சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

அஜித்... இனியவை முப்பது!

அஜித்... இனியவை முப்பது!
பிரீமியம் ஸ்டோரி
News
அஜித்... இனியவை முப்பது!

‘‘அஜித்தின் வெற்றிக்கான காரணங்களில் முதலிடத்தில் இருக்கறது அவரோட தன்னம்பிக்கைதான்”

தமிழ் சினிமாவில் முப்பதாவது ஆண்டைக் கொண்டாடுகிறார் அஜித் குமார். ஆணழகனாக மூன்று தசாப்தங்களுக்கு முன் அறிமுகமாகியவர் இன்று தமிழ்சினிமாவின் அடையாளம். ஆர்வமும் துறுதுறுப்பும் கொண்ட இளைஞனாகத் திரையில் தோன்றி இன்று லட்சக்கணக்கில் ரசிகர்களை சம்பாதித்து, கோடிக்கணக்கில் தன் மார்க்கெட் வேல்யூவை உயர்த்தி... இத்தனைக்கும் பின்னாலிருப்பது அவரின் அசுர உழைப்பு. ‘என் கடமை நடிப்பது மட்டுமே. பேட்டி, படவிழாக்களுக்கு நோ. நோ மீன்ஸ் நோ’ எனத் தனக்கெனத் தனிக்கொள்கையைக் கடைப்பிடிப்பதாகட்டும், ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்குடனே நடிப்பதாகட்டும், அஜித் ஒரு ‘தைரிய தல’தான். நடிப்பைத் தாண்டி கார் ரேஸர், பைக் ரேஸர், போட்டோகிராபர், செஃப், ரைபிள் ஷூட்டர், ஏரோ மாடலிங், ஆலோசகர் என இவருக்குப் பல முகங்கள். 30 ஆண்டுக்காலமாய் வெற்றிநடை போடும் அஜித் குறித்து அவருடன் பயணித்த திரையுலகினர் சிலர் இங்கே மனம் திறக்கிறார்கள்.

‘‘அஜித்தின் வெற்றிக்கான காரணங்களில் முதலிடத்தில் இருக்கறது அவரோட தன்னம்பிக்கைதான்” - உறுதியுடன் ஆரம்பிக்கிறார் இயக்குநர் சரண். ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’ என அஜித்தின் பெயர் சொல்லும் படங்களை இயக்கியவர்.

அஜித்... இனியவை முப்பது!

‘‘தன்னம்பிக்கை மட்டுமல்ல. அயராத உழைப்பும் அவர்கிட்ட இருக்கு. ஒரு ஃபைட் சீன். ராத்திரியும் பகலுமா இடைவிடாம மூணு கால்ஷீட் போகும்னு ஒரு சூழல் இருந்தால், வேறு எந்த ஒரு ஹீரோவும் நான்ஸ்டாப்பா பண்ணமாட்டாங்க. ஆனா, அஜித்தால பதினைந்து நாள்கூட தூங்காமல் நடிக்க முடியும். அவ்ளோ எனர்ஜி. முகத்துல கொஞ்சமும் களைப்பு தெரியாமல் ஒர்க் பண்ணிக் கொடுப்பார். அதைப்போல டப்பிங்கையும் ஒரே மூச்சில் பேசிக் கொடுத்துடுவார்.

அஜித் ஸ்பாட்ல ரொம்பவும் ஜோவியலா இருப்பார். ஒருத்தரை அவருக்குப் பிடிச்சிட்டா, அவரோடு தொடர்ந்து பயணிக்கணும்னு நினைப்பார். தன் நம்பிக்கை பெற்ற இயக்குநர்களுடன் தொடர்ச்சியா பல படங்கள் அவர் நடிக்கிறதை நீங்க பார்க்கலாம்.

இன்னொரு முக்கியமான சம்பவம் சொல்றேன். ஒருகட்டத்துல அவர் ‘ரசிகர் மன்றம் இனி தேவையில்லை’ன்னு கருதினார். அவரோட ரசிர்களுக்குள்ளேயே மனஸ்தாபங்களும் சண்டைகளும் வருதுன்னு சில பிரச்னைகளைக் கேள்விப்படுறார். கண்கூடாகவும் பார்க்கறார். ‘அட்டகாசம்’ படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடந்தது. ஷூட் முடிச்சிட்டு நாங்க கிளம்பறோம். அவரோட மன்றத்து ஆட்கள் அவங்களுக்குள்ள இருக்கற பிரச்னைகள் பத்தி புகார் சொல்றதுக்காக பைக்கில் பல கிலோ மீட்டர் தூரம் ஃபாலோ செய்து வர்றாங்க. இந்த மாதிரி விஷயங்கள் அவரை ரொம்ப பாதிச்சது.

‘நம்மள ரசிக்கணும்னா யாரா இருந்தாலும் எங்கு இருந்தாலும் ரசிக்கப் போறாங்க. அவங்களுக்குள்ள ஒரு பிரிவினையோ இல்ல அவங்களுக்குள்ள சண்டை வர்ற மாதிரியோ எதுவுமே இருக்கக் கூடாது’ன்னு நினைக்கறார். உடனே அந்த முடிவையும் செயல்படுத்துறார். ‘அசல்’ பட டைம்லதான் இந்த விஷயம் நடந்தது. ‘ரசிகர் மன்றம் இனி வேண்டாம்’னு அவர் முடிவு பண்ணி அறிக்கை வெளியிடும்போது, அவர் சொல்லச் சொல்ல நான்தான் அந்த அறிக்கையை எழுதினேன். அப்ப அவர்கிட்ட ‘இது பெரிய ரிஸ்க் ஆச்சே... எந்த ஒரு ஹீரோவுமே தனக்குன்னு பெரிய பட்டாளம் இருக்கணும்னு நினைப்பாங்களே?’ன்னு அவர்கிட்ட சொன்னேன். இதை அவர்கிட்ட சொல்லக் காரணம், ‘அமர்க்களம்’ ரிலீஸான நேரத்தில் அவருக்கு 25,000 ரசிகர் மன்றங்களைத் தொடங்கினாங்க.

அஜித்... இனியவை முப்பது!

‘உங்களுக்கென ஒரு வட்டம் இல்லாதபோது அது பலவீனமாகக்கூட மாறலாம்’னு அவர்கிட்ட சொன்னேன். உடனே அஜித், ‘இல்ல ஜி. அதைப் பாத்துக்கலாம். மன்றம் வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன்’னு சொல்லி அந்த முடிவுல உறுதியா நின்னார். இதுல எனக்குப் பெரிய ஆச்சரியம்னா, அந்த ஒரு முடிவுக்குப் பிறகுதான் அவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமானது. சமீபத்தில் அவர் கொடுத்த அறிக்கையிலும் நான் ரசிகர்களையும், வெறுப்பவர்களையும் ஒரே மாதிரிதான் பார்க்கிறேன்னு சொன்னது அவர் பக்குவத்தைக் காட்டுது” என்று வியக்கிறார் சரண்.

சரணின் கருத்திற்கு வலுச் சேர்க்கும் விதமாக அஜித்துடன் தனக்கேற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்தார் வி.இசட்.துரை. அஜித்திற்கு ‘முகவரி’ படம் கொடுத்தவர்.

‘‘அஜித் சார் ஒரு கடின உழைப்பாளி. ‘நீ ஒரு விஷயத்தை முடிவு பண்ணினா, அதை நாளைக்குப் பாத்துக்கலாம்னு தள்ளிப் போடாமல், அதை உடனே அந்த கணமே செய்து முடி’ன்னு சொல்வார். அதை இன்னிக்கு வரைக்குமே நான் ஃபாலோ பண்றேன். தோணினா அந்த விஷயத்தை உடனே செஞ்சுடணும். ஏன்னா, இந்த நிமிஷம்தான் நிஜம். இன்னொன்னு, எல்லாருமே ஒரு விஷயத்தை ஈஸியா பேசிடுவாங்க. ஆனா, செயல்படுத்தமாட்டாங்க. ஆனா, அஜித் சார் அப்படியில்ல. சொல்றதைச் செய்வார். அதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன்.

அஜித்... இனியவை முப்பது!

‘முகவரி’ படம் பண்றதுக்கு ஐந்து தயாரிப்பாளர்களிடம் அஜித் சாரை அழைச்சிட்டுப் போயிருந்தேன். ஆறாவதா அமைஞ்ச நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி சார்தான் படத்தைத் தயாரிச்சார். ஸ்பாட்டுல ஜோதிகாகிட்ட என்னைப் பத்தி அஜித் சார், ‘இவர் இந்தக் கதையில என்னைத்தான் நடிக்க வைக்கணும் என்பதில் உறுதியா இருந்தார். அதுல ஜெயிச்சிட்டார்’னுகூட சொல்லியிருக்கார். ஒருநாள் அவர் என்னைக் கூப்பிட்டு, ‘நீங்க எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு படம் எடுத்துக் குடுங்க. உங்களுக்கு ஒரு கார் பரிசளிக்கறேன்’னார். அப்ப எங்க வீட்ல ஏற்கெனவே நாலு கார் இருந்ததனால அவர்கிட்ட ‘எனக்கு கார் வேண்டாம். உங்க நட்பு போதும்’னு சொன்னேன். பொதுவா இந்த இண்டஸ்ட்ரீயில ‘நீங்க இதைப் பண்ணிக் குடுங்க, அப்புறம் உங்கள எப்படி கவனிக்கறேன்னு பாருங்க’ன்னு சொல்வாங்க. காலப்போக்கில் அவங்களுக்கும் சொன்னது மறந்துடும்; கேட்ட நமக்கும் மறந்துடும். ஆனா, அஜித் சார் ஞாபகம் வச்சிருந்தார். படத்தோட ரீரெக்கார்ட்டிங் கலசா ஸ்டூடியோவில் நடந்திட்டிருந்துச்சு. டார்க் ரூமில் ஒர்க் போயிட்டிருந்தது. எனக்குப் பின்னாடி சத்தமே இல்லாமல் அஜித் சார் நின்னு படத்தை ரசிச்சிட்டிருந்திருக்கார். இது எனக்குத் தெரியாது. ரெக்கார்ட்டிங் முடிஞ்சதும் அஜித் சார் என்னை வந்து கட்டி அணைச்சு, ‘எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு படம் எடுத்திருக்கீங்க. என் படங்கள்ல பார்க்கும்போது அதுல அஜித் நடிச்சிட்டிருக்கறது தோணும். ஆனா, ‘முகவரி’யில் வேறு யாரோ நடிக்கறது மாதிரி நானே இன்வால்வ் ஆகிப் படத்தைப் பார்த்தேன். நீங்க சொன்னதைச் செய்துட்டீங்க. இனி நான் சொன்னதைச் செய்றேன்’ என்று சொல்லி அன்று இரவே எனக்கு கார் வரவழைச்சுப் பரிசளிச்சார்’’ என்று சிலிர்க்கிறார் வி.இசட். துரை.

அஜித்... இனியவை முப்பது!

‘கிரீடம்’ இயக்குநர் விஜய் சொல்லும் விஷயம் மேலும் ஆச்சரியப்படுத்துகிறது.

‘‘என் முதல் படமே ‘கிரீடமா’ அமைஞ்சதுக்குக் காரணம், என் மீது அஜித் சார் வச்சிருந்த நம்பிக்கைதான். பைக் ரேஸில் ஏற்பட்ட விபத்தினால் அவருக்கு முதுகு வலி பயங்கரமா இருந்துச்சு. அதுக்கு இன்ஜெக்ஷன் போட்டுப்பார். வலி தாங்க முடியாம ஷாட் பிரேக்ல தரையில படுத்துக்குவார். ஆனா, ஷாட்டின் போது எந்த வலியையும் முகத்துல காட்டிக்காமல் அழகா நடிச்சுக் கொடுத்தார். இன்னொரு சம்பவமும் மறக்க முடியாதது.

விசாகப்பட்டினத்துல படப்பிடிப்பு போயிட்டிருந்துச்சு. அஜித் சார் சென்னையிலிருந்து கிளம்ப வேண்டிய ஃப்ளைட் ஏதோ காரணங்களால டேக் ஆஃப் ஆகல. நாங்க விசாகப்பட்டினத்துல இருந்தபடி வேற சில வேலைகளைப் பார்த்திட்டிருந்தோம். அப்ப, சென்னையிலிருந்து அஜித் சார் போன் செய்தார். ‘நீங்க நாளைக்கு ஷூட் ப்ளான் பண்றீங்களா?’ன்னு கேட்டார். ‘ஆமாம்’னு சொன்னேன். அவ்ளோதான்... 17 மணி நேரம் அவர் பைக்கிலேயே ட்ராவல் பண்ணி அதிகாலை நாலு மணிக்கு வந்துட்டார். ‘விஜய், நான் விசாகப்பட்டினத்துலதான் இருக்கேன். எப்ப வேணும்னாலும் எனக்கு போன் பண்ணலாம். ஷூட் வந்துடுறேன்’ன்னார். அவுட்டோர் ஷூட், எல்லாரும் ரெடியாக இருப்பாங்க. தயாரிப்பாளருக்குப் பணம் வீணாகிடக் கூடாதுன்னு நினைக்கறவர். அவரோட அயராத உழைப்பு, கடமையுணர்ச்சி பத்தி இன்னும் சொல்லிட்டே போகலாம்’’ என்கிறார் இயக்குநர் விஜய்.

அஜித்... இனியவை முப்பது!

மேலே சொன்ன அனைவரின் கருத்தும் நூறு சதவிகிதம் உண்மைதான் என்பதுபோல அஜித்தின் சின்ஸியாரிட்டிக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லி நெகிழ்கிறார் ‘தொடரும்’ இயக்குநரும் நடிகருமான ரமேஷ்கண்ணா.

‘‘நான் ‘தொடரும்’ பண்ணும்போது ஒரு புது இயக்குநர். அதுக்கு முன்னாடி நான் இயக்கின படங்கள் எதுவும் சரியா வரல. அந்தக் காலத்துல நான் ராசி இல்லாத டைரக்டர். அந்தச் சூழல்ல என்னை நம்பி முதல் படத்தைக் கொடுத்தார். முதல்நாள் ‘தொடரும்’ படப்பிடிப்பு காலையில ஆரம்பிக்கற அன்னிக்கு, விக்ரமன் சாரும் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ பட ஷூட்டிங்கை திடீர்னு வச்சிட்டாங்க. அதுல நான் நடிச்சிட்டிருக்கேன். என் போர்ஷன் ஷூட் அரை நாள் இருக்கு. எனக்கோ, நான் அஜித் சாரை வச்சு இயக்குற ‘தொடரும்’ பட ஷூட்டிங்கின் முதல் நாள். அந்த டைம்ல ‘காதல் கோட்டை’ மாஸ் ஹிட். நான் விக்ரமன் சார்கிட்ட ‘பல முயற்சிகள், சறுக்கல்களுக்குப் பின் இப்பதான் இயக்குநரா களம் இறங்கியிருக்கேன்’னு சொன்னேன்.

அஜித்... இனியவை முப்பது!

ஆனா அவங்க மேனேஜர்கள் ‘நீங்க ஷூட் வந்திடுங்க’ன்னு சொல்லி போன் அடிச்சிட்டே இருக்காங்க. எனக்கு வேலை ஓடலை. இதை கவனிச்ச அஜித் என்ன விஷயம்னு கேட்டுட்டு, ‘அரை நாள் ஒர்க்தானே. நீங்க நடிச்சுக் கொடுத்துட்டு வாங்க. நாங்க வெயிட் பண்றோம்’னு என்னை நடிக்க அனுப்பி வச்சார்’’ என்று நெகிழ்கிறார் ரமேஷ் கண்ணா.

இப்படி கோலிவுட்டின் ஒவ்வொரு படைப்பாளியிடமும் அஜித்தைப் பற்றி நெகிழ்ச்சியாய், பெருமையாய், களிப்பாய்ப் பகிர எக்கச்சக்க நிகழ்வுகள் உள்ளன. அதனால்தான் அஜித் தமிழ்சினிமாவின் ‘தல.’