Published:Updated:

`` `சினிமா வேண்டாம்'னு அம்மாகிட்ட சொல்லி அழுத நாள்கள் நிறைய..." - 'டிஸ்கோ' சாந்தி பகிர்வுகள்

'டிஸ்கோ' சாந்தி
'டிஸ்கோ' சாந்தி

என் கவர்ச்சி நடனத்தைப் பார்த்து நானே முகம் சுளிச்சு, கோபத்துடன் வேதனை யடைந்தேன். அதன் பிறகு என் படங்களைப் பார்க்க வேண்டாம்னு குடும்பத்தினரிடம் சொல்லிட்டேன். பிறகு, நாங்க ஒண்ணா சினிமா பார்க்கவே போகலை..

தமிழ்த் திரையுலகில் ஜொலித்த நாயகிகளின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும், வலி நிறைந்த மறுபக்கமும் பலருக்கும் தெரியாது. அவற்றையெல்லாம் அவள் விகடனில் வெளியாகும் '80'ஸ் எவர்கிரீன் நாயகிகள்' தொடரில் நடிகைகள் பலரும் மனம் திறந்து பகிர்கின்றனர்.

அந்த வகையில், தற்போதைய அவள் விகடன் இதழில் வெளியாகியிருக்கும் 'டிஸ்கோ' சாந்தியின் பேட்டியில், தனது சினிமா பயணத் தொடக்கம் முதல் தன் மனதில் பொதிந்து வைத்திருக்கும் வலிகள், ஏமாற்றம் உள்ளிட்ட பல விஷயங்களையும் யதார்த்தமாகவும் நெகிழ்ச்சியாகவும் பேசியிருக்கிறார் 'டிஸ்கோ' சாந்தி.

குடும்ப வறுமைக்காக சினிமாவில் வேண்டா வெறுப்பாய் நடிக்கச் சென்ற தொடக்கமே சாந்திக்கு ஏமாற்றம்தான்!

ஹீரோயினாக நடிக்கச் சென்றவரை, கிளாமர் நடிகையாக திரையுலகம் மாற்றியது. அதனால், ஆரம்பக் காலங்களில் ஒவ்வொரு நாள் இரவிலும் அம்மாவின் மடியில் படுத்து அழுத நினைவுகளைக் கூறும்போது, " 'சினிமா வேண்டாம்'னு அம்மாகிட்ட சொல்லி அழுத நாள்கள் நிறைய உண்டு..." - சாந்தியின் குரலில் விவரிக்க முடியாத சோகத்தை உணர முடிந்தது.

சாந்தியின் கால்ஷீட் விஷயங்களைக் கவனித்துக்கொண்ட அவரின் அம்மா, படிப்பு மற்றும் வெளியுலக அனுபவம் இல்லாதவர். இருந்தபோதிலும் மகளின் சம்பாத்தியத்தில் சில சொத்துகளை வாங்கியிருக்கிறார்.

கணவரின் மறைவுக்குப் பிறகு, அவர் தொடங்கிய சேவைப் பணிகளை நான் செய்கிறேன். நடிக்க வந்த காலம் முதல் இப்போவரை, என் சம்பாத்தியத்தில் மூன்றில் ஒரு பகுதியை சேவைக்குன்னு செலவிடுறேன்

சென்னை வளசரவாக்கத்தில் தங்களுக்குச் சொந்தமான மூன்று கிரவுண்ட் நிலத்தில் ஆசை ஆசையாய் பெரிய வீட்டைக் கட்டியிருக்கிறார். கட்டுமானப் பணி நிறைவடையும்போதுதான், தங்களின் மனைக்குப் பக்கத்திலுள்ள வேறொருவர் மனையில் வீடு கட்டியிருப்பது தெரிந்து அதிர்ந்திருக்கிறார்கள். வேறுவழியின்றி கட்டிய வீட்டை நிலத்தின் உரிமையாளருக்கே கொடுத்தக் கதையைச் சொல்லி சிரித்தார், சாந்தி. மறுகணமே, 'அந்த நிலத்தை வாங்க நான் மாதக்கணக்கில் வேண்டா வெறுப்பாய் அரைகுறை ஆடையுடன் சினிமாவில் நடனமாடினேன். இப்படிக் கஷ்டப்பட்டு சேர்த்தச் சொத்துகளை இழந்ததுடன், என் குடும்பக் கஷ்டங்கள் தெரிந்தும்கூட எனக்குத் தரவேண்டிய நியாயமான பணத்தையும் பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றினார்கள்' என்று குரல் ஆதங்கத்துடன் கூறினார். முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க.. http://bit.ly/2TyZv2U

"... 'ஊமை விழிகள்' படத்தில் 'ராத்திரி நேரத்து பூஜையில்' பாடல் பெரிய ஹிட்டானது. அதைப் பக்திப் பாடல்னு நினைச்சு கோயில் திருவிழாக்களில் ஒலிபரப்பு செய்யவே சர்ச்சைகள் உருவானது. குடும்பமாக அந்தப் படத்தைத் தியேட்டர்ல பார்த்தோம். என் கவர்ச்சி நடனத்தைப் பார்த்து நானே முகம் சுளிச்சு, கோபத்துடன் வேதனை யடைந்தேன். அதன் பிறகு என் படங்களைப் பார்க்க வேண்டாம்னு குடும்பத்தினரிடம் சொல்லிட்டேன். பிறகு, நாங்க ஒண்ணா சினிமா பார்க்கவே போகலை..."

"வெளியூர், வெளிநாடுகளில் ஷூட்டிங் நடந்தாலும், என் உதவியாளர்களுடன் தனியாகவே பயணம் செய்வேன். என்னிடம் தவறான கண்ணோட்டத்துல அணுகினாலும், டபுள் மீனிங்ல பேசினாலும் யாரா இருந்தாலும் கண்டபடி அடிப்பேன். ஒருமுறை ஊட்டி ஷூட்டிங்ல என்னிடம் தப்பா பேசின அப்போதைய எம்.எல்.ஏ-வின் மகனை செமத்தியா அடிச்சேன். பெரிய நட்சத்திரங்கள் முன்னிலையிலேயே, என்னிடம் தவறா அணுகின சில ஆண்களை செருப்பால அடிச்சிருக்கேன். இதுபோன்ற நிறைய சம்பவங்களால், என்னிடம் சகஜமா பேசவே சினிமா துறை ஆண்கள் பலரும் பயப்படுவாங்க. என் பாதுகாப்புக்காகத் தைரியமான குணத்துடன் நான் இருந்ததால், குடும்பத்தினரும் பயமில்லாமல் இருந்தாங்க..."

கணவருடன்...
கணவருடன்...

"...கணவரின் மறைவுக்குப் பிறகு, அவர் தொடங்கிய சேவைப் பணிகளை நான் செய்கிறேன். நடிக்க வந்த காலம் முதல் இப்போவரை, என் சம்பாத்தியத்தில் மூன்றில் ஒரு பகுதியை சேவைக்குன்னு செலவிடுறேன். நாங்க படிக்க வெச்ச பலரும் டாக்டர், வக்கீல், ஐ.டி வேலைனு நல்ல பொறுப்பில் இருக்காங்க. செய்ற உதவியை யாருக்கும் சொல்லக் கூடாதுன்னுதான் நினைப்பேன். இப்போ நீங்க வலியுறுத்தி கேட்டதாலதான் சொல்றேன்..."

- இதுபோல ஒன்றல்ல... கணவரின் மரணம் வரை அடுத்தடுத்து பல்வேறு ஏமாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறார், சாந்தி. ஆனாலும், வாழ்க்கையின் மீதுள்ள பிடிப்பையும் சக மனிதர்களின்மீது அன்பு செலுத்துவதையும் கைவிடாததுதான் சாந்தியின் வெற்றிக்கு முதல் காரணம். தன் உழைப்பால், குடும்பன் நிலையை உயர்த்தினார். பிறகு, கணவரின் திரைப்பயணத்துக்கு ஊக்கம் கொடுத்தார்.

தற்போது மகன்களின் திரைக்கனவுக்கு உறுதுணையாக இருக்கிறார். இன்னும் இன்னும் நிறைய சுவாரஸ்யமான, நெகிழ்ச்சியான தருணங்களையும் இந்தப் பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார், 'டிஸ்கோ' சாந்தி. முழுமையான பேட்டியை அவள் விகடன் இதழில் வாசிக்க > 80'ஸ் எவர்கிரீன் நாயகிகள் 29: விஜய், சூர்யாவுடன் நடனமாட ஆசைப்படுகிறேன்! - 'டிஸ்கோ' சாந்தி https://cinema.vikatan.com/tamil-cinema/1980s-evergreens-heroins-actress-disco-shanti

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு