Published:Updated:

``சாதி, மதம் கடந்தது அந்தக் காதல்... ஆனால்'' - `திரெளபதி' ரிச்சர்ட்டின் உண்மைக் காதல் என்னாச்சு?!

ரிச்சர்ட்
ரிச்சர்ட்

ரிச்சர்டு தன் பர்சனல் வாழ்வில் காதல் தோல்வியால் தவிக்கிறார் என்கிறார்கள் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

சாதி, மதமாற்றக் காதல் திருமணங்கள் உள்நோக்கம் கொண்டது என்பதுதான் சமீபத்தில் வெளியாகியிருக்கும் `திரெளபதி' படத்தின் ஒன்லைன். இந்தப் படத்தின் ஹீரோ ரிச்சர்டு ரிஷி.

இவர் நடிகையும், நடிகர் அஜித்தின் மனைவியுமான ஷாலினியின் அண்ணன். 2002-ல் கதிர் இயக்கத்தில் வெளியான `காதல் வைரஸ்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகனாக அறிமுகமானார் ரிச்சர்ட். இந்தப் படத்தில் சினிமா இயக்குநர் ஆகப் போராடும் இளைஞனாக நடித்திருப்பார் ரிச்சர்ட். `இதயம்' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கதிர் `காதல் தேசம்', `காதலர் தினம்' என 90-களிலும் ஹிட் கொடுத்தார். இதனால் `காதல் வைரஸ்' படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அவரே படத்தையும் தயாரித்தார். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையைத்தாண்டி படத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லாததால் படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.

இந்தப் படத்துக்குப் பிறகு ரிச்சர்ட்டுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக எந்தப் படமும் அமையவில்லை. கண்டுகொள்ளப்படாமலேயே இருந்தார். இந்நிலையில்தான் `திரெளபதி' படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் ரிச்சர்டு.

கலப்புத் திருமணங்கள் பணத்துக்காக நடைபெறுகின்றன, நாடகக் காதல்கள் அரங்கேறுகின்றன, போலிப் பதிவுத்திருமணங்கள் நடைபெறுகின்றன என்பதைத்தான் `திரெளபதி' படம் முன்வைக்கிறது. இதில் ஹீரோவாக நடித்திருக்கும் ரிச்சர்டு இந்தப் படம் தனக்கான இரண்டாவது இன்னிங்ஸாக இருக்கும் என நம்புகிறாராம். ``என் படத்துக்கு இப்படியெல்லாம் கூட்டம் வர்றது சந்தோஷமா இருக்கு" என்றாராம் நண்பர்களிடம். இதற்கிடையே ரிச்சர்டு தன் பர்சனல் வாழ்வில் காதல் தோல்வியால் தவிக்கிறார் என்கிறார்கள் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ``காதல், கல்யாணம் குறித்து ஒரு கசப்பான அனுபவம் அவருக்கு இருக்கிறது" என்கிறார்கள்.

அவர்களிடம் பேசினேன். ``ரிச்சர்டின் அப்பா பாபு கேரளாவிலிருந்து சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர். அவருடைய ஆசை நிறைவேறவில்லையென்றாலும், அவருடைய பிள்ளைகளுக்கு தமிழ் சினிமா கதவு திறந்தது. ரிச்சர்டு, ஷாலினி, ஷாமிலி என மூவருமே குழந்தை நட்சத்திரங்களாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானாங்க. ஷாலினிக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு, மருமகன் தமிழ் சினிமாவின் 'தல'ங்கிற சந்தோஷம் அவருக்கு மனதிருப்தியைத் தந்திருக்கு. மகன் ரிச்சர்டும் பெரிய நடிகரா வரணும்னு ஆசைப்பட்டார் பாபு. ஆனால், என்ன காரணமோ ரிச்சர்டுக்கு சரியான படங்கள் அமையவில்லை. இந்தச் சூழலில்தான் `திரௌபதி' ரிச்சர்டுக்கு மட்டுமல்ல, அவருடைய அப்பாவுக்குமே ஓரளவு சந்தோஷத்தைத் தந்திருக்கு" என்றவர்களிடம், அந்தக் காதல்... கல்யாணம் குறித்துக் கேட்டேன்.

``பாபுவுக்கு சினிமா தொடர்பான பெரிய குடும்பங்கள் பலவற்றுடன் நல்ல நட்பு இருந்தது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பாடலாசிரியர் குடும்பத்துடனும் நல்ல நட்பு இருந்தது. இருவீட்டாரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள். அப்படித்தான் அந்தப் பாடலாசிரியரின் வாரிசோடு நட்பானார் ரிச்சர்டு. நட்பு காதலானது. சாதி, மதம் கடந்த காதல் இது. காதல் அடுத்தகட்டமாகத் திருமணம் நோக்கி நகர்ந்தது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடந்தது. அஜித் முன்நின்று நடத்தினார்.

ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த கொஞ்ச நாள்களில் ரிச்சர்டுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்ற பிரச்னைகள் உருவானது. இருவரும் பிரிவை நோக்கிப் போக அஜித் இருவரையும் அழைத்து சமாதானம் பேசியிருக்கிறார். ஆனாலும், தீர்வு ஏற்படவில்லை.

ரிச்சர்டு
ரிச்சர்டு

ஒருகட்டத்தில் பெண்ணின் வீட்டார் ரிச்சர்டு குறித்துப் பல விஷயங்களை அஜித்திடம் சொல்ல, `நான் அந்த வீட்டுக்கு மருமகன்தான். அந்த வீட்டுல பெரியவங்கன்னு என்னுடைய மாமனார் மாமியார் இருக்காங்க. ரிச்சர்டு அவங்க மகன். அதனால் அவர் குறித்து எந்த விஷயம்னாலும் முடிவெடுக்க வேண்டியது என் மாமனார் மாமியார்தான். அதனால் நீங்க அவங்ககிட்டப் பேசுறதுதான் சரியா இருக்கும்' எனச் சொல்லி இந்த விவகாரத்தில் இருந்து விலகியிருக்கிறார் அஜித்.

கல்யாண ஏற்பாடுகள் கைவிடப்பட்டு நிச்சயதார்த்தத்துடனேயே நின்றுவிட்டது.

ஆனால், ரிச்சர்டோ, அந்தப் பெண்ணோ இன்னும் அந்தக் காதலில் இருந்து வெளியே வரவில்லை. இருவருமே அதன்பிறகு வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ரிச்சர்டுக்கு வயது 40-ஐக் கடந்துவிட்டாலும் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார்" என்றார்கள் அவர் நண்பர்கள்.

உண்மைக் காதல் என்றும் தோற்காது ரிச்சர்டு!

அடுத்த கட்டுரைக்கு