Published:Updated:

``சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படம் செம மாஸா இருக்கும்... ஏன்னா?'' - இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி

இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி
இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி

"இப்போ எப்படி ஷூட்டிங் ஸ்பாட்ல அஜித் பிரியாணி சமைச்சுக் கொடுத்தார்னு செய்திகள் வருதோ, அதுமாதிரி அப்போ எங்களுக்கு அஜித் மீன் குழம்பு சமைச்சுக் கொடுத்தார்."

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் தொடங்கி இசையமைப்பாளர்கள் வரை இணையர்கள் சேர்ந்து ஹிட் கொடுத்த கதைகள் இங்கு ஏராளம். அப்படி நண்பர்கள் இருவர் சேர்ந்து திரையுலகில் இயக்குநர்களாக அடியெடுத்து வைத்து, விளம்பரப்பட உலகில் முன்னணி இயக்குநர்களாக வலம் வருபவர்கள் ஜேடி-ஜெர்ரி.

'உல்லாசம்’ அஜித்
'உல்லாசம்’ அஜித்

`உல்லாசம்’, `விசில்’ படங்களுக்குப் பிறகு விளம்பர பட உலகில் பல முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் எடுப்பதில் இருவரும் பிஸி. லேட்டஸ்ட்டாக சரவணா ஸ்டோர்ஸ் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தின் இயக்குநர்கள் ஜேடி- ஜெர்ரிதான்.முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கொரோனா வந்துவிட இப்போது பிரேக்கில் இருக்கிறது யூனிட். `உல்லாசம்’, `விசில்’ பட நினைவுகள் குறித்தும், அடுத்த படங்கள் குறித்தும் ஜேடி-ஜெர்ரியிடம் பேசினேன்.

``ஆமா...`ஜகமே தந்திரம்' படத்தை ஓடிடியில் கேட்டாங்க... ஜூலையில் பாருங்க?'' - தயாரிப்பாளர் சஷிகாந்த்

”திருச்சில உள்ள பிரபலமான கல்லூரில நாங்க ரெண்டு பேரும் இளங்கலை படிச்சோம். நண்பர்களா ஆரம்பிச்ச பயணம் இப்போது வரை தொடருது. கல்லூரி காலங்களிலேயே ஜேடி நிறைய புத்தகங்கள் வாசிக்கறது, சினிமா பார்க்கறதுன்னு பிஸியா இருப்பார். நானும் புத்தகங்கள் எல்லாம் வாசிப்பேன்னாலும் அவ்வளவு தீவிரமா இல்ல. கல்லூரி வந்து ஜேடி நட்பு கிடைச்ச பிறகுதான், புத்தகங்கள் வாசிக்கறது, சினிமா பார்க்கறதுன்னு எல்லாம் தீவிரமாச்சு. அப்போ, எங்க கல்லூரி விடுதில தங்கி இருக்கும் மாணவர்களுக்கு சினிமா படங்கள் எல்லாம் போட்டு காண்பிப்பாங்க. அப்படி ஒரு நாள் பாலுமகேந்திரா சாரோட `அழியாத கோலங்கள்’ படம் போட்டுக் காண்பிச்சாங்க. அந்தப் படம்தான் எங்க வாழ்க்கையோட திருப்புமுனை. ஏற்கெனவே, படங்கள் மேல பித்துப் பிடிச்சு இருந்த எங்களுக்கு சினிமாக்குள்ள நுழையுணும்கிற தீவிரத்தைக் கொடுத்தது அந்தப் படம்தான்” என ஜெர்ரி நிறுத்த சிரித்தபடியே தொடர்கிறார் ஜேடி.

பாலு மகேந்திராவுடன்
பாலு மகேந்திராவுடன்

``பாலு மகேந்திரா சார் பட்டறையில் சேரணும்னு முடிவு பண்ணி அவருக்கு நிறைய கடிதங்கள் போடுவேன். ஆனால், எந்தப் பதிலும் இருக்காது. அதுக்குப் பிறகு ரெண்டு பேரும் படிச்சு முடிச்சதும் மெட்ராஸ்ல வெவ்வேறு பிரபலமான கல்லூரிகள்ல முதுகலை படிப்புக்காகச் சேர்ந்தோம். அப்போ என்னுடைய கல்லூரில ஒரு விழாவுக்காக பாலு மகேந்திரா சார் வந்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவர்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி அவருக்கு நான் எழுதின கடிதங்கள் பத்தியும் சொன்னேன். அதை அவர் ஞாபகம் வச்சிருந்தது என்னுடைய அதிர்ஷ்டம். `படிச்சு முடிச்சுட்டு வா... பாக்கலாம்’ அப்படினு சொல்லியிருந்தார். படிச்சு முடிச்சதும் மவுன்ட் ரோட்ல இருக்க ஒரு பேங்க்ல வேலை கிடைச்சது. ஆனா, அந்த வயசுல மனசு முழுக்க சினிமாதான் ஓடிட்டு இருந்தது. வேலைக்குச் சேர்ந்த கொஞ்ச நாள்லயே பாலு மகேந்திரா சார்கிட்ட இருந்து அழைப்பு வந்தது. பேங்க் வேலையை அப்படியே விட்டுட்டு அவர்கிட்ட போய் சேர்ந்துட்டேன். என் குடும்பத்துல எல்லாருக்கும் அதிர்ச்சிதான். ஆனாலும், அப்பா எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து சப்போர்ட் பண்ணார்.

நான் மகேந்திரன் சார்கிட்டயும், ஜெர்ரி பெங்களூர்ல வேறொருத்தர்கிட்டயும் அசிஸ்டென்ட்டாவும் வேலை பார்த்தோம். அப்போ, தூர்தர்ஷன்ல குறும்படம் இயக்குறதுக்கான போட்டிகள் வச்சிருந்தாங்க. நானும் ஜெர்ரியும் ஒரு சிறுகதையைக் குறும்படமாக்கி அனுப்பி வச்சோம். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். கூடவே டிடில தொடர்ந்து வேலை பார்க்குற வாய்ப்பு கிடைச்சது. அப்போ டிடிக்காக நாங்க எடுத்தப் பல தொடர்களை மும்பை ஏஜென்சி ஒண்ணு பல தரப்புலயும் விளம்பரப்படுத்தினாங்க. அப்போ, அமிதாப்பச்சன் ஜி அவரோட ABCL நிறுவனம் மூலம் தமிழ்ல படங்கள் தயாரிக்க ஆர்வமா இருந்தாங்க. எங்களுக்கு அந்த வாய்ப்பு எங்க தொடர்களை விளம்பரப்படுத்தின மும்பை ஏஜென்சி மூலமா கிடைச்சது” என ஜேடி பிரேக் விட ஜெர்ரி தொடர்கிறார்.

`உல்லாசம்’ படத்தொடக்கம்
`உல்லாசம்’ படத்தொடக்கம்

``ஜெயாபச்சன் ஜியை சந்திச்சு நாங்க எழுதின `உல்லாசம்’ கதையைச் சொன்னோம். கேட்டதும் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. உடனே படம் ஆரம்பிக்கலாம்னு சொன்னாங்க. இந்தக் கதையை ரெடி பண்ணும்போதே அஜித்தை மனசுல வச்சுதான் நாங்க கதை எழுதினோம். கதை அவருக்கும் ரொம்பப் பிடிச்சிருச்சு. அஜித்துக்கு அமிதாப் மேலே பெரிய மரியாதையும் உண்டு. அதனால, அவரோட தயாரிப்புல நடிக்கிறதுல ரொம்ப சந்தோஷமா இருந்தார். அந்தச் சமயத்துல ‘காதல் கோட்டை’, `ஆசை’ மாதிரியான படங்கள் மூலமா அஜித்துக்கு லவ்வர் பாய் இமேஜ் இருந்தது. ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட்டான `உல்லாசம்’ கதையை நண்பர்கள்கிட்ட சொல்லும்போதே, லவ்வர் பாய் கதாபாத்திரம்தான் அஜித்துக்கு சரியா இருக்கும்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா, அதையெல்லாம் பிரேக் பண்ணி, கோபக்கார இளைஞனான குரு கதாபாத்திரம்தான் அவருக்குத் தரணும்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்.

அஜித் வெளிப்படையா சொல்லைன்னாலும், அந்தக் கதாபாத்திரம் பண்றதுல அவருக்கு முழு உடன்பாடு இருந்ததுன்னு எங்களுக்கு படப்பிடிப்புல புரிஞ்சது. இந்தப் படம் தந்த இமேஜ்தான் பின் நாள்கள்ல அவர் `ரெட்’, `அமர்க்களம்’, `சிட்டிசன்’ மாதிரியான படங்கள்ல அவரோட கரடு முரடு ஹீரோ கேரெக்டரை ரசிகர்களால் ஏத்துக்க முடிஞ்சது. இப்போ எப்படி ஷூட்டிங் ஸ்பாட்ல அஜித் பிரியாணி சமைச்சுக் கொடுத்தார்னு செய்திகள் வருதோ, அதுமாதிரி அப்போ எங்களுக்கு அஜித் மீன் குழம்பு சமைச்சு கொடுத்தார். அவ்வளவு பொறுமையா, மெச்சூர்டா, எல்லார்கிட்டையும் பணிவா நடந்துகொள்வார்.”

“ ’உல்லாசம்’ படத்துல ‘சோலாரே’ பாடலை வெளிநாட்ல படமாக்கினா நல்லாருக்கும்னு பேசிட்டு இருந்தோம். அமித்ஜி-யோட வேற சில இந்தி படங்களுக்கும் அப்போ ஸ்விட்சர்லாந்துல ஷூட் போயிட்டு இருந்ததால, அங்கயே எடுக்கச் சொல்லி எங்களுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தாங்க. இந்தப் படத்துடைய ஹீரோயின் மகேஷ்வரி நடிகை ஸ்ரீதேவியோட அக்கா பொண்ணு. மகேஷ்வரியையும் ஜெயாஜிதான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினாங்க. அதுக்கு முன்னாடி அவங்க தமிழ்ல `கருத்தம்மா’ உள்ளிட்ட சில படங்கள் பண்ணியிருந்தாங்க. முதல்முறையா வெளிநாடு போறோம் அப்படிங்கறதால, அந்தச் சமயத்துல அஜித் அவரோட அம்மா, அப்பா ரெண்டு பேரையும் ஸ்விட்சர்லாந்து கூட்டிட்டு வந்திருந்தார். மறக்க முடியாத நினைவுகள் அதெல்லாம். அதுக்குப் பிறகு தேவ் கதாபாத்திரத்துக்கு எங்க காலேஜ் ஜூனியரான விக்ரமை நாங்க தேர்வு செஞ்சோம்.

கல்லூரி காலத்துல இருந்தே அவரை எங்களுக்குத் தெரியும். நடிப்பு மேல அவருக்கு இருந்த ஆர்வம், அதுக்காக எதையும் செய்ய நினைக்கற துணிச்சல்னு அவரைக் கூட இருந்தே கவனிச்சிருக்கோம். அப்போ, சினிமால டப்பிங், நடிப்புனு விக்ரம் தனக்கான இடத்தைப் பிடிக்க போராடிக்கிட்டு இருந்தார். `உல்லாசம்’ கதை கேட்டதும் பிடிச்சு போய் நடிக்க சம்மதிச்சார். பாலு மகேந்திரா சார்கிட்ட ஜேடி வேலை பார்த்தபோது இயக்குநர் பாலா எல்லாம் எங்க செட்தான். அவர் `உல்லாசம்’ பட ஷூட்டிங்கின்போது, விக்ரமை பார்த்துட்டுத்தான் தன்னுடைய ‘சேது’ கதைக்கு கூட்டிட்டுப் போனார். அது கென்னிக்கு அவருடைய கரியர்ல ஒரு பெரிய பிரேக் குடுத்த படம். இவங்க மட்டுமல்ல, எஸ்.பி.பி சார், ரகுவரன், கார்த்திக் ராஜா, பவதாரிணினு ஒரு ஸ்டாராங்கான டீம் எங்க கூட அந்தப் படத்துல இருந்தது எங்களுடைய அதிர்ஷ்டம். படம் வெளிவந்ததுக்கு பிறகுமே ரசிகர்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருந்தது. படத்துல வேலை பார்த்த எல்லாருக்குமே படம் ஒரு அடையாளமா அமைஞ்சதுல ரொம்ப சந்தோஷம்.

’விசில்’
’விசில்’

அதுக்குப் பிறகு நிறைய படங்கள் பண்ண கதை தயார் செஞ்சோம். ஆனா, அது எதுவுமே சரியா அமையலை. ஹாலிவுட்ல அப்போ த்ரில்லர் கதைகள் எல்லாம் ரொம்ப ஃபேமஸ். அதனால, அந்தப் பாணியில ஒரு த்ரில்லர் சஸ்பென்ஸ் கதை தமிழ்ல வந்தா நல்லாருக்கும்னு எழுதின கதைதான் `விசில்’. முழுக்க முழுக்க புதுமுகங்கள் கொண்டு நடிக்க வச்சிருந்தோம். படமும் பெரிய அளவுல ஹிட் ஆகி, இப்ப வரைக்குமே டிவில போடும்போது, அவ்வளவு போன்கால்ஸ் ரசிகர்கள்கிட்ட இருந்து எங்களுக்கு வரும்” என்றார் ஜெர்ரி.

`உல்லாசம்’, ‘விசில்’க்குப் பிறகு பெரிய பிரேக் விட்டுட்டீங்களே?

'பாண்டவாஸ்’
'பாண்டவாஸ்’

”திருச்சில நாங்க படிச்ச கல்லூரியில சுஜாதா சார் எங்களுக்கு சீனியர். அந்த உறவு எங்களுக்கு சென்னை வந்த பிறகும் தொடர்ந்தது. அது மட்டுமல்லாமல் நான் (ஜேடி) சுஜாதா சாருடைய தீவிரமான வாசகர். ‘உல்லாசம்’ படம் வெளிவந்த சமயம் அது. ஒரு நாள் நாங்க ரெண்டு பேரும் சுஜாதா சாரை பார்க்க அவருடைய வீட்டுக்குப் போனோம். எங்களுடைய வேலைல அவருக்கு முழு திருப்தி இருந்ததால, பெண்டா மீடியாவுடைய `பாண்டவாஸ்’ அப்படிங்கற அனிமேஷன் ஃபிலிம்க்கு எங்களை கிரியேட்டிவ் டைரக்டரா பொறுப்பேற்கச் சொன்னார். சிறுவர்களுக்காக மோஷன் கிராபிக்ஸ் அனிமேஷன்ல வெளிவந்த மகாபாரதம் அது.

ஆங்கிலத்துல சுஜாதா திரைக்கதை எழுதியிருந்தார். ஆங்கிலம் மட்டுமல்லாம, தமிழ், இந்திலயும் டப்பிங் பண்ணியிருந்தோம். படத்துக்கு தன்னுடைய இசையால் இளையராஜா சார் உயிர் கொடுத்தார். போஸ்ட் புரொடக்‌ஷன், மற்ற வேலைகள்னு வருஷக்கணக்கா இந்தப் படத்துக்காக வேலை பார்த்தோம். அதோட பலனா ’சிறந்த அனிமேஷன் பட’த்துக்கான நேஷனல் அவார்ட் கிடைச்சது. அதுக்குப் பிறகு ஒரு பிரபலமான துணிக்கடைக்கு விளம்பரம் எடுக்கறதுக்கான வாய்ப்பு எங்களுக்கு வந்தது. பரவை முனியம்மாவை வச்சு எடுத்தோம். அது நாங்க யாருமே எதிர்ப்பார்க்காத அளவுக்கு ஹிட் ஆனதும், தொடர்ச்சியா தி.நகர்ல இருக்க எல்லா பெரிய கடைகளுக்குமே விளம்பரம் எடுக்க வாய்ப்பு வந்தது. அதுக்குப் பிறகு நிலையான வருமானம், எங்களுக்குனு விளம்பர உலகுல ஒரு தனி இடம்னு அது எங்களுக்கு செட் ஆகிடுச்சு. அதனால, அப்போ படங்கள்ல ரிஸ்க் எடுக்க விரும்பல. ஆனாலும், சினிமால சரியா கவனம் செலுத்தாம விட்டுட்டமோங்குற வருத்தம் இருக்கத்தான் செய்யுது.”

பல வருஷங்களுக்குப் பிறகு, திரைப்படம் இயக்க வந்தாச்சு. அண்ணாச்சியை வெச்சு இயக்கற படத்துல என்ன ஸ்பெஷல்?

படப்பிடிப்பு தொடக்க விழாவில்
படப்பிடிப்பு தொடக்க விழாவில்

``அண்ணாச்சிதான் ஸ்பெஷல். சமீபத்துல ஹிட்டான அவருடைய ஷோரூம் விளம்பரங்கள் எல்லாமே நாங்க எடுத்ததுதான். மக்கள்கிட்ட அந்த விளம்பரங்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அண்ணாச்சி ஷோரும் விளம்பரங்களுக்கு ஒரு முகம் தேடிக்கிட்டு இருந்தபோது `நானே ட்ரை பண்றேன்’னு அவரே நடிச்சார். இப்ப பண்ற படம் மக்களுக்கான செம மாஸ் கமர்ஷியல் படமா இருக்கும். ஏன்னா லெஜண்ட் சரவணன் அவர்களோட கெட்டப் சேஞ்சும், படத்தோட பிரமாண்டமும் வேற லெவல்ல இருக்கும். பிரபு, விவேக் மாதிரியான சீனியர்கள் படத்துல இருக்காங்க. இசை ஹாரிஸ்னு நீங்க எதிர்ப்பார்க்காத ட்ரீட் படத்துல இருக்கு. 30% படப்பிடிப்பு ஓவர். லாக்டெளன் முடிஞ்சதும் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் வெளியீடு எல்லாம் இருக்கும்.”

அடுத்த கட்டுரைக்கு