயும் லொக்கேஷன் எல்லாம் வித்தியாசமா இருக்கும். அதுக்கு ஒரு மெனக்கெடல் இருந்தது. ஷூட்டிங் முடிஞ்சவுடன் VFX-ல எவ்ளோ வேலை இருக்கோ, அதே அளவுக்கு ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியும் இருக்கு. டைம் டிராவல்ங்கிறதுனால வித்தியாசமான நிறைய பொருள்கள் பயன்படுத்தினோம். தவிர, இதுல சூர்யாவுக்கு மணி, சேதுராமன், ஆத்ரேயா இளமைத் தோற்றம், முதுமைத் தோற்றம், ஆத்ரேயா சேதுராமனாக நடிப்பதுன்னு மொத்தம் அஞ்சு லுக் இருக்கும். அதுக்கான லுக் டெஸ்ட்னு எல்லா ஏரியாலயும் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் கொஞ்சம் அதிகமாவே இருந்தது."

``ஆத்ரேயா கேரக்டர் பத்தி சூர்யாகிட்ட சொன்னதும் என்ன ரியாக்ட் பண்ணார்?"

``சூர்யாகிட்ட `24' கதையை நாலு மணி நேரம் சொன்னேன். அதுல ஆத்ரேயா கேரக்டர் பத்திச் சொல்லும்போது ரொம்பவே ஆர்வமாகிட்டார். இந்தக் கதையில நடிக்கலாம், தானே தயாரிக்கலாம்னு அவர் முடிவெடுக்க ஆத்ரேயா கேரக்டர் மிக முக்கியக் காரணம். அந்த போர்ஷன்ல நடிக்கும்போது பயங்கர ஆர்வமா இருந்தார். இந்த கேரக்டருக்கான லுக் டெஸ்ட் பண்ணும்போது தாடி, முடினு சின்னச் சின்ன கரெக்‌ஷன்ஸ் எல்லாம் சொல்லி அந்த லுக்ல அவ்ளோ டீடெய்லிங் பண்ணார். மத்த கேரக்டர்களை விட ஆத்ரேயாதான் அவருடைய ஃபேவரைட்!"

``பாடல்கள் எல்லாமே ஹிட். ஏ.ஆர்.ரஹ்மான் கூட வொர்க் பண்ண அனுபவம் சொல்லுங்க?"

24
24

``அவர்கூட வொர்க் பண்ணது மறக்கவே முடியாது. `படம் வெளியாகி நாலு வருஷம் ஆகிடுச்சு சார். எவ்ளோ வேகமா நாள்கள் போகுது'னு அவருக்கு மெசேஜ் பண்ணியிருந்தேன். அவரும் எக்சைட் ஆகிட்டார். சிறந்த இசையமைப்பாளர் அப்படிங்கிறதைத் தாண்டி ரஹ்மான் சார் மிகச்சிறந்த மனிதர். எப்பவும் அவ்ளோ எனர்ஜியோடவே இருக்கிற மனிதர். அவர்கூட இருந்தா பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்துகிட்டே இருக்கும். அவருடைய எனர்ஜி நமக்குள்ளயும் வந்திடும். இந்தப் படத்துடையெ ரெக்கார்டிங்ல அதிகமா நான் அவர்கூட இல்லை. நான், ரஹ்மான் சார், வைரமுத்து சார்னு எல்லோரும் போன்லதான் பேசிக்குவோம். அப்படித்தான் நிறைய ரெக்கார்டிங் செஷன் இருந்தது. பாடல்கள் மாதிரி பின்னணி இசைலயும் மிரட்டியிருப்பார்."

``சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம்னு ரெண்டு தேசிய விருதுகள் கிடைச்சபோது, எப்படி உணர்ந்தீங்க?"

``ரொம்ப ரொம்ப பெருமையா இருந்தது. VFXக்குக் கிடைக்கலைனு வருத்தம் இருந்தது. திருவோட வொர்க் படத்துக்கு மிகப்பெரிய பலம். இப்போ பார்க்கும்போதுகூட நிறைய விஷுவல் ஆச்சர்யமா இருக்கும். அதே மாதிரி, கலை இயக்குநர்கள் அமித் ராய் - சுப்ரதா ரெண்டு பேரும் அவ்ளோ உழைச்சாங்க. எல்லாமே செட் போட்டுதான் எடுத்தோம். நான் `யாவரும் நலம்' பண்ணும்போது அவங்க ஆர்ட் அசிஸ்டென்ட்டா அந்தப் படத்துல வேலை செஞ்சாங்க. அப்போ இருந்தே அவங்க எனக்கு நல்ல பழக்கம். காரைக்குடி வீடு சீன் எல்லாம் மும்பைல செட் போட்டு எடுத்ததுதான். காரைக்குடிக்குப் போய் அந்த வீட்டுடைய வெளிப்புறத்தை மட்டும் எடுத்துட்டு வந்தோம். சேதுராமன் இருந்த வீடு, ஆத்ரேயா இளமையா இருக்கிற போர்ஷன் எல்லாம் ஃபாரின்ல செட் போட்டு எடுத்தோம். இப்போ அமித் - சுப்ரதா ரெண்டு பேரும் பாலிவுட்ல முக்கியமான கலை இயக்குநர்கள். ஒளிப்பதிவு, கலை இயக்கம் ரெண்டுக்கும் தேசிய விருது கிடைச்சது அவங்க உழைப்புக்குக் கிடைச்ச வெற்றி. அந்தப் படத்துடைய இயக்குநரா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்."

`24' ஷூட்டிங்ல மறக்கமுடியாத சம்பவம்?"

``நிறைய இருக்கு. போலந்துல பெரிய ஷெட்யூல் எடுத்தோம். அந்த நாட்டுல இருந்த ஒவ்வொரு நாளும் அவ்ளோ என்ஜாய் பண்ணோம். அப்புறம், நான், திரு, புரொடக்‌ஷன் டீம் எல்லோரும் காரைக்குடில மான்டேஜ் ஷாட்ஸ் எடுக்க ரெண்டு நாள் போயிருந்தோம். அப்போ சூர்யா சாருடைய ஃப்ரெண்ட் வீட்ல இருந்து எங்களுக்கு வந்த சாப்பாடு இருக்கே... வாவ்! அவ்ளோ அருமையா இருந்தது. அவங்க கொடுத்த இட்லி, மீன் குழம்பு, மட்டன் சூப் எல்லாம் என் வாழ்க்கையில மறக்கவே முடியாது. அவ்ளோ டேஸ்ட்."

``எடிட்டிங்ல நிறைய காட்சிகளை கட் பண்ணிட்டீங்கன்னு கேள்விப்பட்டோமே?"

24
24

``ஆமா. இந்தக் கதையில நடிக்க அருமையான பர்ஃபார்மர்தான் தேவைப்பட்டாங்க. சூர்யா சார், சமந்தா, நித்யா மேனன்னு நான் நினைச்சதைவிட சூப்பரான பர்ஃபார்மர்ஸ் படத்துக்குக் கிடைச்சாங்க. சூர்யா சார் பத்தி நான் சொல்லித்தான் தெரியணும்னு இல்லை. ஒரு படத்துக்குள்ள வந்துட்டார்ன்னா அப்படியே தன்னை அர்ப்பணிச்சிடுவார். அவர் பேரா கிளைடிங் பண்ற மாதிரி சில அட்வெஞ்சர் சீனெல்லாம் இருந்தது. ஆனா, படத்துடைய நேரத்தைக் குறைக்கணும்னு அதையெல்லாம் படத்துல இருந்து தூக்க வேண்டியதாகிடுச்சு. அதுல எனக்குப் பெரிய வருத்தம்தான்."

`` `24' சீக்வெல் எதுவும் பிளான் பண்ணியிருக்கீங்களா?

``அந்த பிளான் ரொம்ப நாளாவே இருக்கு. அதுக்கான கதையும் எழுதிட்டு இருக்கேன். சும்மா சீக்வெல் எடுக்குறோம்னு அதை எடுக்கக்கூடாது. முதல் பாகத்தைவிட சூப்பரா இருக்கணும். சூர்யா சாரும் நானும் `24' சீக்வெல் பத்தி நிறைய பேசியிருக்கோம். கதை முழுமையடைஞ்ச பிறகு, நிச்சயமா சூர்யா சார்கிட்ட அப்ரோச் பண்ணுவேன். எல்லோருக்குமே நிச்சயம் பிடிக்கிற மாதிரிதான் அந்தக் கதை இருக்கும்."

``படம் பார்த்துட்டு சூர்யா குடும்பத்துல இருந்து என்ன சொன்னாங்க?"

``எல்லோருக்கும் படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. குறிப்பா, ஆத்ரேயா கேரக்டர். ஜோதிகா மேமுடைய `சிநேகிதியே' படத்துல நான் பிரியதர்ஷன் சார்கிட்ட உதவி இயக்குநர். அதனால எனக்கு அவங்களை ரொம்ப வருஷமா தெரியும். `24'க்குப் பிறகு சூர்யா சார் எனக்கு நெருக்கமாகிட்டார். எப்போவும் என் மனசுல அவங்களுக்குத் தனி இடமுண்டு."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு