சினிமா
Published:Updated:

"இது 18 வருட கதை!"

போஸ் வெங்கட்
பிரீமியம் ஸ்டோரி
News
போஸ் வெங்கட்

திரையில் ஓரத்திலாவது தெரிந்தால் கைத்தட்டல் கிடைக்கும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தவன் நான்.

போஸ் வெங்கட்டைத் திரை நடிகராகத் தெரியும்; சீரியல் நடிகராகவும் தெரியும். ஆனால் இயக்குநராக, அதிலும் சமூகப் பொறுப்புள்ள அரசியல் உணர்வுள்ள இயக்குநராக முதல் படத்திலேயே தன்னை நிறுவியிருக்கிறார். ஆணவக்கொலைகளின் சாதிய உளவியலை அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசிய ‘கன்னிமாட’த்தின் உறுப்பினர்களைச் சந்தித்தேன்.

“திரையில் ஓரத்திலாவது தெரிந்தால் கைத்தட்டல் கிடைக்கும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தவன் நான். இயக்குநராவேன், நடிகனாவேன் என்ற எந்த இலக்கும் எனக்கு இல்லை. ஆனால் நடிகனாகும் வாய்ப்பு அமைந்தது. வாசிப்பாளர்கள், நல்ல நண்பர்கள் எனப் பலருடன் பயணித்தேன். அந்த நெடிய பயணம் சினிமா வெறுமனே கைத்தட்டலுக்கான ஊடகம் மட்டுமல்ல, அது ஒரு வலிமையான ஆயுதம் என்பதை உணர்த்தியது. சிறுவயது தொடங்கி நான் பார்த்த சாதியத்தின் கோர முகத்திற்குத் தீர்வு தேடியபோது பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் போன்றவர்களைத் தேடிப் படித்தேன். சென்னைக்கு வந்த புதிதில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் ஆட்டோவில் பயணித்தனர் ஒரு காதல் ஜோடி. வெளியூரிலிருந்து சென்னைக்குத் தஞ்சம் வந்த அந்தக் காதல் ஜோடியின் கதை என் மனதை ரணமாக்கியது. மனித சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கும் ஆதிக்க உளவியல் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அப்போதிருந்து என் மனதில் நான் உருவாக்கிய கதைதான் ‘கன்னி மாடம்’ ” - நிதானமாகப் பேசத் தொடங்கினார் போஸ் வெங்கட்.

“பணம் பண்றதா இருந்தா வேற எந்த பிசினஸ் வேணும்னாலும் பண்ணலாம். ஆனால், சினிமால நாம கொஞ்சம் பொறுப்புணர்வோடு இருக்கணும். கதையைக் கேட்டதுமே லாப நஷ்டம் பத்தி யோசிக்காமல் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன்” என்று சொல்லும் ஹசீர், குவியும் பாராட்டுகளால் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறார்.

`கன்னிமாடம்’ டீம்
`கன்னிமாடம்’ டீம்

“அண்ணனை எனக்கு 18 வருஷமாத் தெரியும். அப்போ இருந்தே இந்தக் கதையை என்கிட்டயும், என் கணவர்கிட்டயும் சொல்லியிருக்காரு. கண்டிப்பா அண்ணா இதை ஒருநாள் படமாக்குவாருன்னு தெரியும். ஆனா, அதுல நானே நடிப்பேன்னு தெரியாது.” படத்தில் தனது பார்வையை உருட்டி ரசிகர்களுக்குக் கலகலப்பூட்டிய ரோபோ சங்கரின் மனைவி ப்ரியா ரோபோ சங்கர் முகத்தில் அவ்வளவு பிரகாசம்.

“சாரும் நானும் ஒரு படத்துல சேர்ந்து நடிச்சோம். அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. அந்தப் படப்பிடிப்பின் போதுதான் இந்தக் கதையை என்கிட்ட சொன்னார். கதையைக் கேட்ட அந்த இரவு எனக்குத் தூக்கமே வரல. அந்தக் கதை படமாகுறப்போ இந்தப் படத்துல நானும் இருக்கேன்கிறதை பொறுப்பாவும், பெருமையாவும் உணர்ந்தேன்” என்றார் ஆட்டோ டிரைவராக முதன்மைப் பாத்திரத்தில் நடித்த ஶ்ரீராம்.

போஸ் வெங்கட்
போஸ் வெங்கட்

“இயக்குநர் ‘யார்’ கண்ணனின் பொண்ணுதான் இந்தப் படத்தோட நடிகை சாயாதேவி. தமிழ் பேசத் தெரிந்த , திராவிட முகச் சாயல் கொண்ட நடிகைகள் ரொம்பக் கம்மி. இவங்க அந்தக் குறையைப் போக்குவாங்க” என போஸ் வெங்கட் அறிமுகம் செய்ய, வெட்கத்துடன் பேசத் தொடங்கினார் சாயாதேவி, “நான் பண்ணின சில ‘டிக்- டாக்’ வீடியோ பார்த்துதான் என்னை ஆடிசனுக்குக் கூப்பிட்டாங்க. எங்க அப்பாவுக்கு நான் நடிக்கவந்தது ஆரம்பத்துல பிடிக்கல. படம் பார்த்துட்டு அவர் அஞ்சு நிமிடம் அமைதியாகவே இருந்தார். அப்புறம் ‘எல்லாப் புகழும் டைரக்டருக்குத்தான்’னு சொன்னாங்க” என சாயாதேவி சொல்ல, அவருக்கு ஜோடியாக நடித்த விஷ்ணு ராமசாமியும், ஆட்டோ டிரைவராக நடித்த வலீனா பிரின்சும், ``ஆமா, எல்லாப் புகழும் டைரக்டருக்குத்தான்” என்றனர் கோரஸாக.

“எனக்கு ஆக்சிடென்ட் காட்சியில் நடிச்சதுகூட சிரமமாத் தெரியலை. ரொமான்ஸ் காட்சிகளில் நடிச்சதுதான் கஷ்டமா இருந்துச்சு” என்கிறார் வெட்கத்துடன், சாயாதேவியின் காதலராக நடித்த விஷ்ணு ராமசாமி. “டைரக்டர் சார்தான் எனக்கு ஆட்டோ ஓட்டக் கத்துக்கொடுத்தார். இப்போ என் கைவசம் ரெண்டு தொழில் இருக்கு. நடிப்பு, ஆட்டோ டிரைவிங்” என்று சிரிக்கிறார் வலீனா பிரின்ஸ்.

“எல்லாருடைய கூட்டு உழைப்புதான் இந்தப் படத்தை சாத்தியமாக்குச்சு. படத்தோட ஷூட்டிங்கை 28 நாள்ல முடிச்சுட்டோம். கேமராமேன் இனியன் ஜெ. ஹாரிஜோட உழைப்பு அசாத்தியமானது. ஒருமணி நேரம்கூட வீணாகாமலிருக்க ஒரே இடத்தில் மார்ச்சுவரி, ஆஸ்பிட்டல், ஹோட்டல் என செட் அமைத்துக்கொடுத்து உதவினார் சிவசங்கர். படத்துல எங்க இசை வேணும்கிறதைவிட, எந்த இடத்துல இசை வேணாம்கிறதை முன்கூட்டியே திட்டமிட்டு பின்னணி இசை, பாடல்களை உருவாக்கிக்கொடுத்தார் ஹரி சாய். பாடல்கள் எழுதிக்கொடுத்த விவேகா சார், நான் நினைத்தபடியே எடிட் செய்துகொடுத்த எடிட்டர் ரிஷார் ஜெய்னி இவர்கள் அனைவருமே நான் எழுதியதைத் திரையில் கடத்த உதவினாங்க.

எங்க ஊரில் மதங்களைக் கடந்த, சாதியைக் கடந்த பல மனுஷங்களோட அன்பை மட்டுமே சுமந்து சென்னை வந்து வாழ்ந்துகிட்டிருக்கேன். அந்தச் சாதி, மதம் ரெண்டுக்காகவும் மனிதன்கிற தன் அடையாளத்தையே அழிச்சுக்கறப்போ அதைத் தாங்கிக்க முடியலை. சாதியை, மதத்தைக் கடந்த மனிதம் நிறைய பேர்கிட்ட இருக்கு. சாதியத்தை வேரறுத்துத் தான் அந்த மனிதத்தை மீட்டெடுக்கணும்” என்று போஸ் வெங்கட் குரல் அவ்வளவு அழுத்தம்!