Published:Updated:

```மதயானைக் கூட்டம்'க்கு ரெண்டு க்ளைமாக்ஸ் யோசிச்சேன்; அது என்னன்னா?!" - விக்ரம் சுகுமாரன்

இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
இயக்குநர் விக்ரம் சுகுமாரன்

முதல் படமான `மதயானைக்கூட்டம்' மூலம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். அடுத்து ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளை மையப்படுத்திய மண் சார்ந்த கதைகளை `ராவணக்கோட்டம்', `தேரும் போரும்' என அடுத்தடுத்து படமாக்கிக்கொண்டிருக்கிறார்.

மண்சார்ந்த கதைகளையும், அங்குள்ள மக்களின் வாழ்வியலையும் யதார்த்தம் மீறாமல் பதிவு செய்யும் தமிழ் சினிமா இயக்குநர்களில் முக்கியமானவர் விக்ரம் சுகுமாரன்.

இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
இயக்குநர் விக்ரம் சுகுமாரன்

``நீங்க இயக்கின முதல் படமான `மதயானைக்கூட்டம்' வெளியாகி 7 ஆண்டுகள் ஆகிடுச்சு. முதல் படத்துக்கும் அடுத்த படத்துக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?"

மதயானைக்கூட்டம்
மதயானைக்கூட்டம்

``என்னோட முதல் படமான `மதயானைக் கூட்டம்' நல்லா போன படம்தான். வசூல்ரீதியா சரியா போகலைங்கிற மாதிரியான விமர்சனங்கள் எல்லாம் அந்தச் சமயத்துல வந்தது. ஆனா, அப்படியெல்லாம் இல்லை. வேற சில காரணங்களால அந்தப் படத்தின் மீது இருட்டடிப்பு நடந்துச்சு. ஆனா, விமர்சன ரீதியா நல்ல வரவேற்பு இருந்தது. அதை வெச்சுதான் அடுத்த படமும் எனக்குக் கிடைச்சது. அதுக்காக உடனே அடுத்த படம் பண்ணியே ஆகணும்னு எனக்குக் கட்டாயம் இல்லை. ஸ்கிரிப்ட்ல வேலை பார்த்து, கதைக்கான சில விஷயங்கள் சரியா வரணும்கிறதுக்காக காத்திருக்க வேண்டியதாயிருந்தது."

`` `மதயானைக் கூட்டம்' படத்தைப் பொறுத்தவரை `சாதி ஆதிக்க படம், இனவரைவியலை சொன்ன படம், சாதிக்கு எதிரான படம்'னு பல கலவையான விமர்சனங்கள் வந்தது. அதை எப்படி பார்க்குறீங்க?"

இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
இயக்குநர் விக்ரம் சுகுமாரன்

``சில விஷயங்கள் தவறா இருக்குனு விமர்சனங்கள் சொன்னாங்கன்னா, அது என்னான்னு அனலைஸ் பண்ணி அடுத்தமுறை அதை சரி செஞ்சிப்பேன். முக்கியமா அந்த படத்துடைய க்ளைமேக்ஸ். முதல்ல நான் ரெண்டு க்ளைமேக்ஸ் யோசிச்சிருந்தேன். `ஒருத்தன ஒருத்தன் வெட்டிட்டு இப்படி செத்துட்டு கெடக்கீங்களே'ன்னு செவலம்மா அழுகுறதுதான் அந்தக் கூட்டத்துக்கான அழுகை. எனக்கு வந்த அழுகையைத்தான் அங்க வைக்க நினைச்சேன். அந்தப் பகுதி மக்களோட வாழ்க்கையை அப்படியே பதிவு பண்ணணும். ஆனா, அது பலருக்கும் வெவ்வேற மாதிரி போய் சேர்ந்திருக்கு. அதுவும் நல்லதுதான். ஒரு கதைங்கிறது அப்படித்தான் இருக்கணும். அப்பதான் அது உண்மையா இருக்கும்.

அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எல்லாரும் கொடூரமானவங்கனு எல்லாரும் நினைக்கறாங்க. ஆனா, அப்படி இல்லை. ஒரு காலத்துல அந்தப் பக்கம் தண்ணி இல்லாத பூமியா இருந்தது. அதனால, களவுத்தொழில்ல ஈடுபட வேண்டியதாயிருந்தது. அதுக்கப்பறம் அணை வந்தது. இப்ப நல்லாதான் வாழ்ந்துட்டு இருக்காங்க."

``நீங்க அறிமுகப்படுத்தின நடிகர் கதிரோட வளர்ச்சியை கவனிச்சிட்டு வர்றீங்களா?"

Kathir
Kathir

``கண்டிப்பா. எனக்கு அவன் தம்பி மாதிரி. அம்மா அப்பாவுக்குப் பிறகு அவனோட வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுறது நானாதான் இருக்க முடியும்."

``ஒரு பேட்டியில , `நடிகராகணுங்கிற ஆசையிலதான் சென்னை வந்தேன்'னு சொல்லியிருப்பீங்க. `பொல்லாதவன்', `கொடிவீரன்' படங்கள்ல நடிச்சிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருந்தது?"

இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
இயக்குநர் விக்ரம் சுகுமாரன்

``என் சொந்த ஊர் பரமக்குடி. அதனால, கமல் சாரோட வெறித்தனமான ரசிகன் நான். `தேவர்மகன்' படம் பார்த்துட்டு வந்த தைரியத்துலதான், துணிஞ்சு நம்மளும் படம் எடுக்கலாம்னு சென்னைக்கு வந்தேன். அப்பலாம் சினிமான்னாலே எனக்கு ஹீரோ மட்டும்தான். யாருக்குக் கைத்தட்டல் அதிகம் கிடைக்குதோ, அவங்கதானே எல்லாங்கிற எண்ணம் இருந்தது அப்போ. அதனால, அந்தக் கைத்தட்டு, பாராட்டுகளுக்கு ஆசைப்பட்டுதான் நடிப்பு ஆசை வந்தது. அதுக்குப் பிறகு இயக்குநர் பாலுமகேந்திரா பட்டறைக்குப் போனபிறகு எல்லாம் மாறிடுச்சு. அங்க வெற்றிமாறன் பழக்கமானார். அந்தப் பழக்கத்துலதான் `பொல்லாதவன்'ல நடிச்சேன். அந்தப் படத்துல மட்டும் கிட்டத்தட்ட 15 இடங்கள்ல நடிச்சிருப்பேன்."

`` `கொடிவீரன்'னுக்குப் பிறகு படங்கள் நடிக்காதது ஏன்?"

இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
இயக்குநர் விக்ரம் சுகுமாரன்

`` `கொடிவீரன்' படத்தோட இயக்குநர் முத்தையா என்னுடைய நண்பர். அவர் கேட்டதுக்காகத்தான் அந்தப் படத்துல நடிச்சேன். அதுக்குப் பிறகு சில படங்கள்ல நடிக்கறதுக்கான வாய்ப்பு வந்தது. ஆனா, மேம்போக்கா ஏதோ வந்தோம், போனோம்னு நடிக்க எனக்கு விருப்பமில்லை. அதுவுமில்லாம, என்னோட படங்களை இயக்குறதும் தாமதமாகிட்டு வந்தது. அதனால, நடிப்புல அந்த இடைவெளி வந்துடுச்சு."

`` `ஆடுகளம்' படத்துல வசனகர்த்தாவா வேலை பார்த்துருப்பீங்க. வெற்றிமாறன்கூட வேலை பார்த்த அனுபவம்?"

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

``வெற்றிமாறனும் நானும் பாலுமகேந்திரா சார்கிட்ட வேலை பார்த்தோம். பாலா, வெற்றிமாறன்னு பாலு மகேந்திரா பட்டறையில இருந்து வந்தவங்க நல்ல படங்களைத் தருவதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. எனக்கு ரெண்டு வருஷம் சீனியர் வெற்றிமாறன். அதனால, அப்ப இருந்தே எங்களுக்குள்ள நல்ல ஒரு புரிதல் இருக்கும். எங்க ரெண்டு பேரையும், `சரியான ஆர்வக்கோளாறுய்யா'னு அங்க கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு துறுதுறுன்னு இருப்போம்.

வெற்றிமாறனுக்கு சொந்த ஊர் வேலூர் ராணிப்பேட்டை. அதனால, `பொல்லாதவன்' படம் முழுக்க சென்னையைக் களமா வெச்சிருந்தார். அந்தக் கதையை தனுஷ் ரொம்ப விரும்பினதா சொன்னார். அடுத்தக் கதை மதுரையில சேவல் சண்டையை மையமா வெச்சு பண்ணலாம்னு சொல்லிட்டிருந்தார். என்னோட படமான `மதயானைக்கூட்ட'த்துக்குக்கூட அவ்வளவு கிரவுண்ட் வொர்க் பண்ணியிருக்க மாட்டேன். ஆனா, `ஆடுகளம்' படத்துக்காகக் கிட்டத்தட்ட ரெண்டரை வருஷம் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாக்கிட்ட போய் உட்கார்ந்துப்போம். அங்க பேசி பேசி கதையை டெவலப் பண்ணுவோம். கதையை முடிச்சிட்டு அடுத்தநாள் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்னு இருக்கும் போதுதான் தெரிஞ்சது, ஹீரோக்கு இன்னும் பெயர் வைக்கலைன்னு. அங்க ரவுண்டானாக்கிட்ட இருக்க ஒரு ரோட்டுக்கடையில சாப்பிட போனப்ப, பெயர் வைக்கறதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தோம். அங்க இருந்த கடையில வேலை பார்த்த பையனோட பேர் கரு ப்பு. `நல்லா இருக்கே, இந்த பெயர்'ன்னு அதையே வச்சுட்டோம். ஆனா, படத்துல ஒரு ஃப்ளோல சொல்லும்போது மதுரை ஸ்லாங் மிஸ் ஆகுதுனு கே.பி. கருப்புனு டைமிங்கா வெச்சாச்சு."

``பாலுமகேந்திரா மென்மையான மனித உணர்வுகளை படமாக்கியவர். பாலுமகேந்திரா பட்டறையில இருந்து வந்த பாலா, வெற்றிமாறன், நீங்க எல்லாருமே மனித வன்முறையை கதைக்களமா தேர்ந்தெடுக்கறதுக்கு என்ன காரணம்?"

பாலுமகேந்திரா
பாலுமகேந்திரா

``பாலுமகேந்திரா மனித வாழ்வியலை, அனுபவங்களை படங்களாகத் தந்தவர். அதுக்கு வாழ்ந்திருக்கணும், இல்ல வேடிக்கை பார்த்திருக்கணும், இல்ல படிச்சது பிடிச்சிருந்தாலும் அதை நம்மோட தொடர்புபடுத்திக்க முடியும்போது அது நல்ல சினிமாவா மாறும். பாலுமகேந்திரா மென்மையான படங்கள் தந்தவர்ங்கிறதையும் தாண்டி அவர் வாழ்ந்தது, சந்திச்ச விஷயங்கள்னு யதார்த்தத்தைத்தான் சினிமாவுல பதிவு பண்ணினார்.

பாலுமகேந்திரா பட்டறையிலிருந்த பாலாண்ணா பெரியகுளத்துலேருந்து, வெற்றிமாறன் வேலூர்லேருந்து, நான் மதுரை பக்கத்துலேருந்து வந்தோம். அப்ப எங்க வாழ்வியலோடு பிண்ணின விஷயங்களைத்தான் பதிவு பண்ண முடியும். அது தவிர்க்க முடியாதது."

``ஆனா, `மதயானைக்கூட்டம்', `ராவணக்கோட்டம்', `தேரும் போரும்'னு உங்க படத்தோட தலைப்புகளும் அழுத்தமா இருக்கே?"

``இப்படித்தான் வைக்கணும்னு எந்த ஒரு நோக்கமும் இல்லை. கதைப்போக்குல தலைப்பு சிக்கணும்னு நினைப்பேன். அதுவரை விட்டுருவேன். அந்தமாதிரி, அமைஞ்சதுதான் இந்தத் தலைப்புகள் எல்லாம்.

ராவணன் ஒரு தமிழ் அரசன். அவனுடைய நாடு பத்தின கதை. அப்போ, அதைப் பத்தி சொல்லும்போது `ராவணக்கோட்டம்'ங்கிறதைத் தவிர சரியான வார்த்தை கிடைக்கலை. `தேரும் போரும்'ங்கிற தலைப்புல தேருக்குள்ள போர்ங்கிறதை சொல்ற மாதிரி வேற ஒண்ணும் உள்ள இருக்கு. அது என்னங்கிறது படம் பார்க்கும்போது புரியும். கதைக்கான தலைப்புதானே தவிர, மத்தபடி வன்முறை இல்லை."

`` `தேரும் போரும்' ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதைன்னு சொன்னீங்க. அதேமாதிரி, உங்க நண்பர் வெற்றிமாறன் எடுக்குற `வாடிவாசல்' படமும் ஜல்லிக்கட்டு கதைக்களம். ஒரே மாதிரியான இந்த லைன் எப்படி அமைஞ்சது?"

'தேரும் போரும்'
'தேரும் போரும்'

`` 'வாடிவாசல்'க்கு முன்னாடியே ஆரம்பிக்கப்பட்ட படம் `தேரும் போரும்'. நாங்க பாலுமகேந்திரா சார்கிட்ட வொர்க் பண்ணும்போதே, குறுநாவல்களை படமா பண்ணணும்னு பேசின விஷயம்தான். மத்தபடி ரெண்டு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. `தேரும் போரும்' சிவகங்கை மண்ணோட கதை. மாடுங்கிறது அங்க இருக்க மக்களோட வாழ்வியல்ல ஒரு அங்கம். ஜல்லிக்கட்டுல அதகளம் பண்ற மாடுகள் மத்த சமயங்கள்ல ரொம்ப சாதாராணமா தெருவுல திரியும். பார்க்கும்போது நமக்கு பயமா இருக்கும். ஆனா, அந்த மக்களுக்கு அப்படி இல்லை. மாடுன்னே சொல்ல மாட்டாங்க. தம்பின்னுதான் கூப்பிடுவாங்க."

`` `தேரும் போரும்' உள்ள தினேஷ் வந்த கதை?"

தினேஷ்
தினேஷ்

`` `ஆடுகளம்'க்கு முன்னாடி இருந்தே தினேஷை எனக்குத் தெரியும். `ஆடுகளம்' சமயத்துல கூத்துப்பட்டறையில நடிப்பை இம்ப்ரூவ் பண்ணிட்டு வந்துருக்கார்னு கேள்விப்பட்டேன். அதுக்காகவே, படத்துல வாய்ப்பு தரணும்னு பேசிட்டிருந்தோம். அப்படி அமைஞ்சதுதான் தேரும் போரும்."

``உங்களுடைய இரண்டாவது படம் `ராவணக்கோட்டம்'. அது எந்த நிலையில இப்ப இருக்கு?"

`` 'ராவணக்கோட்டம்' படம் 30% முடிஞ்சிடுச்சு. ராமநாதபுரம் மண்சார்ந்த கதை அது. கருவேலமர அரசியல் கண்டிப்பா இருக்கும். படம் எடுத்திட்டிருந்த சமயத்துல மழை கொட்டி தீர்த்துடுச்சு. வறண்ட பூமியா இருந்தது பச்ச பசேல்ன்னு ஆகிடுச்சு. ராமநாதபுரம்ன்னாலே வெயில்தான். அதைப் பதிவு பண்ணாம கதையை நகர்த்த முடியாது. அதுவும் இல்லாம, சாந்தனுவும் `மாஸ்டர்'ல கமிட் ஆகிட்டார். அதனால, வர்ற மே மாசம் திரும்பவும் ஷூட்டிங் ஆரம்பிக்கறோம்."

``தமிழ் சினிமாவுல கிராமிய படங்கள்னாலே, சாதி சார்ந்த விமர்சனமும் கூடவே வர்றது வழக்கமாகிடுச்சு. ஒரு கிரியேட்டரா இதை எப்படிப் பார்க்குறீங்க?"

``நாம புரிஞ்சிக்கிட்ட ஒரு விஷயம் மக்கள்கிட்ட தப்பா போய் சேருதுங்கிறது கஷ்டமாதான் இருக்கு. `மதயானைக்கூட்டம்' படத்துடைய க்ளைமேக்ஸ் நிறைய விமர்சனங்களைச் சந்திச்சது. நல்லவன் வாழணும், கெட்டவன் சாகணும்ங்கற தியரில இது வரலைங்கிறதுதான் பிரச்னைன்னு சொல்றாங்க. சாதிய எதிர்ப்பு கொண்டவன் நான். ஆனா, சாதிய தூக்கிப் பிடிக்கறவன்ங்கிற விமர்சனம் இந்தப் படத்துக்கு வந்தது. அது எவ்வளவு கஷ்டமான விஷயங்கிறது அனுபவிச்சு பார்த்தாதான் புரியும்."

அடுத்த கட்டுரைக்கு