Published:Updated:

`சிட்டி' ஆக்‌ஷன், `காமெடி' வடிவேலு, `லவ் யூ' மாதவன், தமிழ் சினிமாவின் ரயில் சிநேகங்கள்!

Alaipayuthey Movie Scene
Listicle
Alaipayuthey Movie Scene

சென்னையில் சினிமா ஷூட்டிங் என்றால் நமக்கு ஞாபகம் வருவது ஸ்டூடியோ, பீச், மால் போன்ற இடங்கள்தாம். ஆனால், மால்கள் வரும் காலத்திற்கு முன்பு பல திரைப்படங்களில் காதல் காட்சி முதல் க்ளைமாக்ஸ் வரை முக்கியக் காட்சிகளில் இடம்பெற்றது மின்சார ரயில்.


தினமும் காலையில் தாம்பரம் ரயிலைப் பிடிப்பது ஒரு பெரிய டாஸ்க்காகவே இருக்கிறது. இருந்தாலும் மின்சார ரயிலில் பயணிப்பது ஒரு தனி சுகம்தான். டிராஃபிக் கிடையாது, புகை மாசு கிடையாது, ரயிலில் ஏறி அமர்ந்தால் தினமும் பலவிதமான கதைகள் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து காதில் விழும். நேரம் போவதே தெரியாது. இவ்வாறு நம்மில் ஒருவராய் கலந்த மின்சார ரயிலில் பயணிப்பது சென்னைவாசிகளுக்கு மட்டுமே கிடைத்த வரம். சென்னையில் சினிமா ஷூட்டிங் என்றால் நமக்கு ஞாபகம் வருவது ஸ்டூடியோ, பீச், மால் போன்ற இடங்கள்தான். ஆனால், மால்கள் வரும் காலத்திற்கு முன்பு பல திரைப்படங்களில் காதல் காட்சி முதல் க்ளைமாக்ஸ் வரை படத்தின் முக்கியக் கட்டங்களில் இடம்பெற்றது மின்சார ரயில். அவற்றில் சில நாஸ்டால்ஜியாக்களை அசைபோடுவோம்.


1
Enthiran

எந்திரன்

'எந்திரன்' படத்தில் என்னதான் VFX நிறைந்த பல சண்டைக் காட்சிகள் இருந்தாலும், அதில் அவற்றையெல்லாம் விட மக்களை அதிகம் ஈர்த்த ஒன்று, மின்சார ரயிலில் நடக்கும் சண்டைக் காட்சி. ஐஸ்வர்யா ராயை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக நடக்கும் விறுவிறுப்பான சண்டைக்கு இடையில் எதிர்பாராதவிதமாக பேட்டரி சார்ஜ் தீர்ந்த நிலையில் கீழே தள்ளப்படும் சிட்டி, ரயில்வே மின் சப்ளை பாக்ஸில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு ஐஸ்வர்யா ராயின் குரல் கேட்டு ரயிலில் நெட்டுக்குத்தாக ஓடுவது, எச்சில் துப்புபவரின் வாய் மீது ஏறி ஓடுவது, ரயில் பெட்டியின் ஒருபுறம் இருந்து மேலேறி மறுபுறமாக வருவது என மாஸ் காட்டியிருக்கும். மின்சார ரயிலின் ஒவ்வொரு மூலையிலும் ரவுடிகளைப் பந்தாடும் சிட்டியைப் பற்றி ஐஸ்வர்யா வசீகரனிடம் புகழும்போது வசீகரனை சிட்டி மேல் பொறாமைப்பட வைத்த பெருமை மின்சார ரயிலைச் சேரும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2
Alaipayuthey

அலைபாயுதே

சினிமாவில் மின்சார ரயில்கள் இடம் பெற்ற படங்கள் என்று எண்ணினாலே முதலில் நம் எண்ணத்தில் பாய்வது, அலைபாயுதே'தான். 90'ஸ் கிட்ஸின் இதயங்களைத் திருடிய திரைப்படம். மாதவன், ஷாலினி காதலைச் சேர்த்து வைத்ததில் மின்சார ரயிலுக்குப் பெரும் பங்குண்டு. மின்சார ரயிலுக்கு வெளியே நின்றுகொண்டு, ரயிலில் இருக்கும் ஷாலினியிடம் உரிமையுடன் மாதவன் நோட்டை எடுத்து சக்தி என்று பெயர் பார்ப்பதும், `நான் உன்ன விரும்பல, உன்மேல ஆசைப்படல, நீ அழகா இருக்கனு நினைக்கல. ஆனா, இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு' என்ற வசனம் ரயில் ஓட்டத்துடனேயே ஒன்றியிருக்கும்.

ரயில் நிலையத்தின் படிக்கட்டுகளில் ஷாலினியிடம் ஒரு வாரம் டைம் கேட்டுக் கெஞ்சுவதும், திருமணத்திற்குப் பின்பு நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் இரவு 7.55 மணிக்கு ரயிலில் ஷாலினியைத் தேடுவதும் என இந்தப் படத்தின் பல காட்சிகள் ரயிலுக்குச் சொந்தமானவை. தன் அம்மாவையும், அக்காவையும் தற்செயலாக ஷாலினி ரயிலில் சந்திப்பதும் தன் தந்தையின் உடல்நிலை குறித்து அறிவதும், பின் ஒருநாள் தன் தந்தையின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஸ்டேஷனில் பார்த்து உடைந்து அழுவதும் எனப் படத்தின் முக்கியமான நிகழ்வுகள் ரயிலைச் சுற்றியே அரங்கேறும். 'அலைபாயுதே'வில் மின்சார ரயில் திரைக்கதையெங்கும் பல இடங்களில் நம்மைத் தொடரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


3
Evano Oruvan

எவனோ ஒருவன்

நடுத்தர மக்கள் பலரின் வாழ்க்கை ஓர் இயந்திரம் போன்றது என்பதை நிரூபிக்கும் வகையில், வங்கி அதிகாரியாக மாதவனின் ஒருநாள் வாழ்க்கை, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் தொடங்கி, ரோபோவைப் போன்ற வங்கி வேலை, பின் ரயிலில் ஏறி வீடு திரும்புவது என்று தொடர்கிறது. கூட்ட நெரிசலால் ரயில் பயணத்தில் மாதவன் பெரும்பாலும் நின்றே பயணிக்கிறார். கவலைகள் இருந்தாலும் சிரித்த முகத்துடனேயே அவரின் பயணம் இருக்கும். மகளின் பள்ளி நேர்முகத் தேர்வுக்கு முந்தைய நாள் இரவில் கனவிலும் மின்சார ரயில் வந்து மாதவனை உலுக்கும். பள்ளியில் சேரப் பணம் கேட்பது, மனைவியின் ஆவேசம் எனப் பல இன்னல்களில் சிக்கிக்கொண்ட மாதவன், அடுத்தநாள் ரயிலில் மிகவும் சோகமாகக் காட்சியளிப்பார். அப்போது ரயிலில் விழுந்து ஒருவர் தற்கொலை செய்துகொள்ள, அங்கிருந்த இருவர் `சச்சின் செஞ்சுரி, இங்கே ஆல்-அவுட்' என்று கூறுகையில் மாதவன் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்கிறார். எப்போதுமே ரயிலில் நின்றபடி பயணிக்கும் மாதவன் அன்று உட்காருகிறார்.

ஓர் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. சிறிது நேரத்தில் சக பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு, மாதவனை ரயிலிலேயே கைது செய்ய வருகிறார் போலீஸ் அதிகாரியான சீமான். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றுகையில் மாதவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்ட, சீமானால் சுடப்படும்போது நம் இதயத் துடிப்பும் ஒரு விநாடி தப்பும். மாதவனின் துப்பாக்கியில் குண்டு இல்லை என்று அறிந்து சீமான் வருந்தும்போது, 'ஜன்னல் ஓரமா சீட்டு கிடைக்கிறதுக்குள்ளே உயிரே போயிடும். இன்னைக்குக் கிடைச்சிருக்கு. போய் உட்காரலாமா?' என்று கேட்டு ஜன்னலோரத்தில் உயிர்விடும் தருணம் உருக்கம். 'Bye, Bye Superman' என்ற பத்திரிகை செய்தியைப் பார்க்கையில் அந்த சூப்பர்மேனாக மாதவனின் வாழ்வில் முக்கியப் பங்காற்றிய மின்சார ரயிலும் அழும். மின்சார ரயிலில் காமெடி, காதல், சண்டைக் காட்சிகள் என்று பார்த்த நமக்கு, ரயிலில் மாதவனின் உயிர் போவதைப் பார்ப்பது கலங்கடிக்கும் காட்சி.


4
pachaikili muthucharam

பச்சைக்கிளி முத்துச்சரம்

கூட்டமான காலைநேர ரயில். 'இது ரெண்டாவது தடவை. என்னைப் பார்த்துக்கிட்டே இருக்கீங்க, அழகா இருக்கேன்னு பார்த்தீங்களா, இல்ல அவ்வளவு அசிங்கமா இருக்கேன்னு பார்க்குறீங்களா?' என்று ஆரம்பிக்கும் ஜோதிகாவுக்கும் சரத்குமாருக்குமான உரையாடல், அதற்குப் பிறகான நாள்களில் ரயில்போல் நீள்கின்றது. ஜோதிகாவிடம் 'ஏன் போனை கட் பண்ணீங்க' என்று சரத்குமார் கேட்க, 'ஹஸ்பெண்ட் பக்கத்துல இருந்தா, என் ஃப்ரெண்டு பேசுறாங்கன்னு சொல்லி இருக்கலாம்ல' என்று சொல்வதும், ஜோதிகா 'நீங்க உங்க மனைவிகிட்ட போய் சொல்லுங்க, தினமும் ஒரு பொண்ணுகூட ரயில்ல பேசிக்கிட்டு வருவேன். ஒருநாள் அவங்களைப் பார்க்கலைன்னாலும் போன் பண்ணி விசாரிப்பேன்னு... அப்போ தெரியும்' என்பார்.

'கரு கரு' விழிகளால் என்ற பாடல் இந்த ரயில் பயணத்தை மேலும் மெருகேற்றும்.


5
Pokkiri

போக்கிரி

இப்படத்தில் விஜய்யின் ரயில் சண்டைக் காட்சிகள் தூள் கிளப்புவதும், 'மார்டன்' அசின் தர லோக்கலாகப் பேசுவதும், 'குடும்பமே உப்புமா சாப்பிட்டு வளர்றிங்க போல. உங்க அக்கா உன்னை மாதிரி குண்டாயிடுவாளாடா' என்று விஜய் கலாய்ப்பது போன்ற பல சுவாரஸ்யமான காட்சிகள் இருந்தாலும், வடிவேலுவின் காமெடி சீன்கள்தான் என்றும் மனதில் நிற்பவை. 'என்னதான் கெட்டப்பை மாத்தினாலும், இந்தக் கொண்டை மாட்டி விட்டுருச்சே!' என ஃபீல் பண்ணும் வடிவேலுவின் காமெடி நம்மை மட்டுமல்ல, மொத்த ரயிலையே குலுங்கச் சிரிக்கவைக்கும் மாஸ் காமெடி!


6
Ramana

ரமணா

'ரமணா' விஜயகாந்த் எங்கு சரண்டர் ஆகப்போகிறார் என்று ஹோம் மினிஸ்டருக்கே தெரிவிக்கப்படாமல் இருக்க, அந்த இடம் எதுவாக இருக்கும் என்ற நம் ஆர்வத்தைத் தூண்டிய அந்த இடம், மின்சார ரயில் நிலையம்தான்.

சினிமாக் காட்சிகளுக்கும், ரயிலுக்குமான இந்த உறவு அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நீண்ட தொடராகவே நீடித்து வருகிறது. அப்போதைய எக்ஸ்பிரஸ் ரயில், மின்சார ரயில்களைகளைத் தொடர்ந்து தற்போது மெட்ரோ ரயில்களும் திரைக்கு வரத்தொடங்கியிருக்கின்றன.