Published:Updated:

பிறை தேடும் இரவிலே இதைத் தேடிதான் அலைந்தான் `ஜீனியஸ்' கார்த்திக்!  #8YearsOfMayakkamEnna

மயக்கம் என்ன
மயக்கம் என்ன

`பொதுவாக உணர்வைக் கையாளும் விதமானது, ஒவ்வொருவரது மனப்புத்தகத்திலும் வெவ்வேறு வித வரிகளைக்கொண்டிருக்கும்.’

ஒரு படத்தின் வெற்றியைத் தற்போதுதான் 100 கோடி, 200 கோடி என பாக்ஸ் ஆபீஸ் தீர்மானிக்கிறது. ஆனால், வலுவான ஒரு கதையைக்கொண்டு, ரசிகர்களை அப்படத்திற்குள் இணைத்து, தேவையான சுவாரஸ்யத்தைக் கொடுத்து, புதுமையாக வெளிவரும் சில படங்களே படைப்பாக மாறுகிறது. இதிலிருந்து விலகி வரும் சில க்ளிஷே படங்கள் தோல்வியிலேயே முடிந்துவிடுகின்றன. இதுபோன்ற க்ளிஷே சினிமாக்களை உடைக்கும் இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவு. அந்த வகையில் மில்லினியல் தலைமுறையின் மின்னிடும் ஒரு இயக்குநர்தான் செல்வராகவன்.

கார்த்திக், யாமினி
கார்த்திக், யாமினி

செல்வாவின் படங்களுக்குப் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைவிட எதிர்மறை விமர்சனங்களும் விவாதங்களுமே அதிகமாயிருக்கும். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த `மயக்கம் என்ன’ படமும் விதிவிலக்கல்ல. வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அப்படம் குறித்த ஒரு சிறப்புப் பகிர்வு.

தனது லட்சியத்தை அடைய விரும்பும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறான். அப்போது, காதல் எப்படி அவனைக் கரம் பிடித்து கரை சேர்க்கிறது என்ற சாதாரண ஒருவரிக் கதைகொண்ட படம்தான் `மயக்கம் என்ன'. ஆனால், உணர்வுகளின் குவியல், நிராகரிப்பின் ஓலம், நம்பிக்கையின் விதையென அத்தனையும் இந்த ஒற்றை வரிக்குள் ஒளிந்திருக்கின்றன. பொதுவாக உணர்வைக் கையாளும் விதமானது, ஒவ்வொருவரது மனப்புத்தகத்திலும் வெவ்வேறு வித வரிகளைக்கொண்டிருக்கும்.

அப்படி வைல்ட் லைஃப் போட்டோகிராபியில் சாதிக்க விரும்பும் `ஜீனியஸ்' கார்த்திக், பிரபல புகைப்படக் கலைஞரான மாதேஷ் என்பவரைத் தனது ரோல் மாடலாக வழிபட்டு வருகிறான். ஒரு நாள் அவரிடம் வாய்ப்பு கேட்கும்போது நிராகரிக்கப்படுகிறான், இறுதியில் ஏமாற்றவும்படுகிறான். இதனால் உளவியல் ரீதியான பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகிறான், கார்த்திக். துவண்டுபோய்க் கிடக்கும் கார்த்திக்கை மீட்டெடுப்பது யாமினியின் காதல்.

கார்த்திக்
கார்த்திக்

கட்டமைக்கப்பட்ட சூழலில், கம்பெனி சொல்வதைக் கேட்டு வேலை செய்வதில் கார்த்திக்குக்கு உடன்பாடில்லை. தெருவில் கோணிப்பையைக் கையிலேந்தியிருக்கும் பாட்டியே இவன் கண்ணில் பளிச்சென்றுபடுகிறார். அவரைப் புகைப்படம் எடுப்பதில்தான் கார்த்திக்கிற்கு சந்தோஷமும், திருப்தியும். `லைஃப்ல பிடிச்ச வேலையைச் செய்யணும். இல்லேன்னா செத்துடணும்ங்க' என்ற கோட்பாடும் வைத்துக்கொள்கிறான். இதே கார்த்திக்தான் `என் போட்டோவை ஒருத்தன் ஆய்னு சொல்லிட்டான்' என யாமினியிடம் அழுதும் புலம்புவான். அதில் ஆரம்பித்து நண்பனுடைய கேர்ள் ஃப்ரெண்டை தன்னுடைய காதாலியாக்கிக்கொள்வது, அவளையே திருமணம் செய்துகொள்வது, நடு இரவில் தனது மனைவியைப் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கச் சொல்வது, `என்னுடைய பொண்ணு கல்யாணத்துக்கு போட்டோ எடுத்துத் தரணும்' எனக் கேட்டு வருபவரைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி `கார்த்திக் ஜாக்கிரதை' என்று போர்டு மாட்டுவது என கார்த்திக்கின் நடத்தைகளுக்கு மொத்தக் காரணமுமாயிருப்பது ஏக்கமும் ஏமாற்றமும். ஆனால், `ஷிட்'டென்று சொல்லப்பட்ட கார்த்திக்கின் அதே புகைப்படம்தான் அதைச் சொன்ன ஆளுக்கு விருதினை வாங்கித் தந்திருக்கும். தனக்கான அங்கீகாரம் ஏமாற்றப்பட்டதையடுத்து இயலாமையில் வெடித்து அழும் கார்த்திக், ஒரு கட்டத்தில் தற்கொலைக்கும் முயற்சி செய்வான்.

இப்படத்தின் வலுவான அடித்தளமே கதாபாத்திர வடிவமைப்பும், கதை நகர்வும்தான். இதில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்தத் துருத்தலுமின்றி கதையை நகர்த்திச் செல்லக்கூடியவர்களாகவே இருப்பார்கள். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் கார்த்திக்கின் நண்பராக வரும் சுந்தர். தான் டேட் செய்துகொண்டிருக்கும் யாமினியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பார். பிறகு, யாமினியும் கார்த்திக்கும் காதலிப்பதையடுத்து, இருவரையும் திட்டித் தீர்ப்பார். இறுதியாக இருவரது திருமணத்திற்குச் செல்லும் சுந்தர், `நான் இருக்க வேண்டிய இடம்' எனப் பொருமிக்கொண்டே `ஆல் தி பெஸ்ட் மச்சான்' எனச் சிரிப்பார். அழுத்தமாக நகரும் கதையின் ஸ்ட்ரெஸ் பஸ்டர், சுந்தர்.

கார்த்திக், சுந்தர், யாமினி
கார்த்திக், சுந்தர், யாமினி

முதல் பாதியில் கார்த்திக்கை முதன்மைப்படுத்திய இயக்குநர், இரண்டாம் பாதி முழுக்க யாமினிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். பொதுவாக செல்வாவின் பட நாயகிகள், தங்களுக்கான வெளியை தாங்களே முடிவு செய்யக்கூடிய சுதந்திரமுடையவர்களாகவும் துணிச்சலுடையவர்களாகவும் இருப்பார்கள். யாமினியும் அப்படியானவரே. பாய் பெஸ்டியின் நண்பனுடன் காதல்வயப்படுவது, அவன் மீதும் அவனது திறமை மீதும் காதல்கொண்டு திருமணம்வரை எடுத்துச் செல்வது, கார்த்திக்கின் மூட் ஸ்விங்க்ஸுக்கேற்ப அவனை வழிநடத்திச் செல்வதென தன் விருப்பப்படியே துணிச்சலாகப் பயணப்படுவார். இதற்கிடையில் யாமினியின் வெறுமையைப் பயன்படுத்தி தவறான கண்ணோட்டத்துடன் நெருங்கிவரும் நண்பனின் நடவடிக்கைகளைக் கண்டு கொந்தளிக்காமல் பக்குவத்தோடு அவருக்கு நிதர்சனத்தை எடுத்துச் சொல்வார். இரண்டாம் பாதியில் யாமினி வரும் ஒவ்வொரு காட்சியும் திரையில் நிகழ்ந்த அற்புதம்.

யாமினி கார்த்திக்கையும், கார்த்திக் யாமினியையும் டார்ச் ஒளியில்தான் பார்த்துக்கொள்வார்கள். யாமினிதான் கார்த்திக்கின் ஒளியாக நின்று செயல்படப்போகிறாளென மறைமுகமாக உணர்த்திய காட்சி அது. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி குரலில் ஒலித்த `பிறை தேடும் இரவிலே உயிரே, எதைத் தேடி அலைகிறாய்' பாடல் அதை நிரூபித்தது. தனது வாழ்வின் மறுபாதியென்பதை கார்த்திக் உணர்வதற்குத் தாமதமாகியிருந்தாலும், யாமினி அதை தீர்க்கமாக நம்பினார். இதனால்தான் பைத்தியமென்று தன் கணவனை ஹவுஸ் ஓனர் குற்றம் சொல்லும்போது, `என் புருஷன் பைத்தியம்தான், ஆனா நல்லவன்' என கார்த்திக்கை எப்போதுமே விட்டுக்கொடுக்காமல் அவன் கரம்பற்றி அருகே நிற்பார்.

கார்த்திக்கால் கருவில் இருக்கும் குழந்தை கலைக்கப்பட்டதையடுத்து இயலாமையின் உச்சியிலிருக்கும் இவர், அழுதுகொண்டே அவரை அதற்றுவார். இறுதியில் விருதினைக் கையிலேந்தியிருக்கும் கார்த்தி `மை வொய்ஃப் யாமினி, இரும்பு மனுஷி' என்று நெகிழ்வார். அதுவரை தேக்கி வைத்திருந்த மௌனத்தை அந்தத் தருணத்தின்போதுதான் உடைத்தெறிவார். இப்படி இரண்டாம் பாதி முழுக்கவே யாமினியின் ராஜ்ஜியம்தான்.

யாமினி
யாமினி

`இது செல்வராகவனின் பாணியில் இல்லை' என ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது நிறைய மாற்றுக்கருத்து இருந்தாலும், `மயக்கம் என்ன' தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத சினிமா!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு