சினிமா
Published:Updated:

“அனிருத் பாட வேண்டியதை நான் பாடினேன்!”

பெற்றோருடன் ஆதித்யா
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோருடன் ஆதித்யா

அந்தப் பாட்டைக் கேட்டதும் என்னையறியாமல் அழுதுட்டேன். இந்த அளவுக்கு எப்படிப் பாட ஆரம்பிச்சான்னு எங்களுக்கே தெரியலை.

` பே கண்ணால திட்டிடாதே…
ஏன்னா பே பழசெல்லாம் பறந்துபோயே போயாச்சே…
பே அந்தச் சிரிப்ப நிறுத்திடாதே…
ஏன்னா பே இனி அதுதான் மாய வேலன்னு ஆயாச்சே!’

என்கிற `டான்' படப் பாடல் வரிகள்தான் இன்றைய இளைஞர்களின் ஃபேவரைட் ரிங் டோன். சிவகார்த்திகேயன் நடிப்பில், அனிருத் இசையில், விக்னேஷ் சிவன் எழுதிய இந்தக் காதல் வரிகளுக்குத் தன் குரல் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார் ஆதித்யா. இந்தப் பாடலின் மூலம் `பின்னணிப் பாடக’ராகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியிருக்கிறார். ஆதித்யாவின் அம்மா மீரா கிருஷ்ணன், பன்முகக் கலைஞர். அப்பா கிருஷ்ணன், இசைக்கருவிகள் வாசிப்பதுடன் 30 ஆண்டுகளாக ரெக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்திவருகிறார்.

“எங்களுடைய ஸ்டூடியோவிற்கு ஒரு நாள்கூட ஆதித்யா வந்ததில்லை. ஏன் அவன் ஸ்டூடியோவுக்கு வரவே மாட்டேங்கிறான்னு நானும் சரி, என் மனைவியும் சரி, பல முறை பேசியிருக்கோம். ஆனா, திடீர்னு ஃபைனல் இயர் படிக்கும்போது மியூசிக் தொடர்பான எல்லா விஷயங்களையும் தேடித் தேடிக் கற்றுக்கொள்ள ஆரம்பிச்சான். இப்ப ஸ்டூடியோவிலேயேதான் பெரும்பாலும் இருக்கிறான்” என்று ஆச்சர்யமாய் ஆரம்பிக்கிறார் கிருஷ்ணன். அவரைத் தொடர்ந்து ஆதித்யா பேச ஆரம்பித்தார்.

“கல்லூரியில் விஸ்காம் தேர்ந்தெடுத்துப் படிச்சேன். காலேஜ் படிக்கும்போதும் ஷார்ட் பிலிம் மாதிரியான விஷயங்களைத்தான் தேர்ந்தெடுத்தேன். எனக்கு படிப்பு முடிஞ்சதும் காபி ஷாப் வச்சிட்டு ஹவுஸ் ஹஸ்பண்டாக இருந்திடலாம் என்பதுதான் பிளானா இருந்துச்சு” என்றதும், அவரது காதைச் செல்லமாய்க் கிள்ளிவிட்டு மீரா தொடர்ந்தார்.

“அனிருத் பாட வேண்டியதை நான் பாடினேன்!”

“இவன் பாடுவான்னு நாங்க கொஞ்சமும் நினைச்சுப் பார்க்கல. அவனுடைய பிரெண்ட்டுக்காக ஒரு பாட்டு பாடி ரெக்கார்டு பண்ணியிருக்கேன்னு சொல்லி ஒரு நாள் எனக்குப் போட்டுக் காட்டினான். அந்தப் பாட்டைக் கேட்டதும் என்னையறியாமல் அழுதுட்டேன். இந்த அளவுக்கு எப்படிப் பாட ஆரம்பிச்சான்னு எங்களுக்கே தெரியலை. அவனுக்குப் பாட்டு மேல ஆர்வம் வந்தவுடன் அவனாகவே பாடல் சார்ந்த அனைத்தையும் கற்றுக்கொள்ள ஆரம்பிச்சான்” என்றதும், தொடர்ந்து ஆதித்யா பேச ஆரம்பித்தார்.

“விஜய் டி.வி-யின் ‘சூப்பர் சிங்கர்’ போட்டியில் கலந்துக்க நான் ஆடிஷனுக்குப் போனதே எங்க வீட்ல யாருக்கும் தெரியாது. சூப்பர் சிங்கரில் ஒரு முறை ஏ.ஆர். ரஹ்மான் சார் முன்னாடி, ‘ஆரோமலே’ பாட்டு பாடினேன். அந்தப் பாட்டைக் கேட்டுட்டு சார், ‘இது நான் பாடிய வெர்ஷனே கிடையாது. உங்களுடைய ஸ்டைலில் பாடியிருக்கீங்க. இத்தனை வருஷத்தில் இந்த மாதிரி தனித்துவமான குரலை நான் கேட்டதில்லை. பாடல் கேட்க ரொம்பப் புதுசா இருந்துச்சு’ன்னு பாராட்டினார். அந்தப் பாராட்டு எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

“அனிருத் பாட வேண்டியதை நான் பாடினேன்!”

சூப்பர் சிங்கரில் நான் பாடும்போது அனிருத் அண்ணன், ‘ஆதி, உங்களுடைய குரல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இங்கிலீஷ் பாட்டு பாடுறவங்களுடைய குரல் மாதிரி தனித்துவமான குரல் உங்களுடையது’ன்னு சொன்னார். அதே மாதிரி, சூப்பர் சிங்கர் செமி பைனல் சுற்றில் ‘சக்தி கொடு’ பாடல் பாடியிருந்தேன். அந்தப் பாட்டு அனி அண்ணாவுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்தச் சுற்றில் என்னுடன் போட்டியிட்டவங்க எல்லாரும் ரொம்பவே நல்லா பாடியிருந்தாங்க. அதனால, அதில் நான் எலிமினேட் ஆகிட்டேன். அந்த மேடையில் அனி அண்ணா, ‘ரவூபா மேம், இதை நான் உங்ககிட்டகூட சொல்லல... சாரி’ன்னு சொல்லிட்டு நேரடியாக மைக்கில், ‘ஆதி, நீங்க என்னுடைய இசையில் படத்தில் கூடிய சீக்கிரமே பாடப்போறீங்க’ன்னு சொன்னார்.

நான் எலிமினேட் ஆன அடுத்த வாரமே அனி அண்ணனுடைய ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்து போன் பண்ணி வரச் சொன்னாங்க. ‘பே’ பாட்டு வாய்ப்பு அப்படித்தான் கிடைச்சது. என் குரல் நல்லா இருக்குன்னு தெலுங்கில் அனிருத் அண்ணன் பாட வேண்டிய ‘பந்தமே’ பாடலை நான் பாடினா நல்லா இருக்கும்னு எனக்குக் கொடுத்தாங்க. அதெல்லாம் மிகப் பெரிய விஷயம்” என்றதும், மீரா தொடர்ந்தார்.

“ஆதித்யா பாடி முடிச்சுட்டு வர்றவரைக்கும் நாங்க ரெண்டு பேரும் பூஜை ரூமிலேயேதான் இருந்தோம். அனிருத் வீடியோ கால் பண்ணி ஆதிகிட்ட பேசிட்டு அம்மா பக்கத்தில் இருக்காங்களான்னு கேட்டார். நான் போன் வாங்கிப் பேசவும், ‘மேடம் கவலையே படாதீங்க... உங்க பையன் நல்லா வருவான்’னு சொன்னார். இதுக்கெல்லாம் நிஜமாகவே பெரிய மனசு வேணும்” என்று குடும்பமே நெகிழ, எனக்குப் பின்னணியில் இசை ஒலிக்க ஆரம்பித்தது.