Published:Updated:

வில்லனாகவே இருந்தாலும், அப்படிப் பேசியிருக்கக் கூடாது கெளதம்! - `எனை நோக்கி பாயும் தோட்டா’ ப்ளஸ்/மைனஸ்... ப்ளீஸ்!

உங்கள் நடிப்பு வேறு லெவலைத் தாண்டிவிட்டது தனுஷ் ப்ரோ... இயக்குநர்கள், உங்கள் நடிப்புப் பசிக்கு இன்னும் சிறப்பான காட்சிகளை யோசிக்கணும்!

சில படங்கள் தாமதமாகும்போது மறக்கப்படும். ஆனால், சில படங்கள் மட்டும் தாமதமாகத் தாமதமாக, எதிர்பார்ப்பு கூடிக் கொண்டேபோகும். கெளதம் மேனன் - தனுஷ் என்கிற வித்தியாச கூட்டணியும், சூப்பர் ஹிட் பாடல்களும் 'எனை நோக்கி பாயும் தோட்டா'வை இரண்டாம் வகையாக்கின. நீண்ட காலத்துக்குப் பிறகு தியேட்டர்களில் அவ்வளவு இளைஞர்கள். கெளதம் மேனனின் காதல் மேஜிக்கைக் காண... என்ன செய்திருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்?!

* கெளதம் மேனனின் ஸ்டைலிஷ் ஹீரோவாக பக்காவா பொருந்தியிருக்கிறார், தனுஷ். இன்ஜினீயரிங் கல்லூரி மாணவனாக, 20 வயது காதலனாக, கோபக்கார இளைஞனாக, ஆக்‌ஷன் ஹீரோவாக தோட்டாக்களைத் தெறிக்கவிட்டிருக்கிறார். உங்கள் நடிப்பு வேறு லெவலைத் தாண்டிவிட்டது ப்ரோ... இயக்குநர்கள், உங்கள் நடிப்புப் பசிக்கு இன்னும் சிறப்பான காட்சிகளை யோசிக்க வேண்டும்!

Dhanush, Megha Akash,
Dhanush, Megha Akash,

* மேகா ஆகாஷ்... உண்மையிலேயே அவ்ளோ அழகு! இவ்ளோ அழகான ஹீரோயினைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. பெரும்பாலான காட்சிகளில், கோழிக்குஞ்சைப் போல பயத்தில் ஒளிந்துகொண்டாலும், பர்ஃபாமென்ஸில் இன்னும் கொஞ்சம் அசத்தியிருக்கலாம். அந்த எக்ஸ்ட்ரா பன்ச் மட்டும் மேகாவிடம் மிஸ்ஸிங். சுனைனாவிடம் சொதப்பல்கள் எதுவும் இல்லை. நடிப்பதற்கு அவருக்கு பெரிதாக வேலையும் இல்லை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* சசிகுமார், வழக்கமான கெளதம் மேனன் படங்களில் பார்க்க முடியாத ஒரு கதாபாத்திரம். அவர், கேரெக்டர் படத்தின் சர்ப்ரைஸ். ஆனால், அவர் நடிப்பில் எந்த சர்ப்ரைஸ் எலிமென்ட்டும் இல்லை. தனுஷின் அப்பாவாக வேல.ராமமூர்த்தி. கொஞ்சமும் பொருந்தவில்லை.

Dhanush, Megha Akash
Dhanush, Megha Akash

* ''யாருங்க இந்த வில்லன்?'' என கேட்கவைக்கிறார், செந்தில் வீராசாமி. நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும், நக்கல் சிரிப்பிலும் அவ்வளவு எதார்த்தம்.

* தனுஷுக்கு அடுத்தபடியாக படத்தைத் தாங்கிநிற்பது, தர்புகா சிவாவின் இசை. 'மறுவார்த்தை பேசாதே'யில், மனம் எல்லா சோகங்களையும் மறந்து சில நிமிடங்கள் கனவுலகில் பறக்கிறது. 'விசிறி', 'நான் பிழைப்பேனோ' என வரிசையாக ஹிட் பாடல்கள். பின்னணி இசையிலும் 'எனக்கு இசையோட சினிமாவும் தெரியும்ப்பா' எனச் சொல்கிறார். காலம் உங்கள் இசைக்காகக் காத்திருக்கிறது ப்ரதர்!

* 'எனை நோக்கி பாயும் தோட்டா'வில் விஷுவல்ஸும், காஸ்ட்யூம்ஸும் பெரிய ப்ளஸ். ஜோமன் டி ஜோன்ஸ், மனோஜ் பரமஹம்சாவின் கேமரா கண்கள் பொள்ளாச்சியின் இனிமையையும், மும்பையின் இரவுகளையும் அப்படியே கண்களுக்குள் கடத்தியிருக்கின்றன. உத்தரா மேனனின் காஸ்ட்யூம்களில் தனுஷும் மேகாவும் செம ஸ்மார்ட் அண்ட் க்யூட்!

* படத்தின் பலமும் பலவீனமும் கெளதம் வாசுதேவ் மேனன்தான். தொடர்ந்து தன் படங்களுக்குள் இருந்தே கதைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார் கெளதம். திரைக்கதையில் பல முடிச்சுகளை வைக்கக்கூடிய இடங்கள் இருந்தும் கோட்டைவிட்டிருக்கிறார்கள். காதல், போலீஸ், கேங்ஸ்டர் என கெளதமின் பழக்கப்பட்ட ஏரியாவுக்குள்ளேயே படம் சுற்றுவதால், "ஹாலை தாண்டினா கிச்சன்... அதான?" என எளிதில் யூகிக்க வைக்கிறது திரைக்கதை.

dhanush
dhanush

* 80'ஸ் காதலைப் போல வசனங்களில் மென்மையாக இருப்பவர்கள், 2கே கிட்ஸ் போல முத்தம் என வரும்போது வயலன்ட்டாகிவிடுகிறார்கள். 'இமை போல் காக்கணும்', 'வாயில் நவரசங்களையும் காட்டினாள்' என படத்துக்குப் பொருந்தாத வசனங்களை வெறும் அழகியலுக்காக மட்டுமே திணித்திருக்கிறார்கள்.

* பெண்களை மிகவும் கண்ணியமாக காட்சிப்படுத்தக்கூடியவர் கெளதம் மேனன். அவர் படங்கள் எப்போதுமே பெண்களைக் காயப்படுத்தாது. ஆனால், இந்தப் படத்தில் பல இடங்களில் பெண்களைக் கொச்சைப்படுத்தும் அந்த ஒற்றை கெட்டவார்த்தை. வில்லனே சொல்வதாக இருந்தாலும் கெளதம் மேனன் படத்தில் இது வேண்டாமே!

* வாய்ஸ் ஓவரில் கதை சொல்வது கெளதம் மேனன் ஸ்டைல்தான். 'காக்க காக்க'வில் வாய்ஸ் ஓவர் எப்போது வரும் என்கிற ஆர்வம் இருக்கும். ஆனால், 'எனை நோக்கி பாயும் தோட்டா'வில் எல்லை மீறிப்போயிருக்கிறது வாய்ஸ் ஓவர் அக்கப்போர். படம் முடிந்த பின்னும் "இந்த ஷோ முடிஞ்சிடுச்சு. அடுத்து வர்றவங்களுக்கும் நான் இதே கதையை இன்னொரு முறை சொல்லணும்" என தனுஷ் அலுத்துக்கொள்வாரோ எனப் பயப்படும் அளவுக்கு வாய்ஸ் ஓவர் பயம் துரத்துகிறது.

* மெக்கானிக்கல் இன்ஜினீயர், மகனைப் புரிந்துகொள்ளும் மெச்சூர்டு அப்பா, சேலை கட்டினால் ஃபேமிலி கேர்ளாக மாறும் ஹீரோயின் என உங்கள் க்ளிஷேக்களில் இருந்து வெளியே வாங்க கெளதம். ப்ளீஸ்... இதை நாங்க சொல்லியே ஆகணும்!

சூர்யாவில் தொடங்கி தனுஷ் வரை... `எனை நோக்கி பாயும் தோட்டா' டைம்லைன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு