Published:Updated:

``கமல் சார், இவனுக்கு அறிவில்லைன்னு கண்டுபிடிச்சிடுவாரோனு பயந்துட்டேன்!'' - `டாக்டர்' நெல்சன்

டாக்டர் ஷூட்டிங்
டாக்டர் ஷூட்டிங்

லாக்டெளன் நாள்களில் `டாக்டர்’ படத்தின் எடிட்டிங் வேலைகளில் பிஸியாக இருந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் பேசினோம்...

`கோலமாவு கோகிலா’ படத்துக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் `டாக்டர்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்த லாக்டெளன் நாள்களில் படத்தின் எடிட்டிங் வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் பேசினேன்.

``என் வாழ்க்கை இப்படியே போய்டுமோன்னு பயமா இருக்கு!'' - சுஷாந்த் சிங் சொல்ல வந்ததென்ன?!

நீங்கள் சிம்புவை வைத்து இயக்கிய `வேட்டை மன்னன்’ படத்திலும் சிவகார்த்திகேயன் நடிச்சிருந்தார். அப்போ நடிச்சதுக்கும் இப்போ `டாக்டர்’ல நடிக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு?

வேட்டை மன்னன்
வேட்டை மன்னன்

`` `வேட்டை மன்னன்’ படம் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எடுத்தது. அது சிவாவோட ஆக்டிங் கரியரின் தொடக்கம். பெருசா எதுவும் கத்துக்காத காலகட்டம்னு சொல்லலாம். ஆனா, இப்போ 16 படங்கள் பண்ணிட்டு, நல்ல அனுபவத்தோடு இருக்கார். அதுமட்டுமல்லாமல், சிவா அறிவாளி; நிறைய யோசிப்பார். நாம எதை பண்ணணும்; பண்ணக் கூடாது, நம்ம ப்ளஸ் என்ன; மைனஸ் என்னனு எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு வேலை பார்க்கிற நடிகர். பொதுவாகவே நடிகர்கள் எல்லாரும் இந்த விஷயங்களில் கவனமாக இருப்பாங்க. அதுமட்டுமல்லாமல், அவங்களோட கம்ஃபர்ட் ஸோனை உடைச்சு வேற மாதிரி சீன்ஸ் வைக்கும்போது முதலில் தயங்குவாங்க. அப்புறம் உட்கார்ந்து பேசி, அந்த சீன் எப்படி வரும்னு ஒரு நம்பிக்கை கொடுத்ததுக்குப்பிறகு அந்த சீனை சூப்பரா பண்ணுவாங்க. அப்படியும் சில சீன்கள் இந்தப் படத்தில் இருக்கு. அதையெல்லாம் சிவா சூப்பரா பண்ணியிருக்கார். சிவா நடிச்ச கமர்ஷியல் படங்களிலேயே இது கொஞ்சம் வித்தியாசமான கமர்ஷியல் படமா இருக்கும்.’’

சிவகார்த்திகேயனும் அருண்ராஜாவும் உங்ககிட்ட இருந்துதான் சினிமா கத்துக்கிட்டேன்னு பல இடங்களில் சொல்லியிருக்காங்க. அவங்களோட கரியரில் நீங்க அவங்களை பாராட்டிய ஒரு விஷயம்; அட்வைஸ் பண்ணின ஒரு விஷயம் என்ன?

நெல்சன், அருண்ராஜா, சிவகார்த்திகேயன்
நெல்சன், அருண்ராஜா, சிவகார்த்திகேயன்

`` `ரஜினி முருகன்’ படம் பார்த்துட்டு சிவாவுக்கு கால் பண்ணி, `படம் நிச்சயமா ப்ளாக்பஸ்டர் ஹிட்’னு சொன்னேன். ஏன்னா, அதுவரைக்கும் சிவாவோட படங்கள் நல்லா இருக்கும்; காமெடியா இருக்கும். பார்த்துட்டு நல்லா இருக்குனு சொல்லுவேன்; அவ்வளவுதான். ஆனால், `ரஜினி முருகன்’ படத்துலதான், பக்கா கமர்ஷியல் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களும் சிவாகிட்ட இருந்துச்சு. `இந்தப் படத்துக்கு அப்புறம் சிவாகிட்ட கமர்ஷியல் ஹீரோவா ஆகப்போற’னும் சொல்லியிருந்தேன். அட்வைஸ் பண்ணுன விஷயம்னா, சிவா சோகமா இருந்தாலே அவர்கிட்ட பேசும்போது அது தெரிஞ்சிடும். அதனால எப்போதெல்லாம் அவர் சோகமா இருக்கார்னு தோணுதோ, அப்போதெல்லாம் ஆறுதலா பேசுவேன்; அவ்வளவுதான். அதேமாதிரி, `நெருப்புடா’ பாட்டு ஹிட்டானப்போ அருண்ராஜாவைப் பாராட்டினேன். அருண்ராஜா இயக்குநராகணும்னு சினிமாவுக்கு வந்த ஆள். ஆனால், அந்த வாய்ப்பு கிடைக்காமல் நடிப்பு, பாடல்னு பண்ணிட்டு இருந்தப்போ கொஞ்சம் கஷ்டமா ஃபீல் பண்ணுவார். அப்போ கொஞ்சம் எனர்ஜி கொடுக்கிற மாதிரி பேசுவேன்; அவ்வளவுதான். மத்தப்படி, யாருக்கும் நான் பெருசா அட்வைஸ்லாம் பண்றதில்லை.’’

`கனா’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிச்ச கேரக்டருக்கு உங்க பெயரை தான் வெச்சிருப்பாங்க. அந்த விஷயம் உங்களுக்கு முதல் முதலா தெரிய வந்தப்போ உங்க ரியாக்‌ஷன் என்ன?

கனா
கனா

``முதலில் சிவா என்கிட்ட, `படத்துல ஒரு சர்ப்ரைஸ் இருக்குணே’னு சொன்னார். அதுக்கப்பறம் அது என்னானு எனக்கு தெரியவரும் போதுதான், `பரவாயில்ல... பசங்களுக்கு நம்ம மேல மரியாதை இருக்கு போல’னு நினைச்சுக்கிட்டேன். ஆனால், படம் பார்க்கிறவரைக்கும் கொஞ்சம் பயமாகவும் இருந்துச்சு. நெல்சன்னு பெயர் வச்சுட்டு அந்தக் கேரக்டரை ஆசைதீர திட்டிக்கலாம், கலாய்க்கலாம்னு நினைக்கிறாங்களோனு நினைச்சேன். ஆனால், படம் பார்க்கும்போதுதான் அந்த கேரக்டர் எந்தளவுக்கு முக்கியத்துவம்னு தெரிஞ்சது.

இவங்க ரெண்டு பேரையும் நான் ஆரம்பகாலத்தில் இருந்தே பார்த்திட்டு இருந்ததனால, அவங்களோட இந்த வளர்ச்சி எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. நான் டிவி-ல வேலை பண்ணிட்டு இருந்த சமயத்தில்தான், அருண்ராஜாவையும் என்கிட்ட சேர்த்துவிட்டார் சிவா. அப்போவே நான் சிவாகிட்ட, `டேய் நானே சும்மாதான் இருக்கேன். எனக்கு எதுக்குடா அசிஸ்டென்ட் டைரக்டர்’னு கேட்டதுக்கு, `அண்ணே... நீங்க டைரக்டர் ஆகும்போது வேலைக்கு வச்சுக்கோங்கணே’னு சொன்னார். அப்படித்தான் அருண்ராஜா பழக்கமானார். அருண்கிட்ட பேசும்போதே என் கேரக்டருக்கு செட்டாகுற ஆளா இருந்தார். இப்போ என்கிட்ட இருக்கிற அசிஸ்டென்ட் டைரக்டர் எல்லாரையுமே அப்படித்தான் செலக்ட் பண்ணினேன். பேசிப்பார்க்கும் போது நம்ம கேரக்டருக்கு செட்டாகுற ஆளானு மட்டும்தான் யோசிப்பேன். மத்தப்படி, நம்ம வேலைக்கு எந்தளவுக்கு இவன் யூஸ் ஃபுல்லா இருப்பான்; இவன் என்ன பண்ணுவான்னு பெருசா யோசிக்க மாட்டேன்.’’

பிக் பாஸ் முதல் சீசனில் கமல்ஹாசனை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?

'பிக் பாஸ்' கமல்
'பிக் பாஸ்' கமல்
Hotstar

``கமல் சாரை நாம இயக்க முடியுமா? நானும் அந்த ஷோவில் ஒரு பார்ட்டா இருந்தேன்; அவ்வளவுதான். கமல் சார்கூட வொர்க் பண்ணும்போது, ஒருவித பீதியோடதான் இருப்பேன். ஏன்னா, நமக்கு அறிவு இல்லைனு கண்டுபிடிச்சிடுவாரோனு நினைச்சேன். அதனால, நானும் சில நாள்கள் அவர்கிட்ட எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பேசிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல என்னால முடியலை. நானே அவர்கிட்ட, `சார் நீங்க பேசுற விஷயம் எதுவுமே எனக்குத் தெரியாது. என்னாலேயும் இந்த மாதிரி ரொம்ப நாள் நடிக்க முடியாது’னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம் ரொம்ப இயல்பா பேசப் பழகிட்டோம். அவர்கூட இருக்கும்போது நிறைய விஷயங்களைக் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். அப்போ இருந்த சினிமா, அவர் வேலை பார்த்த படங்களைப் பற்றின விஷயங்கள், பார்க்க வேண்டிய படங்கள்னு நிறைய விஷயங்கள் கேட்டு வெச்சிக்கிட்டேன். நான் சினிமாவுக்கு வர ஆசைப்பட்ட ஆளா இருந்ததுனால, இதை நான் மிகப்பெரிய வாய்ப்பா பயன்படுத்திக்கிட்டேன். அவர்கிட்ட பேசியே பல விஷயங்களை கத்துக்கிட்டேன்.’’

`டாக்டர்’ படம் பற்றிய பிரத்யேக தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்த வார ஆனந்த விகடனைப் படியுங்கள்.

ஆக்‌ஷன் ஆபரேஷன்... காமெடி ட்ரீட்மென்ட்

- 'டாக்டர்' படம் பற்றிய பிரத்யேக தகவல்களை உள்ளடக்கிய ஆனந்த விகடன் கவர்ஸ்டோரி முழுமையாக இங்கே > https://bit.ly/3d91gua

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு