Published:Updated:

டாக்டர் - சினிமா விமர்சனம்

டாக்டர் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் - சினிமா விமர்சனம்

தனது பவர்ப்ளே ஏரியாவான காமெடியை மொத்தமாக மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து சீரியஸ் முகத்திலும் ஸ்கோர் செய்கிறார்.

டாக்டர் - சினிமா விமர்சனம்

தனது பவர்ப்ளே ஏரியாவான காமெடியை மொத்தமாக மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து சீரியஸ் முகத்திலும் ஸ்கோர் செய்கிறார்.

Published:Updated:
டாக்டர் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் - சினிமா விமர்சனம்

தமிழில் அதிகம் பேசப்படாத டார்க் காமெடி ஜானரைத் தொட்டு நெல்சன் கொடுத்திருக்கும் சிரிப்பு வைத்தியமே இந்த ‘டாக்டர்.’

ராணுவத்தின் கடமை தவறாத மருத்துவர் சிவகார்த்திகேயன். உணர்ச்சிகளைக்கூட தேவைக்கதிகமாய் ஒரு துளி செலவிடாத கறார் பேர்வழி. நிச்சயம் செய்யப்பட்ட பிரியங்கா மோகன் திருமணத்தை நிறுத்திவிட, அதற்கும் அதிகம் ரியாக்‌ஷன் காட்டாமல் ஒதுங்க முனைகிறார் சிவா. அந்த நேரம் பார்த்து பிரியங்காவின் குடும்பம் ஒரு சிக்கலில் மாட்ட, சிவாவிற்குள் ஒளிந்திருக்கும் டாக்டர் மூளையும் ராணுவ வேகமும் உதவிக்கு வருகிறது. குடும்பமாய்ச் சேர்ந்து அந்தச் சிக்கலிலிருந்து மீண்டார்களா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

சிவகார்த்திகேயனுக்கு நிஜமாகவே வழக்கத்திற்கு மாறான வேடம். தனது பவர்ப்ளே ஏரியாவான காமெடியை மொத்தமாக மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து சீரியஸ் முகத்திலும் ஸ்கோர் செய்கிறார். வரவேற்கத்தக்க மாற்றம். புத்திசாலிப் பெண்ணாய் அறிமுகமாகும் பிரியங்கா மோகன் கதைபோகும் போக்கில் தமிழ்சினிமா டெம்ப்ளேட்டான ‘லூஸுப்பெண்’ வரைவிற்குள் அடைபட்டுப்போவது சோகம்.

டாக்டர் - சினிமா விமர்சனம்

காமெடியை இரண்டு இன்னிங்ஸாகப் பிரித்து ஆளுக்கொரு பக்கம் சிக்ஸர் பறக்கவிடுகிறார்கள் யோகி பாபுவும் ரெடின் கிங்ஸ்லீயும். கிங்ஸ்லீயின் வசன உச்சரிப்பு தொடக்கத்தில் அயர்ச்சி தந்தாலும் போகப்போக அதுவே சிரிப்பாக மாறுவதுதான் வொண்டர் வொண்டர். உருவகேலி நகைச்சுவையை வெகுவாகக் குறைத்து, தன் திறமைமீது நம்பிக்கை வைத்துச் சிறப்பாகக் களமாடியிருக்கிறார் யோகிபாபு. தீபா, சுனில், ஷிவ அரவிந்த் எனத் தலைகாட்டும் எல்லாருமே படத்தைக் களைகட்ட வைக்கிறார்கள்.

இரண்டாம் பாதியில் அதுவும் சில காட்சிகளே வினய் வருகை. ஸ்டைலாக இருக்கிறார். முறைக்கிறார். அதைப்போலவே ஒரு கேமியோ மிலிந்த் சோமனுக்கு.

‘Soul of Doctor’ அனிருத்தான். நகைச்சுவைக் காட்சிகளில் தடதடக்கும் அதிரடி, பதற்றம் கூட்டும் காட்சிகளில் மிருதுவான க்ளாஸிக்கல் என ப்யூஷன் விருந்து வைக்கிறார். அவருக்கு சரியான பக்கவாத்தியம் விஜய் கார்த்திக் கண்ணனின் பரபர ஒளிப்பதிவு.

முந்தைய படத்தின் சாயல் இருந்தாலும் படம் பார்க்கும்போது அதை உறுத்தாமல் கடக்கச் செய்கிறது நெல்சனின் திரைக்கதையும் அதில் கைகூடும் காமெடியும். எக்கச்சக்க கதாபாத்திரங்கள். அவர்கள் அத்தனை பேருக்குமான வெளி எனத் திறம்படக் கையாண்டி ருக்கிறார். ஹீரோ யிசத்தையும் நகைச்சுவையையும் பக்காவாக இணைக்கும் பாலம் நெல்சன் ஸ்பெஷல். மெட்ரோ சண்டைக் காட்சி அதன் ஒரு சோற்றுப் பதம்.

டாக்டர் - சினிமா விமர்சனம்

டார்க் ஹியூமர் என்றாலுமே வெகு சீரியஸான விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் ஹீரோவே நியாயப்படுத்தும் தொனிதான் உறுத்துகிறது. அதுவும் ‘தோத்துட்டா சேலை கட்டிக்க’ பந்தயம் எல்லாம் நகைச்சுவை இல்லை என்பது படைப்பாளிகளுக்குப் புரிய இன்னும் எத்தனை தசாப்தங்களாகும்? முதல் பாதியில் வேகமெடுக்கும் படம் இரண்டாம் பாதியில் தொய்வடைந்து ஒருவழியாக இறுதிக்கட்டத்தை அடைகிறது.

நீண்ட இடைவேளைக்குப்பின் தமிழ் சினிமாவின் நகைச்சுவை வட்டாரத்தில் ஒரு நல்வரவு இந்த ‘டாக்டர்’.