Published:Updated:

``அப்பா பெரிய கருப்பு தேவரோட வேட்டியைக் கட்டிக்கிட்டுதான் ஷூட்டிங் போறேன்!'' - `க/பெ ரணசிங்கம்' விருமாண்டி

பெரிய கருப்பு தேவரின் மகன் அறிமுக இயக்குநர் விருமாண்டி `க/பெ ரணசிங்கம்' படம் பற்றிப் பேசியிருக்கிறார்.

இயக்குநர் விருமாண்டி
இயக்குநர் விருமாண்டி

"முதல் படத்துக்காக நிறைய போராடியிருந்தாலும், என் போராட்டம் எல்லாம் படம் பண்ண ஆரம்பிச்சதுக்குப் பிறகு எனக்குப் பெரிய ப்ளஸ்ஸா தெரியுது. ஏன்னா, ஷூட்டிங் ஸ்பாட்ல எத்தனை பிரச்னைகள் வந்தாலும், என்னால அதை ஈஸியா சமாளிக்க முடியுது.

பெரிய கருப்ப தேவர்
பெரிய கருப்ப தேவர்

ஏன்னா, இத்தனை வருடமா எவ்வளவு பிரச்னையை ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்திருப்பேன். அதனால, கோபப்பட்டு கத்துறதைவிட எப்படி இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். அனுபவம்தான் மிகப்பெரிய பாடம்.

``உங்களைப் பற்றிய அறிமுகம்?"

க/பெ ரணசிங்கம்
க/பெ ரணசிங்கம்

``என் சொந்த ஊர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பக்கத்துல இருக்கிற கருமாத்தூர். இப்போ சென்னையில செட்டில் ஆகிட்டேன். இயக்குநர் செல்வா சார்கிட்ட 12 வருடம் உதவி இயக்குநரா இருந்தேன். பிறகு, கோபி நயினார் இயக்கிய `அறம்' படத்துல இணை இயக்குநரா வேலை பார்த்தேன். `அறம்' படத்தைத் தயாரித்த நிறுவனம்தான், `க/பெ ரணசிங்கம்' படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்காங்க. நான் சின்ன வயசுல இருந்தே சினிமா பார்த்து வளர்ந்தவன். எங்க அப்பா பெரிய கருப்பு தேவர், ஒரு நடிகர். நிறைய நாடகங்கள், சினிமாவில் நடித்தவர். `விருமாண்டி' படத்திலும் அவர் நடிச்சார். அவரைப் பார்த்தே வளர்ந்ததுனால, எனக்கு சினிமா மீது பெரிய மோகம். நான் சினிமாவுக்கு வந்ததுக்குக் காரணமே, அப்பாதான். அப்பா கிட்டத்தட்ட 53 வருடம் சினிமாவுல இருந்து, இறந்துட்டார். நிறைய குணச்சித்திரக் கேரக்டர்களில் நடிச்சார். அவர் சாதிக்காததை சேர்த்து, நான் சாதிக்கணும்னு ஆசைப்பட்டேன். சினிமாவுல இத்தனை வருடம் உதவி இயக்குநரா வேலை பார்த்தாலும், முதல் படம் இயக்குற வாய்ப்பு இப்போதான் அமைஞ்சிருக்கு."

`` `க/பெ ரணசிங்கம்' வாய்ப்பு எப்படி அமைந்தது?"

``தயாரிப்பு நிறுவனத்துக்கு நான் சொன்ன ஒன்லைன் ரொம்பப் பிடிச்சிருந்தது. பிறகு, விஜய் சேதுபதிகிட்ட கதையைச் சொல்ல கொஞ்சநாள் காத்திருந்தேன். அவருக்கும் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்படிக் கைகூடி வந்ததுதான், இந்த வாய்ப்பு."

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

``டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?"

``கணவர் பெயர் என்பதன் சுருக்கம்தான், `க/பெ'. ஊர்ப்பக்கம் கலெக்டர் ஆபிஸுக்கு மனு கொடுக்கப்போனா, கணவர் பெயரைப் போட்டுத்தான் மனு கொடுப்பாங்க. விஜய் சேதுபதி ரணசிங்கம் என்ற கேரக்டரில் நடிச்சிருக்கார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிற விவசாய மண், இப்போ எப்படி இருக்குங்கிறதை அந்த ஊரோட வாழ்வியலோடு சேர்த்துப் பேசுற படமா இது இருக்கும். என் பெயர் விருமாண்டி. அதனால, பலரும் `சாதிப் படம் எடுக்குறீங்களா'னு கேட்டாங்க. நிச்சயமா, இது சாதிப் படம் இல்லை. ராமநாதபுரம் பகுதி மக்களின் போராட்டம், பிரச்னைகளைப் பற்றித்தான் படத்துல சொல்லப்போறேன். அங்கிருக்கிற மக்கள் அன்றாடம் தண்ணீருக்காகப் பெரிய போராட்டத்தையே சந்திச்சுக்கிட்டு இருக்காங்க. அந்த ஊர்ல நான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் வாய் கொப்பளிக்கத் தண்ணீரை எடுத்தேன். வாயே புண்ணாகிடுச்சு. கடல் தண்ணீரைத்தான் அந்த ஊர் மக்கள் பயன்படுத்துறாங்க. `அறம்' படம் முழுக்க ராமநாதபுரம் ஏரியாவுலதான் எடுத்தாங்க. அந்தப் படத்துல வொர்க் பண்ணும்போதுதான், இந்த மக்களின் பிரச்னைகளெல்லாம் எனக்குத் தெரியவந்தது. அப்போதான், இதைப் படமா பண்ணலாம்னு முடிவு எடுத்தேன். நாட்டின் தலையாய பிரச்னை, தண்ணீர்தான். இந்தப் படம் அதைப் பற்றித்தான் பேசும்."

யாரும் முதல்வரா, பிரதமரா இருந்துட்டுப் போகட்டும். நாங்க வாழ்றதுக்கு, விவசாயம் பண்றதுக்குத் தண்ணீர் கேட்கிறோம். அவ்வளவுதான்."
இயக்குநர் விருமாண்டி

``எப்போதும் சென்னையில் இருக்கிற தண்ணீர் பிரச்னையைத்தான் பெருசா பார்க்கிறாங்க. இதுபற்றி உங்க கருத்து என்ன?"

``எல்லா மீடியாவும் தலைநகரைச் சுற்றி இருக்கிறதுதான் காரணம். நான் பிறந்தது, உசிலம்பட்டி. இங்கே கடல் இல்லாததனால உப்புத் தண்ணீர்கூட கிடையாது. தினமும் தண்ணீருக்குப் போராட்டம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அரசியல் அமைப்புகள் எல்லாம் சென்னையில் இருக்கிறதனாலதான் தண்ணீர் பிரச்னையை அங்கே பெருசா பேசுறாங்க. ஆனா, நாங்களும் இதே நாட்டுலதானே இருக்கோம்."

கோபி நயினார்
கோபி நயினார்

``விஜய் சேதுபதிக்கு என்ன ரோல்?"

``ராமநாதபுரம் மக்களோடு மக்களா இருக்கிற ஒரு மனிதர். மக்களின் பிரச்னைகளை முதல் ஆளாக நின்னு பேசுவார். `அரியநாச்சி'ங்கிற கேரக்டர்ல ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சிருக்காங்க. படத்துல அவங்க விஜய் சேதுபதியின் மனைவி. படத்துல நடிச்சிருக்கிற எல்லோருக்கும் ராமநாதபுர மக்களின் பெயரைத்தான் வெச்சிருக்கேன். அந்தப் பெயர்களைக் கேட்கும்போதே புதுசா இருக்கும். மூணு வருடம் இந்த ஊரில் இருந்து, ஊர் மக்களின் இயல்பு நிலையைப் பார்த்து, ஆவணமெல்லாம் எடுத்து இந்தக் கதையை உருவாக்கியிருக்கேன்."

"அப்பாவும், நடிகருமான பெரிய கருப்பு தேவர் பற்றி?"

இளையராஜா சார் மேடை நாடகங்களுக்கு இசையமைக்கும்போது, அப்பா பாட்டுப் பாடுவார். அவரும், அப்பாவும் அண்ணன் - தம்பியா பழகுனாங்க.
இயக்குநர் விருமாண்டி

"அப்பா நாடகக் காலத்திலிருந்தே இருந்தவர். தேவி நாடக சபையில் முதலில் இருந்தார். ஆச்சி மனோரமாகூட நாடகங்கள் போட்டிருக்கார். அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர்கூடவும் நெருக்கமா இருந்தார். அப்பாவுடைய சிஷ்யர்தான், வாகை சந்திரசேகர். அப்பாதான் இவருக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்து நடிகர் ஆக்கினார். அப்பா நல்ல நடிகர் மட்டுமல்ல; நல்ல பாடகரும்கூட! அவர் பாடி, நடிக்கணும்னு ஆசைப்பட்டார். அந்த ஆசை 'பூ' படத்தில் நிறைவேறியது. 'சிவகாசி ரதியே' பாட்டு அவர் பாடியதுதான். கிட்டதட்ட 100 படங்களுக்கும்மேல் நடிச்சிருக்கார். அப்பாவுக்கு என்னையும் சேர்த்து நாலு பசங்க. எல்லோருமே சினிமாவுல இருக்கோம். அப்பா சினிமாவுல பல வருடம் இருந்தாலும், பெருசா பணம் சம்பாதிக்கல. இருந்தும், சினிமாமேல அப்பாவுக்கு இருந்த காதலால், பசங்க நாங்க சினிமாவுக்கு வந்தப்போவும் அவர் எதுவும் சொல்லல.

அதுமட்டுமில்லாம, இசையமைப்பாளர் இளையராஜாவும், அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். இளையராஜா சார் மேடை நாடகங்களுக்கு இசையமைக்கும்போது, அப்பா பாட்டுப் பாடுவார். அவரும், அப்பாவும் அண்ணன் - தம்பியா பழகுனாங்க. இசையமைப்பாளர் தேவா மேடைக் கச்சேரிகள் நடத்திய காலத்தில் அப்பாவும் பாடுவார். 'கலைமாமணி' விருது வாங்கியிருக்கார், அப்பா. நான் படம் எடுக்கும்போது, அவரைப் பாட வெச்சு நடிக்க வைக்கணும்னு எனக்கு ஆசை இருந்தது. ஆனா, அப்பா இப்போ உயிரோடு இல்லை. அவர் இறந்து பல வருடங்கள் ஆனாலும், அவருடைய நினைவுகள் நீங்கல. பெரும்பாலும் அப்பாவுடைய வேட்டியைக் கட்டிக்கிட்டுதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போறேன்."