Published:Updated:

“பாபாவும் அன்பே சிவமும் நான் இயக்க வேண்டிய படங்கள்!”

உண்மையாகச் சொன்னால், என் படங்களில் வருகிற அளவுக்குக்கூட நான் நல்லவன் கிடையாது. சராசரியான கோபம், தாபம், பலவீனங்கள் என எல்லாமே உண்டு

பிரீமியம் ஸ்டோரி
தமிழ் சினிமாவின் நல்லடையாளம் இயக்குநர் விக்ரமன். வீட்டின் உள் முகப்பில் சின்ன வயது விக்ரமன் சிறு புன்னகையில் மிளிர்கிறார். நான்கு ஆண்கள் ஒரு பெண் நட்பு என எடுத்த எடுப்பில் ‘புதுவசந்தம்’ எனப் புதுக்கதை சொல்லி, தமிழ் சினிமாவில் ஆச்சர்யம் விதைத்தவர். இனி இயக்குநர் விக்ரமனிடமிருந்து சில சுவாரஸ்ய தருணங்கள்.

``உங்களின் எல்லாப் பாத்திரங்களும் நல்லுணர்வு அதிகம் நிரம்பியவர்கள். இதை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’

“என்னளவில் இதை நான் திட்டமிட்டுச் செய்ததேயில்லை. ‘இதையெல்லாம் இப்படிப் படமாக்கணும், இப்படியெல்லாம் படமாக்கினால் கவனிக்கப்படும்’ என்ற திட்டமிடலுக்கு அப்பால் படம் ஒரு நல்ல வடிவத்திற்குள் வந்து கவனம் பெறணும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. அது தானாக அமைந்ததுன்னு சொல்லணும். இந்த சினிமாவே அப்படித்தான். மனசில் இருக்கிறது வெளியே வந்து நடிகர்கள் மூலமாக வெளிப்படும்போது அது அமையணும். கதை என்று யோசிக்கும்போது எல்லோரும் நல்லவர்களாக இருக்கணும்னு யோசிக்கறதில்லை. கெட்டவர்களையும் சொல்லியிருக்கேன். இது எனக்கான டிரேடு மார்க் மாதிரி ஆகியிருக்கலாம். கதை எழுதும்போது நான் வியாபாரத்தைக் கொண்டுவந்து யோசிப்பதில்லை.”

“பாபாவும் அன்பே சிவமும் நான் இயக்க வேண்டிய படங்கள்!”

``உங்கள் படங்களின் எளிமையான திரைக்கதைகளுக்கும் வலிமையான கதாபாத்திரங்களுக்கும் இன்றைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்களே?’’

“உண்மையாகச் சொன்னால், என் படங்களில் வருகிற அளவுக்குக்கூட நான் நல்லவன் கிடையாது. சராசரியான கோபம், தாபம், பலவீனங்கள் என எல்லாமே உண்டு. மற்றவர்களை ஒப்பிடும்போது நான் யார்மீதும் பொறாமைப்பட்டதில்லை. என்கூட இருந்தவர்கள், நண்பர்கள், மேலும் உயர்நிலையை அடைந்தால் அதை அவர்களுக்கான கடவுளின் ஆசீர்வாதம் என நினைத்துவிடுவேன். ‘புது வசந்தம்’ வந்தபோது இளைஞர்கள் மட்டுமில்லை, ஃபேமிலி ஆடியன்ஸ் குவிந்தார்கள். ஆண்களோடு தங்கியிருக்கும் ஒரு பெண்ணின் நட்பைப் பற்றின கதை தான் அது. ஆனால் இப்போது எல்லாமே மாறிவிட்டது. லிவிங் டு கெதர் கலாசாரத்தை ஆமோதித்துவிட்டோம். நாலு ஆண்களோடு பெண்கள் தங்குவதும், பேசுவதும் இப்போது விகல்பமாக நினைக்கப்பட வாய்ப்பே இல்லை. இப்போது குடும்பப் படம் என்று தனி அடையாளம் இல்லை. எல்லோரும் சினிமாவைப் புரிந்து ஆகச்சிறந்த திறமையைக் காட்டினால் போதும். ‘சூரியவம்சம்’ 23 வருஷம் கழித்து இன்னும் வீட்டின் வரவேற்பறையில் கூட்டம் சேர்க்கிறது. ‘வானத்தைப்போல’ பார்த்துவிட்டு தாய்மார்கள் கண் கலங்குகிறார்கள். ‘புதுவசந்தம்’ பார்த்துவிட்டு இளைஞர்கள் பேசுகிறார்கள். ஆக, நான் மக்களின் எண்ணத்தில் இருக்கிறேன் என்பதைப் பெருமையாகவும் தன்னடக்கத்துடனும் சொல்லிக்கிறேன்.”

`` ‘பூவே உனக்காக’ செய்யும்போது விஜய்யின் இந்த வளர்ச்சியை உணர்ந்தீர்களா?’’

“ ‘பூவே உனக்காக’ படத்தில் விஜய்யை புக் பண்ணும்போது நான் அவருடைய எந்தப் படத்தையும் பார்க்கவே இல்லை. பாடல் காட்சியில், சண்டைக் காட்சியில் ஆங்காங்கே பார்த்திருக்கேன். அதிலேயே அவரது எக்ஸ்பிரஷன் பத்தி என்னால் முடிவுக்கு வர முடிந்தது. அவரது திறமை புரிந்தது. ‘பூவே உனக்காக’ ஒரு புனிதமான காதல் கதைங்கிற கணக்கில வரும். சௌத்ரி சாரிடம் விஜய்யைப் போடலாம்னு சொன்னா, வேண்டாம்னு சொல்லிட்டார். நல்ல இளைஞர், நம்ம பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி தோற்றம்னு பல விதங்களில் அவர்கிட்டே சொல்லி கஷ்டப்பட்டு சம்மதிக்க வச்சேன்.

முதல் நாள் முதல் ஷாட் பூதப்பாண்டி கோயில் வளாகத்தில் விஜய்க்குப் பெரிய டயலாக்கைக் கொடுத்தேன். அவ்வளவு பெரிய டயலாக்கை கொஞ்சமும் தயங்காமல் உணர்வோடு பேசி முடித்தார். ஒரே டேக். நான் உதவியாளர்கள் கிட்டே ‘இந்தப் பையன் பெரிய இடத்திற்கு வருவான். எவ்வளவு கான்ஃபிடன்ஸ் லெவல் பாத்தியா’ன்னு அப்பவே சொன்னேன். கூட இருந்தவர்கள் எல்லோரும் அதை ஆமோதிச்சாங்க. அதில் ஃபைட் ஒண்ணுகூட எடுத்தேன். மலையில் குதிரைமேல் வர்ற சீன். குதிரை தடுமாறி விழ, அதே வேகத்தில் சரிந்தவர் விழாமல் அப்படியே எழுந்து நின்றார். எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. அடுத்த டேக் போகலாம்னு சொன்ன உற்சாகமான விஜய் முகம் இப்பவும் எனக்கு ஞாபகத்திற்கு வருது. எல்லாத் தகுதியையும் வெச்சுக்கிட்டு சினிமாவுக்கு வந்த ஹீரோவாகத்தான் விஜய்யைப் பார்க்கிறேன். நீங்கதான் அவரை வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு போனீங்கன்னு எஸ்.ஏ.சி சார்கூட சொல்வார். அதை நான் புன்னகையோடு கடப்பேன். எனக்கு விஜய்யின் உயரம் அப்பவே தெரியும்.”

“பாபாவும் அன்பே சிவமும் நான் இயக்க வேண்டிய படங்கள்!”

``தமிழ் சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?’’

“நல்லா இருந்தது. இந்தக் கொரானா வந்து கெடுத்துடுச்சு. ‘மாஸ்டர்’, ‘சுல்தான்’, ‘கர்ணன்’னு நல்லா போயிட்டு இருக்கும்போது, இந்த இரண்டாவது அலையை எதிர்பார்க்காமல் போய்ட்டோம். முன்னாடியெல்லாம் பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன்னு நல்ல டைரக்டர்ஸ் ஒரு கைக்குள்ளே இருப்பாங்க. இப்ப பாருங்க, நிறைய டைரக்டர்கள் நல்ல ஃபார்மில் இருக்காங்க. வெற்றிமாறன் நல்ல தெளிவோடு அருமையாக எழுந்து நிற்கிறார். எல்லாம் இந்தக் கொரானா விட்டுப் போனதும் சரியாகும்னு தோணுது. கொஞ்சம் டிக்கெட் விலையைக் குறைச்சால் இன்னும் சரி பண்ணலாம். நல்ல காலம் வரும்.”

``நீங்க ரஜினி, கமல் கிட்ட பணிபுரியவே இல்லை...’’

“ ‘பாபா’ பட சமயம் நான்தான் ரஜினியை இயக்குவதாக இருந்தது. நான் ‘உன்னை நினைத்து’ படத்தை முடிக்காமல் இருந்தேன். ரஜினிக்கு உடனே படம் ஆரம்பிக்க வேண்டிய சூழல். அதனால் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வந்தது. இப்பவும் ரஜினியோட வேலைசெய்ய சான்ஸ் இருக்கும்... அதே மாதிரி உற்சாகத்தில் அவரும் நானும் இருக்கோம். ‘அன்பே சிவம்’ படத்தை இயக்குமாறு லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். பிறகு என்ன காரணத்தாலோ ப்ரியதர்ஷன் இயக்குவதாகச் சொல்லி, இறுதியில் சுந்தர் சி அந்தப் படத்தை இயக்கினார்.”

``உங்கள் மகன் கனிஷ்கா சினிமாவுக்கு வருகிறாரே!’’

“பி.இ மெக்கானிக்கல் படித்து விட்டு மேல்படிப்புக்கு ஃபாரின் போவான்னு நினைச்சிட்டு இருந்தேன். நல்லா படிக்கிற பையன். ஸ்மார்ட் வேற. பார்த்தால் ஒரு நாள் ‘அப்பா, நான் சினிமாவில் நடிக்கப் போறேன்’னு சொல்றான். எங்க அப்பாவுக்கு நான் சினிமாவுக்கு வர்றது பிடிக்கலை. ஆனால் அவர் தடையாகவும் இல்லை. பையன் வந்து கேட்டதும் சரின்னு சொல்லிட்டேன். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அவனை வச்சு அரவிந்த்னு ஒரு புது டைரக்டர் கொண்டு படம் எடுக்கிறேன் என்று சொல்லியிருக்கார். தாணு சார் கிட்டே இவனை வெச்சுப் படம் எடுங்கன்னு கேட்டேன். கண்டிப்பாகப் பண்றேன்னு சொல்லியிருக்கார். கனிஷ்கா பெரிய ஆளா வருவான். ஏன்னா என் பையன் பொறந்த நேரம்தான் நான் பெரிய டைரக்டரா வந்தேன். ‘பூவே உனக்காக’, ‘சூரியவம்சம்’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ இந்த எல்லாமே என் பையன் பிறந்த நேரம்தான் அடுத்தடுத்து வந்தன.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு