Published:Updated:

`மின்னலே' முதல் `96' வரை... ஏர்போர்ட்டில் டேக் ஆஃப் ஆன காதல் காட்சிகள்!

காதல் காட்சிகள்
Listicle
காதல் காட்சிகள்

பல படங்களில் ஏர்போர்ட் காட்சிகள் வந்திருந்தாலும், சில படங்களில் மட்டுமே அவை ஹைலைட். மனம் கவர்ந்த ஏர்போர்ட் காட்சிகள் சிலவற்றைப் பார்க்கலாம்!


1
ராஜா ராணி

ராஜா ராணி 

2013-ல் வெளியான இப்படம் `There is a life after love failure' என்ற வாசகத்துடன் செம ஹிட்டடித்தது. குறிப்பிட்டுச் சொல்ல படத்தில் ஏராளமான தருணங்கள் இருந்தாலும் ஏர்போர்ட்டில் விரிவடையும் அக்காதல்தான் படத்தின் மொத்த உயிரும். விமானம் ஏறப்போகும் நயன்தாராவை, அனுப்பவும் மனமில்லாமல், அணைக்கவும் மனமில்லாமல் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு மறுகிக்கொண்டிருப்பார் ஆர்யா. மறுமுனையில் ஏக்கத்தோடு ஆர்யாவை திரும்பித் திரும்பிப் பார்ப்பார், நயன். திடீரென உள்ளே சென்ற நயன்தாரா ஆர்யாவை நோக்கி ஓடிவர, தனது முன்னாள் காதலன் ஜெய்யைப் பார்த்ததாகச் சொல்வார். இதன் பிறகு ஜெய்க்கும் ஆர்யாவுக்கும் இடையே நடக்கும் உரையாடல், நிதர்சனம் என்னவென்பதை உணர்த்தும். பேசி முடித்த பின்னர் நயனிடம் வரும் ஆர்யாவை எதுவும் கேட்காமல் பளாரென அறைந்து `நீ என்ன பெரிய ஹீரோவாடா' என்று ஆரம்பித்து, இறுதியாக தங்கள் பாணியில் புரொபோஸ் செய்துகொள்ள படமும், காதலும் இனிதே நிறைவுபெறும்.


2
96

96

2018-ன் டிரெண்ட் செட்டிங் படம் இது. 90'ஸ் நினைவுகளை இலகுவாக வருடிவிட்ட படம். விஜய் சேதுபதி, த்ரிஷாவைத் தாண்டி, படத்தில் இருவரும் ராம் ஜானுவாக வாழ்ந்திருந்தார்கள். காதல், ஒவ்வொருவரது புத்தகத்திலும் ஒவ்வொரு மாதிரியான வரிகளைக்கொண்டிருக்கும். ராம் அதை மாற்றியெழுதாமல், ஜானுவே போதுமென வாழ்ந்துகொண்டிருக்கிறான். ஏர்போர்ட்டுக்கு த்ரிஷாவை வழியனுப்பச் செல்லும்போது காரில் வேண்டுமென்றே ராமின் கரங்களைத் தொடுவதில் ஆரம்பித்து இறுதிக் காட்சியில் ராமின் கரங்களைப் பிடித்துக்கொண்டு கதறியழுவார் ஜானு. இறுதியாக, கண்ணீர்த் துளிகளை மட்டுமே ராமுக்குப் பரிசளித்துவிட்டு விடைபெறுகிறாள். ராமும் வீடு திரும்பி ஜானு அணிந்திருந்த உடையை தனது நினைவுப் பெட்டகத்தில் சேகரித்து வைத்துக்கொள்வான். 

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
கில்லி ( AP International )

கில்லி 

விஜய்யின் கிராஃபில் மிக முக்கியமான படம் `கில்லி'. விமான நிலையத்துக்கு விரையும்போது காரப்பொறி கேட்பார், த்ரிஷா. அதில் ஆரம்பித்து அவரை ஏற்றிவிடும்வரைகூட விஜய்க்கு த்ரிஷாவின் மீது காதல் இருக்காது. பைக்கை எடுக்கும்போது `தனலட்சுமி உட்காரு...' என்று சொல்லும்போதுதான் தனக்குள் இருக்கும் காதலையே உணர்கிறார், விஜய். அந்த மனநிலையில் கபடி மேட்ச்சிலும் சொதப்புகிறார். எல்லாம் முடிந்துவிட்டதென கீழே விழும் விஜய்யைக் கடக்கிறது த்ரிஷாவை வழியனுப்பி வைத்த விமானம். திடீரென கூட்டத்துக்குள் த்ரிஷாவைப் பார்த்தவுடன் விஜய்க்கு நம்பிக்கை பிறக்கிறது. இறுதியில் மேட்சையும் வெல்கிறார், முத்துப்பாண்டியை துவம்சம் செய்து தனது காதலையும் வெல்கிறார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
சச்சின்

சச்சின்

விஜய், தனது சேஞ்ச் ஓவருக்குப் பிறகு நடித்த காதல் படம் `சச்சின்'. சச்சினாக விஜய் ரொமான்ஸ் செய்ய, காமெடியில் வடிவேலு சிக்ஸர் அடித்திருப்பார். விஜய்யிடம் போட்ட சவாலில் ஜெயிக்க, தனக்குள் இருக்கும் காதலைச் சொல்லாமலே இருப்பார், ஜெனிலியா. சொல்லலாம் என்ற தருணத்தில் ஒருவித தாழ்வு மனப்பான்மை இவருக்குள் ஏற்படுகிறது. ஏர்போர்ட் வெயிட்டிங் ஏரியாவிலிருக்கும் விஜய், ஜெனிலியாவை போனில் அழைக்க, தான் பேச மனமின்று தனது ஃப்ரெண்டைப் பேச வைப்பார். `உன் குரலை மட்டும் கேட்க ஆசையா இருக்கு. இனிமே டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்' என்று விஜய் சொல்ல, எர்போர்ட்டின் அறிவிப்பு பின்னணியில் ஒலிக்கும். அதற்குப் பிறகு விஜய் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் தனது க்யூட்னஸோடு எதிர்மறையாக ஜெனிலியா பதில் சொல்ல, `ஐ லவ் யூ' என்ற வார்த்தைகளோடு படமும் முடியும்.


5
மின்னலே

மின்னலே 

கௌதம், ஹாரிஸ், ரீமா சென் ஆகிய மூவருக்கும் இதுதான் முதல் படம். தியேட்டரில் திரையிடப்பட்டு, பின் நீக்கப்பட்டு, அதற்குப் பின் மறுபடியும் திரையிடப்பட்டு மெகா ஹிட்டடித்த படம் `மின்னலே'. ஆள் மாறாட்டம் செய்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தினாலும் மாதவனுக்குள்ளே இருந்த காதல் நிஜம். இருப்பினும் இதை ரீமா சென் ஏற்க மறுத்து அப்பாஸுடனான திருமணத்துக்கு ஒப்புக்கொள்வார். மோதிரம் மாற்றப்போகும் தறுவாயில் ரீமா சென்னின் மனதில் மாதவன் இருப்பது தெரிந்து கையோடு ஏர்போர்ட்டுக்குக் கூட்டிச் செல்வார் அப்பாஸ்.

`இந்த வார்ல நீ ஜெயிச்சிட்ட. அவளுக்கு உன்னைத்தான்டா பிடிச்சிருக்கு' எனச் சொல்லிக் காதலுக்கு மரியாதை செலுத்தி சேர்த்தும் வைக்கிறார் அப்பாஸ். இறுதியில் காதலும் இனிதே டேக் ஆஃப் ஆகும். 

உங்களது மனம் கவர்ந்த ஏர்போர்ட் காதல் காட்சிகளைக் கமென்ட்டுங்கள்! 


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism