சினிமா
Published:Updated:

காமெடிக்கு நேரமில்லை!

யோகிபாபு - நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
News
யோகிபாபு - நயன்தாரா

வடிவேலுவின் காமெடி டயலாக்குகள் இன்று மீம்ஸுகளாகக் கலக்குகின்றன.

ஒரு காலகட்டத்தில் வலுவான கதையோடு காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கதைகள் வந்தன. பிறகு முழு நீள காமெடி வரிசை கட்டின. அதன்பின் காமெடிக்கெனத் தனியாக டிராக் சேர்த்து படங்கள் வெளியாகின. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காலத்தில் இருந்தே தனி டிராக்குகள் சேர்க்க ஆரம்பித்தனர்... அது விவேக், வடிவேலு காலம் வரை நீண்டது. கடந்த பல வருடங்களாகவே படங்களில் காமெடி டிராக்குகள் எனத் தனி காமெடிகள் வருவதில்லை. எதனால் இந்த மாற்றம், டிராக்குகள் உருவாக்கும் போது நிகழ்ந்த சுவாரசியங்கள் என காமெடி ரைட்டர்கள், இயக்குநர்கள் சிலரிடம் கேட்டேன்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். உதவி இயக்குநராக இருந்த போதே காமெடி டிராக்குகள் எழுதியவர்.

ராஜகோபால்
ராஜகோபால்
செல் முருகன்
செல் முருகன்
ராஜகுமார்
ராஜகுமார்
ஷக்தி சிதம்பரம்
ஷக்தி சிதம்பரம்

‘` ‘அள்ளித் தந்த வானம்’ படத்துக்கு வேற ஒரு இயக்குநர். அதுல விவேக் சாரின் காமெடி டிராக் நான் எழுதியது. ‘பாட்டாளி’ மொத்தப் படமும் ஷூட் செஞ்சுட்டு வந்த பிறகு, காமெடி சேர்க்க வேண்டிய கட்டாயம் வந்துச்சு. அஞ்சு நாள்ல டிராக்கை எழுதிக் குடுத்தேன். அது ஒரு சீசன். கடந்த பத்து வருஷமாவே டிரெண்ட் மாறியிருக்கு.

இப்ப கதையோடு சேர்ந்த காமெடி வந்திடுச்சு. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ன்னு பல படங்களைச் சொல்லலாம். ஹீரோவே காமெடி பண்றாங்க. ‘காக்கா முட்டை’, ‘மண்டேலா’ மாதிரியான படங்கள்ல கதையிலேயே காமெடி இருக்கு. இப்ப பிளாக் ஹியூமர்தான் டிரெண்டிங். ‘டாக்டர்’ல சிவகார்த்திகேயன் பேசவே மாட்டார். பேசிட்டே இருக்கறவரை அப்படியே அயர்ன் பண்ணின மாதிரி சைலன்ட்டா ஆக்கிட்டாங்க. அதுவே காமெடியாகிடுச்சு. உலக சினிமாவை நோக்கி தமிழ் சினிமா பயணிக்குது’’ என்கிறார் ஷக்தி சிதம்பரம்.

‘`வடிவேலுவின் காமெடி டயலாக்குகள் இன்று மீம்ஸுகளாகக் கலக்குகின்றன. வடிவேலுண்ணே டயலாக் பலதும் எழுதினது நான்தான்...” புன்னகையோடு பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ராஜகுமார்.

காமெடிக்கு நேரமில்லை!
காமெடிக்கு நேரமில்லை!
காமெடிக்கு நேரமில்லை!

‘`வடிவேலு அண்ணேவுக்குப் பிறகு வந்த நடிகர்கள் எல்லாருமே கதையோடு வர்ற காமெடியில பயணமாக ஆரம்பிச்சிட்டாங்க. சூரி, யோகிபாபு, சதீஷ்னு பலரும் கதையோட போக்குல காமெடி பண்றாங்க. அவங்க நடிச்சதைத் தனி காமெடி சீன்களா எடுத்து டி.வி-யில போடமுடியாது. அதாவது ‘கவுண்டமணி காமெடிகள்... வடிவேலு காமெடிகள்’ மாதிரி வராது. அதனால காமெடி டிராக்குகளுக்கு வேலை இல்லாமல் ஆகிடுச்சு.

‘எல்லாம் அவன் செயல்’ டிராக்குக்கு ரொம்ப மெனக்கெட்டோம். அது த்ரில்லர் கதை. ஆர்.கே.சார் நடிக்கறார் என்றதும் படம் முழுவதும் அவரையே கொண்டு வர முடியாது. அதனால வடிவேலு சார் இணைந்தார். அவரும் அந்தப் படம் முழுவதுமே ஹீரோவோடு பயணிக்க முடியாது. இன்னிக்கு அரசியல்வாதியா இருக்கற பலரும் ஒரு காலத்தில் லாயராக இருந்தவங்கதான் என்பது மைண்ட்ல வந்துச்சு. அதை மனசுல வச்சு, அவரை வக்கீலாக்கி, அதன்பிறகு அரசியல்வாதியா அந்த டிராக்கைக் கொண்டு போயிருப்போம். படத்துக்கும் ப்ளஸ் ஆச்சு. ‘வண்டுமுருகன்’ செம ரீச்’’ என்கிறார் எஸ்.பி.ராஜகுமார்.

நடிகர் விவேக்குடன் பயணித்த செல்முருகன், ‘காதல் சடுகுடு’, ‘எனக்கு 20 உனக்கு 18’ படங்களுக்கு காமெடி டிராக் எழுதியவர். விவேக்கின் காமெடி டிஸ்கஷனின் போதெல்லாம் கூடவே இருந்தவர்.

‘`இப்ப ஒரு படம்னாலே அதிக பட்சம் ரெண்டு மணி நேரம்ங்கற மாதிரிதான் வந்திட்டிருக்கு. அப்ப மூணு மணி நேரம் ஓடினாக்கூட, நீளம் கருதி காமெடி தூக்க மாட்டாங்க. இப்ப ஜனங்களுக்கும் நேரமில்ல. ரெண்டு மணி நேரம் ஓடுற படம்தான் சாய்ஸா இருக்கு. தனி காமெடி டிராக் இல்லாமப்போனதுக்கு அது ஒரு காரணம்’’ என்கிறார் செல்முருகன்.

கவுண்டமணி - செந்தில் கூட்டணியில் வெளியான 70 படங்களுக்கு டிராக் எழுதியவர் ராஜகோபால். ‘ஜெய்ஹிந்த்’, ‘கட்டபொம்மன்’, ‘கர்ணா’, ‘பெரிய கவுண்டர் பொண்ணு’ என ஒரு பட்டியல் நீளும். விவேக், வடிவேலு, யோகிபாபு என இப்போதுவரை 106 படங்களுக்கு மேல் காமெடி ரைட்டராக இருந்திருப்பவர் ராஜகோபால்.

‘`அப்ப நகைச்சுவை எழுத்தாளர்கள் ஒரு பத்து சதவிகிதம் சொன்னாப் போதும், அதை நூறு சதவிகிதமா திரையில கொண்டு வந்தாங்க. நல்ல காமெடிங்கறது தன்னை மறந்து சிரிக்கணும். அப்ப குடும்பமா படம் பார்க்க வருவாங்க. குடும்பமா சிரிப்பாங்க. காமெடிக்காகவே படங்கள் ஓடின காலம் உண்டு.

காமெடிக்கு நேரமில்லை!
காமெடிக்கு நேரமில்லை!
காமெடிக்கு நேரமில்லை!

நான் எப்பவுமே தியேட்டர்ல ஆடியன்ஸ் பல்ஸ் தெரிஞ்சுதான் காமெடி எழுதுவேன். இப்ப வர்ற படங்கள்ல பிளாக் ஹியூமர், டார்க் ஹியூமர்னு சொல்றாங்க. அதுல எனக்கு உடன்பாடு கிடையாது. அதுல சிரிப்பு வராது. தியேட்டர்ல அந்தப் படங்களைப் பார்க்கும்போது, பக்கத்து சீட்டுல இருக்கறவங்கள பார்க்கும்போது தெரியும்... அரை மனசா சிரிச்சு வைப்பாங்க. துப்பாக்கி காட்டி மிரட்டிச் சிரிக்கச் சொன்னது மாதிரி சிரிப்பாங்க. அது நல்ல நகைச்சுவை கிடையாது.

இந்த ஒரு வருஷத்துல ஆறெழு படங்கள் எழுத மாட்டேன்னு சொல்லிட்டேன். ஏன்னா, அவங்க வரும்போதே, ‘தவசி’யில வடிவேலு காமெடி மாதிரி எழுதுங்க, ‘மிடில் கிளாஸ் மாதவன்’ல வடிவேலுக்கும் விவேக்கும் எழுதுன மாதிரி எழுதுங்கன்னு சொல்லிக் கேட்குறாங்க. அதுக்கான நடிகர்கள் யார்னு பார்த்தால் சுமாரான ஆட்கள். அவங்கள பார்த்தாக் கூட காமெடி வராது. அதனால, அது ஒர்க் அவுட் ஆகாதுன்னு எழுத மறுத்துட்டேன்’’ - அழுத்தமாகச் சொன்னார் ராஜகோபால்.

‘மாற்றம் என்பது மாறாத ஒன்று’ என்பது தமிழ் சினிமாவுக்கும் தமிழ் சினிமா நகைச்சுவைக்கும் பொருந்தும்.