'வண்டிச் சக்கரம்' படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர், சில்க் ஸ்மிதா. பின்நாளில், இவருக்கென ரசிகர் பட்டாளமே உருவானது. திரைப்படங்களில் இவருடைய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர், ஹேமமாலினி. சில்க் கொடுத்திருந்த பேட்டிகளில் அவருடைய நிஜக் குரலை கேட்டால் யாரும் இவருக்கு ஹேமமாலினி டப்பிங் பேசியிருக்கிறார் என நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு இருவரின் குரலும் ஒரே மாதிரியாக இருக்குமாம்.. மூத்த டப்பிங் கலைஞரும், நடிகருமான ஹேமமாலினியை பேட்டிக்காக சந்தித்தோம். அவர் சில்க் ஸ்மிதா குறித்து பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

ஸ்மிதா நல்ல மனசுள்ள பொண்ணு. சின்ன, சின்ன விஷயத்துக்கும் ரொம்பவே எமோஷனல் ஆகிடுவா. தொலைபேசியில் பேசிக்கிற அளவுக்கு நாங்க நெருக்கம் இல்லைன்னாலும் நேரில் சந்திக்கும்போது மனசுவிட்டு பேசுவோம். என்கிட்ட அவளுடைய பர்சனல் விஷயங்கள் பலவற்றை அப்படி அவ ஷேர் பண்ணியிருக்கா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவளுக்கு நடிகை 'சாவித்திரி'யை ரொம்ப பிடிக்கும். அவங்களை மாதிரி நடிப்பில் சாதிக்கணும்னு அவ ஆசைப்பட்டா. கவர்ச்சியா நடிக்கணும் என்பது அவளோட ஆசையில்லை. என்கிட்டகூட அடிக்கடி 'சாவித்திரி' மாதிரி நடிக்கணும் அக்கான்னு சொல்லுவா. அவ வித்தியாசமான வேடங்களில் நடிக்கணும்னு ஆசைப்பட்டா. ஆனா, சினிமா உலகம் அவளை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டும்தான் பார்த்தது.
இப்போ அவளோட கவர்ச்சியான உடம்பு மட்டும்தான் நம்ம கண்ணுக்கு நினைவில் இருக்கு. அவ உயிரோட இருந்திருந்தான்னா இன்னைக்கு கண்டிப்பா அவளோட வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா.
சின்ன, சின்ன விஷயத்துக்கும் எமோஷனல் ஆகிடுற குணம்தான் அவளோட தற்கொலைக்கே காரணம்னு நினைக்கிறேன். அந்த தருணம் அவ எடுத்த முடிவாதான் நிச்சயம் அது இருக்கும். ஏன்னா, சட்டென முடிவு எடுக்கிற குணம் அவகிட்ட இருக்குன்னு எனக்கு தெரியும். அதனால தான் இது நிச்சயம் தற்கொலையாகத்தான் இருக்கும்னு உறுதியா சொல்றேன்.

என் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தவங்க மருத்துவமனையில் வேலை பார்க்கிறாங்க. அவங்க, ஸ்மிதா இறந்த அன்னைக்கு அவளோட உடலை மருத்துவமனையில் பென்ச்ல படுக்க வச்சிருக்காங்கன்னும், கரென்ட் கூட அந்த இடத்துல இல்லைன்னும் அந்த மருத்துவமனை சூழலை சொன்னாங்க. அப்படி அவளை பார்க்கணும்னு எனக்கு தோணலை. அதனால, அவளை பார்க்க நான் போகலை!' என்றார்.