``விஜய் சேதுபதிக்கு கெட்ட பேர் வாங்கிக்கொடுத்துட்டாங்க" - டப்பிங் கதை சொல்லும் கதிர்!

சினிமா பிரபலங்கள் தொடர்ந்து படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்து வருவதால் டப்பிங் கலைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்க செயலாளர் கதிர்.
சில மாதங்களாக வெளிவரும் டப்பிங் படங்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் டப்பிங் குரல் கொடுத்து வருகின்றனர். உதராணத்துக்கு 'தி அயர்ன் மேன்' படத்துக்காக விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் ' தி லயன் கிங்' படத்துகாக சித்தார்த், அரவிந்த் சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் போன்றோரும் தற்போது 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் சிரஞ்சீவிக்காக நடிகர் அரவிந்த்சாமியும் குரல் கொடுத்திருக்கின்றனர். இப்படி நடிகர்கள் வரிசையாக டப்பிங் பேசுவதால் டப்பிங்கை மட்டுமே தொழிலாகக் கொண்ட டப்பிங் ஆர்ட்டிஸ்ட்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்க செயலாளர் கதிர்.

''எங்களோட டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுக்கு நிச்சயம் இது நல்லதில்லை. ஏன்னா, டப்பிங் வாய்ஸ் கொடுக்கிற சினிமா பிரபலங்கள் எல்லாரும் பணத்துக்காக கஷ்டப்படுறவங்க இல்லை. ஆனா, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்கள் அப்படியில்லை. அவங்களோட பொருளாதார சூழலுக்காகத்தான் டப்பிங் வேலையே பாக்குறாங்க. அவங்க தொழிலே இதுதான்.

அதே மாதிரி டப்பிங் கொடுக்கிற சினிமா பிரபலங்களையும் நான் குறை சொல்ல விரும்பல. அவங்க யாருமே எங்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்க வாய்ப்பு கொடுங்கனு யார்கிட்டயும் கேட்குறதில்லை. ஆனா, ஒரு பெரிய நடிகர் மட்டும் 'டப்பிங் சான்ஸ் வந்தா எனக்கு கொடுங்க'னு கேட்டு பேசிட்டிருக்கார். அது யார்னு சொல்ல விரும்பல.
'தி அயர்ன் மேன்' படத்துல விஜய் சேதுபதி டப்பிங் பேசியிருந்தார். அவருண்டு அவர் வேலையுண்டுன்னுதான் அவர் இருந்தார். அவருக்கான இமேஜுடன் இருந்தார். அவரைத் தேவையில்லாம அயர்ன் மேனுக்கு டப்பிங் குரல் கொடுக்க வெச்சு அவருக்கு கெட்ட பேர் வாங்கி கொடுத்துட்டாங்க. அவரை நிறையப் பேர் ட்ரோல் பண்ணாங்க. இதெல்லாம் எங்களுக்கே கஷ்டமா இருந்தது. ஒருவேளை விஜய் சேதுபதி இதைப் பத்தி எங்ககிட்ட பேசியிருந்தா நாங்க எங்க கஷ்டத்தை சொல்லியிருப்போம். இதுக்குக் காரணம் படத்தோட தயாரிப்பாளர்கள்தான்.

சினிமாவில் இருக்கிற பெரிய நட்சத்திரங்கள் டப்பிங் குரல் கொடுத்தா படம் ஓடும்னு நினைக்குறாங்களானு தெரியல. 'தி லயன் கிங்' படத்துல சித்தார்த், அரவிந்த் சாமி பேசியிருந்தாங்க. படம் நூறு நாளா ஓடுச்சு. படத்தோட ரிலீஸின்போது எல்லாரும் அதைப் பத்தி பேசுனாங்க அவ்வளவுதான். சினிமா பிரபலங்கள் எல்லாரையும் விட எங்க டப்பிங் ஆர்ட்டிஸ்ட் நல்லா பேசுவாங்க. இதை சவாலாக்கூட நான் சொல்லுவேன். எங்க டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தோற்கடிச்சிருவாங்க.
இதுல யாரை குறை சொல்றதுனே தெரியல. தயாரிப்பு நிறுவனம் ஏன் இப்படி பண்ணுறாங்கனே தெரியல. 'அலாவுதீன்' படத்துல யார் பேசியிருந்தாலும் ஜீனி கேரக்டருக்கு இவ்வளவு அழகாக டப்பிங் பேசியிருக்க முடியாதுனு என்கிட்ட சிலர் சொன்னாங்க. ஏன்னா, எங்க வேலையே இதுதான். படத்துல கடகடனு பேசணும். அலாவுதீன் கேரக்டருக்கு சிங்கர் கார்த்திக் பேசியிருந்தார். அவர்கிட்ட இந்தப் படத்துக்காக டப்பிங் குரல் கொடுக்கச் சொல்லி கேட்டப்போ, 'நான் டப்பிங் யூனியனின் மெம்பர் கிடையாது. முதலில் மெம்பர் ஆகுறேன்'னு சொல்லி மெம்பர் ஆகிட்டு அப்புறம் பேசுனார். இதுக்காக அவருக்கு நான் நன்றியை சொல்லிக்கிறேன். டப்பிங் யூனியனில் மெம்பரா இருக்குறவங்கதான் டப்பிங் குரல் கொடுக்கணும்னு விதிமுறை இருக்கு. ஆனா, இதை யாரும் ஃபாலோ பண்ணுறது கிடையாது.
இதைப் பத்தி டப்பிங் யூனியன்ல கடிதம் கொடுத்திருக்கோம். நல்லது நடக்கும்னு எதிர்பார்க்குறோம். சினிமாவுல நடிக்குறவங்க எல்லாரும் நடிக்குறதுலதான் கவனம் செலுத்துறாங்க. டப்பிங் படத்துக்கு சினிமா நட்சத்திரங்கள் டப்பிங் பேசுறது இப்போதான் புது ட்ரெண்ட்டா ஆகிட்டிருக்கு. அதுவும் டிஸ்னி மட்டும்தான் இதைப் பண்றாங்க. எங்க டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சம்பளம் கேட்டா கொடுக்க மாட்டாங்க. ஆனா, அதிக சம்பளம் கொடுத்து சினிமா நட்சத்திரங்களை டப்பிங் குரல் கொடுக்க வைக்குறாங்க. இப்படி இவங்க புதுசா ட்ரெண்ட் பண்றதனால படத்தோட வசூல் அதிகமாகதானு கேட்டா நிச்சயமா இல்லை. நாங்க யாரையும் டப்பிங் பேச வேண்டாம்னு சொல்லலை. டப்பிங் யூனியன் மெம்பர் ஆகிட்டு பேசுங்கனுதான் சொல்றேன்'' என்கிறார் கதிர்.