Published:Updated:

``விஜய் வில்லன், சூர்யா ஹீரோ... `ப்ரியமுடன்' பிளான் இதுதான்!- வின்சென்ட் செல்வா #22YearsofPriyamudan

விஜய்
News
விஜய்

விஜய் தனது கரியரில் ஆன்ட்டி ஹீரோவாக நடித்த ஒரே படம் `ப்ரியமுடன்'. அறிமுக இயக்குநர் வின்சென்ட் செல்வா இயக்கிய இந்தப் படம் வெளியாகி 22 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இயக்குநர் வின்சென்ட் செல்வாவிடம் பேசினேன்.

``ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவன் நான். முதல்ல சத்யராஜ் சார்கிட்ட கதை சொல்லி படம் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அறிமுக இயக்குநர் கூட சேர்ந்து படம் பண்ண அவர் ரொம்ப தயக்கமா இருந்தார். அதனால என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன். அந்த நேரத்துல ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்ல `மண்ணில் இந்தக் காதல்'னு ஒரு குறும்படம் எடுத்தேன். இதுக்கு எனக்கு கோல்டு மெடல் கிடைச்சது. என்னோட நண்பர்கள் பலரும் பார்த்துட்டு, `நல்லாயிருக்கு'னு பாராட்டுனாங்க. தவிர, `இதை விஜய் சார் பார்த்தா நல்லாயிருக்கும்'னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்போ, விஜய் சாரின் நண்பர்கள் சிலர்கிட்ட கதை சொன்னேன்.

வின்செட் செல்வா
வின்செட் செல்வா

`சூப்பரா இருக்கு தலைவா... விஜய்கிட்ட கேட்டுப் பாருங்க'னு சொன்னாங்க. விஜய் சாரைப் பார்க்க நேரம் கிடைச்சது. `இப்போ என் கையில ஏழு படங்கள் இருக்கு. இதைப் பண்ண நேரமிருக்குமானு தெரியல'னு சொன்னார். இருந்தாலும் விஜய்யோட நண்பர்கள் சிலர் சொன்னதுனால கதை கேட்க உட்கார்ந்தார். `படத்தோட இன்டர்வல் பிளாக்கை முதல்ல சொல்றேன். உங்களுக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு கதை சொல்றேன்'னு சொன்னேன். அவரும் ஓகே சொல்லிட்டு கேட்க ஆரம்பிச்சார். 10 நிமிஷத்துல அந்த போர்ஷனை மட்டும் சொல்லி முடிச்சேன். விஜய் சாருக்கு பிடிச்சிருந்தது. `அப்பாகிட்ட கதையைச் சொல்லுங்க'னு சொன்னார். எஸ்.ஏ.சி சார்கிட்ட போனேன். முதல்ல என்னோட ஷார்ட் ஃபிலிம் பார்த்துவிட்டு பிடிச்சிருக்குனு சொன்னார். அப்புறம் கதையும் பிடிச்சிருந்ததுனால ஷூட்டிங் வேலைகளை ஆரம்பிச்சோம். சொல்லப்போனா இந்தப் படத்தோட தயாரிப்பு நிறுவனத்துக்கு படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் டைரக்‌ஷன் பண்றதுல பெரிய விருப்பமில்ல. அவங்க எஸ்.ஏ.சி சார் டைரக்‌ஷன் பண்ணணும்னு நினைச்சாங்க. இருந்தும் விஜய் சார் தரப்புல இருந்து சொன்னதால எந்த எதிர்ப்பும் இல்லாம ஒத்துக்கிட்டாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தப் படத்துக்கு பெரிய ஒத்துழைப்பு விஜய் சார் தரப்புல இருந்து கிடைச்சது. விஜய் மில்டன் ஒளிப்பதிவாளரா அறிமுகமான படமும் இதுதான். விஜய்க்கு எதிரா இருந்த கேரக்டர்ல சூர்யாவை நடிக்க வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா, தயாரிப்பு தரப்புல இருந்து கொஞ்சம் யோசிச்சதுனால சூர்யா சார்கிட்ட இந்தக் கதையைச் சொல்லல. இருந்தும், எனக்குள்ள இப்பவும் அப்படி நடக்கலையேன்ற வருத்தமிருக்கு. அதே மாதிரி முழுக்க நெகட்டிவ் கேரக்டர்ல விஜய் நடிச்சிருப்பார். அப்போ எந்த ஹீரோவும் நெகட்டிவ் கேரக்டர்ல நடிக்கத் தொடங்கல. எல்லாரும் இப்படிப்பட்ட ரோல்ஸ் பண்ண யோசிச்சிட்டு இருந்த நேரம். ஆனா, விஜய் சார் துணிச்சலா நடிக்க ஒத்துக்கிட்டார். நான்கூட முதல்ல கதை சொல்லி முடிச்சிட்டு, சூர்யா சார் நடிக்கிறதா நான் யோசிச்சு வச்சிருந்த `பாசிட்டிவ் கேரக்டர் பண்றீங்களா'னு விஜய்கிட்ட கேட்டேன். ஆனா, `இந்தப் படம் பண்ணா நெகட்டிவ் கேரக்டர்தான் பண்ணுவேன்'னு விஜய் சார் உறுதியா இருந்தார்.

சொல்லப்போனா இந்தப் படத்துல 100 சதவிகிதம் நெகட்டிவ் கேரக்டர்ல விஜய் சாரைக் காட்டல. படத்தோட க்ளைமாக்ஸ் காட்சியில முதல்ல விஜய் சார் சாகுற மாதிரி சீன்ஸ் வைக்கல. ஏன்னா, அப்போ இதுக்கு நிறைய பேர் ஒத்துக்கல. ஆனா, விஜய்யோட அம்மா `அந்த கேரக்டர் சாகணும்'னு ஸ்ட்ராங்கா இருந்தாங்க. விஜய்யும்கூட, `உங்களுக்கு என்ன தோணுதோ பண்ணுங்கண்ணா'னு சொல்லிட்டார். அதனால, க்ளைமாக்ஸ் காட்சியைத் திரும்பவும் ரீ ஷூட் பண்ணோம். சந்திரசேகர் சார்தான் கொஞ்சம் பயத்தோடவே இருந்தார். இதுமட்டுமல்லாம `காதலுக்கு மரியாதை' படத்துக்கு பிறகு இந்தப் படம் ரிலீஸாச்சு. ஆடியன்ஸ், நெகட்டிவ் விஜய் கேரக்டரை எப்படி ஏத்துக்குவாங்கனு எல்லாருமே பயந்துக்கிட்டு இருந்தோம். ஆனா, தியேட்டர்ல பலத்த கைதட்டல் கிடைச்சது. படத்துல எஸ்.ஏ.சி சார் நடிக்கவும் செஞ்சார். தவிர, படத்தோட ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்தப்போ எங்க கூடவே சேர்ந்து அவரும் டிராவல் ஆனார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்துல நெகட்டிவ் கேரக்டரை இன்னும் அழுத்தமா காட்டியிருக்கலாம்னு விஜய்கூட ஃபீல் பண்ணார். ஏன்னா, ரிலீஸூக்கு முன்னாடி படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போதே, விஜய் பாதியிலயே எழுந்து போயிட்டார். ஏன்னா, சில காட்சியை நாங்க தூக்கியிருந்தோம். இதுல விஜய்க்கு உடன்பாடில்லாம இருந்தது. இருந்தும் படம் நல்ல ஹிட். படத்தைப் பார்த்துவிட்டு அகத்தியன், விக்ரமன், சேரன் சார்னு எல்லாரும் புகழ்ந்தாங்க. தன்னோட உதவி இயக்குநர்கள் எல்லாரையும் `ப்ரியமுடன்' படத்தைப் பார்க்கச் சொல்லி ஷங்கர் சொன்னதாகக்கூட கேள்விப்பட்டேன். `முதல்வன்' படத்தோட டிஸ்கஷன் அப்போ இதைச் சொல்லியிருக்கார் ஷங்கர் சார்.

ப்ரியமுடன்
ப்ரியமுடன்

இந்தப் படத்துக்கு அப்புறம் தொடர்ந்து வேலை பார்க்கலாம்னு விஜய் சொன்னார். ஏதோ பேச்சுக்கு சொல்றார்னு நினைச்சுகிட்டு வெளியேபோய் சில படங்கள் பண்ணிட்டு அப்புறம் அவர் முன்னாடி போய் நிப்பேன். `என்கிட்ட கதை சொல்லுன்னு சொன்னேன். கேட்காம வெளியே பண்ணிட்டு வந்திருக்க'னு சொல்லிட்டு சிரிப்பார். படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்ல செம ஜாலியா இருப்பார். `ப்ரியமுடன்' படத்துக்கு அடுத்து `யூத்' பண்ணோம். இதுவும் நல்ல ஹிட். இப்பக்கூட, `எனக்கு படம் பண்ணுங்க'னு உரிமையோட கேட்கக்கூடிய இடத்துலதான் என்னை வெச்சிருக்கார். `உனக்கு என்ன வேணும்'னு கேட்பார். எனக்காகத் தயாரிப்பாளர்கிட்ட விட்டு கொடுக்காமல் பேசுவார். படத்துல ஏதாவது பிரச்னைன்னு வந்தா என்னோட சம்பளத்துல இருந்து எடுத்துக்கோங்க'னு சொல்ற கேரக்டர்தான் விஜய் சார். எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட் விஜய் சார். சமீபத்துலகூட அவர்கிட்ட கதை சொல்லியிருக்கேன். நல்லாயிருக்குனு சொன்னார். அவரோடு மூணாவதா ஒரு படம் பண்ண வெயிட் பண்றேன்'' என்கிறார் இயக்குநர் வின்சென்ட் செல்வா.